பலருக்கும் விருப்பமான கடவுள் பிள்ளையார். அவருக்குத்தான் எத்தனை எத்தனைப் பெயர்கள்! அரசமரப் பிள்ளையார், ஆலமரப் பிள்ளையார், குளத்தங்கரைப் பிள்ளையார், ஆற்றங்கரைப் பிள்ளையார், முச்சந்திப் பிள்ளையார், நவசக்தி பிள்ளையார், வரஸித்தி பிள்ளையார், செங்கழுநீர்ப் பிள்ளையார், செல்லப் பிள்ளையார், ஏழைப் பிள்ளையார்... இப்படிப் பல பெயர்கள் அவருக்கு உண்டு என்றாலும், சில ஊர்களில் அபூர்வமான, சட்டென்று புரியாத விநோத பெயர்களிலும் அருள்கிறார் விநாயகர்.
அந்த வரிசையில் வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டத்தில், ஒழுகூர் என்னும் அழகிய கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறார் ஒரு பிள்ளையார். அவரது திருநாமம் 'மாகம் பிள்ளையார்’.
இந்த ஊரில் உள்ள 1044 வருட பழைமையான, ஸ்ரீதிரிகாலேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இந்த ஊரின் வரலாற்றை விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது. கூடவே, மாகம் பிள்ளையாரின் சிறப்பையும்!
பண்டைய காலத்தில் இந்த ஊருக்கு ஒழுகையூர் என்ற பெயர் இருந்ததாகத் தெரிகிறது. தொண்டை நாட்டில் இருந்த 24 கோட்டங்களில் ஒன்றான படூவூர் கோட்டத்தின் ஒரு பகுதியான ஒழுகையூர் நாடே மக்கள் வழக்கில் மருவி, ஒழுகூர் என்று தற்போது வழங்கப்பெறுகிறது. ஒழுக்கமான நன்மக்கள் பலர் வசித்த காரணத்தினால் இந்த ஊருக்கு ஒழுகையூர் என்ற பெயர் ஏற்பட்டதாம்.
ராஜராஜசோழனின் தந்தையான சுந்தர சோழன் (இரண்டாம் பராந்தகன்) என்ற அரசனிடம் படைத் தளபதியாக இருந்த பார்த்தவேந்திராதிவர்மன், பிறகு தொண்டை நாட்டைத் தனியாக ஆண்டுகொள்ள முடிசூட்டப்பட்டான். அவனது ஆட்சியில் தொண்டை நாட்டில், பல கோயில்களில் திருப்பணிகள் செய்திருக்கிறான். அவனுக்கு விஜய மகாராஜன் என்ற பெயரும் இருந்ததாகத் தொல்லியல் துறையினரின் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.
சென்னையை அடுத்த குளப்பாக்கத்தில் புகழ்பெற்ற ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் இவனது பெயர் விஜய மகாராஜன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.957 முதல் கி.பி.970 வரை, 13 ஆண்டுக் காலம் இவன் ஆட்சி செய்திருக்கிறான். இவனது ஆட்சிக் காலத்தில் இந்த ஊருக்கு 'மஹாராஜபுரம்’ என்று பெயரிட்டிருக்கிறான். பிறகு மக்கள் வழக்கில் இந்த ஊர் 'மாகராஜபுரம்’ என்று ஆகி, அவன் பிரதிஷ்டை செய்த மகாராஜப் பிள்ளையாரும் 'மாகம் பிள்ளையார்’ என்று பெயர் மருவி அழைக்கப்படலானார். அந்த 'மஹாராஜபுரம்’தான் பிற்காலத்தில் ஒழுகூர் என்று அழைக்கப்பட்டு, அந்தப் பெயரே இன்றைக்கும் நிலைத்திருக்கிறது.
இனி, நாம் மாகம் பிள்ளையாரை தரிசிப்போம்...
மிகச் சிறிய அளவிலேயே இந்தக் கோயில் நீண்டகாலமாக இருந்து வந்தது. சிலர் திருப்பணி செய்ய முன் வந்தபோது, அந்தத் திருப்பணி தடைப்பட்டது. அதனால் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்யவே பயந்தனர். தற்போதும் பலப் பல தடைகளைத் தாண்டித்தான் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 12.6.13 அன்று கும்பாபிஷேகம் நடத்த தேதி முடிவாகியுள்ளது.
ஊர் எல்லையில், ஏரிக்கரை அடிவாரத்தில் கோயில் உள்ளது. கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலுக்குள் மூன்று சுயம்பு விநாயக வடிவங்கள் உள்ளன. மூன்றும் உருவம் ஏதும் இல்லாமல் அருவமாகக் காட்சியளிக்கின்றன. இந்த வடிவங்கள், வேலூரை அடுத்த சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் உள்ள வடிவங்களை ஒத்திருக்கின்றன. மூஞ்சுருக்கும் இங்கே வடிவம் கிடையாது. அதுவும் அருவமாகவே இருக்கிறது.
இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கிறவர்களே இங்குள்ள பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். தனியாக அர்ச்சகர் என்று யாரும் இங்கே கிடையாது.
சமீபத்தில், திருப்பணிக்காக நிலத்தைத் தோண்டியபோது, 'பார்த்தவேந்திராதி வர்மன்’ (மஹாராஜன்) அவனுடைய துணைவியாருடன் வழிபடுவது போன்ற ஒரு சிற்பம் கிடைத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நினைத்ததை முடித்துக் கொடுக்கும் இந்தப் பிள்ளையாரை தரிசிக்க வருவோர், அப்படியே இந்த ஊரில் உள்ள ஸ்ரீதிரிகாலேஸ்வரர், ஸ்ரீதிரிபுரசுந்தரி குடிகொண்டுள்ள சிவன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம். மேலும், இந்த ஊருக்கு அருகில் அகத்தியர் வழிபட்ட, ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில் கொண்டுள்ள பெருங்காஞ்சியும், அருணகிரியார் ஞானம் பெற்ற, முருகன் கோயில் கொண்டுள்ள, மலைக்கோயிலான ஞானமலையும் (கோவிந்தசேரி குப்பம்) உள்ளன.
எங்கே உள்ளது? வேலூர் மாவட்டம், வாலாஜாவில் இருந்து 8 கி.மீ. தொலைவில் ஒழுகூர் உள்ளது. பஸ், ஆட்டோ வசதி உண்டு.
Comments
Post a Comment