அர்த்தநாரீஸ்வரர்

அர்த்தநாரீச்வரம் தேவம் பார்வதீ ப்ராண நாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யுர் கரிஷ்யதி
_ மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
எம பயம் போக்கும் மூர்த்திகளுள் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரும் ஒருவர் என்கிறது மார்க்கண்டேயர் அருளிய மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்.
ண்-பெண்; ஒளி- இருள்; தோற்றம்- அழிவு... என்று படைப்பின் மொத்த வடிவமாகத் திகழ்பவர் ஈசன். உலகம் உய்வடைய அவர் அருளிய திருக்கோலங்களில் ஒன்று... ஒரு பாதி ஆணும் ஒரு பாதி பெண்ணுமாக அமைந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர வடிவம்!
உலகின் எல்லா உயிர்களிடத்தும் ஆண்- பெண் என்று பாலினம் இரண்டு உண்டு. இவை பிரிந்திருக்கும்போது உலக வளர்ச்சிக்கு வழியில்லை. இரண்டும் ஒன்றுபடுவதில்தான் ஜீவராசிகள் உருவா கின்றன; இதில்தான் படைப்புத் தொழிலே அடங்கியுள்ளது. சிவம்- அமைதி நிலை; சக்தி- ஆற்றல் நிலை. உலகப் பொருட்கள் அனைத் தும் சிவமும் சக்தியும் ஆகும். இந்தத் தத்துவத்தையே, அம்மையப் பனின் அர்த்தநாரீஸ்வர திருவடிவம் விளக்குகிறது.
சரி... ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவத்துக்குப் புராணம் சொல்லும் கதை என்ன?
சிவகணங்களின் தலைவர்களுள் ஒருவர் பிருங்கி முனிவர்.தினமும் திருக்கயிலாயத்தில், சிவனாரை மட்டும் வலம் வந்து வணங்குவாரே தவிர, உடன் இருக்கும் பார்வதிதேவியை வலம் வர மாட்டார் பிருங்கி. இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, முனிவரின் உடலில் சக்தியின் கூறாக உள்ள உதிரம், மாமிசம் முதலானவற்றை அகற்றினார். 'இறைவன் ஒருவனே; அவர் சிவபெருமான் மட்டுமே' என்று தீவிர பக்தியுடன் வாழ்ந்த பிருங்கி முனிவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தன. அவரால் ஓர் அடி கூட நகர முடியவில்லை.
பிருங்கியின் சிவபக்தியையும் வைராக்கியத்தையும் உணர்ந்த ஈசன், அவர் நடப்பதற்கு சிரமப்படுவதைப் பார்த்து மூன்றாவது கால் ஒன்றை வழங்கினாராம் (ஊன்று கோல் என்றும் சொல்வர்).
பிருங்கி போன்றோர், தம்மை விலக்கி சிவனாரை மட்டும் வழிபட்டுச் செல்ல இனி இடம் கொடுக்கக் கூடாது என்று கருதினாள் பார்வதிதேவி. எனவே, கடும் தவம் இருந்து, சிவனாரை வேண்டி அவரின் இட பாகத்தை பெற்றாள். இப்படி அம்மையும் அப்பனும் சேர்ந்திருக்கும் கோலமே ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர வடிவம்.
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற திருத்தலம் திருச்செங்கோடு எனும் கொடிமாடச் செங்குன்னூர். அழகிய மலைக்கோயிலுடன் திகழும் இந்தத் தலம் பாடல் பெற்றதும் கூட! சேலம் அருகில் உள்ள இந்த தலத்துக்கு உரககிரி, நாககிரி, நாகாசலம், சர்ப்பகிரி என்று பல பெயர்கள் உண்டு. இங்குள்ள மூலவர், அர்த்தநாரீஸ் வரராகக் காட்சியளிக்கிறார்; உற்ஸவ மூர்த்தியும் அப்படியே. அருகில் பிருங்கி முனிவர்!
தேவாரப் பதிகத்தில் இந்தத் தலம் பற்றிக் குறிப்பிடும்போது, 'வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ் மார்பில் நல்ல பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி...' என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

அம்சுத்பேதாகமம், காமிகாகமம், சுப்ரபேதாகமம், காரணாகமம் ஆகியனவும் சில்ப ரத்னம், காச்யபசில்ப சாஸ்திரம், மயமதம், ஸ்ரீதத்வநிதி ஆகிய சிற்ப நூல்களும் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் பற்றி குறிப்பிடுகின்றன.
வலது பாகம்- சிவபெருமான்; இடது பாகம்- உமையவள். வலது பாகத்தில்... தலையில் ஜடா மகுடம் மற்றும் பிறை; காதில் மகர குண்டலம் அல்லது சர்ப்ப குண்டலம்; வலது பாக நெற்றியில் மூன்றாவது கண் பாதி இருக்கும்.
இடது பாகத்தில்... அம்பிகையின் தலையில்- கரண்ட மகுடம் அல்லது முடிந்து வைத்த அழகிய கூந்தல்; காதில்- வாலிகா எனும் குண்டலம்; மை எழுதிய இடது கண்; நெற்றியில்- சிவனாரின் பாதி நெற்றிக் கண்ணுக்கு இணையாக அரைப் பொட்டு திகழும்.
இரண்டு, மூன்று அல்லது நான்கு கரங்களுடன் காட்சி தருவார் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர். இந்தத் திருவடிவம் இரண்டு கரங்களுடன் திகழும்போது, வலக் கரம்- வரத முத்திரை அல்லது கபாலம் ஏந்தியும், இடக் கரம்- கண்ணாடி அல்லது கிளி அல்லது மலரை ஏந்தியும் இருக்கும்.
மூன்று கரங்களுடன் இருந் தால்... வலப் பக்கம் இரண்டு கரங்களும் இடப் பக்கம் ஒரு கரமும் அமைந்திருக்கும்.
நான்கு கரங்கள் எனில்... வலக் கரங்களில் ஒன்று அபய முத்திரையும் மற்றொன்று மழுவையும் ஏந்தியிருக்கும் (ஒரு கரம் வரத முத்திரையும் மற்றொன்று சூலமும் ஏந்தி காட்சி தருவதும் உண்டு. அல்லது ஒரு கரத்தை இடபத்தின் மீது வைத்தபடியும் காட்சி தருவார்). இடக் கரங்களில்... ஒன்று- நீலோத்பல மலரை ஏந்தியிருக்க; மற்றொரு கரத்தை தொங்கவிட்டபடி காட்சி தருவார்.
இடது மார்பு மற்றும் கழுத்தில் மாலைகள்; நவரத்னம் கொண்ட அணிகலன்கள். இடை யில் ஒட்டியாணம், பட்டாடை. சிலம்புடன் திகழும் இடக் கால், பெண்மைக்கே உரிய நளினத்துடன் வளைந்து, பத்ம பீடத்தில் பதிந்திருக்கும். வலப் புறம்... சிவனாருக்கே உரிய புலித்தோல் ஆடையும், சர்ப்ப மேகலையும் இடையுடுத்தி, நெற்றியில் திருநீறும் துலங்க காட்சி தரும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவம்.
திருஞானசம்பந்தர் பாடியருளிய முதல் தேவாரப் பாடலின் முதல் வரியே, 'தோடுடைய செவியன்' என்று அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தையே விவரிக்கிறது. 'உண்ணாமுலை உமையா ளடும் உடனாகிய ஒருவன்', 'பாதியோர் மாதர்', 'பெண் ஓர் கூறினர்', 'பரநாரிபாகர்' என்றெல்லாம் பாடிப் பரவுகிறார் திருஞானசம்பந்தர்.
'பாதியோர் மாதினன்', 'உமையரு பாகர்' 'மங்கை தன்னை மகிழ்ந்து ஒரு பால் வைத்துகந்த வடிவம்' என்கிறார் நாவுக் கரசர். உமையரு பாகனாக விளங்கும் இந்தக் கோலத்தை, 'தொன்மைக் கோலம்' என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர்!

Comments