ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்

ர்மமிகு சென்னை, ஆலயங்களுக்கு மட்டுமல்ல...
அருளாளர்களுக்கும் பெயர் பெற்ற நகரம். எண்ணற்ற மகா புருஷர்கள் இங்கே வசித்து, சென்னைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். குணங்குடி மஸ்தான், பட்டினத்தார், வள்ளலார், வள்ளிமலை சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், காஞ்சி மகா சுவாமிகள் என்று ஏராளமானோரை உதாரணமாகச் சொல்லலாம்.
இவர்கள்... தர்மம் சிறக்கவும் ஆனந்தம் நிலைக்கவும் தங்களது வாழ்வையே அர்ப்பணித்தவர்கள். தங்களை சரண் அடைந்த அன்பர் களை அருளால் ஆட்கொண்டவர்கள்!
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் என்று அழைக்கப்படும் பாம்பன் சுவாமிகளை அறியாதவர்களே இருக்க முடியாது. எளிமையாக
வாழ்ந்து, எண்ணற்ற பக்தர்களை தன் அருகே சேர்த்தவர்; முருகப் பெருமானின் பரம பக்தர்; ஆறுமுகக் கடவுளைத் தன் வாழ்நாளில் பல முறை தரிசிக்கும் பேறு பெற்றவர்.
சென்னை திருவான்மியூரில் இவர் சமாதி கொண்டிருந்தாலும், இவரது திருக்கோயில்கள் நாட்டின் பல இடங்களிலும் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள இவரது பக்தர்கள், விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். தன்னை நம்பி, சரணடைந் தவர்களை இன்றும் காத்து வருகிறார் பாம்பன் சுவாமிகள். திருவான்மியூரில் இவரது சமாதித் திருக்கோயிலில் கூடும் கூட்டமே இதற்கு சாட்சி!

ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் பகுதியில் வசித்தவர் சாத்தப்பப் பிள்ளை. இங்கு உள்ள சிவாலயத்துக்கு இயன்ற உதவிகளைப் செய்து வந்த இவர், நெல் வியாபாரி. தவிர, ஊர் எல்லையில் தென்னந்தோப்பும் இருந்தது. இவரின் மனைவி செங்கமல அம்மையார். 1850-ஆம் ஆண்டில் (விரோதி கிருது வருடம்), ஒரு வெள்ளிக் கிழமையின் காலை வேளையில் ஆண் மகவை ஈன்றார் செங்கமல அம்மையார். பின்னாளில் பாம்பன் சுவாமிகள் என அழைக்கப்பட்ட அந்த ஞானக் குழந்தைக்கு 'அப்பாவு' என பெயர் சூட்டினர். இவனுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து, மிளிர வைத்தவர் ஆசிரியர் முனியாண்டியா பிள்ளை. படிப்பில் மட்டுமின்றி... நீச்சல், ஓவியம், தையல், விளையாட்டு மற்றும் இறைப்பணிக்கு உதவுதல் என்று ஆர்வம் கொண்டிருந்தார் அப்பாவு.
ஒரு முறை, பாம்பன் கிராமத்துக்கு அருகே இருந்த தோப்பில் நண்பர்களுடன், தரையில் சாய்ந்திருந்த தென்னை மரம் ஒன்றில் அமர்ந்து விளையாடிக் கொண் டிருந்தான் அப்பாவு. அந்தக் காலத்தில் இலங்கைத் தீவுக்குச் செல்பவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் செல்வர். அப்படி, இலங்கைக்கு புறப்பட்ட ஜோதிடர் ஒருவர், சிறுவர்களைக் கடந்து சென்றார். அப்போது என்ன தோன்றியதோ தெரியவில்லை... இவர்களுடன் கொஞ்சம் பேசிவிட்டுச் செல்லலாம் என்று எண்ணி அவர்களுக்கு அருகே அமர்ந்தார்.
அவர் ஜோதிடர் என்பதை அறிந்த சுவாமிகளின் நண்பர்கள் தங்களது கையைக் காட்டி, ''என் எதிர்காலம் எப்படி இருக்கும்னு சொல்லுங்க சாமீ'' என்று ஆவலுடன் கேட்டனர்.
ஜோதிடரும் ஆர்வத்துடன் கையைப் பார்த்து விட்டு, ''சிறப்பாகக் கூறும்படி உங்களுக்குப் பலன் ஒன்றும் இல்லை. என்றாலும், உங்களின் எதிர்காலத்துக்கு ஒன்றும் குறைவில்லை'' என்று பொத்தாம் பொதுவாகக் கூறியவர், அப்போதுதான் அப்பாவுவை கவனித்தார்.
''தம்பீ... இங்கே வா... உன் கையைக் காட்டு'' என்று அவனை அழைத்தார். சிறுவனான அப்பாவு, 'பெரியவர் கேட்கிறாரே' என்று தன் கையை நீட்டினான். அந்தத் திருக்கரத்தில் ஓடும் ரேகைகளின் அமைப்பைப் பார்த்து அதிசயித்த ஜோதிடர் மென்மையாகப் புன்னகைத்தார். பிறகு, நாக்கைக் காட்டுமாறு சொல்லி, அதையும் பார்த்து வியந்தார். ''பாலகனே... உன் திருக்கரமும், திருவாக்கை உதிர்க்கும் நாவையும் கண்டு அதிசயித்தோம். உன் ஜாதகம், சிறப்பான ஒன்று. அதிர்ஷ்டம் நிரம்பியவன் நீ. எதிர் காலம் உன் அசைவுகளுக்காகக் காத்திருக்கிறது'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
ஜோதிடர் சொன்ன வார்த்தைகள் புரியும் வயதா அது?! மீண்டும் தனது விளையாட்டைத் தொடர்ந்தான் அப்பாவு!
பாம்பன் சுவாமிகள் பாடிய பாடல்கள் ஏராளம். சுவாமிகளது வழிபாடு எங்கே நடந்தாலும் அவரது குமாரஸ்தவம், பஞ்சாமிர்த வண்ணம் முதலான பாடல்கள் அங்கே பிரதான மாக இருக்கும்.
சரி, சுவாமிகள் முதன் முதலாகப் பாடத் தொடங்கியது எப்போது?
ஒரு முறை பாம்பனில் உள்ள தங்களுக்குச் சொந்தமான தென்னந் தோப்புக்குச் சென்றார் சுவாமிகள். அது பொழுது புலர்ந்த வேளை... தோப்புக் குள் தந்தையார் இருப்பதை அறிந்து வாயிலிலேயே நின்றார். கந்தர் சஷ்டி கவசம் போன்ற பாடல்களைத் தானும் எழுத வேண்டும் என்கிற உத்வேகம் அப்போது தான் அவருக்குள் எழுந்தது. கந்தக் கடவுளை உளமார வணங்கி விட்டு, கீழே கிடந்த பனை ஓலை ஒன்றை எடுத்தார். இடுப்பில் இருந்து எழுத்தாணி யைக் கையில் எடுத்தார். அப்போது, 'கங்கையைச் சடையிற் பரித்து' எனும் சொற்கள், அவரது மனதில் மின்னலென உருவெடுத்தது. இதையே துவக்கமாக வைத்து முதல் பாடலை எழுதினார்.
இதன் பின் சுவாமிகள் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும். பரிபூரணானந்த போதம் - சிவசூரிய பிரகாசம் - சுத்தாத்வைத நிர்ணயம், தகராலய ரகசியம் - சதானந்த சாகரம், சிவஞான தீபம் - காசி யாத்திரை, சேந்தன் செந்தமிழ் - அமைதி ஐம்பது, திருப்பா, ஸ்ரீமத் குமாரசுவாமியம் - குமாரஸ்தவம், திவோதய ஷடக்ஷரோப தேசமெனும் சிவஞான தேசிகம் என இந்த வரிசை நீளும்! அதுபோல் சுவாமிகள் செய்த யாத்திரைகளும் எண்ணிலடங்காதது. ராமநாதபுரம், உத்தரகோச மங்கை, மதுரை, திருச்சி, வயலூர், விராலிமலை, திருவானைக்கோவில், திருவண்ணாமலை, திருக் காளத்தி, திருத்தணி, காஞ்சிபுரம், கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி, திருமழப்பாடி, நாகப்பட்டினம், திருக்கழுக்குன்றம் உட்பட ஏராள மான தலங்களுக்கு யாத்திரை சென்று அங்கு உறையும் தெய்வத் திருமேனிகளைத் தரிசித்துள்ளார்.
பழநி முருகப் பெருமானிடம் இருந்து உத்தரவு கிடைக்காததால், பழநிக்குச் சென்று தரிசிக்கவில்லை என்பர். ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ள பிரப்பன் வலசையில் 30 நாட்களுக்கும் மேல் கடும் தவம் இருந்தார். அங்கே இப்போது நினைவாலயமும் உள்ளது (சுவாமிகளின் பக்தர்கள் அடிக்கடி இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்).
திருமணமும் உரிய பருவத்தில் நடந்தேற வேண்டும் அல்லவா? 1878-ஆம் ஆண்டு வைகாசி மாதத்தின் சுப தினம் ஒன்றில், காளிமுத்தம்மையாரை ராமநாதபுரத்தில் மணம் புரிந்தவர், மனைவியுடன் பாம்பனில் வாழ்ந்தார். முருகையப் பிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாசப் பிள்ளை ஆகிய மூன்று செல்வங்களை ஈன்றெடுத்தார் காளி முத்தம்மையார்.
சிவஞானாம்பாளுக்கு ஒரு வயது ஆவதற்குள்ளாக முருகப் பெருமானின் திருவருள் இவரது குடும்பத்தில் அரங்கேறியது. அன்றைய தினம் குழந்தை சிவஞானாம்பாள் ஏனோ தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். தாயார் என்னென்னவோ சமாதானம் செய்தும், குழந்தை கேட்கவில்லை. இறுதி முயற்சியாக சுவாமிகளிடம் வந்த காளி முத்தம்மையார், குழந்தை அழுதபடியே இருக்கும் விவரத்தை சொல்லி, ''திருநீறு கொடுங்கள். குழந் தைக்குப் பூசி அமைதி அடைகிறாளா என்று பார்க் கிறேன்'' என்றார்.
அதற்கு சுவாமிகள், ''நான் இப்போது எவருக்கும் திருநீறு தருவதில்லை. எம்பெருமான் முருகனிடமே கேள். அவனே திருநீறு தருவான்'' என்று சொல்லி விட்டார். சுவாமிகளை எந்த விஷயத்திலும் கட்டாயப் படுத்த முடியாது என்பதை அறிந்த மனைவியார், முருகப் பெருமானை தியானித்தபடி, அழும் பிள்ளையை அணைத்துக் கொண்டு தேற்ற ஆரம்பித்தார். ஆனாலும், குழந்தையின் அழுகை நின்றபாடில்லை.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.
காவி உடை தரித்த துறவி ஒருவர் திடீரென இவரது வீட்டினுள் அவதரித்தார் (சுவாமிகள் அப்போது வீட்டின் வெளியே இருந் தார்). ''அம்மா... குழந்தையை இப்படி அழ விட லாமா? அந்த செல்வத்தை இங்கே கொடு'' என்று குழந்தையை வாங்கியவர், திருநீறை குழந்தையின் உடல் முழுதும் பூசி விட்டார். இவற்றை இமை கொட்டாமல் பார்த்தபடி இருந் தார் காளி முத்தம்மையார். சில விநாடிகளில், குழந்தையை அதன் தாயாரிடம் கொடுத்த துறவி, ''அம்மா... குழந்தை இனி அழாது. நன்றாக உறங்க வை'' என்று கூறி மறைந்தார்.
அவ்வளவுதான்! குழந்தை யின் அழுகுரல் நின்றது. 'குழந்தையின் அழுகுரல் திடீரென நின்று விட்டதே. எப்படி' என்று வியந்தவாறு வீட்டுக்குள் நுழைந்த சுவாமிகள், ''என்னம்மா... குழந்தை நன்றா கத் தூங்குகிறதே? என்ன மந்திரம் போட்டாய்?'' என்று மனைவியிடம் கேட்டார்.
''மந்திரமும் இல்லை... மாயமும் இல்லை. நீங்கள் தான் முருகப் பெருமானிடமே திருநீறு கேட்கச் சொல்லி விட்டீர்களே... அவரைப் பிரார்த்தித்து விட்டுப் படுத்திருந்தேன். தேஜசுடன் ஒரு துறவி வந்தார். குழந்தையை என்னிடம் இருந்து வாங்கி, உடல் முழுதும் திருநீறு தடவினார். அவரது சக்திக் குக் கட்டுப்பட்ட குழந்தை இப்போது நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது'' என்று குழந்தையின் தலைமுடியை ஆறுதலாகக் கோதினாள்.
சுவாமிகளுக்கு அப்போதுதான் உறைத்தது- முருகனின் திருவிளையாடலைப் பற்றி.
ரு முறை பாம்பன் சுவாமிகளைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார் சுப்ரமண்ய பிள்ளை என்கிற அன்பர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவருக்கு, சுவாமிகளின் மேல் மிகுந்த அபிமானம் உண்டு. அடிக்கடி பாம்பனுக்கு வந்து தரிசித்து செல்வார். அன்றைய தினம் சுவாமிகளுடன் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, வேறொரு அன்பரும் சுவாமி களைத் தரிசிக்க வந்திருந்தார். அப்போது, 'இங்கே ஒரு பாடலைப் பாட சுவாமிகள் எனக்கு அனுமதி தர வேண்டும்' என்று வேண்டினார். சுவாமிகள் அனுமதித்தார்.
முகம் மலர்ந்த அந்த அன்பர் சிற்றின்ப வண்ணப் பாடலை ராகம் மற்றும் தாளத்துடன் பாடி னார். பாடலின் வரிகள் கேட் பதற்கு சுகம் இல்லையே தவிர, ராகமும் தாளமும் சுப்ரமண்ய பிள்ளையையும் சுவாமிகளையும் வெகுவாக ரசிக்க வைத்தன. அப்போது சுப்ரமண்ய பிள்ளை, சுவாமிகளைப் பார்த்து, ''இவர் பாடிய பாடலின் பொருள் ரசிக்கத் தகுந்ததாக இல்லை. ஆனால், இந்த ராகத் தையும் தாளத்தையும் தாங்கள் அப்படியே எடுத்துக் கொண்டு ஸ்ரீமுருகப் பெருமான் மேல் வண்ணப் பாடல்கள் பாட வேண்டும்'' என்று வேண்டினார். அதன்படி அற்புதமான பாடல்களை சுவாமிகள் பாடினார். அந்தத் தொகுப்புதான் 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்!' தன்னைக் குறித்துப் பாடப்பட்ட இந்தப் பாடல்களைக் கேட்பதில், ஸ்ரீமுருகப் பெருமானுக்கு அளவுகடந்த ஆசை உண்டு. 'இந்தப் பாடல்கள் எங்கெல்லாம் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் தான் எழுந்தருள்வேன்' என்று முருகப் பெருமானே கூறியதாக குறிப்புகள் உண்டு. இதை திருச்செந்தூரில் வெளிப்படுத்திய ஒரு சம்பவம்:
திருச்செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகராகக் கைங்கர்யம் செய்து வந்தவர்- அனந்த சுப்பய்யர். மூத்த அர்ச்சகர். பாம்பன் சுவாமிகள் எழுதிய பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைப் படிக்க நேரிட்டதில் இருந்து அதன் மீது இவருக்கு ஓர் ஈர்ப்பு! காரணம், அதற்கு அமைந்த ராகமும் தாளமும்தான். தினமும் இதைப் பாராயணம் செய்யத் துவங்கினார். திருச்செந்தூருக்கு அருகில் உள்ள இன்னொரு கிராமத்து அன்பரான சுப்ரமண்ய ஐயர் என்பவரும், ''தினமும் தாங்கள் செய்யும் பாராயணம் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த பாராயணத்தில் நானும் கலந்து கொள்கிறேன்'' என்று அனந்த சுப்பய்யரிடம் கூறினார். இதை அடுத்து திருச்செந்தூரில் உள்ள மண்டபம் ஒன்றில் இருவரும் மாலை வேளையில் அமர்ந்து, ராக ஆலாபனையுடன் பாராயணம் செய்யத் துவங்கினர். விடிய விடிய இந்த பாராயண நிகழ்வு நடக்கும்.
ஒரு நாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மையார் எனும் 80 வயது மூதாட்டி, பாடலின் சுவாரஸ்யத்தால் கவரப்பட்டு, உள்ளே நுழைந்தார். இருவரும் இசையுடன் பாடுவதைக் கேட்டு, தன் மனதைப் பறி கொடுத்தார். அன்றிலிருந்து... தினமும் மாலை வேளையில் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்பதற்காக மண்டபத்துக்கு வந்து விடுவார் அந்த மூதாட்டி. இதன் பலனாக, எல்லாம் வல்ல முருகப் பெருமானைத் தரிசிக்கும் பேறு அந்த மூதாட்டிக்கு அமைந்ததில் வியப்பில்லை.
ஆம்! 1918-ஆம் ஆண்டு சித்திரை மாதம், ஒரு வியாழக் கிழமை... அப்போது, இரவு 8 மணி இருக்கும். பாராயணம் நடந்து கொண்டிருந்த மண்டபத்துக்குள் இளைஞன் ஒருவன் நுழைந்தான். ஒரு தூணின் மறைவில் இருந்து பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து விட்டு 'இவன் யாராக இருக்கும்?' என்று குழம்பிய முத்தம்மையார் மெள்ள நகர்ந்து அவனை விசாரிக்க முற்பட்ட போது சட்டென மறைந்து போனான் இளைஞன். இதுகுறித்து பாராயணம் செய்த அந்தணர்கள் இருவரிடமும் பிரமிப்புடன் சொன்னாள் முத்தம்மையார்.
மறுநாள்! விடிய விடிய பாராயணம் நிகழ்ந்தது. அதிகாலை சுமார் 4 மணியளவில் அதே இளைஞன் மண்டபத்துக்கு வந்தான்! முத்தம்மையார் அவனை வியப்புடன் பார்த்து, ''யாரப்பா நீ?'' என்று கேட்டாள். அதற்கு, ''நான் இதே ஊர்தானம்மா. என்னைப் பின்தொடர்ந்து வந்தால், நான் இருக்கும் இடம் காட்டுவேன்'' என்றான். ''சரி'' என்ற முத்தம்மையாரும் அவனுடன் நடந்தாள். வீதியில் இறங்கி நடந்த இளைஞனுடன் சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் இணைந்து கொண்டாள். இருவரும் ஜோடியாக நடக்க... திருச் செந்தூர் வீதிகளில் அவர்களைப் பின்தொடர்ந் தாள் முத்தம்மையார். திருக்கோயிலின் திருமண மண்டபத்தை வந்தடைந்த இளைஞன், முத்தம்மையா ரைத் திரும்பிப் பார்த்து, ''அந்தணர்கள் இருவரும் பாடிய பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. என்ன ஒன்று... இன்னும் இசை அதில் சேர்க்கப்பட வேண்டும். இதை அவர் களிடம் சொல். இந்தப் பாடல்கள் இசையுடன் இணைந்து எங்கு ஒலிக்கிறதோ, அங்கே நான் எழுந்தருளுவேன். எனது இருப்பிடம் இந்தத் திருக்கோயில்தான்'' என்று சொல்லி, விநாடி நேரத்தில் இளைஞனும் அவனுடன் வந்த பெண்ணும் மறைந்து போனார்கள்.
முத்தம்மையார் விதிர்விதிர்த்துப் போனார். ''பெருமானே... முருகா... இதுவரை என்னுடன் உரையாடியது நீதானா? என்னே உன் கருணை. உன் தரிசனத்தால் நான் மகிழ்ந்தேன்'' என்று கண்ணீர் மல்கச் சொன்னார்.
வேலின் மகத்துவத்தை உலகில் உள்ளோ ருக்கு உணர்த்துவதற்காக நாடகம் ஒன்றை அரங்கேற்றினார் முருகப் பெருமான். 1923-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி! பகல் பொழுதில் சென்னை பாரிமுனையில் உள்ள தம்புச் செட்டித் தெரு வழியே ஏதோ பலத்த சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தார் பாம்பன் சுவாமிகள். அப் போது எதிர்பாராத வகையில் குதிரை வண்டி ஒன்று சுவாமிகளின் இடது கணுக்காலின் மேல் ஏறியது. இதில் எலும்பு முறிந்து போனது. சுவாமிகள் மயங்கிச் சரிந்தார். அந்த வழியே வந்தவர்கள், பதறிப் போய் ஓடி வந்து, சுவாமிகளை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.விஷயம் அறிந்த சுவாமிகளின் பக்தர்கள் பலர், மருத்துவமனையில் திரண்டனர். சுவாமிகளை நேரில் கண்டு மனம் பதறினர்.
சுவாமிகள் விரைவில் நலம் பெற வேண்டி, அவரின் சீடரான சின்னசாமி ஜோதிடர் தனது இல்லத்தில் இருந்தபடியே சண்முக கவச பாராய ணத்தைத் துவங்கினார். தினமும் இது தொடர்ந்தது. ஒரு நாள் பாராயணத்தின் போது, சுவாமிகளின் முறிந்த காலின் பகுதியை இரு வேல்கள் தாங்கி நின்று இணைப்பது போன்ற ஒரு காட்சியை மனக் கண் முன் கண்டார். பெரிதும் மகிழ்ந்தார் சின்னசாமி ஜோதிடர். இந்தக் காட்சியானது, தினமும் அவர் பாராயணம் செய்யும்போதெல்லாம் தோன்றி மறைந்ததாம்!
மருத்துவமனையில் சுவாமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், ''நீங்கள் சாப்பிடும் உணவில் உப்பு, புளி, மிளகாய் போன்றவற்றை விலக்கி வெகு காலம் ஆகின்றன. தவிர, வேளாவேளைக்கு நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில், முறிந்து போன கால் பழையபடி சேருவதற்கு வாய்ப்பு இல்லை'' என்று தீர்மானமாகச் சொல்லி விட்டனர்.
11-ஆம் நாள் இரவு... மருத்துவமனையில் இருந்த பாம்பன் சுவாமிகள் அந்த அற்புதக் காட்சியைக் கண்டார். அதாவது, இரண்டு மயில்கள் தோன்றி, நீண்ட தோகைகளை அழகுற விரித்து களிநடனம் ஆடின. இரண்டில் ஒன்று மிகப் பெரியது; மற்றொன்று சிறியது. இரண்டின் கால்களும் தரையில் பதியவே இல்லை. ஆகாயத்திலேயே அற்புத ஆட்டம் நிகழ்ந்தது. இந்த மயூரவாகன சேவையைக் கண்டு மகிழ்ந்த சுவாமிகள், கரம் குவித்து வணங்கினார். இதோடு தன் அருளை நிறுத்திக் கொள்ளவில்லை முருகப் பெருமான். அடுத்த ஒரு சில நாட்களில் குழந்தை வடிவில் உதித்து, அவருக்குத் தன் இன்ன ருளை வழங்கினான்.
ஒருநாள்... படுக்கையில் இருந்த சுவாமிகள் தன் அருகே செந்நிற மேனியும் புன்னகை மாறாத முகமுமாய் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு பிரமித்தார். இதன் அழகில் மயங்கிய சுவாமிகள், 'முருகா...' என்று குழந்தையைப் பார்த்து வணங் கினார். ஆனால், ஒரு சில விநாடிகளுக்குள் அந்தக் குழந்தையின் உருவம் மறைந்து போனது. முருகப் பெருமான் என்றென்றும் தன்னுடன் இருப்பதை உணர்த்துவதற்காக இந்த இரு நிகழ்வுகளும் நடந்ததாக பூரித்தார் சுவாமிகள். மருத்துவர்களின் கணிப்பையும் மீறி, முருகப் பெருமானின் அருளால் தான் நலம் பெற்று விடுவோம் என்று பூரணமாக நம்பினார் சுவாமிகள். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.
சில நாட்கள் கழித்து, எக்ஸ்-ரே எடுத்து சுவாமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் வியப்பின் விளிம்புக்குச் சென்றனர். முறிந்திருந்த அவரது இடது கணுக்கால் எலும்புகள் ஒன்று சேர்ந்திருந்தன. ''எங்களது கணிப்பை யும் மீறி இந்த நற்செயல் நடந்துள்ளது. சுவாமிகள் பழைய பொலிவுடன் மீண்டிருப்பது அதிசயமே'' என்று மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.
தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தை சென்னையில் கழித்தார் சுவாமிகள். மே மாதத்தில் மட்டும் வெயிலின்
தாக்கம் காரணமாக பெங்களூருக்கு செல்வார்.
ந்தவொரு பிறவிக்கும் முற்றுப்புள்ளி என்பது உண்டல்லவா? சுவாமிகளே அதைத் தேர்ந்தெடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
30.5.1929 வைகாசி தேய்பிறை சஷ்டி- அவிட்ட நட்சத்திரத்தில் (வியாழக்கிழமை) காலை ஏழேகால் மணிக்கு தன்னுடன் இருந்த பக்தர்களும் இன்னும் பிறரும் அறியும் வண்ணம், சுவாசத்தை (பிராணவாயு) உள்ளுக்கு இழுத்தார். உள்ளே இழுத்த மூச்சை, வெளியே விட்டால்தான் நாம் இந்த உலகில் ஜீவித்திருக்க முடியும். ஆனால், உள்ளுக்குள் இழுத்த மூச்சை பாம்பன் சுவாமிகள் வெளியே விடவே இல்லை. அது வெளியே வராமல், உள்ளுக்குள்ளேயே ஒடுங்கிப் போனது. முருகப் பெருமானின் திருவடிகளுடன் இரண்டறக் கலந்தார் சுவாமிகள் (இந்த வகை சமாதி நிலையை 'குக சாயுச்சிய நிலை' என்பர்).
பாம்பன் சுவாமிகள் சமாதி நிலை அடைந்ததை அறிந்த பக்தர்கள், துடித்துப் போனார்கள். மகானின் திருமுகத்தை இறுதியாக ஒரு முறையேனும் பார்ப்பதற்காக ஓடோடி வந்தனர். சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். சுவாமிகள் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய திருவான்மியூர் நிலத்தில் (இதுவே இன்றைய சமாதித் திருக்கோயில்), அவரது சமாதியை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
பொதுவாக, சுவாமிகள் நிகழ்த்தும் வழிபாடுகள் இரவு வேளைகளிலேயே நடக்கும் என்பதால், இவருக்குச் செய்யும் வழிபாட்டையும் அன்றைய இரவு முழுதும் மேற்கொண்டனர் பக்தர்கள். அபிஷேக ஆராதனைகள் செய்து அஞ்சலி செலுத்தினர். திருப் புகழ் வாசித்தும், தீபங்கள் ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர். வண்ண மலர்கள் கொண்டு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட ஒரு விமானத்தில் சுவாமிகளது உடலை எழுந்தருளச் செய்தனர். சமாதியான தினத் துக்கு மறுநாள் (31.5.1929 வெள்ளிக்கிழமை) காலை எட்டேகால் மணிக்குத் தனக்கென அமைக்கப்பட்ட சமாதியுள் அலங்காரத்துடன் புகுந்து, தன்னை அங்கே அடக்கிக் கொண்டார் பாம்பன் சுவாமிகள்.
இனி, திருவான்மியூரில் உள்ள இவரது சமாதித் திருக்கோயிலைத் தரிசிப்போம். இந்தப் பகுதி 'மயூர புரம்' என அழைக்கப்படுகிறது.
பாம்பன் சுவாமிகளது சமாதித் திருக்கோயில், கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. எனினும் இவரின் திருமுகம் வடக்கு நோக்கி உள்ளதாம். இவரது திருமுகம் தரிசனம் கிடைக்கும் இடத்தில் ஒரு கோமுகம் இருகிறது. அருகில் ஒரு வில்வ மரம். இந்த மரத்தடியில் அமர்ந்து கோமுகத்தைப் பார்த்தபடி (அதாவது சுவாமிகளின் திருமுகத்தைத் தரிசித்தவாறு) தியானம் செய்வது சிறப்பு என்பர். சுவாமிகளின் அருட்பார்வை இங்கு இருப்பதாக அவரது பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கருங்கல் திருப்பணியில் திகழும் பாம்பன் சுவாமிகளின் சமாதித் திருக்கோயிலை - அவர் மீளாத் துயில் கொண்டிருக்கும் சந்நிதியின் உள்தோற்றத்தை - இப்போது முழுமையாக தரிசிக்க முடியாது. சமாதித் திருக்கோயிலின் திருக்கதவை மூடி வைத்து, அதில் சுவாமிகளின் திருவுருவப் படத்தைத் தொங்க விட்டுள்ளனர். சுவாமிகளின் இன்னொரு படமும் இங்கு வழிபாட்டில் உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பூக்களால் சுவாமிகளின் திருவுருவப் படம் அலங்கரிக்கப்படுகிறது. படத்துக்கு மட்டுமே பூஜை. ஒரு சில காரணங்களால் இந்த சமாதித் திருக்கோயிலில் சுவாமிகள் உறையும் திருச்சந்நிதியை பக்தர்களால் தரிசிக்க முடியவில்லை. ''இந்தக் கதவுகள் திறக்கும் நாள் எந்நாளோ? எங்கள் குருநாதர் உறையும் இடத்தை என்றுதான் கண்டு தரிசிப்போமோ?'' என்று ஆத்மார்த்தமான பக்தர்கள் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள்.
என்றாலும், தினப்படி ஆராதனையும் பக்தர் களின் வழிபாடும் குறைவின்றி நடந்து வருகிறது. திருவிளக்குகளை ஏற்றி ஒளி கூட்டுகிறார்கள். ஊது வத்தியைக் கொளுத்தி மணம் சேர்க்கிறார்கள். திருச்சந்நிதியின் முன்னே வாத்தியங்களுடன் பக்தர்கள் கூடி பாம்பன் சுவாமிகளின் பாடல் களையும், முருகப் பெருமானின் துதிப் பாடல் களையும் பாடி பரவசம் கொள்கிறார்கள். இதற்கு நேர்த் திசையில் இன்னும் சற்றே நடந்தால், முருகப் பெருமானின் திருச்சந்நிதி. மயில் மீது அமர்ந்த திருக்கோலம். இந்த முருகப் பெருமான் விக்கிரகம்தான் முன்பு, சுவாமிகளின் சமாதித் திருக்கோயிலில் அவரது சமாதியின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததாம். முருகப் பெருமானின் விக்கிரகத்துக்கு முன்னால் பாம்பன் சுவாமிகளின் விக்கிரகம். பௌர்ணமி, கிருத்திகை மற்றும் சஷ்டி முதலான தினங்களில் இங்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு பௌர்ணமியிலும் நள்ளிரவு 12 மணிக்கு முருகப் பெருமான் மற்றும் பாம்பன் சுவாமிகளது விக்கிரகத்துக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் வழிபாடு நடைபெறுகிறது. அப்போது பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் இசைக்கப் படுகின்றன. நள்ளிரவு வேளையிலும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கூடுவர்.
பெரிய அன்னதான மண்டபமும், பாம்பன் சுவாமிகளின் பிரதான சீடர்களில் ஒருவரான சுப்ரமண்யதாசன் என்கிற சின்னசாமி ஜோசியரின் சமாதியும் இந்த வளாகத் துக்குள் இருக்கிறது. வாகனங்களை நிறுத்துவதற்கும் வசதி உண்டு.
பாம்பன் சுவாமிகளின் சரிதத்தையும் அவர் நிகழ்த்திய அற்புதங்களையும் விவரிக்க பக்கங்கள் போதாது. அவரின் மிகச் சுருக்கமான வரலாறே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர் சமாதித் திருக் கோயிலில், மன அமைதி தேடி, மௌனமாகப் பிரார்த்திக்கும் பக்தர் களே அதிகம். இவர்கள் வேண்டுவது, குருவருளை மட்டுமே! அதனால்தான், எளிமையாக இருந்தாலும் அவர்களால் இனிமையாக வாழ்க்கை நடத்த முடிகிறது. படாடோபம் இல்லாத பக்தியின் மூலம், பாம்பன் சுவாமிகளை வழிபட்டு, அவரது குருவருள் பெற விழைவோம்! முருகப் பெருமானின் திருவருளுக்கும் பாத்திரமாவோம்!
தகவல் பலகை
தலம் : திருவான்மியூர்
சிறப்பு : பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் சமாதிக் கோயில்.
எங்கே இருக்கிறது?: திருவான்மியூர் பகுதியில் கலா«க்ஷத்ரா நடனப் பள்ளி வளாகத்தை ஒட்டி பாம்பன் சுவாமிகளின் சமாதித் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையின் எந்தப் பகுதியில் இருந்தும் திருவான்மியூருக்கு மாநகரப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு.
எப்படிச் செல்வது?: மாநகரப் பேருந்துகளில் பயணிப்பவர்கள், திருவான்மியூர் பேருந்து நிலையம் அல்லது திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 10 நிமிடம் நடந்து சென்றால், சமாதித் திருக்கோயிலை அடையலாம்.
நடைதிறப்பு நேரம்: காலை 6 - மதியம் 1.மாலை 3 - இரவு 8.
தொடர்புக்கு: 044 - 2452 1866

Comments

  1. பாம்பன் சுவாமிகளின் பாடலை எத்தனை முறை படிக்க வேண்டும் எத்தனை நாள் அதை தொடர வேண்டும்

    ReplyDelete

Post a Comment