'பாவித்தல் போதுமடா பரமநிலை எய்துதற்கே...'

சிலரை உற்றுப் பார்க்கிறேன். அவர்களுக்குள் அவர்கள் இல்லை! ஒருவரின் உடலுக்குள் புகுந்து அவரை ஆட்டி வைக்கும் பேய் மாதிரி, ஏதோ ஒரு பாவனை புகுந்து அவர்களை மாற்றி விடுகிறது.
எனக்குத் தெரிந்த ஒருவர், நடை- உடை, சிரிப்பு, அசைவு எல்லாவற்றிலும் நடிகர் சிவாஜி கணேசனை நகலெடுத்து உலவுவார். அவர், தன்னை சிவாஜி கணேசனாகப் பாவிப்பது, பார்த்ததும் புரிந்து விடும்!
இன்றும், அதிவேகமாக பைக்கில் செல்லும் இளைஞர்கள் சிலரைப் பார்க்கிறேன். டைட் பனியன் மற்றும் ஜீன்ஸ், அடிக்கடி தலைமுடியைக் கோதும் அவர்களது லாகவம், அலட்சியப் பார்வை, அலட்டல் நடை... என்று எல்லாவற்றையும் கவனிக் கிறேன். இவர்கள், எந்த நடிகரின் நகல் என்று எனக்குப் புரியவில்லை. காரணம், நான் சினிமா பார்த்து வெகு காலமாகி விட்டது. ஆனால், ஒன்றை மட்டும் என்னால் யூகிக்க முடிகிறது. இவர்களுக்குள் இவர்கள் இல்லை!
இது போன்றவர்களைப் பார்த்து, எனக்கு வருத்தம் வருவதில்லை. காரணம்... பாவனைகளை வரவேற்பது, மனித மனதின் இயல்பு. ஆனால்... பலரும் தன்னை காந்திஜியைப் போல், ஸ்ரீரமணரைப் போல், இன்னும் பிற மகான்களைப் போல் தங்களை பாவிக்கும் நிலை வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.
பாவனைகளுக்கு பெரும் சக்தி உண்டு. 'பாவித்தல் போதுமடா பரமநிலை எய்துதற்கே...' என்று பாடுகிறார் மகாகவி பாரதியார். ஆம்! பரம நிலை எய்துவதற்கு, முதலில் பாவனை அவசியப் படுகிறது.
தன்னை, அழிந்து போகும் உடலாக- அற்ப ஜீவனாக நினைத்துக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களைப் பார்த்து, 'தத்வமஸி' என்று... அதாவது, கடவுள் நீயே (அதுவே நீ) என்று குரு ஒருவர் உபதேசிப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் அர்த்தத்தைப் புரிந்து நாம் ஏற்றுக் கொண்டாலும்கூட, அந்த ஞானத்தை நம்முள் நிலை நிறுத்த பாவனை அவசியம்தான்.

பாவனையின் சக்தியை உணர்த்தும் ஒரு சம்பவம்: ஸ்ரீராமனின் தரிசனம் வேண்டி, ஸ்ரீராமகிருஷ்ணர் சில காலம் அனுமன் போல் தன்னை பாவித்துக் கொண்டு பக்தி செய்ய ஆரம்பித்தாராம். அப்போது, காய்-கனிகளை பச்சையாகவே சாப்பிடுவாராம்.
அனுமன் வேஷம் போட்டால், அதைத்தானே சாப்பிட வேண்டும்! சில நாட்களில்... அவரது பாவனை முதிர்ந்து, அவர் நடப்பது கூட குரங்கின் நடைபோல் ஆகிவிட்டதாம். இதையும் தாண்டி, தன் முதுகெலும்பின் கீழ்ப் பாகத்தில் இருந்து வால் முளைப்பது போல் உணர ஆரம்பித்தாராம் அவர்!இதுதான் பாவனையின் சக்தி. வெறும் பாவனை, நமக்குள் எத்தனை மாற் றங்களை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்த்தால், அதன் மகிமை புரியும்.
திவ்யப் பிரபந்தத்தில் ஒரு பாடல்... இறைவனையும் பாவனையால் அடைய முடியும் என்பதை விளக்குகிறது.
யாவையும் எவரும் தானாய்
அவரவர் சமயம் தோறும்
தோய்விலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி!
ஆவிசேர் உயிரின் உள்ளால்
யாதுமோர் பற்றிலாத
பாவனை அவனைக் கூடில்
அவனையும் கூடலாமே

இறைவன் எல்லாமாய், இங்கே காணப்படும் எல்லோருமாய் இருக்கிறான். அவன், உணர்வின் மூர்த்தியாக, சமயங்களுக்கு அப்பாற் பட்டவனாகத் திகழ்கிறான். புலன் ஐந்தினாலும் காண முடியாதவனாக விளங்குகிறான். உயிரின் உள்ளே... சாட்சிப் பொரு ளாக, எப்பொருளும் பற்றாத தன்மையாகத் திகழ்கிறான்.
_ இப்படி இறைவனை நீ பாவித்தால், அவனை நீ அடைய லாம் என்கிறது மேற்கண்ட பாட்டு. இதையே பிரம்ம பாவனை என்கின்றனர் வேதாந்திகள்.
நன்றாக யோசித்தால், பிரம்மமாகிய பரம்பொருளே நிஜம். அதை விடுத்து, நம்மை உடலாகவும் உயிராகவும் கருதுகிறோமே... இதுதான் பாவனை. இறைவனே எங்கும் இருக்க, நாம் பிரபஞ்சமாக அவனைக் காண்கிறோம்... பெரியோர் 'இதுவே பாவனை' என்கின்றனர். சரி, இந்தப் பொய்யான பாவனைகள் நீங்கவும், நமக்குச் சில பாவனைகள் தேவைப்படுகின்றன.
இதை உணர்ந்து, பக்தி மார்க்கத்தில் பல பாவனைகளை வைத்து, இறைவனாகிய மெய்ப் பொருளை அடைய வழி காட்டி இருக்கிறது நம் மதம். அவற்றுள் ஒன்று- இறைவனை தாய் அல்லது தந்தையாக பாவிப்பது!
அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர், தன்னை அபிராமியின் மைந்தனாகவே கருதி யவர். அவர், ஒரு பாடலில் சொல்கிறார்...
சலதி உலகத்தில் சராசரங்களை ஈன்ற
தாயாகினால் எனக்குத்
தாயல்லவோ, யான் உன் மைந்தன் அன்றோ?
என்று சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலை சுரந்து ஒழுகு பாலூட்டி என்முகத்தை
உன் முந்தானையால் துடைத்து
மொழிகின்ற மழலைக்கு உகந்து கொண்டு இளநிலா
முறுவல் இன்புற்று அருகில் யான்
குலவி விளையாடல் கொண்டு அருள் மழை பொழிந்து
அங்கை கொட்டி வா என்றழைத்து
குஞ்சரமுகன், கந்தனுக்கு இளையவன் என்றென்னை
கூறினாள் ஈனம் உண்டோ?

இந்தப் பாடலை கவனித்துப் படித்தால், அவரது பாவனையின் மேன்மை புரியும்.
'இந்த உலகில் உள்ள சராசரங்களை எல்லாம் ஈன்றவள் நீயெனில், எனக்கும் நீ தாய்தானே? நீ தாய்தான் என்றால், நின் மார்பிலிருந்து எனக்கும் பாலூட்டு; நின் முந்தானையால் என் முகத்தைத் துடைத்து விடு. மழலை மொழியில் நான் ஏதேதோ உளறினாலும் அதை உவந்து ஏற்றுக் கொள். உன் நிலாச் சிரிப்பு காட்டு. தவழ்ந்து வரும் என்னை... உள்ளங்கைகளைத் தட்டி 'வா... வா!' என்று கூப்பிடு. பிறகு, இவன், யானைமுகனாகிய விநாயகனுக்கும் கந்தனுக்கும் இளையவன் என்று உலகறியச் சொல்!' என்கிறார் அபிராமி பட்டர்.
இதுபோல், 'ஆண்டான்- அடிமை' பாவனையும் சான்றோர் களால் ஏற்படுத்தப்பட்டு... ஏற்கப்பட்டு... பாடப்பெற்றும் இருக்கிறது!
தஞ்சம் உலகினில்
எங்ஙனுமின்றித் தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்
பாராமுனக்காண்டே- ஆண்டே
பாரம் உனக் காண்டே

- இது பாரதியார் பாடல்! மேலும், கண்ணனைக் குழந்தையாக, தோழனாக, குருவாக, வேலைக் காரனாக பாவித்து பாரதியார் எழுதிய பல பாடல் கள் உண்டு. அவற்றைப் படித்தால் இலக்கிய இன் பமும் ஆன்மிக இன்பமும் ஒருங்கே கிடைக்கும்.
அதிலும்... இறைவனை காதலனாகவும் தன்னை காதலியாகவும் வைத்து சான்றோர் எழுதிய பாடல்கள், இறைவனுக்கும் ஜீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை இலக்கியபூர்வமாக விளக்கு வதற்காக மட்டுமே எழுதப்பட் டவை அல்ல; உலக வாழ்வில் அத்தகைய பாவனையுடன் வாழும் மனிதர்களை உருவாக்கவும் எழுதப்பட்டவை ஆகும்!
சில ஆண்டுகளுக்கு முன்... வட இந்தியப் பெண் ஒருத்தி, தன்னை கிருஷ்ணரின் மனைவி என்று அறிவித்ததை செய்தித்தாளில் பார்த்தேன்.
இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு அறியாமை உள்ள பெண்ணா என்று சிலர் பேசிக் கொண்டனர். பாவனைகளின் மகிமை அறியாதவர்களது பேச்சு அது. என்னைப் பொறுத்தவரை, இந்த நூற்றாண்டி லும் மீராக்களை உருவாக்கும் சக்தி இந்தியாவுக்கு இருக்கிறதே என்று வியக்கவே செய்தேன்.
நம் ஊர்களில் நடைமுறையில் உள்ள சம்பவத்தைப் பார்ப்போம். 'பெண்கள், தங்களின் கணவன் என்னதான் மோசமானவனாக இருந் தாலும் அவனை மற்றவர்கள் முன் விட்டுக் கொடுத்துப் பேச மாட்டார்கள். இதே போல், இறைவன் என்னை அன்புடன் ஆளாவிட்டாலும் அவனது பெயரையே பாடுவேன்' என்கிறது நாலாயிரப் பாடல் ஒன்று.
கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
விண்நோய் மதிலுடைசூழ் வித்துவக் கோட்டம்மா
கொண்டானா யாகிலும் உன்குரைகழலே கூவுவனே!

இறைவனைக் கணவனாக்கி, தன்னை மனைவி யாக்கி ஆழ்வார் ஒருவர் பாடிய பாடல் இது. இத்தகைய பாவனைகள் எல்லாம் வாழ்வின் துன்பங்களைக் கடக்க உதவுகிறது; பிறவாத- இறவாத பேரின்ப நிலைக்கும் இட்டுச் செல்கிறது.
நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களைப் பார்த்து, அவர்களைப் போல பாவிக்கும் பாவனைகளை விட, ஆன்மிக பாவனைகள் உயர்ந்தவை என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தினால், மேலான பாவனைகளை அவர்களும் ஏற்பார்கள் என்றே நம்புகிறேன்.
எனக்குத் தெரிந்த இளைஞன் ஒருவன், ராணுவ வீரன் போல் நிமிர்ந்தே நடப்பான். ஒரு நாள் அவனி டம், ''நீ மிலிட்டரி ஆளா?'' என்று கேட்டேன்.
''இல்லை சுவாமி... நெற்றியில் திருநீறு பூசினால், நிமிர்ந்தே நடக்கத் தோன்றுகிறது!'' என்றான். வாழ்க அவன் பாவனை!

Comments