அர்த்தநாரீஸ்வரர்

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளெய் நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ
-மாணிக்கவாசகர்
(திருவாசகம்)
பொருள்: புலித்தோலும், பட்டாடையும், குழையும் தோடும், பால் போன்ற திருநீறு மற்றும் பசும் சாந்து பூசிய திருமேனியும், பைங்கிளி, சூலம் மற்றும் தொகுப்பான வளையல்கள் அணிந்த திருக்கரங்களுடனும் திகழும் தொன்மை வாய்ந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவடிவை போற்றுவாய் தும்பியே!
சங்க இலக்கியங்களான புறநானூறு, ஐங்குறுநூறு ஆகியவை ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர வடிவை சிறப்பிக்கின்றன. யாப் பருங்கலம் என்ற சமண நூலை அருளிய அமர்த சாகரர், அதன் விருத்தியுரைகாரர், 'வீர சோழியம்' நூலாசிரியர் பௌத்தர் மற்றும் இளங்கோவடிகள் ஆகியோரும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர வடிவம் பற்றி குறிப் பிட்டுள்ளனர்.
பழைமையான சிவாலயங்களில், கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருவடிவை தரிசிக்கலாம். கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலில் முற்கால சோழர்களால் அமைக்கப்பட்ட ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர வடிவம் உள்ளது. காஞ்சிபுரம், மதுரை, தாராசுரம், திருச் செங்காட்டங்குடி, பாதாமி (வாதாபி) ஆகிய ஆலயங்களிலும் மாமல்லபுரம் தருமராஜ ரதத்தின் பின்புறமும் இந்தத் திருவடிவைக் காண முடிகிறது.

திருவண்ணாமலை ஆலயத்தில், பஞ்சலோக படிமமாக விளங்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் வெகு அழகு. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான திருக் கண்டியூரில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்.
காசியில் அனுமன்காட்- ஸ்ரீசக்ரலிங்கேஸ்வரர் ஆலயத்தில், பஞ்சலோகத்தால் ஆன ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர தட்சிணாமூர்த்தியின் தரிசனம்
வெகு அற்புதம். ஜடா மகுடம்... வலக் கரங்கள் ஒன்றில் டமருகமும் மற்றொன் றில் அபய முத்திரையும் திகழ... இடக் கரங்களில் நீலோத்பல மலரும் புத்தகமும் ஏந்தி... பத்மாசனத்தில் அமர்ந்து வலக் காலை முயலகனின் மீது வைத்தபடி காட்சி தருகிறார் இவர்.
சிவனாரும் திருமாலும் இணைந்த ஸ்ரீசங்கர நாராயண வடிவம் போல... சத்தனும் சக்தியுமாக நின்று, சிவபரம்பொருளின் தத்துவத்தை விவரிக்கிறது மாதொருபாகன் திருவடிவம்!
பரமேஸ்வரனது அருளாடல், நான்கு வகை பயன்களாக பரிணமிக்கிறது. அதாவது, போக சக்தியாக மிளிரும்போது- பவானி; புருஷ சக்தியாக வெளிப்படும்போது- விஷ்ணு; குரோத சக்தியாக திகழும்போது- காளி; யுத்தத்தின் ஆற்றலாக ஜ்வலிக்கும்போது- துர்கை! இதுகுறித்து, குமார சம்பவத்தில் பாடுகிறார் மகாகவி காளிதாசர். ஆகவே, அரனின் சக்தியே அரி என்பது புலனாகிறது அல்லவா?
உலகைக் காக்கும் செயலை மேற்கொள்ளும் போது, சக்தியானவள்... தனது மாய வல்லமை யால் ஆண் வடிவம் ஏற்று, மாயன் எனும் விஷ்ணுவாக விளங்குகிறாள்.
சிவனார் பிட்சாடனாராக வந்தபோதும், பாணாசுரனை சம்ஹரித்தபோதும், பாற்கடலில் பெற்ற அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்த தருணத்திலும் மோகினியாக- சக்தியின் வடிவாக வந்தது விஷ்ணுவே!
'அரியலால் தேவியில்லை' என்றும் 'கடல் வண்ணனாகி நின்ற தேவியை பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே...' என்றும் போற்றுகிறார் அப்பர். 'தரங்கக் கடலுள் வெங்கட் பணியணை மேல் துயில் கூறும் விழுப் பொருளே' என்று அபிராமி அந்தாதியில் பாடும் அபிராமி பட்டர், 'திருமாலே சக்தி' என்கிறார்.
இறைவன்... அம்மை- அப்பனாக, சிவ-சக்தியாக இரு வேறுபட்ட தன்மைகளைக் கொண்டு திகழ் கிறார். இதனால்தான் உலக உயிர்கள் அனைத்தும் இரு வேறு வகையாகத் திகழ்ந்து (ஆண்- பெண்), தம்முள் கூடிக் களித்து, மகிழ்ந்து வாழ்கின்றன.சிவமும் சக்தியும் இயைந்து நிற்கும் நிலையின் விளைவே இது!
ஆணோ- பெண்ணோ... தனியே இருக்கும்போது வாழ்க்கை நிறைவுறுவது இல்லை. இருவரும் ஒன்று சேரும்போதுதான் முழு நிறைவு பெறுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் சரிசமமாகவும், துணையாகவும், பரஸ்பரம் உதவிகள் செய்து அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். இதனால், மன நிறைவை மட்டுமின்றி புனிதத்துவத்தையும் அடை கின்றனர். இந்த அரிய தத்துவத்தை மனிதர்களுக்கு உணர்த்துவதே ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவம்!
கங்காதரர்
மையறு மனத்தினாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரர் ஏத்தி ஆயிரம் முகமதாகி
வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கையென்னும்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே
-திருநாவுக்கரசர்

பொருள்: குற்றமற்ற மனம் கொண்ட பகீரதன், நெடுங் காலம் தவமியற்றி, தன் முன்னோர்கள் நரகத்தில் விழாமல் நற்கதி அடைய வேண்டும் என்று கங்கையை வேண்ட... ஆயிரம் முகம் கொண்ட அந்த கங்கையைச் சடைமுடியில் ஏற்றுச் சிறிய அளவில் உலகில் பாய்ந்து உதவ அருளியவர் சாய்க்காட்டு ஈசரே!
இட்சுவாகு வம்சத்தில் வந்தவன் பாகு. நீண்ட காலம் குழந்தை இல்லாமல் தவித்த இவனுக்கு, ஒளரவ முனிவரின் அருளால் பிறந்தவன் சகரன். இவனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் கேசினிக்கு
உத்தாரகன், அசமஞ்சன் என இரண்டு மகன்கள். இளையவளான சுமதிக்கு 60,000 புதல்வர்கள்!
ஒருமுறை, அஸ்வமேத யாகம் நடத்த விரும்பிய சகரன், சர்வ லட்சணங்களும் பொருந்திய குதிரையை அலங்கரித்து பூமியை வலம் வரச் செய்தான். இதனால் கோபம் அடைந்த தேவேந்திரன்,
குதிரையைக் கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரது ஆசிரமத்தில் கட்டிவிட்டுச் சென்றான்.
குதிரையைக் காணாமல் தவித்தான் சகரன். யாகத்துக்காகக் காப்புக் கட்டியிருந்ததால், எல்லை தாண்டி குதிரையைத் தேடிச் செல்ல முடியாத நிலை! எனவே, தன் 60,000 மகன்களையும்... பூமி, வானுலகம் மற்றும் பாதாள லோகம் ஆகியவற்றில் குதிரையைத் தேடும்படி அனுப்பி வைத்தான்.
தேவலோகத்திலும் பூலோகத்திலும் குதிரையைத் தேடி ஏமாற்றம் அடைந்தனர் சகரனின் மைந்தர் கள். இறுதியில், பாதாள லோகத்தில்... கபில முனிவரது ஆசிரமத்தில் குதிரை இருப்பதை அறிந்து அங்கு சென்றனர். ஆனால், அவர்களது அத்துமீறலால் கோபம்கொண்ட முனிவர்... சகரனின் மைந்தர்களை எரிந்து சாம்பலாகும்படி சபித்தார். 60,000 பேரும் எரிந்து சாம்பலாயினர்!
இதையறியாத சகரன், பேரனானான அம்சுமானை அழைத்து, ''என் மகன்கள் அனைவரும் இறந்தாலும், யாகத்தை விட மாட்டேன். எனவே, நீ புறப்படு; குதிரையுடன் வா!'' என்று ஆணையிட்டான்.
அம்சுமானும் புறப்பட்டான். பூவுலகிலும் வானுல
கிலும் குதிரையைத் தேடியவன்,இறுதியில் அஷ்ட நாகங்களின் உதவியுடன் பாதாள லோகத்தில் இருக்கும் கபில முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான்.

Comments