சித்தர்கள் பூமியில் சிலிர்ப்பான தரிசனம்

வருவா ரெவர்க்கு நிழலளிக்கும்;
மகிழ்ந்து குளிக்க நீரளிக்கும்;
முருகார் கனியாய் உவந்தளிக்கும்;
முடிக்க நறுமா மலரளிக்கும்;
மருவார் சாந்த நனியளிக்கும்;
மணியு முத்தும் பலவளிக்கும்;
தருவார் போலப் புலவோர்பால்
தமிழுங் கொள்ளுங் கொல்லிமலை.
(வித்வான் பெ. கோவிந்தன்)
ன்னை நாடி வரும் அனைவருக்கும் எல்லா இயற்கைச் செல்வங்களையும் தந்து ஆதரிக்கும் தன்மை கொண்டது கொல்லிமலை என்பதுதான் மேலே உள்ள பாடலின் சுருக்கமான பொருள். ஆம், சோர்வுடன் கொல்லிமலைக்கு வரும் மனிதன், இளைப்பாற அங்கே நிழல் கிடைக்கும்; தாகம் தணிக்க நீரும் பசியாறுவதற்கு காய்- கனிகளும் கிடைக் கும். பெண்கள் தங்கள் தலையில் சூடிக் கொள்ள நறுமண மலர்கள் கிடைக் கும். சந்தனத்தையும் முத்துகளையும் மணிகளையும் தன் குடிமக்களுக்குக் கொடுத்து புகழ் கொள்ளும் மலைதான் கொல்லிமலை என்பதே இந்தப் பாடலின் முழு விளக்கம்!
கொல்லிமலை மட்டுமல்ல, இதை ஆண்ட மன்னர்களும் கொடைத் தன்மை மிக்கவர்களே!
சங்க காலத்தில் கொல்லிமலைப் பகுதியை ஆட்சி செய்த வல்வில் ஓரி என்ற ஓரி மன்னன் கடையேழு வள்ளல் களில் ஒருவன் (மற்ற அறுவர்: பாரி, காரி, அதியமான், பேகன், ஆய் அண்டிரன், நள்ளி). கொல்லிமலை சரித்திரத்தில் ஓரிக்கு நல்ல இடம் உண்டு. எனவே, கொல்லிமலையை தெரிந்து கொள்ளும் தருணத்தில், வல்வில் ஓரியையும் அறிவது அவசியம்.
ஆட்சித் திறனில் சிறந்து விளங்கும் மன்னர்களால், அவர்கள் ஆளும் நாட்டுக்குப் பெருமை; சர்வ வல்லமை கொண்ட பிரபலமான நாட்டை ஆள்வதால், அதை ஆளும் மன்னர்களுக்குப் பெருமை.

வல்லரசான அமெரிக்காவின் அதிபர் என்பது ஒபாமாவுக்குப் பெருமை. மதத் தலைவரான போப் ஆண்டவரே ஆட்சி செலுத்துவதால், வாடிகன் நாட்டுக்கு (நகருக்கு) பெருமை!
அந்த வகையில் வல்வில் ஓரியால், புகழ்பெற்றது கொல்லிமலை.
வல்வில் ஓரியின் காலம், கி.பி. 200-க்கு முன் என்று சொல்லப் படுகிறது.கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை உள்ள அறுநூறு ஆண்டு காலத்தையே கடைச்சங்க காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வரையறுத்தனர். கொல்லிமலையை உள்ளடக்கிய நாமக்கல் பிரதேசத்தை சேர, சோழ, பாண்டியர்கள் உட்பட குறுநில மன்னர்கள் பலரும் வெவ்வேறு காலகட்டத்தில் ஆட்சி செய்துள்ளனர். நாமக்கல் ஆட்சிப் பிரதேசம் என்பது, சேர நாட்டின் கிழக்குப் பகுதியாகவும், பாண்டிய நாட்டின் வடக்குப் பகுதியாகவும், சோழ நாட்டின் மேற்குப் பகுதியாகவும் இருந்து வந்துள்ளது.
சங்க காலத்தில், கொல்லிமலையில் தங்கமும் இரும்பும் கிடைத்துள்ளதாகக் குறிப்புகள் இருக் கின்றன. இங்கு கிடைக்கும் இரும்பைக் கொண்டுதான் அசோக மன்னர், தன் ஆட்சிக் காலத்தில் படைக் கருவிகளைத் தயார் செய்தாராம். இதே காலகட்டத்தில் சமண மதமும் புத்த மதமும் தமிழகத்தில் பெருமளவில் பரவின. கொல்லிமலையும் இதற்கு விதிவிலக்கல்ல. சங்க காலத்தில் இங்கு சமண மதம் வேரூன்றி இருந் ததை நிரூபிக்கும் விதமாக, இந்த மலைப் பகுதிகளில் மகாவீரரின் சிலை வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொல்லிப்பாவை எனப்படும் எட்டுக் கை அம்மனின் திருக்கோயில் அருகே மகாவீரரின் அற்புதமான வடிவத்தை இன்றும் தரிசிக்கலாம்!
கொல்லிமலையை எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும் குறுநில மன்னனான வல்வில் ஓரியின் வளமான காலத்தை சரித்திரமும் இலக்கியமும் கொஞ்சம் உசத்தியாகப் பேசு கின்றன. புலவர்களைப் போற்றும் குணமும், வறியவர்களுக்கு உதவும் ஈகைத் தன்மையும் இவ னுக்கு சிறப்பான இடத்தை பெற்றுத் தந்தன.
கொல்லிமலைக் காவலனான ஓரியின் ஆளுகையில் சுமார் 18 நாடுகள் உட்பட்டிருந்தனவாம்! இவற்றுள் தற்போதைய ராசிபுரம், சேந்தமங்கலம் முதலான பகுதிகளும் அடக்கம்.
இவனது ஆட்சியின்போது, கொல்லி மலையே செழித்தது; வளம் கொழித்தது. முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் நெல், ஏலம் முதலானவை பஞ்சம் இல்லாமல் விளைந்தன. எந்தக் குறையும் இல்லாமல் குடிமக்கள் வாழ்ந்தனர்.
புலவர்கள் இவனை போற்றிப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்றுள்ளனர்.
'அடுப்போர் ஆனாஅதன் ஓரி
மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றது மன் எம்கண்ணுளங் கடும்பே'

எனும் புறநானூற்றுப் பாடல், ஓரியின் கொடைத்திறனை உணர்த்துகிறது. கழைதின் யானையார், வன்பரணர் ஆகிய புலவர்கள் ஓரியைப் பாடி பரிசில் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். தவிர கல்லாடனார், பரணர், கபிலர், பெருஞ்சித்திரனார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் ஆகியோரது பாடல்களும் இவனது புகழைப் பறைசாற்றுகின்றன.
புலவர்கள் தன்னைப் புகழ்ந்து பாடும் பாடலைச் சில நேரங் களில் கேட்கும்போது, அதில் பொதிந்துள்ள உவமை நயம் கண்டு, வெட்கப்பட்டு தனக்குள் பூரித்துப் போவானாம் இந்த வள்ளல்!
காடுகளின் வழியே, தான் பயணிக்கும்போது அங்கே வசிக்கும் வறியவர்களுக்கு அள்ளி வழங்குவான். குறிப்பாக, உணவையும் பொன்னையும் மணியையும் இல்லையெனாது அளிப்பான்.
கூத்தாடும் கலைஞர்களைக் கண்டு விட்டால் இவன் மனம் குதூகலம் ஆகி விடும். அவர்களுக்கு யானைக் கூட்டங்களையும், வசிப்பதற்கு உண்டான நிலத்தையும் கொடுத்து மகிழ்வானாம்! 'கூத்தாடும் கலைஞர் என்றால் ஓரி கொட்டிக் கொட்டிக் கொடுக்கிறான்' எனும் பேச்சு, கலைஞர்கள் மத்தியில் பரவ... பலரும் இவனை நாடி வந்தனர்; பொன்னும் பொருளும் பெற்றுத் திரும்பினர். இவனிடம் அளவுக்கு அதிகமாக பொருளை வாங்கிய கலைஞர்கள் பலரும், பின்னாளில் தங்களது ஆடல் மற்றும் பாடல் தொழிலையே மறந்து விட்டார்களாம். அப்படியெனில், இவனது ஈகைத் திறனின் சிறப்பியல்பை என்னவென்று சொல்வது?
குதிரையில் பயணிப்பது என்றால் வல்வில் ஓரிக்கு கொள்ளை ஆசை. குதிரையின் பாஷைகளை அறிந்து, அதற்கேற்ப அதைச் செலுத்தும் அபார ஞானம் கொண்டவன் ஓரி.
அந்தக் காலத்தில் மன்னர்கள் பலரும் குதிரைப் படைக்கு பிரதானமான இடம் அளித்தனர். போர்க் காலங்களில் எதிரியை திக்குமுக்காட வைப்பதற்குக் குதிரையை லாகவமாகச் செலுத்தி, வெற்றிக் கனியைப் பறிப்பது என்பது சாதாரணமான செயல் அல்ல. குதிரையை நம்பி களம் இறங்கி, மன்னர்கள் சிலர் கழுத்தறுபட்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
கிரேக்கபுரியை ஆண்ட மாபெரும் வீரனான அலெக்ஸாண்டரும், குதிரைகளின் காதலன். 'புசிபேலஸ்' எனும் குதிரையை பிரியமுடன் வளர்த்து வந்தான். இதில் சவாரி செய்வது என்றால் சின்னக் குழந்தையாய் துள்ளி குதிப்பான் அலெக்ஸாண்டர். தமிழகத்தில் வாழ்ந்து வந்த தேசிங்கு எனும் சிற்றரசன் ஒருவன் 'பாராசாரி' எனும் விசேஷ குதிரையை வளர்த்து வந்தான். இதேபோல் வல்வில் ஓரியும், தன் பெயரைக் கொண்ட (ஓரி) குதிரை ஒன்றை ஆசை ஆசையாய் வளர்த்து வந்தான். நீண்ட தூரப் பயணம் மற்றும் யுத்தம் முதலானவற்றுக்கு ஓரியின் மேல் சவாரி செய்வான் வல்வில் ஓரி. இதனால் இவனுக்கு 'ஓரிக் குதிரை வல்வில் ஓரி' எனும் பெயரும் வழங்கப்பட்டதாம்!
'ஓரி' எனும் சொல்லுக்கு, ஒப்புமை அற்றவன் எனும் பொருள் உண்டு. வள்ளல் தன்மை, வீரம் ஆகியவற்றில் ஒப்பற்று விளங்கியதால் இவனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும்; இவனது இயற்பெயர் ஆதன் என்றும் சொல்லப்படுவது உண்டு. ஆகவே, 'ஆதனோரி' என்றும் இவனை அழைத் துள்ளனர். மன்னனை சிறப்பிக்கும் விதமாக, குதிரை மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் ஓரியின் முழு உருவச் சிலை, கொல்லிமலையில் 1975-ஆம் ஆண்டு, வல்வில் ஓரிக்கான விழா ஒன்றில், தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. பார்க்கும்போதே பரவசத்தைத் தரும் இந்தச் சிலையை, கொல்லி மலைக்குள் நுழைந்ததுமே காணலாம்!
பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன், வில் வித்தையில் தேர்ந்தவன்; எனவே 'வில்லுக்கு விஜயன்' என்று போற்றுவர். இதேபோல், வல்வில் ஓரியும் வில் வித்தையில் சூரன்! இவனது வில் வீச்சைக் கண்டு, பாராட்டிச் சென்றோர் பலர். புறநானூறில்...இதற்கு உதாரணமாக சம்பவம் ஒன்று உள்ளது.
ஒரு முறை, வேட்டையாடுவதற்காக பரிவாரங்கள் சூழ, கொல்லிமலைக் காட்டுக்கு வில்லேந்தி புறப் பட்டான் ஓரி. வழியில் அவன் கண்ட காட்சிகளாக, கொல்லிமலை வளத்தைச் சொல்கிறது இலக்கியம். தினைக் கதிர்களைக் கொத்தித் தின்ன வரும் கிளிகளைக் கவணால் விரட்டி, தினைப்புனத்தைக் காவல் காத்தனர் கன்னியர். மாங்கனி மற்றும் பலாச் சுளைகளை ஆசை தீரத் தின்று களித்த குரங்குகள், உற்சாக மிகுதியால் மரங்களில் உள்ள கொடிகளில் ஏறி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. இவற்றை ரசித்தபடியே வேட்டைக்குச் சென்றானாம் ஓரி! வழியில் தென்பட்ட மான் முதலானவற்றை வேட்டையாடினான்.
வனத்தின் அடர்ந்த பகுதியில் காட்டு யானை ஒன்று தென்படவே... அதனை வேட்டையாட விரும்பினான் ஓரி. தனது வில்லில் அம்பைப் பூட்டி, செலுத்தினான். காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாகப் பறந்த அந்த அம்பு, யானையின் மீது புயலெனப் பாய்ந்தது; அதே இடத்தில் யானை இறந்தது. இதோடு முடியவில்லை அம்பின் வீச்சு! யானையின் பின்னே தொலைதூரத்தில் வாயைத் திறந்தபடி இருந்த புலியின் மேல் பாய்ந்தது. இதில் அந்தப் புலியும் செத்துப் போனதாம்!
அதுமட்டுமா? புலியைக் கடந்து நின்ற புள்ளி மான், அதையடுத்து இருந்த காட்டுப் பன்றி ஆகியவற்றையும் சாய்த்ததாம் அம்பு. இறுதியாக உடும்பு ஒன்றை பதம் பார்த்தபடி அதன் உடலில் குத்திட்டு நின்றதாம் அம்பு! இந்தத் தகவலைச் சொல்லும் புறநானூற்றுப் பாடல்...
'வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிரிது உறி
இப் புழற்றலைப் புகர்க்கலை உருட்டி,
உரற்றலைக் கேழற் பன்றி வீழ அயலது
ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்'

என்று அவன் வீரத்தை விவரிக்கிறது.
இத்தகைய சிறப்பு மிக்க வல்வில் ஓரி, நயவஞ்சக மாகக் கொல்லப்பட்டதுதான் பெரும் சோகம்!

Comments