விவாகப் பேறு தரும் விசாலாட்சி!

டும் டும் டும் டும் டும்....“நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி..! பிரச்னைகள் தீர ஒரு நல்ல வாய்ப்பு...! உங்கள் சங்கடங்களையெல்லாம் போக்க சங்கரர் மகாபிலத்திலே கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்’
“ஏம்பா தண்டோரா... இப்படி மொட்டையா மகாபிலம்னு சொன்ன எப்படி? அது எங்கே இருக்கு? அங்கே சுவாமி பேரு என்னென்னெல்லாம் சொல்ல வேண்டாமோ..?’
அவசியம் சொல்றேன் தாயீ....! அவசரப்படாம நின்னு நிதானமா கேளுங்க!
ஆதிகாலத்துல வில்வமரக் காடாக இருந்த பகுதி அது. பக்கத்துல ஒரு சின்னக் கிராமமும் அந்த கிராமத்துக்கு நீர் ஆதாரமான ஏரியும் இருந்துச்சு.
கிராமத்து மக்கள்ல பலர் ஆடு மாடு மேய்க்கவும், அடுப்பெரிக்க விறகு கொண்டு வரவும் வில்வமரக் காட்டுக்குப் போவாங்க. அப்படி ஒரு சமயம் அங்கே போனவங்கள்ல் சிலர் ஒரு இடத்துல பிரகாசமா ஏதோ தெரியறதைப் பார்த்தாங்க.
வேகமா அந்த இடத்துக்குப் போனவங்க, அங்கே சிவலிங்க வடிவத்துல சுயம்பாக ஒரு அமைப்பு உருவாகி இருக்கறதைப் பார்த்தாங்க. ஒளிவீசற அந்த லிங்கத்தை தங்களோட கிராமத்துக்கு எடுத்துப் போக நினைச்ச அவங்க, உடனே தோண்டி எடுக்க முயற்சி செய்தாங்க!
சிவபெருமான் பக்தர்களுக்கு உடனே இரங்கிடுவாரே... சட்டுன்னு வெளியே வந்துட்டார். உடனே அவரை எடுத்துக்கிட்டு வந்து பிரதிஷ்டை பண்ணினாங்க... கரெக்டா?
“அதுதான் இல்ல... அவங்க எவ்வளவோ நேரம் முயற்சி செய்தும் அந்த இடத்தைவிட்டு லிங்க ரூபத்தை நகர்த்த கூட முடியலை..?’
அடடே அப்புறம்?
விஷயத்தைக் கேள்விப்பட்டு, கிராமத்து மக்கள் எல்லோரும் மறுநாள் அந்த இடத்துக்கு வந்தாங்க. அவங்களுக்கும் அந்த ஆசை வந்ச்சு. எல்லோருமா சேர்ந்து தோண்ட ஆரம்பிச்சாங்க. ஆனா தோண்டத் தோண்ட முடிவே இல்லாம பாதாளத்துல இருந்து முளைச்ச மாதிரி அழுந்தி இருந்துச்சு அந்த லிங்கம்.
அப்போ ஒரு பெரியவர் சொன்னாரு. இடப வாகனனுக்கு இந்த இடம்தான் பிடிச்சிருக்கு போல இருக்கு. அதனால இங்கேயே அவருக்க ஒரு கோயிலைக் கட்டிடுவோம்!
அவர் சொன்னதை எல்லாரும் ஆமோதிச்சங்க. பாதாளத்துக்கு பிலம்னு ஒரு பேர் உண்டு. அதைவிட ஆழமான இடத்துல இருந்து முக்கண்ணன் திருமேனி முளைத்தெழுந்த இடம் என்பதால, அந்த இடத்துக்கு மகாபிலம்னு பேர் வந்தது.! வில்வத்தை வடமொழியில் பில்வம்னு சொல்வாங்க. வில்வமரக் காடாக இருந்ததால மகாபில்வம்னு பேர் வந்ததாகவும் சொல்வாங்க...!
அகோபிலம் தெரியும்...! மகாபிலம் கேள்விப்படாத பேராயில்ல இருக்கு...! எங்கேப்பா இருக்கு அது?
எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச ஊர்தான் சாமீ.. மருவி, திரிஞ்சு இன்னிக்கு பழைய பேரைத் தொøல்சுட்ட அந்த கிராமத்தோட ஊஹூம் இன்னிக்கு பெரிய நகரத்தோட பரபரப்பான ஒரு பகுதியா இருக்கற அந்தத் தலத்தோட பேர், மாம்பலம்..!
அட... மாம்பலத்தோட பேருக்குப் பின்னாலயே இப்படி ஒரு கதை இருக்கா? நீ மேல சொல்லுப்பா!
மாம்பலத்துல விசாலாட்சி சமேதரா காட்சிதர்ற காசிவிஸ்வநாதர் கோயில்தான், கிட்டத்தட்ட முந்நூற்றைம்பது வருஷத்துக்கு முன்னால அமைக்கப்பட்ட அந்த கோயில்...!
என்னது... காசி விஸ்வநாதரா? மாம்பலத்துக்கும் காசிக்கும் என்ன சம்பந்தம்? அந்த கோயில்ல என்ன விசேஷம்?
கயிலையில் இருந்து சிவபெருமானால தரப்பட்ட ஒளிவீசக் கூடிய லிங்கங்களான பன்னிரண்டு லிங்கங்களை ஜோதிர் லிங்கங்கள்னு சொல்வாங்க. அதுல ஒண்ணுதான் காசியில விஸ்வநாதராக வழிபடப்படுது. அந்த லிங்கத்தை மாதிரியே இந்தக் கோயில்ல இருக்கற சிவத் திருமேனியும் ஒளிவீசி தன் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தினதால, காசிவிஸ்வநாதர்னு திருப்பெயர் அமைஞ்சுது. அதோட, இவரை வழிபட்டா, காசிவிஸ்வநாதரை தரிசிச்ச புண்ணியம் கிடைக்கும்னும் ஒரு ஐதிகம் இருக்கு!
“ஓ! நீ மேற்கு மாம்பலத்துல இருக்கற கோயிலைச் சொல்றியா? நான் சமீபத்துலதான் அங்கே போயிட்டு வந்தேன்...’
நல்லதாப் போச்சு தாயீ... மத்த விவரங்களை நீங்களே செல்லிடுங்க... நான் பக்கத்து ஊருக்குத் தண்டோரா போடப் போறேன்...! டும் டும் டும் டும்...
நான் முதமுதலா அந்தக் கோயிலுக்குப் போனப்போ ரொம்பத்தான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ரொம்பக் குறுகலான தெருவுல உயரமான கோபுரமே வித்தியாசமா தெரிஞ்சுது. எப்படி சின்னதா இருக்கற நம்ம மனசுக்குள்ள நுழைஞ்சு மகேஸ்வரன் விஸ்வரூபம் எடுக்கறாரோ, அதே மாதிரி கோயிலுக்குள்ள போனதுமே பக்தி அதிர்வும், ஒரு மாதிரியான பரவச உணர்வும் நமக்குள்ள நிச்சயம் நிறைஞ்சிடும். கிழக்கு தெற்குன்னு இரண்டு வாயில்கள். இரண்டு பக்கமும் அழகான கோபுரங்கள். ஒண்ணு சுவாமிக்கு. மற்றது அம்பாளுக்கு...!
வழக்கமா பழமையான கோயில்கள்ல கூட்டம் குறைவாகவே இருக்கும்ங்கறது கொஞ்சம் வருத்தமான விஷயம். ஆனா இங்கே பக்தர் கூட்டம் ஏராளம் வர்றாங்க. அதுக்கு காரணம். காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சியையும் தரிசிச்சு வேண்டிகிட்டா, நிஜமான கோரிக்கை எல்லாம் நிச்சயமா நிறைவேறிடுதுங்கற உண்மைதான்.
கிழக்குப் பார்த்த சன்னதியில விஸ்வநாதர் சிறிய லிங்க வடிவுல தரிசனம் தர்றார். வடிவம் சின்னதா இருந்தாலும் இவர் வரம் தர்றதுல பெரியவர்னு சொல்றாங்க. இங்கே வந்து பலனடைஞ்ச பக்தர்கள்.
தெற்கு பார்த்து திருக்காட்சி தர்ற விசாலாட்சி சன்னதியிலயும் கூட்டம் நிறைஞ்சிருக்கு. இந்த அம்மனை வேண்டிகிட்டா, மணமாலை கழுத்தில விழும், மழலை மடிதவழும், தீராநோய் தீரும்னு நம்புறாங்க. அந்த நம்பிக்கை பலிக்கவும் செய்யுதாம்.
கொடிமரம், நந்தி மண்டபடம், பலிபீடம், முகப்பு மண்டபம்னு எல்லாமே எழில்வடிவா இருக்கு. கோஷ்ட தெய்வங்கள் கனகச்சிதமா காட்சி தர்றாங்க. கணபதி, கந்தன், துர்க்கை, சண்டேஸ்வரர், நாயன்மார்கள், சமயக் குரவர்கள், பைரவர், நவகிரக நாயகர்கள் இப்படி எல்லாருக்கும் சன்னதிகள் இருக்கு. மண்டபத் தூண்கள்ல சங்கரநாராயணர், யோக நரசிம்மர், அர்த்தநாரீஸ்வரர், காமாட்சி, நந்தீஸ்வரர், சஞ்சவிராயர், கருடாழ்வார் இவங்களோட சரபேஸ்வரர், பிரத்யங்கரா வடிவங்களும் இருக்கு. அவற்றையும் ஏராளமான பக்தர்கள் வழிபடறாங்க.
கோயிலைச் சுற்றி சுவர்ல பதிக்கப்பட்டிருக்கற நந்திவடிவங்கள், அலங்கார மண்டபத்துல அமைஞ்சிருக்கற சுதை வடிவங்கள்னு எல்லாமே கண்ணை நிறைவிக்கிறதா இருக்கு.
வருஷம் முழுக்க எல்லா உற்சவமும் சிறப்பா நடக்கற இங்கே கூடிய சீக்கிரம் தேர்த்திருவிழாவும் நடக்கப் போகுது. அதுக்காக பிரம்மாண்டமா தேர் செய்துகிட்டு இருக்காங்க.
சொல்றதுன்னா இன்னும் சொல்லிகிட்டே போகலாம் அதைவிட நீங்களே ஒருநடை நேர்ல போய் பார்த்துட்டு தரிசனமும் செய்துட்டு வாங்களேன்... பண்ணியத்துக்கு புண்ணியமும் கிடைக்கும், மனசும் நிறையும், நெடுநாள் நினைவிலும் இருக்கும்.

சென்னை மேற்குமாம்பலத்தில் குப்பையா தெருவில் இருக்கு கோயில். தி.நகர் பஸ்டாண்டுக்குப் பக்கத்துல இருக்கற மேட்லி ரோடு சுரங்கப்பாதையைக் கடந்தா இடது பக்கம் காஞ்சி காமகோடிபீடம் சங்கரமடத்துக்குப் பக்கத்துல இருக்கு, கோயிலோட தெற்குவாயில். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுல இருக்கற இந்தக் கோயில் காலை 6 மணிமுதல் 11 மணி வரைக்கும், மாலை 5.15 மணியிலேர்ந்து இரவு 8.45 வரைக்கும் திறந்திருக்கும்.

Comments