ஒப்பீடு

வீணையின் நரம்புகளில் இருந்து வெளிப்படும் இன்னிசை வேறு; புல்லாங்குழலின் துளைகளில் இருந்து புறப்படும் மெல்லிசை வேறு; மத்தளத்தின் இருமருங்கில் இருந்தும் முழங்கும் வல்லிசை வேறு!
குழலின் மென்மையை மத்தளம் தராது; மத்தளத்தின் வன்மை வீணையில் வராது. ஒன்று போல் இன்னொன்று இருப்பதில் எந்தப் பெருமையும் இல்லை. இறைவனின் அவதாரங்களில்கூட ராமனைப் போல் கண்ணன் இல்லை. வாழ்க்கை எனும் இசையில், ராமன் ஒரு ராகம்; கண்ணன் வேறு ராகம்.
உலகத்தின் 600 கோடி மக்களுக்கும் ஒரே மாதிரி முகத்தை ஆண்டவன் படைக்கவில்லை. எல்லாப் பெண்களும் ஒரே தோற்றத்தில் இருந்தால், அழகுக்கு ஏது ஆராதனை? ஆயிரம் மலர்களும் ஒரே நிறத்தில் இருந்தால் நந்தவனத்துக்குக் கவர்ச்சி எப்படி வரும்? வண்ணக் கலவைகளால்தானே வானவில்லுக்கு என்றும் வனப்பு! வானத்தில் ஒரே வண்ணத்திலான பறவைகளா பறக்கின்றன? கானகத்தில் ஒரே இன விலங்குகளா வளர்கின்றன? பரம்பொருளின் படைப்பில் பல விதம். அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்.
மயிலைப் போல் நாம் இல்லையே என்று குயில் கலங்கக் கூடாது. மயிலுக்கு ஆடத் தெரிந்தால், குயிலுக்குப் பாடத் தெரியும். பாட முடியவில்லையே என்று மயிலும் ஆட முடியவில்லையே என்று குயிலும் வாடக் கூடாது. எல்லா உயிர்களும் ஏதோ ஒரு வகையில், ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவையே! சாபங்களுக்காக சஞ்சலப்படுவதைவிட, வாய்த்த வரங்களுக்காக நாம் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். இல்லாததை எண்ணி ஏங்குவதை விட, இருப்பதை நினைத்து மகிழ வேண்டும்.
'காலணி அணிந்து நடப்பவனுக்கு பாதையில் உள்ள முட்கள் ஒரு பொருட்டன்று. அதேபோன்று, கிடைத்ததில் நிறைவு அடைபவனுக்கு வாழ்க்கைப் பயணம் பெரும் சோதனை இல்லை. உணவை ருசிப்பதும் காமத்தை ரசிப்பதும் நாய்கூட செய்யும் காரியம்தான். நாயைப் போல் அனுபவிக்கத் துடிக்கும் மனிதருக்கு ஞானம் சிதறி விடுகிறது. தலைவனாக இருந்தாலும் அறிஞனாக சிறந்தாலும் நிறைவை

அடையாதவன் நிலை தாழ்ந்து விடுகிறான்' என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
ஒரு நாள் துறவிகள் மற்றும் சீடர்களுடன் வனப் பகுதியில் பேசியபடியே வந்தார் புத்தர். ஓரிடத்தில் குனிந்து கைப்பிடியளவு தழைகளைப் பறித்தார். ''சீடர்களே, என் கையில் உள்ள இலைகள் அதிகமா? இந்தக் காட்டில் உள்ள இலைகள் அதிகமா?'' என்று கேட்டார். ''இதில் என்ன சந்தேகம்? காட்டில் உள்ள இலைகளே அதிகம்'' என்றனர் சீடர்கள். புத்தர் மெள்ள புன்னகைத்தார். ''இந்தக் காட்டில் உள்ள இலைகளை விட நானறிந்த உண்மைகள் அதிகம். ஆனால், என் கையிலுள்ள இலைகளின் அளவு உண்மைகளை அறிந்து
கொண்டாலே துன்பங்களில் இருந்து நீங்கள் விடுபட முடியும். எனவே, பாசாங்கு இன்றி பழகுங் கள். இருக்கிறபடி இயல்பாக இருங்கள். எப்போதும் எளிமையாக இருங்கள்'' என்றார் கௌதமர்.
புத்தர் சொன்னபடி நம்மால் இயல்பாக இருக்க இயலவில்லை. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்து ஏங்காத மனிதர்கள் மிகவும் குறைவு. ஏக்கம், பொறாமையை வளர்க்கிறது. பொறாமை, வெறுப்பைத் தூண்டுகிறது. வெறுப்பு, பகையாய் பரிணமிக்கிறது.
ஒருவனைவிட இன்னொருவன் எதையும் கூடுதலாக அடைவதற்கே ஒப்பீட்டில் ஈடுபடுகிறான். இந்த ஒப்பீட்டின் அளவு மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. வாடகை வீட்டில் வசிப்பவன், சொந்த வீட்டில் இருப்பவனுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறான். சைக்கிளில் செல்பவனுக்கு ஸ்கூட்டரில் செல்பவ னும், ஸ்கூட்டரில் செல்பவனுக்கு காரில்
செல்பவனும் கனவைத் தூண்டுகின்றனர். மாருதி காரில் செல்பவனது மனம், பென்ஸ் காரில் அமர்ந்து செல்பவனைப் பார்த்து ஏங்குகிறது.
ஏதுமற்ற ஏழைக்கு முதலில் சோறு கிடைத்தால்
போதும் என்று தோன்றுகிறது. மூன்று வேளை சோற்றுக்கு வழி பிறந்து விட்டால், சுகமாக ஓய்வெடுக்க ஒரு கூரை இருந்தால் நல்லது என்ற எண்ணம் எழுகிறது. கூரை கிடைத்ததும் பங்களாவாசியின் மீது பார்வையை வீசுகிறான். இந்த ஏக்கத்துக்கும் ஒப்பீடுக்கும் இறுதி வரை எல்லையே இல்லை. வசதிகளின் பெருக்கத்தில் தான் மனித வாழ்வின் மதிப்பு உயர்கிறது என்ற தவறான கண்ணோட்டமே எல்லா ஒப்பீடுகளுக்கும் அடிப்படை ஆகிறது.
அறிவியல் கண்டெடுப்பில் சாதனை படைத்த ஆல்வா எடிசன் பள்ளியில் படித்த போது வகுப்பாசிரியர், ''நீ எதிர்காலத்தில் வாஷிங்டனைப் போல் வருவாயா?' என்று கேட்டார். ''இல்லை. நான் எப்போதும் எடிசனாகவே இருக்க விரும்புகிறேன்'' என்றார் எடிசன். அவரவர் இயல்பைக் காப்பாற்றிக் கொள்வதே சிறப்பு.
போர்க்களத்தில் அர்ஜுனனிடம், ''உன் தனித் தன்மையை எப்போதும் தக்கவைத்துக் கொள். நீ என்னவாக இருக்கிறாயோ, அதிலிருந்து
வேறுபடாதே. உன் பிரதான இருப்பை நிலைப் படுத்து'' என்று வலியுறுத்துகிறார் கண்ணன்.
லின்சீ என்ற ஜென் குருவிடம் வந்த ஒருவன், ''துன்பத்தில் இருந்து விடுபட்டு, புத்தராக மாற விரும்புகிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான். குரு, ''இவனை மடாலயத்தில் இருந்து உடனே வெளியேற்றுங்கள்'' என்று தன் சீடர்களுக்கு உத்தரவிட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அவனை வெளியேற்றியதற்காகப் பரிதாபப்பட்டார். ஜென்
குருவிடம், ''அவன் தவறாக ஒன்றும் கேட்கவில்லையே. புத்தராக ஆசைப்பட்டதற்காக இப்படி அடித்துத் துரத்தலாமா?'' என்று வினவினார்.
''அவனது கேள்வி முட்டாள்தனமானது. அதனால்தான் அடித்துத் துரத்தச் சொன்னேன். அப்போதுதான் மீண்டும் இந்தக் கேள்வியுடன் இங்கு அவன் வர மாட்டான். ஏற்கெனவே அவன் புத்தராகத்தான் இருக்கிறான். மேலும் முயற்சி செய்
தால், அந்த நிலையை இழந்து விடுவான். அவன் எப்படி இருக்கிறானோ, அப்படி இருப்பதே அவனுக்கு நல்லது'' என்று விளக்கம் தந்தார் ஜென் குரு.
மேலானவர் என்றும் கீழானவர் என்றும் யாரோடும் யாரையும் ஒப்பிடுதல் தகாது. அனைவரும் அவரவராய் இருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எவருடைய வாழ்க்கையைப் பார்த்து ஏங்கி, அவரைப் போல் வாழ ஆசைப்படுகிறோமோ, அவருடைய முகத்தைச் சுரண்டிப் பார்த்தால் ஆயிரம் துயரங்கள் தெரியும்.
'ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது மன திருப்தி' என்கிறது மகாபாரதம். உள்ளது உள்ளபடி வாழப் பழகுவதே நல்லது. புகழ் பூத்த ஒருவரைப் பார்த்து அவரைப் போல் வாழ்வது எப்படி என்று ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னை வளர்க்க முதலில் தேவை, தன் முயற்சி. இரவல் வெளிச்சம் இறுதிவரை வழி காட்டாது.
மேலே மேலே ஏறிச் செல்ல வேண்டும் என்ற வெறி உள்ளவர்கள், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தச் சிகரத்தை எட்டிப் பிடித்தாலும் அங்கேயே இறுதி நாள் வரை நிற்க முடியாது. சிகரத்தின் பக்கத்தில் இருப்பது அதல பாதாளம். சமவெளியில் சறுக்கி விழுந்தால் சிராய்ப்பு ஏற்படும். சிகரத்தில் தடுக்கி விழுந்தால் சிரசு பிளந்து விடும். ஏணியில் ஏறுவதற்கும் எல்லை உண்டு. அதற்குப் பின் இறங்கியே ஆக வேண்டும். இறங்க விருப்பம் இல்லாதவன் உச்சியிலேயே தங்கிவிட வேண்டும். அதற்குமேல் ஓரடிகூட உயர முடியாது.
ஒருவர் இன்னொருவருடன் ஒப்பீடு செய்வது உயர்வைத் தராது. இதோ...ஓஷோ சொல்வதைச் செவிமடுப்போம். 'துறவி ஒருவர் என்னுடன் உரையாடியபோது, ஒப்பீடு ஒரு வகையில் நல்லது என்றார். மகிழ்ச்சி இல்லாத மனிதர்களைக் கண்டுகொள்வதே மகிழ்ச்சியின் ரகசியம் ஆகும் என்று விளக்கினார். 'முடமானவனைப் பார்த்து, நடப்பவன் மகிழலாம். விழியற்றவனைப் பார்த்து,
பார்க்க முடிந்தவன் மகிழ்ச்சி கொள்ளலாம். ஏழையைப் பார்த்து, ஓரளவு வசதியுள்ளவன் மன நிறைவு அடையலாம்' என்று சொல்லிக் கொண்டே போனவரை நான் தடுத்தி நிறுத்தினேன். 'ஓர் எளிய உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஒருவன், இன்னொருவனுடன் ஒப்பீடு செய்யத் தொடங்கிவிட்டால் அவனைவிட அதிர்ஷ்டக் குறைவானவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க மாட் டான். அவனைவிட அழகு, அறிவு ஆகியவை அதிகம் உள்ளவனுடனும் வலிமையுள்ளவனுடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துத் துயரமடைவான். நீங்கள் அவனுக்கு மகிழ்ச்சியின் ரகசியத்தைச் சொல்லவில்லை. துயரத்தின் ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறீர்கள்' என்றேன்.
யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒப்பிடுவது போட்டி மனப்பான்மையை உருவாக்கும். அது, முன்னேறும் ஆசையைத் தூண்டும். நீ ஒருமுறை போட்டி போடத் தொடங்கிவிட்டால், அதற்கு முடிவே இல்லை!'
_ ஓஷோவின் இந்த வார்த்தைகள், நம்முள் ஓயாமல் ஒலிக்கட்டும். மனத் திருப்திக்கான வழிமுறைகள் மனிதனுக்குள் இல்லாவிட்டால் மகிழ்ச்சிக்கான வாசற் கதவுகள் ஒருபோதும் திறக்காது. தொடு வானத்துக்கு அப்பால் மாயத் தோற்றமிடும் ரோஜாக்களின் கூட்டத்தைக் கனவில் கண்டு மகிழ்வதைவிட, நம் வீட்டு ஜன்னலுக்கு வெளியில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூவின் ஸ்பரிசத்தில் பரவசம் கொள்வதே வாழ்வின் புத்தி சாலித்தனம்.
அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு அமைதி இழக்காமல், நம் இயல்புகளுடன் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். வாழ்க்கை, நாம் நினைப்பதைவிட குறைவான காலம் கொண்டது. தத்துவ ஞானி செனகா சொன்னார்:
'உன்னிடம் இருப்பதோடு திருப்தி அடைவாயாக. ஒருவன் எல்லாவற்றிலும் முதல்வனாக முடியாது.'

Comments