அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்த கதை!

சுவேதகி எனும் மன்னன், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதையும் யாகம் செய்வதற்கே அர்ப்பணித்திருந்தான்.
தொடர்ந்து நூறாண்டுகள் வரை மாபெரும் வேள்வி ஒன்றை செய்ய வேண்டும் என்று விரும்பினான் மன்னன். இதுகுறித்து சிவனாரை வேண்டி கடும் தவம் மேற்கொண்ட மன்னனுக்குக் காட்சி தந்து அருளினார் சிவபெருமான்.
''என்ன வரம் வேண்டும்?'' என்று சிவனார் கேட்க... ''அடியேன் நூறாண்டு யாகம் நடத்த உதவுங்கள்'' என்று வேண்டினான் மன்னன்.
''முதலில் பன்னிரண்டு ஆண்டுகள், நெய் தாரைகளால் வேள்வி வளர்த்து, அக்னி பகவானைத் திருப்திப்படுத்து. பிறகு உனக்கு உதவுகிறேன்'' என்றார் சிவனார்!
அதன்படியே செய்து முடித்த சுவேதகி மன்னனிடம், ''வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய். துர்வாச முனிவர் வந்து வேள்வி செய்வார்'' என்று அருளினார் சிவபெருமான்.
இதையடுத்து நூறு வருட வேள்வியை சிறப்புற முடித்துக் கொடுத்தார் துர்வாசர். ஆனால், நூறு ஆண்டுகளாக யாகத்தில் சேர்த்த நெய்யை உட்கொண்டதால், அக்னி தேவனை மந்த நோய் தாக்கியது. எனவே, பிரம்மதேவரிடம் சென்ற அக்னி பகவான், ''எனது நோயைத் தீர்த்து அருளுங்கள்'' என வேண்டினான்.

உடனே பிரம்மனும், ''தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, அசுரர்களது இருப்பிடமான காண்டவம் எனும் வனத்தை எரித்தாயே... அதேபோல் மீண்டும் எரித்தால், உனது நோய் தீரும்'' என்று அருளினார்.
அதன்படி காண்டவ வனத்தை எரிக்க முயன்றான் அக்னி தேவன். ஆனால், அவனது முயற்சிகள் தோல்வியைத் தழுவின. மீண்டும் பிரம்மதேவனிடம் வந்து முறையிட்டான். ''நரநாராயணர்களான ஸ்ரீகிருஷ்ணனும் அர்ஜுனனும் இந்த வனத்துக்கு அருகே உள்ளனர். அவர்கள் மூலம் உனது பிரச்னை தீரும்'' என்று அருளினார் பிரம்மன்.
அதன்படி, இருவரையும் சந்தித்து தனக்கு உதவும்படி வேண்டினார் அக்னி பகவான். அவர்களும் காண்டவ வனத்தை எரிக்க அக்னிக்கு உதவினர். தனது நோய் நீங்கும் பொருட்டு, காண்டவ வனத்தை எரிக்க உதவிய அர்ஜுனனுக்கு நன்றிக் கடனாக அக்னி பகவானால் மனமுவந்து வழங்கப்பட்டதே காண்டீபம் எனும் வில்!

Comments