வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!

ட தேசத்தில் கௌதமன் எனும் ஏழை அந்தணன் ஒருவன், ஒழுக்கமற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தவறான செயல்களில் பணம் சம்பாதித்து வந்தான்.
ஒரு நாள் பசியுடனும் களைப்புடனும் வனத்தில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினான். இந்த மரக் கிளையில், நாடீஜங்கன் எனும் தெய்வீகக் கொக்கு ஒன்று வசித்து வந்தது. இதன் மேனியெங்கும் பொன் ஆபரணங்கள்! கௌதமனைக் கண்ட கொக்கு, அவனைத் தன் விருந்தாளியாகவே எண்ணி வரவேற்று, அவனுக்கு உணவும் அளித்தது.
இதில் மகிழ்ந்த கௌதமன், தன் நிலையைக் கொக்கிடம் விவரித்தான். அவன் மீது பரிதாபப்பட்ட கொக்கு, ''உனது வறுமை தீர ஒரு வழி சொல்கிறேன். அருகில் உள்ள மறுவ்ரஹம் எனும் ஊரில் விருபாக்ஷன் எனும் தர்மவான் இருக்கிறான். அரக்கன்தான் என்றாலும் என் இனிய நண்பன்! இவனிடம் சென்று நான் அனுப்பியதாகச் சொல்; உதவுவான்'' என்றது.
அதன்படியே விருபாக்ஷனை சந்தித்தான் கௌதமன். தன் நண்பன் (கொக்கு) அனுப்பியதை அறிந்ததும் பொன் மூட்டையை எடுத்து அவனுக்கு வழங்கினான் அரக்கன். மகிழ்ச்சியில் திளைத்த கௌதமன், மீண்டும் கொக்கிடம் வந்தான். இவனது வறுமையைப் போக்கியதை எண்ணி பூரித்துப் போனது கொக்கு!
கௌதமனது துர்குணம் அன்றிரவு மீண்டும் எட்டிப் பார்த்தது. 'பொன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் நடக்க வேண்டும். வழியில் உணவு கிடைப்பதும் அரிது. எனவே, இந்த கொக்கை அடித்துக் கொன்று, எடுத்துச் சென்றால் பயணத்தின்போது பசியாறலாம்' என்று சிந்தித்தான். அதன்படி, தூங்கிக் கொண்டிருந்த கொக்கைக் கொள்ளிக்கட்டையால் எரிய வைத்தான். துடிதுடித்து செத்தது கொக்கு. இதன் மாமிசத்தையும் பொன் மூட்டையையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

விடிந்ததும் தன் நண்பன் கொக்கைத் தேடி வந்த விருபாக்ஷன், அதைக் காணாமல் தவித்தான். கொக்கைத் தேடிக் கண்டுபிடிக்க வீரர்களை ஏவினான். வழியில் கௌதமனைச் சந்தித்த அரக்கனது ஆட்கள், அவனை இழுத்து வந்து விருபாக்ஷன் முன்னே நிறுத்தினர்.
அவன் கையில் இருந்த மூட்டையில், கொக்கு மாமிசம் இருந்ததைக் கண்ட அரக்கன் திடுக்கிட்டான். 'இந்த நன்றி கெட்டவனைக் கொல்லுங்கள்' என்று ஆவேசத்துடன் உத்தரவிட்டான். அதன்படி அரக்கனது வீரர்கள், கௌதமனைக் கொன்று அவனது உடலை எரித்தனர்.

நடந்தவற்றை அறிந்த இந்திரன், கொக்கின் மாமிசத்தின் மேல் அமுதத்தைப் பொழிய... உடனே உயிர் பெற்று எழுந்தது கொக்கு. பிறகு கௌதமன் இறந்ததை அறிந்த கொக்கு, 'என் விருந்தாளிக்கு இந்த கதி ஏற்பட்டு விட்டதே...' என்று கதறியது. இதையடுத்து கொக்கின் உயரிய எண்ணத்தை உணர்ந்த இந்திரன், கௌதமனையும் உயிர்த்தெழச் செய்தார்.
அதன் பின் தன் தவறை உணர்ந்து, கொக்கிடம் மன்னிப்புக் கேட்டு, திருந்தி நல்லவனாக வாழத் துவங்கினான் கௌதமன்.

Comments