கச்சி அனேகதங்காவதம்

'சிவாய நம... சிவாய நம!'
_ தொடர்ந்து ஒலித்த அந்தக் குரல், கயிலாய சிகரத்தில் பட்டுத் தெறித்து, பனி மலையை உருக்கி, பூதகணங்களின் மீது வழிந்து, சிந்தாமணி இல்லத்தில், சிங்காதனத்தில் அமர்ந்திருந்த சிவனாரின் திருப்பாதங்களைச் சுற்றிச் சுழன்று, அருகிலிருந்த அம்மையின் உள்ளத்தைப் பிசைந்து கண்களைக் கலக்கியது!
"விநாயகன் லிங்க பூஜை செய்கிறான்!" - மெல்லிய குரலில் கூறினார் மலைமகளார்.
"அப்படித் தெரியவில்லையே தேவி. இது... வேறு யாரோ!"- காது கொடுத்துக் கேட்பதுபோல லேசாகத் தலையைச் சாய்த்துக் கொண்டே முகத்தைச் சுளித்தார் சிவனார்.
ஐயன் சொல்வதன் பொருள் புரியாமல், வியப்புடனும் தவிப்புடனும் அவரை ஏறிட்டுப் பார்த்த அம்மை, என்ன சொல்வது என்று விழித்தார். 'கஜமுகன்தான் பூலோகத்தில் லிங்க பூஜை செய்கிறான். ஏனோ... தெரியாததுபோல இவர் பேசுகிறாரே. இதைக் கேட்டால், அந்தப் பிள்ளை எவ்வளவு துடிக்கும்' - தாய் மனம் பதறியது. இவரது பதற்றத்தைக் கண்ட சிவனார் உள்ளூர நகைத்துக் கொண்டார்.
தேவியிடம், "இது விநாயகன் குரலில்லை தேவி. அவன் குரல் இன்னும் மென்மையாக இருக்கும்" என்றார்.
தேவியால் பொறுக்க முடியவில்லை! "போதும் உங்கள் விளையாட்டு. தவத்தில் அமர்ந்து லிங்க பூஜை செய்யும் பிள்ளையிடம் இதென்ன விளை யாட்டு?'' என்று அம்மை வெடிக்க... அவளது தவிப்பைப் பார்த்து பூதகணங்களும் பரபரக்க... வசினியாதி தேவதைகள் அடுத்த ஆணைக்குக் காத்திருக்க... "அப்பா, யானையைக் கட்டவேண்டிய தருணம் இன்னும் தலைகாட்ட வில்லையோ?" கேலியும் கிண்டலுமாக முருகன் முகம் காட்ட...

"அவரவர் கட்டுப்பட வேண்டிய காலம் வந்தால், கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். எனது விளையாட்டுகளில் மாட்டிக் கொண்டாளாம் உங்கள் அம்மா; கணேசனுக்கு எத்தனை விளை யாடல்களோ!" பெருமூச்சு விடுவது போல பாசாங்கு செய்தபடி புறப்பட்டார் பரமனார்.
காளையை விட்டு இறங்கி, அந்தக் கல்லின் மீது போய் இறைவனார் நின்ற போதும், கஜமுகனின் கவனம் கலையவில்லை.
"சிவாய நம..."
தமது அருள்பார்வையைச் செலுத்தி, அந்தச் சிவ லிங்கத்தை பரமனார் அசைக்க, தமது தாமரைக் கண்களை மலர்த்தினார் யானை முகனார். அவரின் தும்பிக்கை அழகைக் கண்ணார பருகிக் கொண்டே ஐயன் ஆசி வழங்க, விநாயகரும் தமது விருப்பத்தை வெளியிட்டார்: "ஐயனே, தங்களது பக்தையாக வளர்ந்து வருகிறாள் வல்லபை. ஆயினும், இருக்கும் இடம்தான் சரியில்லை. அடிக்கடி ஒளித்து வைக்கப்படுகிறாள். அவளை வெளிப்படுத்தி இணைவதே விருப்பம். தாங்களே இதனை நடத்தித் தரவேண்டும்" - சிரம் தாழ்த்தி நின்ற மகனை அன்பொழுக நோக்கினார் சிவனார்.
"அப்படியே ஆகட்டும்! கருணை மிகுதியால் தகுதியற்ற தந்தைக்கு மகளாகத் தோன்றுவதும் பின்னர் அவர்களாலேயே அவதிக்குள்ளாவதும்... பராசக்திக்கு அடுத்தபடி, கணேச சக்திக்கும் வழக்கமாகி விட்டதோ! கணேச சக்தியான வல்லபை, கேசி அரக்கனின் மகளாக வளர்கிறாள். அவளை வெளிப்படுத்த கேசியுடன் போரிட வேண்டும். யானை பலம் கொண்ட... அதே நேரம் யானை அல்லாத ஒன்றால் மட்டுமே அவன் அழிவான். அனேகபம் (யானை) வழிபட்டதால், இந்தச் சிவலிங்கத்துக்கும் அனேக பலமும் அனேகப பலமும் சேர்ந்து விட்டது. அனேகபநாதனாகச் சென்று கேசியை அழிப்போம்; உன் வல்லபையை உனக்குத் தருவோம்!" - ஐயனார் அருள் வழங்கியபடி ஆயத்தமாக, அடுத்த வேண்டுகோளையும் விநாயகர் அவசர அவசரமாக வைத்தார்.
"ஐயனே... இப்போது போன்று எப்போதும் இங்கு, அனேகபநாதராக தாங்கள் அருள்காட்சி தர வேண்டும்"
"ஆகட்டும் ஐங்கரா! அதுமட்டுமல்ல... இங்கு வந்து அனேகபநாதனை வழிபடுவோரது திருமணத் தடங்கல்கள் அகலும்; திருமணங்கள் கைகூடும்; நெடு நாள் மணம் புரிய மறுக்கும் பிள்ளைகள், தாங்களே மனமுவந்து திருமண நாட்டத்தைத் தெரிவிப்பார்கள்"- சிவனாரின் நமுட்டுச் சிரிப்பைக் கண்டு உள்ளூர நகைத்தார் விநாயகர்.
இரணியபுரத்தை ஆட்சி செய்த அரக்கன் கேசி. அவனது முன்வினைப் பயனால், கணேச சக்தியான வல்லபை, அவனுக்கு மகளாகத் தோன்றினாள். இவள், நிறைந்த சிவபக்தை. எனினும், இவளது சிவ பக்தியைப் பொறுக்காத கேசியால், அவ்வப்போது ஒளித்து வைக்கப்பட்டாள்; மறைக்கப்பட்டாள். இதற்காக கணேசர், லிங்க பூஜை செய்ய, லிங்கத்தில் எழுந்தருளினார் பரமனார்.
'அனேகபம்' என்றால் 'யானை'. அனேகப முகத் துடன் கணேசர் பூஜித்ததால், இந்த லிங்கநாதரும் அனேகப நாதர் ஆனார். அனேகப நாதராகச் சென்று கேசியை வென்றார்; வல்லபையை வெளிப்படுத்தி னார். கணேசர்- வல்லபைக்கு திருமணம் நடந்து, கணேசரும் ஸ்ரீவல்லபை விநாயகர் ஆனார்.
யானை முகத்தோன் பூஜித்த இடமும் அனேகப நாதர் அருள் வழங்கிய தலமும், வல்லபை- கணேசர் இணையக் காரணமான பகுதியும் எங்கே இருக் கிறது? வெகு அருகில்தான்!
ஆம், காஞ்சிபுரத்தில்தான் இந்தத் தலம்! போகலாமா?
காஞ்சிபுரத்தில், பிரபலமாகவும் சுற்றுலா மையமா கவும் விளங்கும் அருள்மிகு ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளது, நாம் காண வேண்டிய தலம். அனேகதங்காவதம் என்று பெயர் (அனேகபம் என்பது போல, அனேகதம் என்பதும் யானையைக் குறிக்கும்; யானை தங்கிய பகுதி இது). வடநாட்டில் உள்ள கேதார்நாத்துக்கும் 'அனேக தங்காபதம்' எனும் தேவாரப் பெயர் காணப் படுவதால், இந்தத் தலம் 'கச்சிஅனேகதங்கா வதம்' எனப்படுகிறது. காஞ்சிபுரத்தின் இந்தப் பகுதிக்குப் பிள்ளையார் பாளையம் என்றே பெயர்.
முன்பெல்லாம் கயிலாசநாதர் கோயிலுக்குச் செல்லும் போது, எதிர்ப்பக்கத்தில் வயல்வெளிகள் கண்ணில் படும். வயல்களுக்கு நடுவில் அனேகதங்கா வதம் கோயில். இப்போது, வயல்வெளிகள் தெரியாத அளவுக்குக் கட்டடங்கள் வந்து விட்டன. பெரிதாகத் தெரிகிற பள்ளிக்கூடம்; அருகிலேயே, புதிதாகக் கட்டப்படும் முன்புற அலங்கார வளைவு. வளைவுக்குள் நுழைந்தால், நீண்ட பாதையின் முடிவில் ஸ்ரீஅனேகதங்காவதத் திருக்கோயில்.
சிறிய கோயில். நாம் நிற்பது வடக்கு வாயில்; கோபுரம் இல்லை. கோயிலைச் சுற்றி சுற்றுச்சுவர். சிறிய அளவிலான வாயிலுக்குள் நுழைந்தால், விசாலமான உள்ளிடம்; நடுவில் கோயில் இருக்கிறது. நந்தவனம், பிராகாரம், கிணறு அனைத்தும் உள்ளிடத்திலேயே உள்ளன.
வடக்கு வாயிலில்தானே நுழைந்தோம். அப்படியே பிராகாரம் சுற்றி வரலாம். வடகிழக்கு மூலையில் கிணறு. கிழக்குப் பகுதியில்தான் மூலவர் சந்நிதி வாயில்; எதிரில் கொடிமரம், பலிபீடம், நந்தி (கிழக்கு வழியாக வருவதற்கு ஏதுவாகக் கிழக்கு வாயிலும் உள்ளது). தொடர்ந்து, தெற்குச் சுற்றில் திரும்புகிறோம். திரும்பும் இடத்துக்கு எதிரில், சுற்றுச் சுவரை ஒட்டினாற்போல, நால்வர் மண்டபம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பக்திப் பெருக்குடன் நிற்கின்றனர். தெற்குச் சுற்றில், பக்தர்கள் வலம் வர வசதியாக, சிறிய நடைபாதை அமைத்துள்ளனர். சுற்றுச் சுவரை ஒட்டி ஆங்காங்கே மரங்கள், செடிகள். தென்மேற்குப் பகுதியில், விநாயகர் சந்நிதி. வட மேற்குப் பகுதியில், ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதி; வள்ளி- தெய்வானை உடனாய மயிலேறு முருகன்; நான்கு திருக் கரங்கள். மேல் கரங்களில் தாமரை மலர்களும், கீழ்க் கரம் இரண்டில் அபய- வரமும் தாங்கி தரிசனம் தருகிறார். வடக்குச் சுற்றில் திரும்பி நடந்து வலத்தை நிறைவு செய்து, கொடிமரத்தின் அடியில் வந்து நிற்கிறோம்.
திருச்சுற்று வரும்போதே நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஒன்று... மாணவர்கள் சிலர், கோயிலில் உள்ள மரத்தடியிலும் பிராகாரத் திலும் பாடப் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருக்கின்றனர். திருச்சுற்றை வலம் வருவது போல நடந்து நடந்து அவர்கள் கற்பதைக் காணும் போது, மனதுக்கு நிறைவாக இருக்கிறது. கொடிமரம் மற்றும் நந்தியை வணங்கி, மூலவர் சந்நிதியை அடைகிறோம். சிறிய முன்மண்டபம். உள்ளே... அர்த்த மண்டபம் தாண்டி...
தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானது இடம் திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரியாடி இடம் குல
வான திடங்குறையா மறையாம்
மானை இடத்ததொர் கையன் இடம் மதம்
மாறு படப்பொழியும் மலைபோல்
யானை உரித்த பிரானது இடம் கலிக்
கச்சி அனேகதங்கா வதமே

என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய அருள்மிகு அனேகதங்காவதேஸ்வரர்! அழகிய, பெரிய சிவலிங்க மூர்த்தம். வட்ட வடிவ ஆவுடையார். கண்களைக் கொள்ளை கொள்ளும் மூர்த்தம்.
தொண்டை நாட்டுத் திருத்தலங்களை தரிசிக்க ஆவல் கொண்ட சுந்தரர், திருக்கச்சூர் அடைந்தார். பின்னர் காஞ்சிபுரம் அடைந்து, கச்சி ஏகம்பனை வழிபட்டார். கச்சிப் பதியில் சில நாட்கள் தங்கினார். அப்போது, ஓணகாந்தன் தளி எனும் திருக்கோயிலை வழிபட்டார். பிறகு, கச்சி அனேகதங்காவதம் வந்து பாடினார். இங்கு பாடிய பதிகத்தின் (இந்தளப் பண்) பத்துப் பாடல்களிலும், 'இறைவனார் விரும்பி உறைகிற இடம், கச்சி அனேகதங்காவதமே' என்று பாடினார். சுந்தரர் பாடிய 'தேனெய் புரிந்துழல்' என்னும் இந்தப் பதிகம், அழகான கும்மி மெட்டில் இருக்கிறது. ஆட்டக்காரரான ஆனந்தபிரானுக்கு ஏற்ற ஆனந்தக் கும்மி! பதிகத்தின் முதல் பாடலில், சிவனாரை 'யானை உரித்த பிரான்' என்று குறிப்பிடு கிறார். இதற்கு ஏற்ப, கோயிலுக்கு மேற்கேயுள்ள வயல்வெளிகளுக்கு, 'யானை உரித்தான் வயல்' என்றே பெயர்.

அம்மன் சந்நிதி தனியாக இல்லை. காஞ்சிபுரத்து ஈசனுக்குக் காமாட்சியே சக்தி எனும் ஐதீகத்தின்படி, அருள்மிகு காமாட்சியே இந்தத் தலத்தின் போக, யோக சக்தியாவார்.
பைத்த படத்தலை ஆடரவம்பயில்
கின்ற இடம்பயிலப் புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடம்திகழ்
கின்ற இடம் தீருவானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
வைத்த இடம் மழுவாளுடைய
அத்தன் இடம் அழல் வண்ணன் இடம் கலிக்
கச்சி அனேகதங்கா வதமே

என்று சுந்தரர் வழியில் ஸ்ரீஅனேகதங்காவதேஸ் வரரைப் போற்றி வணங்குகிறோம்.
வேகமாக உள்ளே வருகிறது ஒரு கூட்டம்; இடையில் புது மாப்பிள்ளை, புதுப் பெண். நீண்ட நாட்கள் திருமணத்தை மறுத்துத் தள்ளிப் போட்ட ஓர் இளைஞர், அவரது பெற்றோர் இங்கே வந்து வழிபட்டுச் சென்ற பின், திருமணத்துக்குச் சம்மதித்து... இதோ, திருமணம் நிறைவடைந்த கையோடு, மண மக்களை அழைத்து வந்திருந்தனர் பெற்றோர்! ஆஹா! ஆமாம், என்ன இருந்தாலும், விநாயகருக்கே
திருமணம் முடிக்கக் காரணமான தலமாயிற்றே!!
இந்தத் தலம், குபேரனும் வழிபட்ட தலம். செல்வ நாயகனான குபேரனுக்கே கொட்டிக்கொடுத்த தலமாம்! அருகில் உள்ள கயிலாசநாதர் கோயில்... பல்லவ மன்னரும் சுந்தரருக்கு அணுக்கத் தோழரும் அறுபத்துமூவருள் ஒருவருமான காடவர்கோனான 2-ஆம் நரசிம்ம பல்லவன் எனும் ராஜசிம்மன் கட்டியது. பல்லவ மன்னனே கூட, அனேகதங்காவதத்தில் வழிபட்டுத்தான், செல்வமும் செல்வாக்கும் நிரம்பப் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. சுற்றுச் சுவருக்கு அப்பால், கோயிலுக்கு மேற்காக ஒரு குளம். இதுவே, கோயிலின் தாணு தீர்த்தம்.
அருள்மிகு அனேகதங்காவதேஸ்வரரை வழி பட்டு, ஐங்கரனையும் அம்மையையும் முருகப் பெருமானையும் மனதார நினைந்து வணங்கி வெளி வருகிறோம்!

Comments