செயல்

'பற்றற்றிரு' என்று போதிக்கும் பகவத் கீதை, எந்த இடத்திலும் 'செயலற்றிரு' என்று சொல்லவே இல்லை. செயலற்று இருத்தல் சாவுக்குச் சமம். மண்ணில் வாழப் பிறந்த மனிதன் சலனமற்றுச் சடலமாகக் கிடப்பதில், கீதையைத் தந்த கிருஷ்ணருக்குச் சம்மதம் இல்லை.
செயலற்று இருப்பதே சொர்க்கம் செல்லும் வழி என்றால், மலைகளுக்கு மட்டுமே அந்த சொர்க்கத்தில் இடம் இருக்கும். கடலில் அலைகள் ஓயாமல் ஆடுகின்றன. நதிகளில் நீர் தேங்காமல் ஓடுகிறது. காற்றின் தழுவலில் மரக் கிளைகள் மகிழ்ச்சியுடன் தலையாட்டுகின்றன. பறவைகள் பரவசத்துடன் வான வீதியில் பறக்கின் றன. விலங்குகள் இரைதேடி விரைவாகப் பாய்கின் றன. எங்கும் எதிலும் இயக்கமே இயற்கையின் இயல்பான விதியாக இருக்கிறது. அசைவற்று சும்மா இருப்பதாக நாம் நினைக்கும் மலைகள்கூட ஆண்டு தோறும் அங்குலம் அங்குலமாய் வளர்வதாக அறிவியல் அறிவிக்கிறது.

மனமே போர்க்களமாக மாறிவிட்ட சூழலில் அர்ஜுனன், 'பிரம்ம ஞானமே வாழ்வின் மிக உயர்ந்த குறிக்கோள் என்று கூறும் கண்ணா, என்னை ஏன் செயல்புரியச் சொல்கிறாய்?' என்று கிருஷ்ணரிடம் கேட்டான். ''அர்ஜுனா! செயல்களைத் துறந்து விடுவதால், அமைதியை அடைய முடியாது. வாழ்க்கையில் எவரும் ஒரு கண நேரம்கூட செயலற்று இருக்க இயலாது. இயற்கையின் பண்புகள் அவனைச் செயல்பட வைத்து விடும். செயல்களை நிறுத்தி விட்டு, நினைவில் மட்டும் அவற்றைச் சிந்திப்பவன் எதையும் அடைவதில்லை. தன் மனதின் வலிமையால், புலன்களைச் செயலில் ஈடுபடுத்தி அவற்றைத் தன்வசமாக்குபவனே சிறந்தவன். அதனால், நீ செயல்படு!'' என்றார் கிருஷ்ணர். ஒட்டகம் ஒன்று காட்டில் கடுந்தவம் செய்தது. அதன் தவத்தைப் பாராட்டிய பிரம்மன் நேரில் தோன்றி, ''வேண்டும் வரத்தைக் கேள்!'' என்றார். ''நான்முகனே, காட்டில் உணவுக்காக அலைந்து திரிவது வேதனையைத் தருகிறது. இருந்த இடத்திலேயே உணவைப் பெற விரும்புகிறேன். என் கழுத்து நூறு யோசனை நீளம் உள்ளதாக இருந் தால் நல்லது!'' என்று பகர்ந்தது ஒட்டகம்.



கேட்ட வரம் கிடைத்தது. கழுத்து மிக நீளமாக நீண்டு வளர்ந்தது. அன்று முதல் அந்த ஒட்டகம் இருந்த இடத்திலிருந்து ஓரடியும் நகராமல், தூரத்தில் இருந்த தழைகளை ஒடித்துத் தின்று வந்தது. கார்காலம் பிறந்தது. காற்றும் மழையும் கலந்து திரண்டன. நீரில் நனைந்து குளிரில் வாடிய ஒட்டகம், குகை இருக்கும் இடம் தேடி ஓடியது. நூறு யோசனை நீளமுள்ள கழுத்துடன் எந்தக் குகையில் அந்த ஒட்டகம் ஒதுங்க முடியும்? தன் தலையை மட்டும் ஒரு குகையில் நுழைத்து, உடல் முழுவதும் மழையில் நனைய, வாட்டும் குளிரில் வருந்தியபடி ஒட்டகம் நின்று கொண்டிருந்தது. மழைக்கு அஞ்சிய நரியன்று, தன் துணையுடன் அந்தக் குகைக்
குள் முன்பே பதுங்கியிருந்தது. பசியால் வாடிய நரியின் பார்வையில் ஒட்டகத்தின் கழுத்து தெரிந்தது. மகிழ்ச்சியுற்ற நரி, ஒட்டகத்தின் கழுத்தைக் கவ்வி இழுத்துக் கடித்துத் தின்றது. கழுத்தைச் சுருக்க முடியாத சோம்பேறி ஒட்டகம் செத்து மடிந்தது.


செயல்படுவதற்குச் சோம்பலுற்றால் வாழ்க்கை இல்லை என்று விளக்க பீஷ்மர் உரைத்த கதை இது. 'ஒவ்வோர் உயிருக்கும் செயல்பட இறைவன் சுதந்திரம் வழங்கியிருக்கிறான். தானே முயன்று செயல்படுவதில்தான் மகிழ்ச்சி பிறக்கிறது. எந்தக் குழந்தையும் தன் கையை அடுத்தவர் பிடித்து ஓவியம் தீட்டச் செய்வதை விரும்புவதில்லை. வழிகாட்டுவதுடன் பெற்றோர் நின்றுவிடுவதே குழந்தைக்கு நல்லது. சுயேச்சையாக செயல்படு வதே சுதர்மம். சோம்பி இருத்தல் அன்று' என்று கீதைப் பேருரையில் விளக்குகிறார் வினோபா.
செயல்படுவதில் சுயநலம் கூடாது என்பதுதான் கீதையின் வேதம். 'என் மனைவி- மக்களின் நல் வாழ்வுக்காக நான் சோம்பலின்றிச் செயல்படுகிறேன். ஓய்வின்றி உழைத்து நான் சேர்த்த சொத்தையெல்லாம் என் பிள்ளைகளின் பேரில் எழுதி வைத்திருக்கிறேன்' என்று ஒருவன் சொன்னால், அவனது செயலால் அகிலத்துக்குப் பயனில்லை. வாழ்நாள் முழுவதும் ஒருவன் எவ்வளவு சொத்து சேர்த்தான்? எத்தனை சுகங்களைஅனுபவித்தான்? எந்தெந்தப் பதவிகளை அலங்கரித்தான் என்று ஆண்டவன் தனது பேரேட்டில் பதிவு செய்வதில்லை. எந்தெந்த வகையில் பிறர்க்கு ஒருவன் உதவியாகச் செயல்பட்டான் என்பதை மட்டுமே கடவுள் தனது கணக்கில் குறித்து வைக்கிறான்.

'துன்பத்தில் மூழ்கிக் கிடக்கும் ஏழை மக்களுக்காக ஆர்வத்துடன் செயல்படு. நோயுற்றவர்க்கு மருந்து வழங்க ஏற்பாடு செய். பசித்தவர்க்கு உணவு கிடைக்கப் பாடுபடு. அறியாமையால் உழல்பவர்க் குக் கல்வி புகட்டு. உன் சகோதரர்களுக்காகச் செயல் படுவதில்தான் அமைதியும், ஆறுதலும் கிடைக்கும்' என்ற விவேகானந்தர் ஒரு கதை சொன்னார்.
'பணக்காரன் ஒருவனது தோட்டத்தில் தோட்டக் காரர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். ஒருவன் சோம்பேறி. வேலை செய்வதில் விருப்பம் இல்லாதவன். எஜமான் தோட்டத்துக்கு வரும் போதெல்லாம் ஓடோடிச் சென்று, கூப்பிய கரங்க ளுடன் குழைந்து நிற்பான். இன்னொருவன் அதிகம் பேசுவதில்லை. கடுமையாக உழைப்பான். பழங்களை யும் காய்கறிகளையும் பயிர் செய்து, எஜமான் வீட்டுக்குச் சுமந்து செல்வான். இந்த இருவரில், எஜமானின் அன்பு யாருக்குக் கிடைக்கும்?
கடவுள்தான் எஜமான். இந்த உலகமே அவருடைய தோட்டம். இங்கே இருவகை மக்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் சோம்பேறிகள்; ஏமாற்றுக்காரர்கள். இறைவனின் அழகையும், பண்புநலன்களையும் புகழ் பவர்கள். மற்றொரு வகையினர், பலவீனமான மனிதர்க்கும், ஆண்டவன் படைத்த அனைத்து உயிர் களுக்கும் கைம்மாறு கருதாமல் உழைத்துத் தொண்டாற்றுபவர்கள். இறைவனின் அன்புக்கு உரியவர்கள், பிறர் நலனுக்காகச் செயல்படுபவர் களே!' கருத்தாழம் மிக்க இந்த விளக்கத்தை நெஞ்சில் நிறுத்த வேண்டும்.


'மனிதர் உயிரைப் பாதுகாக்க விரும்பினால், அதில் எப்போதும் இயக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். கர்மம் செய்யாமல் மனிதன் அரை க்ஷணமேனும் இருக்க முடியாது. நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது விதி' என்கிறார் மகாகவி பாரதி.
பலன் கருதாமல் இறைவனுக்கும், பரம் பொருளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் தங்கள் செய்கையால் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமே அன்றி சும்மா இருத்தல் தகாது என் கிறது நம் சமயம். நான், எனது என்ற உடைமை மனோபாவம் உள்ளவர் களால் நிம்மதியான வாழ்க்கையை எந்த நாளும் நடத்த முடியாது. நிம்மதியும், அமைதியும் ஆயுள் வரை நீடிக்க, விளைவுகளில் நாட்டம் செலுத்தாமல், செயல்களில் ஈஸ்வர அர்ப்பணத்துடன் ஈடுபட வேண்டும்.
ஓஷோ சொன்ன ஒரு கதை இது. புகழ்பெற்ற குரு ஒருவர், தன் சீடனை உண்மை ஞானத்தை உணர்ந்துகொள்ள பற்றற்ற ஓர் அரசனிடம் அனுப்பி வைத்தார். 'மெய்ஞானம் குடிகொண்ட குருவிடம் அறிய முடியாத மேன்மையைச் சுகபோகங்களில் ஆழ்ந்திருக்கும் ஓர் அரசனிடம் எப்படி அறிய முடியும்?' என்று சீடன் சிந்தித்தான். ஆனாலும், குருவின் கட்டளைக்கு அடிபணிந்தான்.


அவன் அரண்மனையை அடைந்த போது அங்கு ஆடலும் பாடலும் அரங்கேறின. அந்த இன்பமயமான சூழல் சீடனுக்கு வெறுப்பைத் தந்தது. வரவேற்று உபசரித்த அரசன், அன்றிரவு அரண் மனையில் தங்கும்படி வற்புறுத்தினான். இரவு முழுவதும் சீடனுக்கு உறக்கம் வரவில்லை. மதுவும், மாதராரும், மயக்கம் தரும் சூழலும் நிறைந்த அந்த அரண்மனையில் எந்தப் பேருண்மை புலப்படக் கூடும் என்று அவனுக்குப் புரிய வில்லை. விடிந்ததும், அரசனின் அழைப்பை ஏற்று அவனுடன் நதியில் நீராடச் சென்றான். இருவரும் நீராடிய நேரத்தில், அரண்மனை நெருப்பு பற்றி எரிந்தது. அதைப் பார்த்த அரசன் சிறிதும் சலனமின்றி, ''அரண்மனை முழுவதும் தீப்பிடித்து எரிவது தெரி கிறதா?'' என்று கேட்டான்.


''அரசே! அரண்மனை எரிவது குறித்து எப்படி உங்களால் இவ்வளவு அமைதியாகச் சொல்ல முடிகிறது? எனது மாற்றுத்துணி எரிந்து கருகுவ தற்குள் நான் அதை மீட்டாக வேண்டும்'' என்று கூறிவிட்டு ஓடிய சீடனின் சிந்தையில் ஒரு கேள்வி எழுந்தது. 'நான் ஓர் அற்ப ஆடையைக் காப்பாற்ற ஓடுகிறேன். ஆனால், அரசன் ஏன் அரண்மனையே எரிந்து சாம்பலாவதைச் சலனமற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?' என்று யோசித்தவன், அரசனிடமே திரும்பி வந்து காரணம் கேட்டான்.
''நண்பனே, இந்த அரண்மனை என்னுடை யது என்று நான் எண்ணியிருந்தால், இந்நேரம் அலறியடித்து ஓடியிருப்பேன். கோவணத்
துணி உன்னுடையது என்று நீ எண்ணியதால்தான் உடனே ஓட முயன்றாய். எதுவும் என்னுடையது இல்லை என்ற எண்ணம் உனக்குள் கண் விழித்தால், எந்த நிலையிலும் கலக்கம் இல்லை'' என்றான் அரசன். குரு, ஏன் இந்த அரசனிடம் தன்னை அனுப்பி வைத்தார் என்ற ரகசியம் சீடனுக்கு அப்போதுதான் விளங்கியது.மண்ணில் நல்ல வண்ணம் வாழ விரும்பும் ஒவ்வோர் ஆணும், பெண்ணும் மறவாமல் மனதில் இருத்த வேண்டிய செய்தி இதுதான்... உலகப் பொருள்கள் அனைத்துமே நம்மோடு நிரந்தரமாக உடன் வரப்போவதில்லை. அதனால், எதன் மீதும் அதீத ஆசையோ, ஆழ்ந்த பற்றோ வைப்பதில் அர்த்தமில்லை. ஆசையும், பற்றும் கூடாது என்பதால், அனைவரும் செயலற்றுக் கல்லாய் கிடக்க வேண்டும் என்று பொருளில்லை. வாழ்வின் ஒவ்வொரு கணமும் உயிர்ப்போடு செயல்பட வேண்டும். நமது ஒவ்வொரு செயலும் உலக நன்மைக்கு உரமாக வேண்டும்.

Comments