இப்படியும் ஒரு பெரியவர்!

காசிக்கு அருகிலுள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்த அந்தப் பெரியவர், வறுமையிலும், சாதுக்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அன்னமிட்டு வந்தார். ஒரு நாள், அவரது இல்லத்துக்கு ஐந்து சாதுக்கள் அதிதிகளாக வந்தனர். அப்போது, வீட்டில் சமையல் பொரு ட்கள் ஏதுமில்லை.
உடனே, அருகில் உள்ள கடைக்குச் சென்று, மளிகைப் பொருட்களை கடனாகத் தரும்படி வேண்டினார் பெரியவர். அந்த கடைக்காரனோ பெண் பித்தன்! ''மளிகைப் பொருள் வேண்டுமெனில், உங்கள் மனைவியை இன்றிரவு என் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்'' என்றான்.
பெரியவர் மனம் கலங்கினார். ஆனாலும்... சாதுக்களுக்கு அன்னமிட வேண்டுமே! வேறு வழியின்றி அவனது நிபந்தனைக்கு இணங்கினார். பொருட்களை வாங்கி, சமைத்து, அன்புடன் அன்னமிட்டு... சாதுக்களை அனுப்பி வைத்தார்!

அன்று மாலை! தன் மனைவியை அலங்காரம் செய்வித்து, அவளுடன் கடைக்காரனின் வீட்டை நோக்கி நடந்தார். திடீரென பேய் மழை பெய்யவே... மனைவியுடன் ஓரிடத்தில் ஒதுங்கி நின்றார். மழை நின்றதும் கடைக்காரனது வீட்டை அடைந்தவர், மனைவியை அங்கு விட்டுவிட்டு புறப்பட எத்தனித்தார்.
அப்போது அவரிடம், ''தங்களின் கால்கள் சேறும் சகதியுமாக உள்ளன. ஆனால், தங்கள் மனைவியின் கால்கள் மட்டும் தூய்மையாக இருக்கிறதே, எப்படி?'' என்று வியப்புடன் கேட்டான் கடைக்காரன்.
பெரியவர் சொன்னார்: ''மனைவியின் அலங்காரமும் அழகும் குலையாமல், கால்கள் அசுத்தம் அடையாமல், அவளை உங்களிடம் சேர்ப்பதுதானே முறை. எனவே, மழை நின்றதும் அவளை என் தோளில் சுமந்து வந் தேன்!''
இதைக் கேட்ட கடைக்காரன், கண்களில் நீர் வழிய, பெரியவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். அவனை மன்னித்ததுடன் தன் சீடனாகவும் ஏற்றுக் கொண்டார் அந்தப் பெரியவர். அவர்... கபீர்தாசர்!

Comments