மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவன், தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான். சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம் சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம். உண்டியல் பணத்தை எண்ணினான் ராமதேவன். 'இதில் விட்டலனுக்கு நூல் வேஷ்டியும் அங்க வஸ்திரமும்தான் வாங்க முடியும்' என வருந்தினான். பிறகு மனதைத் தேற்றியபடி, நூல் வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை வாங்கிக் கொண்டு பண்டரிபுரம் நோக்கி நடந்தான்.
வழியில், அழுக்கு வேஷ்டியும் கிழிந்த துண்டுமாய் பெரியவர் ஒருவர் பின்னே வந்தார். ராமதேவனிடம் அவர், ''தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?'' என்று கேட்டார். உடனே அவன், ''விட்டலவனை தரிசிக்க பண்டரிபுரம் செல்கிறேன் சாமி'' என்றான் உற்சாகத்துடன்.
''அப்படியா! நானும் அங்குதான் செல்கிறேன். பண்டரிபுரம் செல்வதற்கு, குறுக்குப் பாதை ஒன்று உள்ளது. எனக்கு அந்த வழி தெரியும். சந்திரபாகா நதியில் குளித்து விட்டு, மாலையில் விட்டலனை தரிசிக்கலாம்'' என்று ராமதேவனை அழைத்தார் பெரியவர். அவனும் சம்மதித்தான். பின்னர் இருவரும் பேசிக் கொண்டே வந்ததில், களைப்பே தெரியவில்லை. பெரியவர் சொன்னபடி மாலை வேளை துவங்கும் முன்பே கோயிலுக்கு அருகில் உள்ள சந்திரபாகா நதிக்கரையை அடைந்தனர்.
பண்டரிநாதனுக்கு சமர்ப்பிப்பதற்காகக் கொண்டு வந்த வஸ்திரத்தை ஒரு பையிலும், தான் குளித்து விட்டு உடுத்திக் கொள்ளும் ஆடையை வேறொரு பையிலுமாக வைத்திருந்தான் ராமதேவன். இரண்டு பைகளையும் கரையில் வைத்து விட்டுக் குளிக்கச் சென்றான். பெரியவரும் நீரில் இறங்கினார்.
தான் அணிந்திருந்த வேஷ்டியை, அங்கு இருந்த கல்லில் அடித்துத் துவைத்து, அலசி, கரையில் காய வைத்தான் ராமதேவன். பெரியவரோ, துவைப்பதற்கு சிரமப்பட்டார். இதை அறிந்த ராமதேவன், அவரது வேஷ்டியை வாங்கித் துவைத்து, நீரில் அலசிப் பிழிந்தான். பிறகு வேஷ்டியை காய வைக்க விரித்தவன், அதிர்ந்து போனான். ஏற்கெனவே கிழிந்திருந்த வேஷ்டி, இப்போது பல இடங்களில் கிழிந்திருந்தது. பெரியவரிடம் மாற்று வேஷ்டி கூட இல்லை.
பெரியவர் அப்போதே சொன்னார் - 'கடந்த வருடம் அன்பர் ஒருவர் கொடுத்த வேஷ்டி இது. ரொம்பவே கிழிந்து விட்டது. ஜாக்கிரதையாக துவையுங்கள்' என்று! இப்போது இந்த வேஷ்டி பாழாகி விட்டதே...! குளித்து விட்டு எதை உடுத்துவார்? நம்மிடமும் ஒரே ஒரு மாற்று வேஷ்டிதானே உள்ளது? புதிதாக வேஷ்டி வாங்கித் தரலாம் என்றால் பணமும் இல்லையே? பாண்டுரங்கா... என்ன செய்வது என்று புலம்பினான் ராமதேவன். ''என்ன ராமதேவா! என் வேஷ்டி காய்ந்து விட்டதா?'' என்று கேட்டபடி கரைக்கு வந்தார் பெரியவர். இடுப்பில் துண்டு மட்டுமே உடுத்தி இருந்தார்.
''பெரியவரே! உங்கள் வேஷ்டியை அடித்துத் துவைத்ததில், நார்நாராகக் கிழிந்து விட்டது. என்னை மன்னியுங்கள்'' என்றான் ராமதேவன். இதைக் கேட்டதும், ''எனது நிலை இப்படியாகி விட்டதே. இப்போது என்ன செய்வது?'' என்று கவலைப்பட்டார் பெரியவர்.
''வருந்த வேண்டாம் சுவாமி. பாண்டுரங்கனுக்கு சமர்ப்பிக்கப் புது வேஷ்டியும் அங்கவஸ்திரமும் எடுத்து வந்திருக்கிறேன். இதை உடுத்திக் கொள்ளுங்கள்'' என்று பாண்டுரங்கனுக்காக வாங்கிய வேஷ்டி- அங்கவஸ்திரத்தைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தான் ராமதேவன்.
''அடடா... என்ன காரியம் செய்கிறாய்?'' என்று வேஷ்டியை வாங்க மறுத்தார் பெரியவர்.
''பெரியவரே! பாண்டுரங்கனுக்கு பட்டு, பீதாம்பரம் போன்ற விலை உயர்ந்த வஸ்திரங்களை வழங்க பலர் உள்ளனர். கடந்த முறை இதேபோல், சாதாரண நூல் வேஷ்டியும், அங்கவஸ்திரமும் வாங்கி வந்தேன். இதை அணிவிக்க மறுத்து விட்டார் அர்ச்சகர். 'பாண்டுரங்கனுக்கு பட்டும் பீதாம்பரமும்தான் அழகு. நீ கொண்டு வந்த நூல் வேஷ்டியைக் கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுத்து விட்டுப் போ' என்று ஏளனமாகப் பேசினார். பிறகு வயதான ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தேன்.
இப்போதும் அதேபோல் நூல் வேஷ்டி தான் எடுத்து வந்துள்ளேன். இதைப் பார்த்ததும், அந்த அர்ச்சகர் வழக்கம் போல் வேஷ்டியைப் புறக்கணிப்பார். இதற்கு உங்களுக்குக் கொடுக்கலாமே? ஏழையின் சிரிப்பில்தானே ஆண்டவன் இருக்கிறான்'' என்றான் ராமதேவன்.
அதன் பின், வேஷ்டியை வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார் பெரியவர். அத்துடன் ''ராமதேவா! வயதாகி விட்டதால் கைகள் நடுங்குகின்றன. நீயே எனக்கு அணிவித்து விடேன்!'' என்றார். அதன்படி வேஷ்டியை அவரது இடுப்பில் கட்டிவிட்டவன், அங்கவஸ்திரத்தை அவரது தோளில் அணிவித்தான். ''ஆஹா! இப்போது நீங்கள், அந்த பண்டரிநாதனைப் போலவே இருக்கிறீர்கள்'' என்றான் முகம் மலர. அந்தப் பெரியவர் மெள்ள புன்னகைத்தார். பின்னர் இருவரும் நெற்றியில் திருநாமம் தரித்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றனர். ராமதேவனுக்குப் பின்னே பெரியவர் வந்து கொண்டிருந்தார்.
அன்றைக்கு பாண்டுரங்கனை தரிசிக்க ஏகக் கூட்டம். ராமதேவன் திரும்பிப் பார்த்தான். பெரியவரைக் காணோம். பல இடங்களிலும் தேடினான். 'சரி... பாண்டுரங்கனை தரிசித்து விட்டு, மீண்டும் பெரியவரைத் தேடுவோம்' என்று சந்நிதிக்கு வந்தான். அங்கே... ராமதேவன் வாங்கி வந்த நூல் வேஷ்டியையும் அங்கவஸ்திரத்தையும் அணிந்தபடி காட்சி தந்தார் பரம தயாளனான அந்த பாண்டுரங்கன்.
வியப்பில் மூர்ச்சித்து நின்றான் ராமதேவன். ''பகவானே! பெரியவராக என்னுடன் வந்தது நீதானா? பட்டு- பீதாம்பரத்தை ஏற்கும் அர்ச்சகர்கள், குறைந்த விலையில் உள்ள வேஷ்டியையும், அங்கவஸ்திரத்தையும் அணிவிக்க மாட்டார்கள் என்று நேராக என்னிடமே வந்து, என் கையாலேயே உனக்கு அணிவிக்கும் பாக்கியத்தையும் வழங்கி விட்டாய். என்னே உன் கருணை...'' என்று பாண்டுரங்கனை விழுந்து வணங்கினான் ராமதேவன்.
அப்போது, 'ஏழைகளுக்கு இரக்கம் காட்டுபவனே உண்மையான பக்தன்' என்று அசரீரி வாக்கு கருவறையில் இருந்து எழுந்தது. கூடி இருந்த பக்தர்கள், ராமதேவனின் பக்தியை நினைத்துச் சிலிர்த்தனர்.

Comments
Post a Comment