புரவிபாளையம் கோடி சுவாமிகள்

வ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வம் என்று இருந்தாலும் இஷ்ட தெய்வமாக ஒரு தெய்வத்தை வணங்கி வருவர். அதாவது, குலதெய்வக் கோயிலுக்கு வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்துடன் போய் வருவார்கள். ஆனால், இஷ்ட தெய்வத்தை அடிக்கடி சென்று வணங்கி வருவர். 'குலதெய்வத்தை விட்டுவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்குகின்றானே... குலதெய்வம் இவனைத் தண்டித்து விடாதா?' என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வியே தவறு.
காக்கின்ற குணத்தைக் கொண்டவர்கள்தான் கடவுளர்கள். என்ன ஒன்று... தர்ம- நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நேர்மையான முறையில் நாம் வாழ்ந்து வருகிறோமா என்பதை மட்டும் கடவுள் கண்காணித்தபடியே இருப்பார். அதர்மம் செய்தால் சாட்டையைக் கையில் எடுப்பார். நேர்மையுடன் வாழ்ந்து வருபவர்களை எந்தக் கடவுளும் கைவிட மாட்டார். காப்பாற்றி கரை சேர்ப்பார். அது குலதெய்வமாகட்டும்; இஷ்ட தெய்வமாகட்டும்.
மண்ணில் உதித்து- உதிர்ந்த மகானையும் தங்களது இஷ்ட தெய்வமாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்கும் அவரை ஆராதித்து வருகின்றன. குலதெய்வக் கோயிலுக்குப் போகிறார்களோ இல்லையோ... ஆனால், இவரது திருச்சந்நிதிக்கு வந்து இவரை வணங்கிச் செல்கின்றனர். அந்த மகானின் சமாதியில் விதம் விதமான வண்ண மலர்களை வைத்து வழிபடுகிறார்கள்; ஊதுவத்தி ஏற்றி, தூபம் காட்டுகிறார்கள்; சமாதியை வலம் வருகிறார்கள். சமாதியின் மேல் முகம் புதைத்து, தங்களின் சுக துக்கங்களை - மீளாத் துயிலில் உறையும் அந்த மகானுடன் பரிமாறிக் கொள்கிறார்கள்.
அந்த மகான் - 'ஸ்ரீலஸ்ரீ பொன்முடி கோடி மஹா சுவாமிகள்' என்று அழைக்கப்படும் புனிதர். பொள்ளாச்சியை அடுத்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கும் புரவிபாளையம் எனும் கிராமத்தில் கடந்த 11.10.94 அன்று மகா சமாதி அடைந்தவர் இவர். பக்தர்கள் எளிதான வார்த்தைகளில் இவரை அழைக்கும் பெயர் - கோடி சாமீ (கோடி சுவாமிகள்).

கோடி சுவாமிகள்.... இந்தப் பெயர் எப்படி வந்தது? ''கோடி கோடியான இன்பங்களையும் செல்வங்களையும் பக்தர்களுக்கு வாரி வழங்குவதால் அவருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம்'' என்கிறார் அவருடைய பக்தர் ஒருவர். அதற்கேற்றாற்போல் தன்னிடம் வந்து ஆசி வாங்கக் காத்திருக்கும் அன்பர்களிடம், ''கோடி வரும்... தேடி வரும்...'' என்றெல்லாம் சுவாமிகள் சொல்வாராம்.
கோடி சுவாமிகளின் இயற்பெயர் என்ன? எப்போது பிறந்தார்? எங்கு பிறந்தார்? இந்த மகானை ஈன்றெடுத்த புண்ணியத் தம்பதி யார்?
- இப்படிப் பல கேள்விகளை சுவாமிகள் இருக்கும்போதே பலரும் அவரிடம் கேட்டார்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் சிறு புன்னகை ஒன்றையே பதிலாகத் தந்தார் சுவாமிகள். ஆகவே, மேலே சொன்ன எந்தக் கேள்விக்கும் இதுவரை சரியான பதில் இல்லை. 'ஷீர்டி பாபாவின் மறு அம்சம் இவர்' என்று கோடி சுவாமிகளைப் பற்றிச் சிலர் சொல்கிறார்கள். 'வடக்கே இருந்து வந்த கோடி சுவாமிகள், உலகளாவிய விஷயங்களை அறிந்தவர்' என்பர் சிலர். இவர், கொச்சைத் தமிழில்தான் பேசுவார். இந்துஸ்தானியில் சில பாடல்களைப் பாடுவாராம். சில நேரங்களில் 'ராம ராம' என்று ஜபிப்பாராம். வள்ளலார், விவேகானந்தர் பற்றி சுவாமிகள் அடிக்கடி சிலாகித்துச் சொல்வாராம்! அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைப் பற்றி அடிக்கடி பேசுவாராம். கல்கத்தா நகரில் உள்ள ஒவ்வொரு வீதிகளின் பெயரையும் கடகடவென்று பக்தர்களிடம் விவரிப்பாராம்.
'தாத்தா சுவாமிகள்' என்றும் பக்தர்கள், கோடி சுவாமிகளை அழைப்பர். காரணம் - சில நேரங்களில் எந்த ஒரு பக்தரையும் 'தாத்தா... தாத்தா' என்றே அழைப்பாராம். இதற்கு வாலிப வயசு ஆசாமிகளும் விதிவிலக்கு இல்லை. ''வா தாத்தா... காலேஜ் நல்லா படிச்சிட்டிருக்கியா?'' என்று மாணவர்களிடம் கரிசனமாக விசாரிப்பாராம்.
சுவாமிகள் எப்படி இருப்பார்? செக்கச் செவேல் நிறம்; ஒளி வீசும் கண்கள்; சுருக்கங்கள் விழுந்த தேஜஸான முகம்; அதில் தவழும் அமைதி- சாந்தம்; பஞ்சு போன்ற வெண்தாடி; தன்னைத் தேடி வருபவர்களை நல்வழிப்படுத்துகிற ஞானப் பார்வை; குளிருக்கும் சரி; வெயில் காலத்திலும் சரி... ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மூன்று கோட்டுகளை அணிந்தபடியே இருப்பாராம் சுவாமிகள். இதற்கென்று சுவாமிகளுக்கு கோட்டு மற்றும் தொப்பிகளை அடிக்கடி அவரது பக்தர்கள் வாங்கி வந்து தருவது உண்டாம். சில நேரங்களில் தலையை கிரீடம் அலங்கரிக்கும்.
புரவிபாளையத்துக்குக் கோடி சுவாமிகள் வந்த கதையைத் தெரிந்து கொள்வோம்.
முதன் முதலில் சுவாமிகள், தனுஷ்கோடியில்தான் பக்தர் ஒருவரால் அறியப்பட்டார். புனித பூமியாம் தனுஷ்கோடியைக் கடல் கொள்வதற்கு முன் நடந்த சம்பவம் இது. தனுஷ்கோடி ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள அந்தோணியார் கோயில் அருகே ஒரு மேடை மீது ஒற்றைக்காலில் நின்றபடி எந்நேரமும் தவம் செய்து கொண்டிருப்பாராம் சுவாமிகள். அந்த வழியே செல்கின்ற மீனவர்களும் மற்றவர்களும் இவரிடம் ஏதும் பேச மாட்டார்களாம். 'இவரது கடும் தவத்துக்கு நாம் இடைஞ்சல் செய்யக் கூடாது' எனும் எண்ணத்தில் நகர்ந்து விடுவார்களாம்.
அப்போது, பக்தர் ஒருவரது வேண்டுகோளுக்கும் விருப்பத்துக்கும் இணங்க, அவரது இல்லத்தில் சென்று சில நாட்கள் தங்கினார் கோடி சுவாமிகள். இது போல் பக்தர்கள் எவரேனும் விரும்பி அழைத்தால் அவர்களது இல்லத்துக்குச் சென்று சில நாட்கள் தங்குவது சுவாமிகளது வழக்கம். இப்படித்தான் தனுஷ்கோடிவாசத்துக்குப் பின் திருச்சி, பழநி, சென்னை தண்டையார்பேட்டை, கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் என்று பயணித்து கடைசியாக 1962-ஆம் ஆண்டு புரவிபாளையம் ஜமீனுக்கு வந்து சேர்ந்தார் சுவாமிகள்.
காரில் வந்து இறங்கிய சுவாமிகள், தானாகவே விறுவிறுவென நடந்து, ஜமீன் வீட்டு மாடிப்படியில் ஏறி, தான் இருக்க வேண்டிய இடத்தைத் தீர்மானித்துக் கொண்டாராம். முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு இடத்துக்கு வந்த சுவாமிகள், இப்படி சகஜமாக நடந்து கொண்டதைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டனர். இதற்கு விளக்கம் தரும் வகையில் பின்னாளில் சுவாமிகளே சொன்ன பதில் இது:
''சுமார் 200 வருடங்களுக்கு முன், புரவிபாளையத்துக்கு வந்திருக்கிறேன். இங்கேதான் தங்கினேன். எந்தக் குறைவும் இல்லாமல் சாப்பிட்டேன். ஜமீனில் உள்ளவர்கள் என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் மீண்டும் இங்கு வந்து தங்க நேரிட்டது. புரவிபாளையம் ஜமீனில் இருந்து வந்த சிலர் என்னை கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் மாளிகையில் சந்தித்தனர். அவர்கள் கிளம்பும்போது, 'நானும் உங்களுடன் வருகிறேன்' என்றேன். அதன்படி புரவிபாளையம் புறப்பட்டேன்.'' கோடி சுவாமிகள் 300 வருடம் இந்த உலகில் வசித்ததாகச் சொல்கின்றனர் சிலர்.
புரவிபாளையம் ஜமீன் இல்லத்து முதல் மாடிதான் சுவாமிகளது வாசம்! சமாதி ஆகும் வரை - தான் இங்கே வசித்து வந்த 32 வருடங்களிலும் (1962- 1994) ஒரு நாள் கூட படி இறங்கி கீழே வந்ததே இல்லையாம்! அதாவது முக்கியமான பக்தர்கள் சிலர், ஜமீன் பங்களாவுக்குள் வந்து சுவாமிகளை தரிசிப்பார்கள். அப்போது மாடியில் மேடை ஒன்று அமைத்து, அதில் இருந்தபடி அவர்களுக்கு தரிசனம் தருவார் சுவாமிகள். ''ஏன் சாமீ, நீங்க கீழே வர மாட்டேங்கறீங்க?'' என்று பக்தர்கள் கேட்டபோது, ''நான் கீழே வந்தா உன்னால என்னைப் பாக்க முடியாது'' என்பாராம். எந்தப் பொருளில் கோடி சுவாமிகள் இதைச் சொல்கிறார் என்பது பலருக்கும் புரியவில்லை.
பக்தர்களில் ஏழை- பணக்காரர் எனும் பாகுபாடோ... ஜாதி-மத பேதங்களோ பார்க்க மாட்டார் சுவாமிகள். இன்றும் இவரது சமாதிக்கு முஸ்லிம், கிறிஸ்துவர் உட்பட மதங்களைக் கடந்து பலரும் வந்து வணங்கிச் செல்கின்றனர். இவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு என்ன பொருளைத் தர எண்ணுகிறாரோ.. அதை சம்பந்தப்பட்டவரை நோக்கி வீசி எறிவாராம். இப்படி அவர் எறியும் பொருட்களுள் தொப்பி, பூமாலை, பழங்கள், இனிப்புகள் போன்றவை அடங்கும்.
சுவாமிகள் தண்ணீர் குடித்து எவரும் பார்த்ததே இல்லையாம்; ஆனால், பக்தர்கள் எப்போதேனும் பாட்டிலில் கொண்டு வந்து கொடுக்கும் பன்னீரைக் கடகடவெனக் குடித்து விடுவாராம். அதேபோல் சுவாமிகள், தன் கையால் உணவு சாப்பிட்டு எவரும் பார்த்தது கிடையாது. பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை அன்புடன் அவருக்கு ஊட்டி விடுவார்களாம். சுவாமிகள் விருப்பப்பட்டால் உணவுக்காக வாயைத் திறப்பார். விருப்பம் இல்லாவிட்டால், 'வேண்டாம் போ' என்பதாக சைகை காட்டி விடுவார். சைவம், அசைவம் - எது கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார். உணவில் பாகுபாடு மனிதர்களுக்குத்தான்; மகான்களுக்கு அல்ல. ஓரிரு வாய் மட்டுமே உண்பார். அவ்வளவுதான்.
இந்த தருணத்தில், குறிப்பிட்ட சில பக்தர்களை அழைத்து, கையை நீட்டச் சொல்லி, தன் வாயில் இருக்கும் உணவையே பிரசாதமாகத் துப்புவாராம். இந்த பிரசாதம் கிடைப்பதை பெரும் பாக்கியமாக கருதினர் கோடி சுவாமிகளின் பக்தர்கள். இத்தகைய அனுக்கிரஹம் வாய்க்கப் பெற்றவர்கள் குறைவானவர்களே! 'சுவாமிகள் துப்புவதை நாம் உட்கொள்ளுவதாவது... சேச்சே' என்று அருவருப்பு அடைந்த சில பக்தர்கள், வாழ்க்கையில் தாங்கள் உயர வேண்டிய சில சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டு விட்டதாக அவர்களே பின்னாளில் வருத்தப்பட்டுக் கூறியது உண்டு. பக்தர்கள் அன்புடன் தரும் ஆரஞ்சு மிட்டாய்கள், சாக்லெட்டுகள் ஆகியவற்றை தன் வாயில் போட்டு சுவைப்பார் சுவாமிகள். அவர் அருகே காத்திருக்கும் பக்தர்கள், 'சுவாமிகள் நம்மிடம் ஆரஞ்சு மிட்டாயைத் துப்ப மாட்டாரா? சாக்லெட்டைத் துப்ப மாட்டாரா?' என்று காத்துக் கிடப்பார்களாம்.
கோடி சுவாமிகளின் நெருங்கிய பக்தர் ஒருவர் நம்மிடம் சொன்னார்: ''இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக சுவாமிகள் வெளியில் சென்று நான் பார்த்ததே இல்லை. அதேபோல் எனக்குத் தெரிந்து சுவாமிகள் குளித்ததாகவும் தெரியவில்லை. ஆனால், சுவாமிகளிடம் இருந்து மயக்கும் வகையில் நறுமணம் ஒன்று வீசியபடியே இருக்கும்.''
இனி, கோடி சுவாமிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
புரவிபாளையம் ஜமீனில் இருந்தபோது நடந்தது இது! அடுப்பில் இருந்து இறக்கி வைத்த மிளகாய்க் குழம்பு பாத்திரத்தைக் கையில் எடுத்து, 'பசிக்கிறது' என்று சொல்லி, சுடச் சுட இருந்த குழம்பு மொத்தத்தையும் மடமடவென்று குடித்து விட்டு, வெறும் பாத்திரத்தைக் கீழே வைத்தாராம். இதேபோல், திருச்சியில் அன்பர் ஒருவரது வீட்டில் இருந்தபோது கொதிக்கக் கொதிக்க இருந்த கஞ்சியை அப்படியே எடுத்துக் குடித்தாராம்.
அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், சுவாமிகளின் தீவிர பக்தை. புரவிபாளையம் வந்து சுவாமிகளை அடிக்கடி தரிசித்துச் செல்வார். ஒரு முறை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல வைத்தியங்கள் பார்த்தும் வலி தீர்ந்தபாடில்லை. ஆனாலும் அந்த வலியுடனேயே புரவிபாளையம் வந்து சுவாமிகளை தரிசித்த பெண்மணி, கண்களில் நீர் தளும்ப, தன் சோகத்தை சுவாமிகளிடம் தெரிவித்தார். 'உட்கார்' என்பதாக சைகை காட்டினார். அதன்படியே அமர்ந்தார் பெண்மணி.
அதே வேளையில், சுவாமிகளின் பக்தர் ஒருவர் அவருக்கு முன்னே பவ்யமாக வந்து அமர்ந்தார். பிறகு, 'அடியேன் கொண்டு வந்த உணவை தங்களுக்கு ஊட்டி விட வேண்டும்' என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். மெள்ள புன்னகைத்தபடி சம்மதித்தார் சுவாமிகள். உடனே அந்த பக்தர், கையில் இருந்த டப்பாவைத் திறந்தார். அதற்குள் இருந்தது- மாமிச உணவு. அருகில் உட்கார்ந்திருந்த அந்தணப் பெண்மணி சட்டென அருவருப்படைந்தவராக, முகம் சுளித்தார். சுவாமிகள் சிரித்தபடியே, பக்தர் ஊட்டி விட்ட மாமிசத் துண்டங்களைச் சாப்பிட்டார்.
திடுமென அந்தப் பெண்மணியின் வலது கையை நீட்டச் சொன்னார். தன் வாயில் இருந்த மாமிச உணவை அவரது கையில் துப்பினார். ''சாப்பிடு'' என்றார். அருவருப்புடன் கண்களை மூடிய அந்தப் பெண்மணி, மறுகணம் கண்களைத் திறந்து வலது கையைப் பார்த்தார். அவரது கையில் இருந்த மாமிசத் துண்டு விநாடி வேளையில் சாக்லெட்டாக மாறி இருந்தது. சுவாமிகளின் அற்புதத் திருவருள் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார் பெண்மணி. முகம் மலர அதை எடுத்துச் சாப்பிட்டார். அவ்வளவுதான்! சில நாட்களிலேயே அவரது வயிற்று வலி போயே போனது.
பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே பெட்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாள் ஒரு பெண்மணி. அவளுக்கு ஒரு மகன். ஆனால், சோகம் பாருங்கள்... பிறவியில் இருந்தே அவனுக்குப் பேசும் திறன் இல்லை. இதை நினைத்து நினைத்தே தவித்துப் போவாள் அந்தப் பெண்மணி. 'எம் மகனுக்கு எப்ப பேச்சு வரும் சாமீ?' என்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கேட்டபடியே இருப்பாள்.
புரவிபாளையம் வந்து கோடி சுவாமிகளைத் தரிசித்துச் செல்லும் வெளியூர் அன்பர் ஒருவர், ஒரு நாள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் யதேச்சையாக அந்தப் பெண்மணியைச் சந்தித்தார். எல்லோரிடமும் கேட்கும் அதே கேள்வியை இவரிடம் கேட்டாள் பெண்மணி. 'ஏம்மா.. கையிலேயே வெண்ணெயை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலையறியேம்மா. புரவிபாளையம் சாமி கிட்ட போ... எங்கெங்கிருந்தோ எல்லாம் பக்தர்கள் தேடி அவர்கிட்ட வர்றாங்க. நீ அவரைப் பத்தி தெரியாம இருக்கியே' என்று சொல்லி விட்டுப் போனார்.
ஒரு நாள் தன் மகனை அழைத்துக் கொண்டு, புரவிபாளையம் புறப்பட்டாள். இவள் அங்கே போனபோது அன்பர் ஒருவர், சுவாமிகளுக்குத் தன் கையால் உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, பெண்மணியும் அவளது மகனும் சுவாமிகளை விழுந்து நமஸ்கரித்தனர். 'என் மகனுக்குப் பேசும் பாக்கியம் இல்லையே...' என்று பெருங்குரல் எடுத்து சுவாமிகளிடம் கதறினாள். தனக்கு உணவு ஊட்டிய அன்பரிடம், ''அவனுக்கு ஒரு வாய் கொடுப்பா'' என்றார் சுவாமிகள். உடனே அந்த அன்பரும் சிறுவனின் வாயில் ஒரு கவளம் உணவை ஊட்டினார்.
பின்னர், சிறுவனைப் பார்த்து மெள்ளச் சிரித்தார் சுவாமிகள். சிறுவனும் புன்னகைத்தான். பிறகு, அவனை ஆசிர்வதித்தவர், ''போய் வா'' என்பதாகப் பெட்டிக்கடைப் பெண்மணிக்கு உத்தரவு கொடுத்தார் சுவாமிகள். மகனை அழைத்துக் கொண்டு பெண்மணியும் மற்ற சிலரும் சுவாமிகளது திருவருளைப் பேசியபடியே பொள்ளாச்சி பேருந்து நிலையம் வந்தனர். உடன் வந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து உடுமலைப்பேட்டைக்குச் செல்ல வேண்டும். எனவே பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது இவர்கள் நின்றிருந்த பகுதியை நோக்கி பேருந்து ஒன்று வேகமாக வந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் இதை எவரும் கவனிக்கவில்லை. பேருந்து இவர்களை மோதித் தள்ளி விடுவது போன்ற வேகத்தில் நெருங்கும்போது, ''அம்மா... பஸ்சு. ஓரமா போங்க... அம்மா... பஸ்சு. ஓரமா போங்க'' என்கிற குரல், அலறலாக ஒலித்தது. ஆனால், பெட்டிக்கடைப் பெண்மணி மட்டும் அப்படியே திகைத்து நின்றாள். இங்கே எச்சரிக்கை விடுத்தது யார்? யாரோ சிறுவனது குரல் போல் அல்லவா இருக்கிறது? என்று குழப்பத்தில் நின்றவளிடம், ''அம்மா... எனக்குப் பேச்சு வந்திடுச்சும்மா. என்னால பேச முடியுதும்மா...'' என்றான், அவருடைய மகன். அவனை அப்படியே வாரியணைத்து, சந்தோஷத்தில் கதறியவள், புரவிபாளையம் திசை நோக்கிக் கரம் குவித்து வணங்கினாள்.
சுவாமிகளைத் தரிசிக்க புரவிபாளையம் வந்த அன்பர் ஒருவர், சுவாமிகளுக்குக் கால்களைப் பிடித்து நீவி விட்டார். பிறகு, சுவாமிகளுக்கு மாலை அணிவித்து, அவரது திருப்பாதங்களைத் தொட்டு வணங்கும்போது, 'பீப் பீப்' எனும் ஒலி எழும்பியது. தன் கையில் கட்டியுள்ள விலை உயர்ந்த- புத்தம் புதிய கடிகாரத்தில் இருந்துதான் இந்த ஒலி வருகிறது என்பதை அறிந்த அன்பர், தன் முழுக்கைச் சட்டையை எவரும் அறியா வண்ணம் கீழிழுத்து விட்டு, கடிகாரத்தை மறைத்துக் கொண்டார். அதாவது, 'இந்த கடிகாரத்தை பார்த்து விட்டு சுவாமிகள் கேட்டு விடுவாரோ' என்று பயம் அன்பருக்கு! காரணம்... இந்த கடிகாரத்தை நண்பர் ஒருவர் பரிசாக வழங்கியிருந்தார்.
அன்பரது எண்ண ஓட்டத்தை அறியாமலா இருப்பார் சுவாமிகள்?! அரை மணி நேரம் கழித்து சுவாமிகளிடம் ஆசி பெற்ற அன்பர் விடை கொடுக்கும்படி கேட்டார். மலர்ந்த முகத்துடன் அவருக்கு ஆசி வழங்கிய சுவாமிகள், தன் வலக் கையை அன்பரின் கைக்கடிகாரத்தின் மேல் வைத்து, 'இதைக் கழற்றி வெச்சுட்டுப் போ' என்றார் சிம்பிளாக. நண்பர் வழங்கிய பரிசுப் பொருளை இழக்க அன்பருக்கு மனம் வரவில்லை. ஆகவே, சுவாமிகள் சொன்னது காதில் விழாதது போல், மெள்ள அங்கிருந்து கிளம்பிச் சென்றார். நேராக கோவைக்கு வந்தவர், பேருந்து நிலையத்தில் நேரத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று கடிகாரத்தைப் பார்த்தார். அந்த கடிகாரம் ஓடவில்லை. நின்று போயிருந்தது. அதாவது, 'கழற்றி வெச்சுட்டுப் போ' என்று சுவாமிகள் சொன்னபோது என்ன நேரமோ, அந்த நேரத்திலேயே நின்றது.
அதிர்ந்து போனார் அன்பர். 'புதிதாக வந்த கடிகாரம் அதற்குள் எப்படி ரிப்பேராகும்? ஒரு வேளை... சுவாமிகளின் திருவிளையாடலாக இருக்குமோ?' என்ற குழம்பித் தவித்தவர், பிறகு அருகில் இருந்த கடிகாரக் கடைக்குச் சென்று பழுது பார்ப்பதற்காகக் கொடுத்தார். பிறகு ஓரிரு நாளில் சரிசெய்யப்பட்டதும் மீண்டும் கையில் கட்டிக் கொண்டார் அன்பர். ஆனாலும் என்ன... மீண்டும் கடிகாரம் மக்கர் பண்ணியது. 'கழற்றி வெச்சுட்டுப் போ' என்று சுவாமிகள் சொன்ன அதே நேரத்தில் நின்றது என்பதுதான் ஆச்சரியம். இதை அடுத்து, சென்னையின் பிரபல கடிகாரக் கடைகளில் கொடுத்தும் பலன் இல்லை. மீண்டும் மீண்டும் அதே நேரத்தில் நின்றது.
ஒரு நாள், புரவிபாளையம் வந்து, சுவாமிகளை தரிசித்தவர், கடிகாரத்தை கழற்றி சுவாமிகளிடமே கொடுத்து விட்டு வணங்கினார். 'நான் எப்போதோ கேட்ட பொருளை இவ்வளவு தாமதமாகத் தருகிறாயா?' என்பது போல் அன்பரைப் பார்த்துப் புன்னகைத்தபடியே பெற்றுக் கொண்டார் சுவாமிகள். அடுத்த விநாடியே அருகே அமர்ந்திருந்த வேறொரு அன்பரை அழைத்து, அவரிடம் இந்த கடிகாரத்தைக் கொடுத்தார். அந்த ஆசாமி, 'சுவாமிகளது அருளால் இனி நமக்கு நல்ல காலம்தான்' என்று சந்தோஷமாகக் கிளம்பினார்.
இதையடுத்து சுமார் ஓராண்டு கழித்து, கடிகாரத்தைக் கொடுத்தவரும் பெற்றுக் கொண்டவரும், ஒரு நாள் யதேச்சையாக புரவிபாளையத்தில் சந்தித்துக் கொண்டனர். கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ''சார்... சாமீ கையால உங்களோட கடிகாரத்தை நான் வாங்கின நேரம்... ஊருக்குப் போய் கடிகாரக் கடை வெச்சேன். தொழில் அமோகமா போகுது. நல்லா இருக்கேன்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
இதைக் கேட்டதும் கடிகாரம் கொடுத்த அன்பர் சிலிர்த்துப் போய் விட்டார். 'தன்னிடம் இருந்த கடிகாரம் இவரது கைக்குப் போனதும், இந்த நபர் கடை துவங்கி, வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விதி இருந்தால் எவரால் மாற்ற முடியும்?' என்று தெளிந்து, சுவாமிகளை வணங்கி விட்டுச் சென்றார்.
கோடி சுவாமிகளின் அற்புதங்களை இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இவரது அருளால் முன்னுக்கு வந்தவர்கள், பல தொழில்களில் புகழ் பெற்று தேசங்கள் பலவற்றிலும் வாழ்ந்து வருகின்றனர்.
சுவாமிகளது மகா சமாதியை, புரவிபாளையம் ஜமீனே நிர்வகித்து வருகிறது.
11.10.94 அன்று மதியம் சுமார் 3:30 மணியளவில் மகா சமாதி ஆனார் கோடி சுவாமிகள். இதை அறிந்த ஆயிரக்கணக்கான அன்பர்கள் கண்ணீருடன் ஓடோடி வந்தனர். ஜமீன் பங்களாவை ஒட்டியே சுவாமிகளுக்கு சமாதி அமைக்கப்பட்டது. நாற்காலியில் அமர்ந்த நிலையில் சுவாமிகளது உடலை கீழிறக்கி, சுற்றிலும் விபூதி, வில்வம், துளசி ஆகியவற்றை நிரப்பினர். மேலே சிமெண்ட் ஸ்லாப் போட்டு சமாதியை மூடினர். அத்துடன், சுவாமிகளது சிரசுப் பகுதிக்கு நேராக சிறு துவாரம் ஒன்று அமைத்து, அதன் மேல் சிறிய சிவலிங்கம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோடி சுவாமிகளின் சக்தி முழுவதும், இந்த சிவலிங்கத்தில் இருப்பதாக நம்புகின்றனர் இவருடைய பக்தர்கள். எனவே, சமாதியை வலம் வந்து, சிவலிங்கத்தை வணங்கிச் செல்கின்றனர். இங்கு பூசாரி இல்லை; பக்தர்களே அவர்கள் விரும்பியபடி வழிபட்டுச் செல்லலாம்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கோடி சுவாமிகளின் மகா சமாதியைத் தரிசிக்கப் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். அமாவாசை, பௌர்ணமி, ஆடி அமாவாசை, சுவாமிகளின் குருபூஜை (அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி) ஆகிய தினங்களில் திரளான பக்தர்கள் குவிகிறார்கள். அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. அன்னதானத்தை இன்னார்தான் நடத்துகிறார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சுவாமிகளின் சமாதி முன் எல்லோரும் சமம். எனவே, பக்தர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை செலுத்துகின்றனர். அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளைக் கொண்டு வந்து குவிப்பர். காய்கறி நறுக்குவது, அரிசி களைவது, சமையல் செய்வது என்று அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவர்.
கோடி சுவாமிகளின் வெளியூர் பக்தர்கள் சொல்வது இதைத்தான்: ''எங்களுக்கு எந்த ஒரு கஷ்டம்னாலும் இஷ்ட தெய்வமான அவரை, இருந்த இடத்தில் இருந்தபடியே மனசார நினைச்சுப்போம். வீட்டு பூஜையறையில் இருக்கிற அவரோட படத்துக்கு ஒரு பூ வெச்சுப் பிரார்த்தனை செய்வோம். ஆரஞ்சு மிட்டாயை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்குக் கொடுப்போம். அவ்வளவுதான்... எங்களோட கோரிக்கையை சுவாமிகள் ஏத்துக்கிடுவார். இப்படித்தான் சுவாமிகள் எங்களுடன் இருந்து ஆசிர்வதித்து வருகிறார்.''
ஆம்! கோடி சுவாமிகள் அருவமாக இருந்து தங்களைக் காத்து வருவதாக அவரது பக்தர்கள் திடமாக நம்புகிறார்கள். சுவாமிகளின் சமாதிக்கு அருகில் சம்மணமிட்டு அமர்ந்து, கண்களை மூடி, பிரார்த்தனை செய்கின்றனர். இன்னும் சிலர், மகா சமாதியில் உறையும் அவரிடம் பார்வையாலேயே பேசுகிறார்கள்; தங்களது சுக- துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
தகவல் பலகை
தலம் : புரவிபாளையம்
சிறப்பு : ஸ்ரீகோடி சுவாமிகள் மகா சமாதி
எங்கே இருக்கிறது?: பொள்ளாச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. கோவையில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து நடுப்புணி எனும் ஊருக்குச் செல்லும் நகரப் பேருந்து எண் 30, புரவிபாளையம் வழியாகச் செல்கிறது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஐந்து நிமிடம் நடந்தால் ஸ்ரீகோடி சுவாமிகளின் சமாதி வந்து விடும்.
கோவையில் இருந்து பேருந்தில் பொள்ளாச்சி வந்தும் செல்லலாம். அல்லது வடக்கிப்பாளையம் பிரிவு என்கிற நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வேறொரு பேருந்தில் ஏறியும் செல்லலாம். புதிதாக இங்கு வருபவர்கள், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்து அங்கிருந்து செல்வதே உத்தமம். கார் மற்றும் இதர வாகனங்களில் கோவையில் இருந்து பயணிப்பவர்கள் கிணத்துக்கடவு வழியாக வந்து, வடக்கிப்பாளையம் பிரிவில் திரும்பி சூலக்கல், வடக்கிப்பாளையம் வழியாக புரவிபாளையத்தை அடையலாம்.
தொடர்புக்கு:
வி. ராதாகிருஷ்ணன்
புரவிபாளையம் அரண்மனை
பொள்ளாச்சி தாலுகா
கோவை மாவட்டம் - 642 110.
போன் : 04259- 246511
மொபைல் : 97906 60546

Comments