இல்லறம்

ணும் பெண்ணும் சேர்ந்து, மாறாத அன்பு சார்ந்து, அறத்தின் பாதையில் நடத்திச் செல்வதே இல்லறம். இரண்டு இதயங்களும் கூடி வாழும் இடமே வீடு. துன்பத்தின் நிழல் படாத பேரின்பத்தில் ஆன்மா திளைத்திருப்பது, 'வீடுபேறு' எனப்படுகிறது.
இறந்த பின்பு அடையும் இன்பத்தை இந்த மண்ணில் இருக்கும்போதே அடைவதற்கான இடம், 'வீடு' என்று ஆழ்ந்த அர்த்தத்துடன் நம் முன்னோர்களால் அழைக்கப்பட்டது.
பெண்ணே வீட்டை ஆள்பவள். அதனால் தான் தமிழ் அவளை, 'இல்லாள்' என்கிறது. ஆணுக்கு அந்த சிறப்பைத் தமிழ் தரவில்லை. 'இல்லான்' என்றால் வறியவனே தவிர, இல்லத்தை ஆள்பவன் அன்று. வடமொழியிலும் 'க்ருஹஸ்தன்' என்றால், வீட்டில் இருப்பவன் என்றுதான் பொருள்; வீட்டை ஆள்பவன் என்று பொருள் இல்லை. மனைவியை வடமொழி, 'க்ருஹஸ்தை' என்று கூறாமல் 'க்ருஹிணி' என்றே கூறுகிறது. 'க்ருஹஸ்தை' என்றால் வீட்டில் இருப்பவள்; 'க்ருஹிணி' என்றால் வீட்டை ஆள்பவள்.

ஆண் மட்டும் இருக்கும் இடத்தைக் குடும்பம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. 'சிறந்த மனைவி இல்லாமல் வாழும் வீடு, ஒரு காடு' என்கிறது நாலடியார்.

'இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை' என்ற வாழ்க்கை ரகசியம் உணர்ந்தவர்கள் இந்தியர்கள். 'இல்லறம் என்பது கற்புடைய மனைவியோடு இல்லின் கண் இருந்து செய்யும் அறம்' என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார். குடும்பம் கோயிலாவதும் குப்பைமேடாவதும் பெண்ணின் நடத்தையில்தான் இருக்கிறது.
'ஒரு பெண்ணுடன் இன்புற்று வாழும் இல்லறம் சிறந்ததா? இன்பங்களை முற்றாகத் துறந்து ஞானத் தேடல் நடத்தும் துறவறம் சிறந்ததா?'
என்ற விவாதத்துக்கு முதலில் நாம் விடை கண்டாக வேண்டும். விவேகானந்தர் ஒரு கதை மூலம் இதற்கு விளக்கம் தருகிறார். இந்தக் கதை பல சந்தர்ப்பங்களில் படித்ததுதான். இருந்தாலும், இல்லறத்தையும் துறவறத்தையும் புரிந்து கொள்ள இன்னும் ஒரு முறை கேட்போம்.
அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது - 'உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?' என்று. இதற்கு விடை தரும்படி ஓர் துறவியிடம் அரசன் வேண்டினான். 'அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே' என்றார் துறவி. 'இதை நிரூபிக்க வேண்டும்' என்றான் வேந்தன். 'நிச்சயமாக! என்னோடு வாருங்கள்' என்றார் துறவி.
வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்த போது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள். ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவனின் பேரழகு அவளை ஈர்த்தது. ஓடிச் சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள். இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறி னான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின்தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தான். அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்த காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.
அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.
வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதைப் பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, 'என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்' என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது. ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. 'நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்' என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.
அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவை களின் பண்பைக் கண்டு வியந்தனர். 'மன்னா, அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய். அழகான பெண்ணையும், பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்' என்று விளக்கினார் துறவி.
தர்மமாக கிருகஸ்தம் வகித்து, அப்புறம் கொஞ்சம்விடுபட்டு வானப்ரஸ்தம், அதற்கும் அப்புறம் பூர்ண சந்நியாசம் என்று விதித்திருக்கிறது. இயற்கையை எதிர்த்துப் போனால் துன்பம் உண்டாகும் என்றுதான் இப்படி வைத்திருக்கிறது. பிரம்மசரியத்தில் இருந்து நேரே சந்நியாசத்துக்குப் போக ரொம்ப அபூர்வமானவர்களுக்கே பக்குவம் இருக்கும். சாதாரணமாக ஒரு ஜீவனை, 'காட்டுக்குப் போ; சந்நியாசியாக இரு' என்று சொன்னால் அவனால் முடியாது. லோக வாழ்க்கையில் அடிபட்டுத்தான் பக்குவம் உண்டாக வேண்டும்.
பாரதப் போரில் வெற்றி பெற்ற பின்பு தருமரின் உள்ளம் ஆட்சியைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்ள விரும்பியது. எனவே, 'இந்த இல்லற தர்மத்தையும், அரச சுகங்களையும் விட்டு விலகி, நான் பற்றற்றவனாக வனத்தில் வாசம் செய்ய விழைகிறேன்' என்றார் யுதிஷ்டிரன் (தருமர்).
உடனே, 'பிரம்மசரியம், இல்லறம், வனத்தில் வாழ்தல், துறவு பூணுதல் என்ற நான்கு நிலைகளிலும் இல்லறமே உயர்ந்தது என்றுதான் பெரியோர் உபதேசித்துள்ளனர். தன் குடும்பத்தை நேர்மையாக நடத்தி, உணவை விருந்தினருடன் பகிர்ந்து, மீதமுள்ளதை உண்டு வாழும் இல்லறத்தானே மேலானவன் என்று பண்டிதர்கள் பகர்ந்துள்ளனர்' என்றான் அர்ஜுனன். வியாசரும், 'தர்மபுத்திரனே! இல்லற தர்மத்தை நீ தாழ்வாக நினைப்பது தவறு. வாழ்வின் நான்கு நிலைகளில் இல்லறத்தைப் பின்பற்றுபவன்தான், மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்களைக் காக்கிறான். இல்லற தர்மம் இல்லையென்றால், மற்ற மூன்று தருமங்களும் நசிந்து விடும்' என்று விளக்கினார்.
'செல்வம் படைத்தவன் இந்த உலகில் இன்புறுவான். ஆனால், அவனுக்கு மேலுலக இன்பமில்லை. தவத்தில் பற்றுள்ள துறவிக்கு மண்ணுலகில் இன்பமில்லை. ஆனால் விண்ணுலகம் அவனுக்கு இன்பமயமாகும். இல்லறத்தை மேற்கொண்டு தர்மம் தவறாமல் வாழ்பவனுக்குத்தான் இரண்டு உலகங்களிலும் இன்பம்' என்றார் மார்க்கண்டேயர்.
'பெண்டு- பிள்ளைகளைத் துறந்து விட்ட மாத்திரத்திலேயே, ஒருவன் முக்திக்குத் தகுதி உடையவனாகிவிட மாட்டான். பெண்டு- பிள்ளைகளையும், சுற்றத்தாரையும், இனத்தாரையும், நாட்டாரையும் துறந்து செல்பவன், கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன், வலியில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்' என்று சொல்லும் மகாகவி பாரதி, இல்லறத்தைத் துறப்பவன் இறைவனையே துறப்பதாக ஒரு புதிய சிந்தனையை வெளிப்படுத்துகிறான்.
'கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிறழாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைக்கு ஒப்பாகும். ஒருவனுக்குத் தனது வீடே சிறந்த வாசஸ்தலம். வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமை இல்லாதவன், மலைச் சிகரத்தை அடுத்ததொரு முழையிலே (மலைக் குகையிலே) கடவுளைக் காண மாட்டான்' என்று இல்லறத்தைப் போற்றுகிறான் பாரதி.
இன்றைய வணிகப் பொருளாதார வாழ்க்கை அமைப்பில், குடும்ப உறவுகள் சீர்குலைந்து வருகின்றன. தாயின் மடியில் தலை வைத்துப் பாசத்தைப் பகிர்ந்து கொள்ள, குழந்தையின் மழலையில் குதூகலிக்க, மனைவியின் அன்பில் கணவனும், கணவனின் பரிவில் மனைவியும் பரஸ்பரம் பரவசம் காண... இப்போது யாருக்கும் நேரமும், மனமும் இல்லை.
இருவர் வேலைக்குப் போய்த் திரும்பும் இல்லங்களில் இரவு உறவைத் தவிர, இதய உறவு இறுகிப்போய் விட்டது. மனம் விட்டுப் பேச முடியாததால் மாரடைப்பு அதிகரிக் கிறது. நெஞ்சில் வைத்துப் பாசம் பொழிந்து வளர்க்கத் தவறியதால், பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோரைப் புறக்கணிக்கின்றன. அன்பும் ஆதரவும் இல்லத்தில் இல்லாததால் மூலைக்கு மூலை முதியோர் இல்லங்கள், அனாதை விடுதிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
குடும்ப அமைப்பு சிதைந்தால் உயிர்கள் உறவுகளற்றுப் போகும். உறவுகள் இல்லாத உலகில் வன்முறையும், பலாத்காரமும், சுயநலமும் வாழ்க்கை முறைகளாக மாறும்.
நாடு முழுவதும் இல்லறம் சிறக்கட்டும். கணவனின் கண்களாய் மனைவி மாறட்டும். மனைவியின் மனமாய்க் கணவன் விளங்கட்டும். இருவரின் பாச மழையில் பிள்ளைகளின் இதயம் நனையட்டும். பிள்ளைகளின் ஆதரவு நிழலில், பெற்றோர் இளைப்பாறட்டும். இல்லறம் இனிதாய் நடந்தால், இந்த மண்ணில் வாழ்வே பேரானந்தம்.

Comments