வசீகரிக்கும் அமெரிக்க ஆன்மிக குரு!

மேலை நாடுகளுக்குச் சென்று ஆன்மிகத்தையும் இந்து தர்மத்தையும் பரப்பிய இந்திய ஆன்மிகப் பெரியோர்களைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், தமது 22-வது வயதிலிருந்து இன்று வரை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளில் ஆன்மிகத்தையும் சனாதன தர்மத்தையும் பரப்பி வரும் ஓர் அமெரிக்க ஆன்மிக குருவைப் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

அவர்தான் சுவாமி கிரியானந்தா. பிறப்பால் அமெரிக்கர். இயற்பெயர் ஜே.டொனால்ட் வால்ட்டர்ஸ். இவர் தமது 22-வயதில், சுவாமி யோகானந்தாவின் 'ஒரு யோகியின் சுயசரிதை’ புத்தகத்தை நியூயார்க் புத்தகக் கடை ஒன்றில் வாங்கிப் படித்தார். 20-ஆம் நூற்றாண்டில் வெளியான மிகச் சிறந்த ஆன்மிகப் புத்தகங்களில் அதுவும் ஒன்று.
அந்தப் புத்தகம் அவருக்குள் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அவரை வேறு ஓர் உலகத்துக்கு இட்டுச் சென்றது. அவ்வளவுதான்... உடனடியாக ஒரு பஸ் பிடித்து,  நேரே கலிஃபோர்னியா சென்றார். யோகானந்தாவைச் சந்தித்து, தம்மை சீடராக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவரும் அப்படியே அருள, டொனால்ட் வால்ட்டர்ஸ் என்னும் அந்த அமெரிக்க இளைஞர் அன்றிலிருந்து தீவிர பக்திமார்க்கத்தைத் தழுவிய சுவாமி கிரியானந்தாவாக மாறினார்.
இன்று அவருக்கு வயது 86. இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றுக்கும் விஜயம் செய்து, இந்து சனாதன தர்மத்தையும், பக்தி நெறியையும், கிரியா யோகா மற்றும் ஆழ்நிலை தியானத்தையும் பரப்பி வரும் சுவாமி கிரியானந்தா, 140-க்கும் மேற்பட்ட ஆன்மிக புத்தகங்களை எழுதியுள்ளார்; 400 பக்திப் பாடல்கள் இயற்றியுள்ளார். அவருடைய சொற்பொழிவுகளும் புத்தகங்களும் ஆயிரக்கணக்கான அன்பர்களை ஆன்மிக வழியில் திசை திருப்பி, இந்த வாழ்க்கைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்று தேடச் செய்திருக்கின்றன.
சுவாமி கிரியானந்தா 1958-ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். அதன்பின்பு, 2003-ல் மீண்டும் அவர் இந்தியா வந்தபோது, யோகானந்தாவின் போதனைகளைப் பின்பற்றி நடக்கும் ஆன்மிகத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் உலகளாவிய 'ஆனந்த சங்கம்’ என்னும் அமைப்பைத் தொடங்கி வைத்தார். டெல்லி, குர்கான், மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் ஆனந்த சங்கத்துக்குக் கிளைகள் உள்ளன.
''எனக்குத் தெரிந்து மற்ற மதங்களைவிட இந்து மதம்தான் மிகவும் பொறுமையான, சகிப்புத் தன்மை கொண்ட மதமாக விளங்குகிறது'' என்று சொல்லும் சுவாமி கிரியானந்தா, வருகிற ஜனவரி 20-ஆம் தேதி சென்னை வருகிறார். மியூஸிக் அகாடமியில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றுகிறார்.
இவர் எழுதிய மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று 'இந்து மத வழிமுறையில் விழிப்பு உணர்வு’ (The Hindu Way of Awakening). இதில் இவர் சொல்கிறார்... ''இந்திய இசை, அவர்கள் உடுத்தும் முறை, வாழ்க்கையின் எல்லாத் தரப்பிலும் அன்பான அணுகுமுறை, அர்ப்பணிப்பு உணர்வு, மற்றவர்களைப் பெருந்தன்மையோடு அங்கீகரித்தல், நகைச்சுவை உணர்வு... எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான அன்புக்கு ஏங்கும் தன்மை... இவையெல்லாம் என் மனத்தில் நீங்கா நினைவுகளாக ஆழப் படிந்துள்ளன. இவை என்னைக் கவர்ந்தது போல் வேறு எந்தக் கலாசாரமும் என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை!''

Comments