திருமாணிகுழி

த்ரி தனதத்தன் தடுமாறிப் போனான்; தந்தை சொன்னதைக் கேட்காமல் வந்ததற்கு கைமேல் பலன் கிடைத்து விட்டது. அவர், படித்துப் படித்துச் சொன்னார்- 'மடியில் பணத்துடன் தனி வழியில் போக வேண்டாம்' என்று. அனுபவம் சொன்னதை, இளமை கேட்டால்தானே! கை- கால்களில் தெம்பிருக்கும்போது, யார் என்ன செய்துவிட முடியும் என்ற மதர்ப்பு; அதைவிட, தான் கொண்டுபோவது எவருக்கும் தெரியாது என்கிற எண்ணம்.
மடியில் பணத்துடன் செல்வதை சொல்ல வில்லையென்றால் யாருக்குத் தெரியும்? 'நீங்கள் பேசாமல் இருந்தால் போதுமப்பா, யாருக்கும் தெரிய வராது' என்று தந்தையிடம் வாதம் வேறு செய்தோமே! எப்படியோ இந்தத் திருடர்களுக்குத் தெரிந்துவிட்டதே! குழம்பித் தவித்தான் தனதத்தன்.
தேடித் தேடித் தந்தையார் தனக்குச் சூட்டிய பெயர், எவ்வளவு பொருத்தமாகிவிட்டது! குடும்பத்துக்குச் செல்வம் கொடுப்பவனாக மகன் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர், வேறு எப்படி ஆசைப்படுவார்? எனவே, 'தனதத்தன்' என்று பெயர் சூட்டினார் (அத்ரி முனிவர் மீது இருந்த மரியாதையில் அதையும் முன்னால் சேர்த்தார். இருந்தாலும், பிந்தைய நாமத்தில்தான் அவருக்குப் பிரேமை). இப்போது அது மெய்யாகிவிட்டது. பெரிய வணிக மாற்று ஒன்றை முடித்துவிட்டு பணத்துடன் வரும்போது, வழிப்பறிக் கொள்ளையர்களிடம் சிக்கியாகிவிட்டது; அவர்களுக்கு இந்தச் செல்வமெல்லாம் சென்று சேர்ந்துவிடும். பெயருக்குப்

பொருத்தமாக தனதத்தனாக, செல்வம் தருபவனாக ஆகிவிட்டோம்!
எதிரில் நின்ற கொள்ளையர் தலைவன், தனது முதல் மிரட்டலுக்கு தனதத்தனிடம் இருந்து எந்த எதிர்வினையும் கிடைக்கவில்லை என்பதால் குழம்பிப் போனான். எனவே, மீண்டும் பெருங்குரலெடுத்து, 'ம்..ம்.. மடியில் இருப்பதையெல்லாம் கொட்டு' என்று கத்தினான். மடியில் கட்டியிருந்த சுற்றுக்கட்டை மெள்ளப் பிரித்தான் தனதத்தன்.
'மடியில் எவ்வளவு இருக்கிறதென்று இவர்களுக்கு எப்படித் தெரியும்? சுற்றுக்கட்டின் உள்மடிப்பில் இருப்பதைக் கொட்டாமல் விட்டு விடலாமா? கண்டுபிடித்துவிட்டால்? இவ்வளவு கண்டவர்கள் அதைக் காணாமல் விடுவார்களா?' _ சிந்திக்கச் சிந்திக்க திடீரென மனதில் ஒரு மின்னல்! தன்னுடைய மடியில் இருப்பது கடவுளுக்கும் தெரிந்திருக்கும்தானே! இவர்களுக்கே தெரிந்தால் அவருக்குத் தெரியாமல் இருக்குமா?
துணையில்லாமல் நின்ற தனதத்தன், அந்தத் தோன்றாத் துணையாம் பரம்பொருளை வேண்டினான் - 'அப்பா, உதவிக்கு வா உத்தமனே!'. மானுடத் தந்தையின் மொழிகளை உதாசீனப் படுத்தியவன், ஆன்மத் தந்தையின் அருளை நாடினான்.
குழந்தை கூப்பிட்டு விட்டால், வராமல் இருந்து விடுவாரா பரமனார்? ஓடோடி வந்தார்; துணையாக வந்தார்; கொள்ளையரோடு சண்டையும் போட்டார்; உதவியும் செய்தார். வணிகனுடைய உதவிக்கு வந்த இறைவனார், 'உதவிநாதர்' என்றே வழங்கப் பெறுகிறார்.
ஆஹா, அருள்மிகு உதவிநாதரை எங்கே தரிசிக்கலாம்?
'திருக்கெடிலம்' என்று சிறப்பிக்கப் படுகிற கெடில நதியின் தென்கரையில், நடுநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாக விளங்குகிற திருமாணிகுழிதான், உதவிநாதர் அருளாட்சி நடத்தும் அற்புதத் தலம். கடலூருக்கு அருகில் உள்ள தலம், திருமாணிகுழி. கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து திருவஹீந்திரபுரம் வழியாக பாலூர் (பானூர்), பண்ருட்டி செல்லும் பாதையில் சென்றால் இந்த ஊரை அடையலாம். திருவஹீந்திரபுரத்தைத் தாண்டி சுந்தரர்பாடி வரும்; அடுத்து சாத்தாங்குப்பம்; தொடர்ந்து கெடில நதியைக் கடந்தால், திருமாணிகுழி.
கடலூர் - குண மங்களம் பேரு ந்துகளும், கடலூர் - நடுவீரப்பட்டி (வழி திருவஹீந்திரபுரம்) பேருந்துகளும் இந்தத் தலத்துக்குச் செல்லும். நெல்லிக் குப்பத்தில் இருந்தும் செல்லலாம்.
தியாகவல்லி என்று இக்காலத்தில் அழைக்கப்படுகிற திருச்சோபுரம் சென்று வழிபட்டுவிட்டு, திருமாணி குழியை அடைந்த திருஞானசம்பந்தப் பெருமான், சாதாரிப் பண்ணில் மாணிக்குழி பதிகம் பாடினார். வெறுமே மாணிக்குழி என்று குறிப்பிடாமல், ஊர்ப் பெயரை 'உதவி மாணிகுழி' என்றே குறிப்பிடுகிறார்.
சோதிமிகு நீறது மெய்பூசி ஒரு
தோலுடை புனைந்து தெருவே
மாதர் மனைதோறும் இசைபாடிவசி
பேசும் அரனார் மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ
வண்டு முரல் தண்பழனமிக்கு
ஓதமலி வேலைபுடை சூழுலகில்
நீடு உதவு மாணிகுழியே

என்று சம்பந்தரால் பாடப்பெற்ற மாணிக்குழி, கல்வெட்டுகளிலும் உதவிமாணிகுழி என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. மேற்காநாட்டு உதவித் திருமாணிகுழி, சோழ வளநாட்டு உதவித் திருமாணி குழி, ராஜராஜ வளநாட்டு உதவித் திருமாணிகுழி என்றே பெயர் வழங்கப்பட்டுள்ளது. உதவி என்பது ஊரின் பெயராகவும், மாணிகுழி என்பது கோயிலின் பெயராகவும் இருந்திருக்கலாம்.
வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கரபுரம், தேவனாம்பட்டினம், தர்மசேத்திரம் ஆகிய பெயர்கள் கொண்ட திருமாணிகுழி, கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் குவாரி மலை அடிவாரத்தில் உள்ளது. பிரதான சாலையின் ஓரத்திலேயே கோயில்.
திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு வந்து பதிகம் பாடியுள்ளார்; சுந்தரரும் இங்கு வந்ததாகத் தெரிகிறது. கெடில நதியில் நீராடிவிட்டு, உதவி நாயகரை தரிசித்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் சொன்னாலும், மாணிகுழிக்கு அவர் பாடிய பாடல் எதுவும் கிடைக்கவில்லை; பாடியதாகவும் தெரியவில்லை.
கோயிலின் முன்னே நிற்கிறோம். கிழக்கு நோக்கிய திருக்கோயில்; அழகிய ஐந்து நிலை ராஜகோபுரம். கோபுரத்தை வணங்கி விட்டு உள்ளே நுழைந்தால், கொடிமரம், நந்தி. இங்கிருந்தபடியே வெளிப்பிராகார வலம் வரலாம். பிராகாரத்தில் தென்மேற்கில் விநாயகர் மற்றும் வடமேற்கில் சுப்ரமணியர் சந்நிதிகள். இந்தத் தலத்தின் முருகப் பெருமானை அருணகிரி நாதர் பாடியிருக்கிறார்.
குதித்து வானர மேலேறு தாறுகள்
குலைத்து நீள் கமுகு ஊடாடிவாழைகொள்
குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் வஞ்சி தோயும்
குளத்தில் ஊறிய தேனூறல் மாதுகள்
குடித்து உலாவிய சேலொடு மாணிகொள்
குழிக்குள் மேவிய வானோர்களே தொழு தம்பிரானே

என்ற திருப்புகழ் வாசகம் உள்ளத்தை நிறைவிக்க, வலம் சுற்றி வருகிறோம்.
வெளிப் பிராகாரத்தில் இருந்து பக்கவாட்டு வாயில் வழியே உள் பிராகாரத்தை அடையலாம். உள் சுற்றில் விநாயகர், அறுபத்துமூவர், சப்தமாதர்கள், யுக லிங்கங்கள், கஜலட்சுமி சந்நிதிகள். நடராஜர் சபையில் எழிலார்ந்த நடராஜர். இவர் மீது பஞ்சாட்சரம் (ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய மந்திரம்) பொறிக்கப்பட்டிருப்பதாக ஐதீகம். உள்சுற்றிலிருந்து மீண்டும் முன்மண்டபம் தொட்டு, மூலவர் சந்நிதிக்குச் செல்கிறோம். சந்நிதிக்கு முன்னே வாமனவதாரச் சிற்பங்கள்.
மாணிகுழியின் மூலவர் - அருள்மிகு உதவிநாதர் எனும் மாணிக்கவரதர். வாமனபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மாணியாக (மாணி - பிரம்மசாரி) அவதாரம் எடுத்தவர் மகாவிஷ்ணு; வாமன அவதாரத்தில் பிரம்மசாரியாகத் தோன்றிய அவர், மூவடி மண் கேட்டு, ஓரடியால் மண்ணளந்து, இரண்டாம் அடியால் விண்ணளந்து, மூன்றாம் அடி வைக்க இடம் தேடி, பின்னர் மகாபலியின் தலையில் வைத்தார் என்பது புராணச் செய்தி. இரண்டடிகளால் அளப்பதற்கு ஓங்கியபோது, வாமனரே, ஓங்கி உலகு அளந்த திரிவிக்ரமர் ஆனார். மகாபலியைப் பாதாளத்தில் தள்ளி சிரஞ்சீவி எனும் பதம் தந்த பிறகு, மீண்டும் வாமனராகி (மாணியாகி), சிவபெருமானை வழிபட்டார். அவ்வாறு மாணி வழிபட்ட இடமே, மாணிகுழி ஆனது. இதை ஞானசம்பந்தரும் பாடுகிறார்.
நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்
சித்தம தொருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடமாம்
கொத்தலர் மலர்ப்பொழிலில் நீடுகுல மஞ்ஞை நடமாடல் அதுகண்டு
ஒத்தவரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே

என்பது அப்பாடல். மாணிகுழி மூலவரை நேரடியாக தரிசிப்பது இயலாது. இதென்ன குழப்பம்? ஒன்றுமில்லை. எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போட்டிருப்பார்கள். சுவாமியும் அம்பாளும் எப்போதும் சேர்ந்திருக்கும் தலம் இது. சதாசர்வ காலமும் சதாசிவனானவர் சர்வபூதையான அம்பாளுடன் ஒன்றியிருப்பதால், அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிட்டிருக்கும்.
அருவமாக விளங்கும் பரம்பொருள், உயிர்களின் கண்களுக்குப் புலனாக வேண்டும் என்பதற்காக ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்தாரில்லையா? இது நடந்தது திருவண்ணாமலையில்! பின்னர், ஜோதி குளிர்ந்து லிங்கோத்பவர் ஆனார்; லிங்கத் திருமேனியாக தரிசனம் தந்தார். அப்படி லிங்கத் திருமேனியாக இறைவனார் முதன்முதலில் காட்சி தந்த தலம் இதுவே என்கின்றனர். அதேபோல், ஊழிப் பிரளயம் முடிந்து, அடுத்த சிருஷ்டி தொடங்குவதற்காக, இறைவனும் இறைவியும் ஒன்றுசேர்ந்து அருள் வடிவம் கொண்ட தலமும் இதுவே என்கிறது தல புராணம். அம்பாள் சிவசக்தி ஐக்கிய ரூபிணியாக இருப்பதால், மற்ற கோயில்களில் காணப்படுவது போல் பள்ளியறை சொக்கர், போக சக்தி அம்பாள் முதலான விக்கிரகத் திருமேனிகளோ, பள்ளியறையோ இங்கு கிடையாது. அர்த்த ஜாம பள்ளியறை வழிபாடும் இல்லை.
ஆதித் தோற்றம் என்பதால், பிற சிவன் கோயில்களுக்கு, இந்தக் கோயிலே கர்ப்பகிரகம் என்று விவரிப்பர். அஞ்ஞானத்தை விலக்கி, ஞானத்தை அருள்வதற்காக இறைவனார் இறங்கி வந்து அருள் தரும் தலம். தீபாராதனையின்போது, திரையை விலக்கி உள்ளே காணச் சொல்கிறார்கள். அவ்வாறு திரையை விலக்கும்போது, சிவலிங்கத் திருமேனியைச் சிறிது தரிசிக்கலாம். குட்டையான லிங்கம்; சிறிய ஆவுடையார்; கிழக்கு நோக்கிய லிங்கநாதர். உயிர்களுக்கு மாணிக்கம் போன்று வரம் தரத் தோன்றியவர் என்பதால், இவர் அருள்மிகு மாணிக்கவரதர்; மாணியால் வழிபடப்பட்டதால் மாணீஸ்வரர் அல்லது வாமனபுரீஸ்வரர்; உதவி செய்தவர் என்பதால் உதவிநாயகர்.
சீர்பூத்த நீலகிரி திருமாணிகுழி வளரும் தெய்வக் கோயில்
வார்பூத்த களப முலை மோகினி
மாதினைத் தடந்தோள் மகிழப் புல்லும்
கார்பூத்த கந்தர முக்கணான்
காந்திங்கள் கங்கைவேணி
ஏர் பூத்த வாமனேசுரன் உதவிநாயகனை ஏத்தி வாழ்வாம்

என்று தலபுராணப் பாடல் மொழியும்.சுவாமி சந்நிதியில் எப்போதும் திரையிட்டிருக்கிறார்கள் இல்லையா? அந்தத் திரையில், பீமருத்திரர் உருவம் படமாகத் தீட்டப் பட்டுள்ளது. பீமருத்திரர், ஏகாதச ருத்திரர்களில் ஒருவர். மாணிக் குறளனாகி வாமனர் வழிபட்ட போது, அவரது வழிபாட்டுக்கு எவ்வித தொந்தரவும் வராமல் இருப்பதற்காக, பீமருத்திரரைக் காவலாக இறைவனார் நியமித்தாராம். இப்போதும், அர்த்த மண்டபத்தில் வாமனர் பூஜை செய்து கொண்டிருக்க, பீமருத்திரர் காவல் காத்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
வழிபாடுகளில், அர்ச்சனை, தீபாராதனை, பூஜை ஆகிய யாவும் முதலில் பீமருத்திரருக்கு நடைபெறும்; அவரிடம் அனுமதி பெற்ற பின்னரே, சுவாமிக்கு நடைபெறும். சிவனது ருத்திர அம்சமாக உள்ள பதினோரு பேரில், பீமர் அல்லது பீமருத்திரர் ஒருவர். பூஜைக்குக் காவலராக விளங்கக் கூடியவர்.
மாணிகுழி திருத்தலத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. இங்கு பாயும் கெடில நதி மிகவும் புனித மானது. சாட்சாத் மகாலட்சுமியே, கிருஷ்ணை என்ற பெயருடனான கெடிலமாகப் பாய்கிறாளாம்! அதே போல், சரஸ்வதி தேவியானவள், ஸ்வேத நதி என்ற பெயருடன் பாய்ந்து, வடக்கு முகமாக ஓடி, கெடிலத்துடன் கலக்கிறாள். எனவே, மாணிகுழி, சங்கம சேத்திரம் மற்றும் பிரம்ம சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் ஜோதி சொரூபம் கொண்ட எம்பெருமான், ஊழி முடிந்து படைத்தல் தொடங்கும் நிலையில், மாணிகுழியிலும் ஜோதி வடிவில் காட்சி தந்தாராம். எனவே, கார்த்திகை மாதத் திருக்கார்த்திகை விழாவின்போது, திருவண்ணாமலையைப் போலவே, இங்கும் கார்த்திகை நட்சத்திரத்தில் தீபமேற்றப்படும். மலை எங்கே என்கிறீர்களா?
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கேப்பர் குவாரி என்று அழைக்கப்பட்ட மலைதான் இருக்கிறதே! இங்குதான் மலையுச்சியில் தீபம் ஏற்றப்படும். ஜோதிகிரி, புஷ்பகிரி, ஒளஷதகிரி, ரத்தினகிரி முதலான பெயர்கள் முற்காலத்தில் இந்த மலைக்கு வழங்கப்பட்டன.
ஜோதி வடிவான பரம்பொருளின் அருளை எண்ணியபடியே சுவாமியை வணங்கி வெளியே வருகிறோம். அம்பாள் சந்நிதிக்குப் போவோமா?
அம்பாள் சந்நிதி, தனிக் கோயில் என்று சொல்லும்படியாகவே, வலப் பக்கத்தில் இருக்கிறது. அருள்மிகு அம்புஜாட்சி, நின்ற கோல நாயகியாக, அபயம்- வரதம் தாங்கி அருள் காட்சி தருகிறார். உலகத் தோற்றத்துக்குக் காரணமான அம்பாள்; எனவே, தாமரைக் கண்ணாள் (அம்புஜாட்சி) என்று திருநாமம்.
மாணிகுழியின் தல மரம் கொன்றை. வெவ்வேறு யுகங்களில் தல விருட்சம் மாறியதாகவும் தெரிகிறது. ஆதியில், இது தாருகவனப் பகுதியாக இருந்ததாம்; எனவே, அப்போது சந்தனம் தல மரம். பின்னர், வாமன வடிவில் மகாவிஷ்ணு வழிபாடு செய்வதற்காக, மகாலட்சுமி நித்தியவாசம் செய்யும் வில்வம், தல மரமானது. அதன் பின் தில்லை மரம், அந்த நிலையை அடைந்தது. இந்த யுகத்தில், கொன்றையே தல மரமானது.
தீர்த்தச் சிறப்பும் பெற்றது இத்தலம். சுவேத தீர்த்தம் முக்கியமானது. சரஸ்வதியே சுவேத நதியானாள். சுவேத என்கிற வடமொழிப் பெயர், வெள்ளைவாரி ஆறு என்று தமிழ்ப் பெயரில் வழங்கப்பட்டு, காலப் போக்கில், வெள்ளவாரி என்றும் ஆகிவிட்டது. மகாலட்சுமி நதியான கெடிலத்தோடு, தென்பெண்ணையும் இத்தலத்தின் தீர்த்தங்களுள் ஒன்றாகக் கூறப்படும்.
சூரியனும் இங்கே வழிபட்டுள்ளான். ஆகவே, விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரை அனைத்துச் சந்நிதிகளுக்கும் ஆதித்ய விமானங்கள்.
மாணிக்கவாசகப் பெருமானை இத்தலத்துடன் தொடர்புபடுத்தும் செய்தியன்று, செவி வழித் தகவலாக வழங்கப்படுகிறது.
திருக்கழுக்குன்றத்தில் இருந்து தில்லைச் சிதம்பரம் நோக்கிச் சென்ற மாணிக்கவாசகர், மாணிகுழி வந்து வழிபட்டுப் பின்னரே தில்லை சென்றதாகச் சொல்கிறார்கள்.
தலத்தின் பெருமைகளையெல்லாம் எண்ணிக் கொண்டே மீண்டும் சுவாமி சந்நிதியின் முன்பு நிற்கிறோம். திரை போட்டிருக்கிறது. அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்த அந்தப் பரம்பொருள், உயிர்களைக் காக்கும்பொருட்டு, கருணை கொண்டு, ஆணாகிப் பெண்ணாகிப் பெருங்கருணையில் எழுந்தருளிய சிறப்பை எண்ணுகிறோம். சிவ சக்தி ஐக்கியமாய் ஆளும் அப்பனை அம்மையை வணங்கி விடைகொள்கிறோம்

Comments