'உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்

மனிதர்களில் பல வகை உண்டு.
மகான்கள், சாதுக்கள், எதிர்பாரா மல் உதவும் நண்பர்கள், எதிர்பார்ப்புடன் உதவும் நண்பர்கள், நம்மை வெறுப்பவர்கள், அழிக்கத் துடிப்பவர்கள், நம்மைப் பொருட்படுத்தாதவர்கள், உறவினர்கள்,
நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவர்கள், தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாய் தோன்றுபவர்கள், குடிகேடர்கள், காமுகர், சண்டியர்கள்... இப்படி!
நமது வாழ்க்கை இவர்களுடன்தான் பிணைக்கப்பட்டிருக் கிறது. முழுக்க முழுக்க நல்லவர்களுக்கு நடுவில் நம் வாழ்க்கை அமைந்திருந்தால், எத்தனை சுகமாக இருந்திருக்கும்?!
'உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்கிறார் வள்ளலார்.
'காட்டில் வாழும் கரடிக்கும் புலிக்கும் கூட அஞ்ச மாட்டேன். ஆண்டவன் மீது பக்தி இல்லாதவர்களை, அன்பு இல்லாத மனிதர்களைக் கண்டால்... ஐயோ எனக்குப் பயமாக இருக்கிறதே!' என்கிறார் திருநாவுக்கரசர்.
பொதுவாக... மனிதர்களில் சில வர்க்கத்தி னர் நம்மை அழ வைக்கிறார்கள்; சிரிக்க வைக்கிறார்கள்; காயப்படுத்துகிறார்கள்; கண்ணீரைத் துடைக்கிறார்கள். ஆனால் எப்போது, எந்தக் கரங்கள் நம்மைக் கண்கலங்க வைக்கும்... கண் ணீர் துடைக்கும் என்று தெரியாது.

ராமன் வாழ்ந்த அரண்மனையில் கூனியும் வாழ்ந்தாள்! கிருஷ்ணனைக் கொல்ல தாயைப் போல வேடமிட்டு வந்து, அவனுக்கு விஷப் பால் புகட்டினாள் பூதகி!
கர்ணனின் வாழ்க்கை ரொம்பக் கொடுமை. இக்கட்டான சந்தர்ப்பத்தில், முதுகில் குத்துவது மாதிரி தேர் ஓட்ட மறுக்கிறான் சல்லியன்!
ராவணனின் கதையை முடிக்க சூர்ப்பணகை எனும் ஒரு தங்கை!
ஆம், எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் சக மனிதர்களால் சங்கடமும் சஞ்சலமும் வந்தே தீரும்.
இயேசுநாதரை சிலுவையில் அறைந்தே தீருவது என்று முனைப்பாக இருந்த மூடர்கள்,
'ஐயோ சாமி... அவர் யாரோ நான் யாரோ!' என்று நழுவிய சீடர்கள்... இவர்களே இயேசுவின் முடிவைக்கூட தீர்மானிக்கிறார்கள்!
ஆழ்ந்து யோசித்தால், வன வாசத்தை விட ஜன வாசத்தில் ஆபத்துகள் அதிகம் என்பது தெரிகிறது. ஆனாலும் இந்த மனிதர்களை விட்டு ஓடிப் போகவோ, ஒதுங்கி இருக்கவோ முடிவதில்லை. விதியின் துணைப்படி, சில மனிதர்களுடன் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந் தம். எனவே அவர்களை, அவர்களது குறை& நிறைகளுடன் ஏற்று வாழப் பழக வேண்டும்.
தீ... எவ்வளவு கொடியது?! அதை தீபத்திலும் அடுப்பிலும் பயன்படுத்தத் தெரிந்து கொண்டிருக்கிறோம். மின்சாரத்தை எவ்வளவு ஜாக்கிரதையாகக் கையாளுகிறோம். கரடிக்கும் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க முடியும்
என்பதை சர்க்கஸில் பார்க்கிறோம்.
இப்படி, அஃறிணைகளையெல்லாம் முறையாகப் பயன்படுத்தத் தெரிந்த நமக்கு, உயர்திணையான மனிதர்களையும்... அவர் களது இயல்பு அறிந்து பயன்படுத்த, கையாள, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியவில் லையே, ஏன்?
காரணம்... சக மனிதர்களுடன் உணர்ச்சி பூர்வமாக ஒன்றியிருக்கிறோம் நாம். அவர்களும் நம்மைப் போன்றவர்களே என்று நினைக்கிறோம். அவர்கள், நமது உணர்ச்சிகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்; நம்மைப் புரிந்து கொண்டு, நமக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சூஃபி ஞானியிடம் ஞான விஷயங்களைக் கற்றுக் கொண்டான் சீடன் ஒருவன். இந்த ஞானி, நானே இறைவன்!' என்று போதிப்பவர்; அனைத்து உயிர்களும் இறைவனே என்று உபதேசிப்பவர். இந்த வாசகங்களின் தத்துவ நுட்பம் அறியாதவர்கள், ஞானியின் மீது கோபம் கொண்டனர்; நீயா இறைவன்?'' என்று உறுமினர்.
''ஆம்,நானேஇறைவன்!'' என்றார் ஞானி.
இதனால் கோபம் கொண்ட சிலர், ஞானி யின் மீது கல்லெறிந்தனர். கற்கள், தன் மீது
விழும்போதெல்லாம் உரக்கச் சிரித்தார் ஞானி!
சீடனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை! 'ஞானி சொல்வது சரிதான்'
என்று ஊரார் முன் சொல்லும் மன உறுதி அவனிடம் இல்லை. சும்மா நின்று வேடிக்கைப் பார்த்தாலும்... 'நீ ஏன் ஒன்றும் பேசாமல் நிற்கிறாய்? நீ என்ன அந்தப் பக்கமா? என்று இந்த அசடுகள் அதட்டுவார்களே!' என்ற பயம் வேறு!
எனவே, ஞானியின் மீது கல் வீசுவதாக பாசாங்கு செய்து கொண்டு, அருகில் ஒரு செடியில் பூத்திருந்த பூக்களைப் பறித்து அவர் மீது எறிந்தான் சீடன்.
'ராஸ்கல் நீயா இறைவன்?' என்றபடி அவன் வீசிய பூ, தன் மீது பட்டதும் ஞானி அழ ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் கல் வீசிய கூட்டம் கலைந்தது. சீடன் மட்டும் ஞானியை நெருங்கினான். ''ஐயனே! மற்றவர்கள் கல் வீசும்போது சிரித்துக் கொண்டிருந்தீர்கள். ஆனால், நான் பூக்களை வீசியபோது, அழ ஆரம்பித்து விட் டீர்களே... ஏன்?'' என்று வினவினான்.
அவனிடம், ''மற்றவர் கள்அசடர்கள் எனது தத்துவம் பற்றி அவர்களுக்கு தெரியாது. எனவே, அவர்கள் கல்லால் அடித்தபோதும் அவர்களது அறியாமையை எண்ணி சிரித்தேன். ஆனால் நீ... என்னுடன் இருந்தவன்; எனது தத்துவத்தையும் ஏற்றுக் கொண்டவன். நீயும் பாசாங்குக்காரனாக மாறி, பூவால் அடித்ததால் அழுதேன். நான் அழுதது... என்னை நீ ஏமாற்றிவிட்டாய் என்பதற்கு அல்ல; எத்தனை கற்றும் நீ ஏமாளியாகவே இருக்கிறாயே என்பதற்காக சிந்திய கண்ணீர் அது!'' என்றார் ஞானி.
மிக நெருங்கியவர்கள்கூட நம்மைப் புரிந்துகொள்ள வில்லை என்பதுதான் நமது துக்கத்துக்கும் கோபத்துக் கும் காரணமாக இருக்கும்.
உறவுகளிடம் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண் டால் துக்கம் இல்லை. மேலும், ஒவ்வொரு நபரையும் நன்றாகப் புரிந்து கொள்ளவும் நாம் முயற்சிக்க வேண்டும்.
'மாங்காய் மரத்தில் ஆப்பிள்
பழுக்கவில்லையே?!' என்று என்றாவது வருத்தப்பட்டிருக் கிறோமா? இல்லை! அதேபோல், ஒவ்வொரு மனிதருக்கும் சில சுபாவங்கள் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்களது குணத்துக்கு விரோதமான செயல்களை, அவர்களிடம் இருந்து எதிர்பார்க் கக் கூடாது. அதற்காக... 'இவர்களி டம் குணமாற்றம் நிகழவே
நிகழாது. அதற்காக முயற்சிக்கவும் கூடாது!' என்று கருதிவிடக் கூடாது.
சில மாற்றங்கள்... உடனடியாக நிகழாது. கண்ணாடியின் அழுக்கைத் துடைப்பது போல், அவ்வளவு எளிதாக மனிதனின் குறைகளைத் துடைத்து விட முடியாது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்கு உரிய உணர்ச்சிகள் மற்றும் தேவைகளுடன் இயங்கு
கின்றனர். ஒவ்வொரு மனிதனுக்கும் இடையே புத்தியில், மனதில், உடல் பலத்தில் வேறுபாடுகள் நிறைந்துள்ளன. நாம்தான் அந்தந்த மனிதர் களைப் புரிந்துகொண்டு, விட்டுக் கொடுத்து& விட்டுப் பிடித்து வாழ வேண்டும். இல்லையெனில், ஏமாற்றம் நமக்குத்தான்!
ஆனால் நாம்... மற்றவர்கள், நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்; நமக்கு விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்று நினைக் கிறோமே தவிர, மற்றவர்களை நாம் புரிந்து நடக்க வேண்டும் என்று சிந்திப்பது இல்லை. முதலில் சக மனிதர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அவர்களுக்கு நாம் பயன் உள்ளவர்களாக இருப்போம்; அவர்களையும் நாம் பயன்படுத்த முடியும். பெரும் பாலான காரியங்கள்... சரியான மனிதர்களைத் தீர்மானிக்காத காரணத்தால் கெட்டு அழிந்திருக்கின்றன!
குரங்கு கையில் கொள்ளியைக் கொடுத்து, அதைக் கூரையின் மீதும் ஏற்றி வைப்பது போல்... தகாத மனிதர்களுக்கு முக்கியத்துவம் தருவதுடன், அவர்களிடம் நமது காரியங்களையும் கொடுத்து வைக்கிறோம். இதனால்தான் பெரும்பாலும் துக்கம் வருகிறது.
நல்லவர்களுடன் நெருக்கம் வேண்டும்; தீயவர் களிடம் கொஞ்சம் விலகியிருக்க வேண்டும். நாம், நமது குறைகளை மன்னிப்பதுபோல், பிறரது குற்றம்& குறைகளையும் மன்னித்துப் பழக வேண்டும்.
நாம்... நமக்காக வாழும் வரையில், அவர் களின் நேர்மையின்மை, வஞ்சகம், புரட்டு, பித்தலாட்டம், அன்பின்மை ஆகிய அனைத்தும் நம்மைத் துன்புறுத்தும். அவர்களுக்காக நாம் வாழ ஆரம்பிக்கும்போது... குழந்தையைத் திருத்துவது போல் நம்மால் அவர்களைத் திருத்த முடியும். அவர்களும் குழந்தைகளின் குதூகலத்தை நமக் குத் தருபவர்களாக இருப்பார்கள்!

Comments