புத்துணர்வு பொங்கும்

னிதன், இறைவனை நேசிப்பதில் பற்பல குறைகள் உள்ளன. ஆனால் இறைவன், மனிதனை மிகவும் நேசிக்கிறான். இதில் ஒரு குறையுமில்லை.
இதனால், மனிதன் மனப்பூர்வமாக வேண்டுகின்ற எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறான் இறைவன். ஆனால், மனிதனுக்குத்தான்... என்ன மாதிரி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை.
அற்பமான விஷயங்களை வேண்டுவதிலேயே மனித மனம் திருப்தியடைந்து, மீண்டும் அதிருப்தி கொள்கிறது. இதற்குக் காரணம் ஒன்று உண்டு. அதை வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலில் எளிமையாக விளக்குகிறார்.
'ஒரு தாய், தன் செல்லக் குழந்தையைத் தன் வீட்டு வேலைக்காரியிடம் ஒப்படைத்து, 'கொஞ்ச நேரம் இந்தக் குழந்தையை வைத்திரு. எனது வேலையை முடித்து விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்' என்றாள். வேலைக்காரியும் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அங்கும் இங்கும் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.
திடீரென, குழந்தை 'எங்கே என் அம்மா?' என்று கேட்டு விடக்கூடாதே? அதற்காக... 'அதோ காக்காய், இதோ கிளி' என்று வேடிக்கை காட்டினாள் அவள். இதே மாதிரிதான் மாயையும். அது, தாயாகிய கடவுளின் நினைவில் ஜீவர்கள் அழுது விடாமல், அதையும் இதையும் பராக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறது!' என்கிறார் அவர்.
நாமும் எதை எதையோ வேண்டிக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் மாயை கொடுத்துக் கொண்டே இருக்கிறது; குழந்தையின் கையில் பொம்மைகளை வழங்கும் தாதியைப் போல! ஆனால்... கடைசியில் அம்மாதான் வேண்டும் என்று அடம்பிடிக்காத குழந்தைகள் ஏது?

சில காலம்... நாமும் எதை எதையோ இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறோம். பிரார்த்தனை பலிக்கிறது. பணம் பணம் என்று சதா பணத்துக்காகவே அலையும் மனிதன் பணக்காரன் ஆகிவிடுவதைப் பார்க்கிறோம். போகங்களை விரும்புகிறவனுக்குப் போகம் கிடைக்கிறது. யோகியாக வேண்டும் எனத் தவிப்பவன் யோகி ஆகிறான். புகழுக்காக பசித்த மனது புகழைத் தின்று பசியாறுகிறது.
இதிலெல்லாம் நிரந்தர திருப்தி வரப் போவதில்லை. இதை அறிந்த பிறகு, இறைவனையே நாடுகிறது மனம். இப்படி எவரது மனம் இறைவனை நாடுகிறதோ அதுவே பக்தியுள்ள மனது.
அவ்வாறு தேடுவது போய்... தேடி அடைந்து, திருப்தி பெற்ற மனதே முக்தி பெற்ற மனது.முக்தி பெற்ற மனது என்பது... எரிந்து முடிந்த கயிறு! சாம்பல், கயிறாக நம் கண்ணுக்குத் தோன்றுவது போல், தோற்றத்தில் மட்டுமே இருக்கிறது. ஆனால் கட்டுவதற்குச் சக்தியற்றுப் போகிறது. புலன்களின் போகங்களில் அது நம்மை கட்டுவது இல்லை.
இப்படிப்பட்ட மனதை உடையவனே இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கிறான்.
இறைவனை ஓயாது போற்றிப் பாடிக் கொண்டிருப் பவன், நிறைய மலர்களால் அர்ச்சனை செய்தவன்...இவர்களை எல்லாம் விடவும் இறைவனுக்கு நெருக்க மானவன் முக்தன் என்பதையும் நாம் உணர வேண்டும்.
இதை பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ண பகவான் விவரிக்கிறார்.
எவனொருவன் ஞானத்தால் முக்தி அடைந்தானோ அவனுக்கு, எவ்வுயிரும் தன்னுயிர்போல் கருதும் நிலை கனிந்து விடும். அவன், உலகத்து உயிர்க் கூட்டங்களை எல்லாம் நேசிப்பான்.
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று சொல்லும் மனோபாவம் ஞானிக்கே உரியது. என் ஜாதி, என் மொழி, என் தேசம் என்று மமகாரத்தில் ('என்னுடையது' என்கிற எண்ணம்) முளைத்துக் கிளைத்த வாதங்கள் எல்லாம் அவனிடம் இராது.
அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவச
நிர்மமோ நிரஹங்கார சம துக்க சுக: க்ஷமீ
என்று கீதை சுலோகம் கூறுகிறது. எல்லா உயிர்களின் மீதும் நமக்குக் கருணை ததும்பி வழிய வேண்டும்.
'ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்யல் வேண்டும்' என்கிறார் வள்ள லார். அவ்வாறு அன்பு செய்பவனை இறைவன் நேசிக்கிறான்.
அப்புறம்... எவரிடத்தில் அகங்காரம் இல்லையோ, அவர்களையும் மிகவும் நேசிக் கிறான்.இந்த அகங்காரம் என்பது ரொம்பவே பொல்லாதது. 'நான்' அல்லாத ஒன்றை தானாகக் கருதக் காரணமாக இருப்பது. இறைவனுக்கும் ஜீவனுக்கும் இடையே முளைத்த குறுக்குச் சுவர்தான் இந்த அகங்காரம்!
இந்த அகங்காரத்தால்தான் இறைவனை இகழ்ந்தான் தட்சன்!
தட்சன், தன் மகளான தாட்சாயினியை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டான். கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
மணமேடையில், மாப்பிள்ளையாக சிவனாரும் மணமகளாக தாட்சாயினியும் வீற்றிருக்கின்றனர். தாரை வார்க்கும் நேரத்தில்... இறைவனின் கரம், தட்சனின் கரத்துக்குக் கீழே இருக்கிறது.
அப்போது தட்சனின் மனதுக்குள் ஒரு நினைப்பு... 'எல்லாம் வல்ல இறைவனின் கரம் நம்முடைய கரத்துக்குக் கீழே!' இப்படி அவன் நினைத்ததுதான் தாமதம்; மணமேடையிலேயே சிவபெருமான் மாயமாக மறைந்து விட்டார். மேலும், தான் என்னும் அகங்காரம் அவனுக்குள் நாளுக்கு நாள் வளர்ந்து இறைவனையே பகைக்க வைத்தது. ஆக, இறைவனின் நேசம் பெற வேண்டும் என்றால் அகங்காரம் நாசம் பெற வேண்டும்.
அடுத்து... 'இது எனது' என்ற மமகாரமும் நம்மிடம் இருக்கக் கூடாது.
'இறைவா! உனக்கு நூற்றியெட்டு தேங்காய் உடைக்கிறேன். ஆயிரம் குடம் பால் அபிஷேகம் செய்கிறேன்' என்று வேண்டிக் கொள்கிறோம்.
நன்றாக யோசித்தால்... அந்தத் தேங்காய், அவன் படைத்த பூமியில் அவனருளால் விளைந்த ஒன்றுதான் என்பது புரியும். பாசமும் அப்படியே!
இறைவனுக்கு நாம் எதையெல்லாம் படைக்கிறோமோ, அவையெல்லாம் இறைவனால் படைக்கப்பட்டது என்பதையே நாம் மறந்து விடுகிறோம்.
'எனது' என்பது மமகாரம். 'எல்லாம் அவனுடையது' என்பதே சாரம். இப்படி மமகாரமற்று இருப்பவனும் இறைவனுக்கு நேசன்.
ஆனால் பெரும்பாலும் நாம் மமகாரத்துடன் இருக்கி றோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
கோயிலுக்கு ஒரு டியூப் லைட் வாங்கித் தந்தாலும் உபயம் என்று நமது பெயரையும் நமது ஊரின் பெயரையும் எழுதுகிறோம். கல்வெட்டில் பெயர் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கடவுளுக்கு ஏதோ பெரியதாக உபகாரம் செய்துவிட்டதாக நினைக்கிறோம்.
கடவுள் நமக்கு எவ்வளவோ செய்திருக்கிறார். அதை மறந்துவிடுகிறோம். தமிழறிஞர் நெல்லை கண்ணன் கவிதை ஒன்று எழுதியிருந்தார்.
கடவுள் நல்லவர்
நல்லவர்
நல்லவர்
நமது தேகத்தில்
எந்த உறுப்பிலும்
உபயம் என்று
தன் பெயரை
அவர் எழுதவில்லை

புரிந்து கொள்ளுங்கள். மமகாரம் அற்றவனே இறை வனுக்குப் பிடித்தமானவன்!

Comments