பெருமாளுக்கு விசிறி வீசிய நம்பிகள்!

திருமாலுடன் நேரில் உரையாடும் பாக்கியம் பெற்ற அருளாளர்; ஸ்ரீராமானுஜரே குருவாக ஏற்க விரும்பிய புனிதர்; பார்க்கவப்ரியர் என்றும் கஜேந்திரவரத தாஸர் என்றும் சிறப்பிக்கப் பெற்றவர்... திருக்கச்சி நம்பிகள்! காஞ்சியில் எழுந்தருளும் அத்திகிரி பெருமாளுக்கு (ஸ்ரீவரதராஜர்), ஆலவட்டம் (விசிறி) வீசிய இந்த அருளாளருக்கு, இது ஆயிரமாவது ஆண்டு!
சென்னை- காஞ்சிபுரம் சாலையில்... பூவிருந்தவல்லி தலத்தில்... சோபகிருது வருடம் மாசி மாதம், மிருகசீரிஷ நட்சத்திரத்தில், வைஸ்ய குலத்தில் அவதரித்தவர் திருக்கச்சி நம்பிகள்.
தன் தந்தையைத் தொடர்ந்து, திருமழிசையாழ் வாருக்குத் தொண்டு புரிந்ததால், 'பார்க்கவப்ரியர்' என்று பெயர் பெற்றாராம் (பார்க்கவர் என்பது திருமழிசையாழ்வாருக்கு உரிய திருநாமம்).
காஞ்சி ஸ்ரீவரதராஜருக்கு ஆலவட்டம் (விசிறி) வீசும் கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சிநம்பிகள், அடிக்கடி பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரம் சென்று வந்தார். பிறகு, காஞ்சியிலேயே தங்கி தனது கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். எனவே இவருக்கு, 'திருக்கச்சி நம்பிகள்' என்று பெயர் வந்தது (காஞ்சியை, 'திருக்கச்சி' என்பர்). இவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த அத்திகிரி அருளாளன், நேரில் தோன்றி நம்பிகளுடன் உரையாடிய சம்பவங்களும் உண்டு (காஞ்சியிலும் இவருக்கு தனிச் சந்நிதி உண்டு).

அத்திவரதருக்குச் செய்வது போலவே ஸ்ரீரங்க நாதருக்கும், ஏழுமலையானுக்கும் கைங்கர்யம் செய்ய விரும்பினார் திருக்கச்சி நம்பிகள். ஆனால் திருவரங்கனோ, 'நான் கங்கையைப் போன்று புனிதம் வாய்ந்த காவிரித் தாயின் அரவணைப்பில் இருப்பதால், ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்!' என்று பணித்தாராம். அதன்படி திருப்பதி வேங்கடவனிடம் சென்று தனது கைங்கர்யத்துக்கு அனுமதி வேண்டினார் திருக்கச்சி நம்பிகள். ஏழுமலையானோ, 'ஏழு மலைகளுக்கு நடுவே- குளிர்ச்சியான சூழலில் வசிக்கிறேன். ஆனால் காஞ்சிப் பேரருளாளன், பிரம்மனின் வேள்விக் குண்டத்தில் இருந்து வெளிப் பட்டவர். எப்போதும் வெம்மையின் தகிப்பில் இருக்கும் அவருக்கே உமது கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்!' என அருளினாராம். அதன்படி, காஞ்சி பேரருளாளனுக்கு விசிறி வீசும் கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். (காஞ்சிப் பேரருளாளன் வேள்விக் குண்டத்திலிருந்து வெளிவந்ததன் அடையாளமாக... உற்ஸவரின் திருமுகம் மற்றும் திருமேனியில் தீக்காயங்களின் வடுக்களைக் காணலாம்).
தன் குருவான ஆளவந்தாரிடம் ஸ்ரீராமானுஜரின் பெருமைகளை எடுத்துக் கூறியவர் திருக்கச்சி நம்பிகளே. இதன் மூலம், 'ஆம் முதல்வன்' என்றும் 'ஸ்ரீராமானுஜரே வைணவம் வளர வழிகாட்டியாக திகழ்வார்' என்றும் ஆளவந்தார் அருள காரணமாக இருந்தார் நம்பிகள். இதேபோல், கூரத்தாழ்வானை, ஸ்ரீராமானுஜரிடம் அறிமுகப்படுத்தி சீடராக ஏற்க வைத்ததும் இவரே! இறையருளால் இவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் சிலிர்க்க வைப்பன!

திருக்கச்சி நம்பிகளை, ஏழரைச் சனி பீடிக்கும் காலம் வந்தது. இதையறிந்த நம்பிகள், ஸ்ரீகாஞ்சி வரதரிடம் ஓடோடிச் சென்றார். 'சனியின் பாதிப்பால், தனது கைங்கர்யத்துக்கு பாதிப்பு நேரக் கூடாது!' என்று வேண்டினார். இதை ஏற்ற ஸ்ரீவரதர்... திருக்கச்சி நம்பிகளை ஏழரை நாழிகைகள் மட்டும் சனி பீடிக்கும்படி அருள் புரிந்தார். சனி பீடித்த... குறிப்பிட்ட அந்த நேரத்தில், ஸ்வாமியின் திருவாபரணம் காணாமல் போனது. பழி நம்பிகளின் மீது விழுந்தது. எனவே, அவரை சிறையிலிட்டனர். எனினும் சில நாழிகைகள் கழித்து, ஆபரணம் கிடைத்து விட்டது என்று தகவல் வர, திருக்கச்சி நம்பிகள் விடுவிக்கப் பட்டார்!

காஞ்சிப் பேரருளாளனுடன் நேரில் பேசும் பாக்கியம் பெற்றதால், நம்பிகளுக்கு தற்பெருமை சற்றே தலைதூக்கி யது. ஒரு நாள், 'வைகுந்த வாழ்வளிக்க வேண்டும்' என்று ஸ்வாமியிடம் வேண்டினார். 'இது சாதாரண விஷயம் இல்லை!' என்பதை அவருக்கு உணர்த்த விரும்பினார் பெருமாள். எனவே, ''நம்பி... நீ வீசியதற்கு, நான் பேசியது சரி! நீர் பாகவத கைங்கர்யம் செய்து, ராமானுஜனின் மூலம் வந்தால்தான் முக்தி கிடைக்கும்!'' என்று கூறி விட்டார்.

திருக்கச்சி நம்பிகளும் அதன்படி, திருக்கோட்டியூர் நம்பிகளுக்கு சில காலம் பணிவிடை செய்து, மீண்டும் வரதனின் கைங்கர்யத்தைத் தொடர்ந்தாராம். இவரது பக்தியை மெச்சி, அவரது அந்திம காலத்தில்... திருவரங்கன், திருமலையப்பன், காஞ்சிப் பேரருளாளன் ஆகிய மூவரும் பூவிருந்தவல்லியில் எழுந்தருளி, காட்சி அளித்தனராம். பூவிருந்தவல்லி- திருக்கச்சி நம்பி களின் திருக்கோயிலில் இந்த மூவரது சந்நிதிகளும் அமைந்துள்ளன. தமது 55-வது வயதில், ஆச்சார்யரான ஆளவந்தாரின் அருளாசியுடன் முக்தியடைந்தார் திருக்கச்சி நம்பிகள்.

Comments