நந்திதேவருக்கு நெய்யபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி எனும் ஊருக்குத் தெற்கில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இந்த ஊரின் சிறப்பம்சம்... ஸ்ரீநெய் நந்தீஸ்வரர் ஆலயம்.
அம்மையும் அப்பனும் முறையே ஸ்ரீமீனாட்சி- ஸ்ரீசொக்கநாதர் என்ற திருநாமங்களுடன் அருள் பாலிக்கின்றனர். நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் ஏழு கும்பாபிஷேகங்களைக் கண்டுள்ளதாம். இந்தக் கோயிலை நிர்மாணித்ததும், தற்போது நிர்வகிப்பதும் நகரத்தார் பெருமக்களே!
நந்திதேவரே ஸ்ரீநந்தீஸ்வரராக வணங்கப்படுவது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீபைரவர் மற்றும் நவக்கிரகங்களுக்குத் தனித் தனிச் சந்நிதிகள் உண்டு. எனினும் நந்திதேவரே இந்தக் கோயிலின் சிறப்பு தெய்வமாக தொழப்படுவதால்... பலருக்கும், 'நந்தி கோயில்' என்றால்தான் தெரிகிறது!

ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது கோயில். உள்ளே நுழைந்ததும் நெய் மணம் கமகமக்கிறது! சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நந்தி தேவராகிய நெய்நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதும் பசுநெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவு நெய் பூசப்பட்டாலும்... நந்திதேவரின் மேனியை ஈக்களோ எறும்புகளோ வேறு பூச்சிகளோ மொய்ப்பது இல்லையாம். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இவரை வணங்கி வழிபட, அவர்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்கிறார்கள்!
உருவில் பெரியவர் என்ற பெருமை பெற்றவர் தஞ்சாவூர் நந்திதேவர். நெய்யால் புகழ் பெற்றவர் வேந்தன் பட்டி நந்திதேவர். இரண்டு நந்திகளையும் போற்றிப் பாடிய கண்ணதாசன், 'அண்ணன் அவன் தஞ்சையிலே-
தம்பி இவன் வேந்தனிலே' என்று குறிப்பிடுகிறார்!
நெய்- நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று, நந்தியை பசு நெய்யால் அபிஷேகம் செய்வர். பிரமாண்டமான நந்தி தேவரின் மேனியை நனைத்தபடி வழிந்தோடும் அபிஷேக நெய், தரையில் சென்று அப்படியே தேங்கி நிற்கும். மறுநாள், இதை ஒரு பாத்திரத்தில் சேகரித்து ஆலயத்தின் ஈசான்ய மூலையில் உள்ள நெய் கிணற்றில் கொட்டுவர்.
வேந்தன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பசுமாடு வைத்திருப் பவர்கள், பால் கறந்து- காய்ச்சி நெய் எடுத்து, நெய்நந்தீஸ்வரருக்குக் காணிக்கை செலுத்திய பிறகே... பசும்பாலை விற்கவோ, தங்களின் தேவைக்கோ எடுக்கிறார்கள்! பல வருடங்களாக குடியிருந்த சொந்த வீட்டையே ஸ்ரீநெய் நந்தீஸ்வரருக்காக விட்டுக்கொடுத்த அன்பர்களும் இந்த ஊரில் உண்டு.
தெய்க்கிணறு
 


ஸ்ரீநந்திதேவருக்கு, 'தனப்ரியன்' என்றும் ஒரு பெயர் உண்டு அதனால்தானோ என்னவோ... ஸ்ரீநெய் நந்தீஸ்வரரின் நெற்றியில் நாணயங்களை பொட்டாக வைப்பதும், ரூபாய் நோட்டுகளை மாலையாகக் கட்டி இந்த நந்திக்கு அணிவிக்கும் வழக்கமும் இங்கு நடை முறையில் உள்ளது.
ஸ்ரீநந்திதேவருக்கு குளப்பிரியன் என்றும் பெயர் உண்டு. இவருக்கு குள்ளான்னம் (சர்க்கரைப் பொங்கல்) மிகப் பிடிக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாம். பிரதோஷ தினங்கள், பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் இவருக்கு அதிகம் நைவேத்தியம் செய்யப்படுவது சர்க்கரைப் பொங்கல்தான்!
வருடந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று இங்கு நந்தி விழா விமரிசையாக நடைபெறுகிறது. அன்று சிறப்பு அபிஷேகங்களுடன், 21 வகை மலர் மாலைகளால் நந்திதேவரை அலங்கரித்து தீப ஆராதனைகள் காட்டி வழிபடுகின்றனர்.

Comments