முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை.

வாழ்க்கை எனும் நாணயத்தில், இன்பம் ஒரு பக்கம்; துன்பம் மறு பக்கம். இன்பங்களில் மட்டுமே இறுதி வரை மிதந்த அரசனும் இல்லை; துன்பங்களில்
மட்டுமே இறக்கும் வரை துடித்த ஆண்டியும் இல்லை. ஒவ்வோர் இன்பத்தின் முடிவிலும் துன்பம் ஒன்று இருக்கும். இதே போல், ஒவ்வொரு துன்பத் தின் எல்லையிலும் ஓர் இன்பம் பிறக்கும்.
மனித வாழ்வில் சுகம்- துக்கம் இரண்டுமே தேர்ச் சக்கரம் போல் சுற்றிச் சுற்றி வரும். மனிதர்களது அனைத்து துன்பங்களுக்கும் மனமே காரணம். நினைக்கத் தெரிந்த மனம் மறக்கத் தெரியாமல் தவிக்கிறது; அடையமுடியாதவற்றின் மீது ஆசை வைத்து அன்றாடம் அலைபாய்கிறது. ஒன்றை அடைந்து விட்டால் மலையளவு மகிழ்ச்சி கொள்ளும் மனம், விரும்பிய ஒன்றை இழந்து விட்டால் கடலளவு கவலை கொள்கிறது. இன்பமும் துன்பமும் பாதிக்காத மனச் சமநிலை உள்ளவனே 'ஸ்திதப் பிரக்ஞன்'
என்கிறது கீதை.
எள்ளில் எண்ணெய் இருப்பதால்தான், அது செக்கில் அரைபடுகிறது. மனதில் ஆசை அளவற்றுப் பிறப்பதால்தான் மனித இனம் துயரங்களில் அலைக்கழிக்கப்படுகிறது.

'சுகத்தின் மேல் அமர்ந்துதான் துக்கம் வரும்' என்பது நம் முன்னோர், அனுபவத்தின் மூலம் அறிந்த உண்மை. சுகமோ துக்கமோ இரண்டுமே
நிலையற்றவை. சுக- துக்கங்களால் பாதிக்கப்படுப வர்கள் அனைவரும் விவேகம் கைகூடாதவர்கள். இரவு- பகல், உறவு- பகை, இன்பம்- துன்பம், இருள்- ஒளி, விருப்பு- வெறுப்பு, ஜனனம்- மரணம், இல்லறம்- துறவறம் என்ற இருமையின் இருப்பில்தான் உலகம் இயங்குகிறது.
'வாழ்வின் உன்னதமான சம்பவங்கள் இருள்-ஒளி என இந்த இரண்டின் ஒத்துழைப்பால் நிகழ்கின்றன. விதை ஊன்றப்படுவது மண்ணில்- இருட்டில்! செடி துளிர்ப்பது வெளியில்- ஒளியில்! விதையின் வேர்கள் தழைத்துப் பரவுவது பூமிக்கடியில்- இருட்டில்! செடி நிமிர்ந்து மலர்வது வெளியில்- வெளிச்சத்தில்! விதையை வெளிச்சத்தில் போட்டால் மலர் வராது. மலரை இருட்டில் மறைத்தால் விதை தராது. தாயின் வயிற்றில், ஆழ்ந்த இருட்டில், ஒளியின் சிறு கீற்றும் புக முடியாத அந்தகாரத்தில் உதித்து வளர்கிறது கரு. உரிய காலத்தில் ஒளிக்கு வருகிறது, மேலும் வளர! இருளும் ஒளியும் ஒரே ஜீவசக்தியின் ஆதாரம்!' என்கிறார் ஓஷோ.
'தடியை எடுத்தபடி ஒருவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு பசு, 'அடிக்க வருகிறான்' என்றறிந்து ஓடி விடுகிறது. ஆனால், அதுவே... கை நிறையப் பசும்புல்லுடன் ஒருவர் வந்தால், அவரை நோக்கி முன்னேறுகிறது. இதே நிலையில்தான் மனிதர்களும் உள்ளனர். விருப்பு-வெறுப்பு என்ற
தளைகளில் இருந்து விடுபட்டால்தான் விலங்குகளின் கீழான இயல்புகளில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியும்' என்று பிரும்ம சூத்திரத்தின் உரையில் குறிப்பிடுகிறார் ஆதி சங்கரர்.
ஜனகர் ஒரு நாள் விலையுயர்ந்த ஆடை- அணிகலன்களுடன், அறுசுவை விருந்துண்டு, உடலை வருத்தாத மெல்லிய மெத்தையில் படுத்து உறங்கினார். அப்போது அவருக்கு ஒரு கனவு!
பகையரசனிடம் நாட்டைப் பறிகொடுத்து, கந்தலாடையில் ஒரு பிச்சைக்காரனைப் போல் பசியால் வாடித் தவிப்பதாகக் கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்தவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கனவு, தன்னைப் பிச்சைக்காரனாக்கி விட்டதே என்று கவலை கொண்டார். 'உண்மையில் நான் அரசனா? அல்லது பிச்சைக்காரனா?' என்ற ஐயம்
அவருள் எழுந்தது. ஆத்ம ஞானம் அவரது கண்களைத் திறந்தது. அரசன், பிச்சைக்காரன் என்ற இரண்டு
அபிமானங்களும் ஒழிந்து பேதமற்ற நிலையை அவர் பெற்றார். ஜனகரைப் போல் அனைவரும் ஆதல் எளிதன்று. நம்மில் பலர் திருதராஷ்டிரர்கள்!
குரு«க்ஷத்திரப் போரில் நூறு பிள்ளைகளை யும் பறிகொடுத்த திருதராஷ்டிரன், "என்னை விட அதிகமாக துயரத்தை அனுபவிப்பவன் இந்த உலகில் வேறு எவரும் இருக்க முடியாது'' என்று சஞ்சயனிடம் புலம்பினான்.
அப்போது அமைச்சன் சஞ்சயன், "தவறுகளின் மூலம் துன்பங்கள் விளையாமல் இருக்க, தொடக்கத்திலேயே ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். நெறி தவறி நடப்பவன் இறுதியில்
வருந்த வேண்டும் என்பது வாழ்வின் விதி. துக்கத்தில் மூழ்கியவனிடம் செல்வம் சேர்வதில்லை; வெற்றியும் வாய்ப்பதில்லை. துக்கப்படுவதால் அமைதியின்மை கூடுமே தவிர குறையாது. ஆடையில் நெருப்பைச் சுமந்தவன், 'சுட்டு விட்டதே' என்று தனது செயலுக்காக நொந்து பயன் இல்லை. துயரம் அனுபவித்தால் வளரும்; மறந்தால் மறையும். உடலைப் பற்றிய நோயை மருந்தினால் ஒழிப்பது போல், துக்கத்தை அறிவினால் அழிக்க வேண்டும்'' என்று அறிவுரை வழங்கினான்.
பிரம்மதத்தன் வாரணாசியை ஆண்டபோது, அவனிடம் சஞ்சயன் என்ற தோட்டக்காரன் பணி புரிந்தான். தோட்டத்தில் இருந்து கனிகளையும், மலர்களையும் பறித்து, தினமும் அரண்மனையில் கொண்டு சேர்ப்பது அவனது வழக்கம்.
ஒரு நாள் அரசன் அவனிடம், "நமது தோட்டத்தில் ஏதாவது புதுமை உண்டா?'' என்று கேட்டான். "சில
நாட்களாக கலைமான் ஒன்று தோட்டத்தில் சுற்றித் திரிகிறது'' என்றான் சஞ்சயன். "அந்த மானை உன்னால் பிடித்துத் தர முடியுமா?'' என்று அரசன் ஆசையுடன் வினவினான்.
"கொஞ்சம் தேன் கொடுங்கள். அந்த மானைக் கொண்டு வருகிறேன்'' என்ற சஞ்சயன், தேன் நிரம்பிய ஒரு குடுவையை அரசனிடமிருந்து பெற்று,
தோட்டத்துக்குத் திரும்பினான். ஆளரவம் கேட்ட துமே மருண்டோடும் மானைப் பிடிக்க, அங்கிருந்த புல்வெளியில் தேனைத் தெளித்தான். மானின் விழிகளில் படாமல் மறைந்து நின்றான். யாருமற்ற தைரியத்தில் கலைமான் புல்லை மேய்ந்தது. தேனில் நனைந்த புல்லை மேய்ந்தபோது, மான் அந்தச் சுவையில் மயங்கியது.
அதன் அருகில் மெள்ள வந்து நின்றான் சஞ்சயன். ஆளைப் பார்த்ததும் மான் மருண்டது. ஆனாலும் தேன்சுவைப் புல்லை விட்டு விலக அதற்கு மனம் வரவில்லை. சஞ்சயன், புல்லில் தேனைத்தெளித்து அரண்மனையை நோக்கிச் செல்லும் வழி முழுவதும் பரப்பினான். புல்லை மேய்ந்தபடி கலைமான் அரண்மனைக்குள் சென்று சிக்கியது. மனிதர்களும் இப்படித்தான்... லௌகிக ஆசைகளில் உழன்று, உலகத் துன்பங்களில் சிக்கி விடுகின்றனர் என்கிறது புத்த ஜாதகக் கதை.
'இந்த உலகில், பிறந்தது முதற்கொண்டே இன்ப-துன்பங்கள், நதியின் பிரவாகம் போல் இடையறாது வந்து கொண்டே இருக்கும். சுக- துக்கங்களைச் சமமாகப் பார்க்கத் தெரிந்தவனே ஞானி. செல்வத் தால் சுகமும், வறுமையால் துக்கமும் ஏற்படும் என்று
எண்ணுவது பேதைமை. வறியவனுக்குப் பகைவர் இல்லை. அவனைக் கண்டு எவரும் காழ்ப்பினை கொள்வதில்லை. செல்வம் உள்ளவனுக்கு எப்போ தும் அச்சம் இருக்கும். செல்வத்தைத் தேடும்போதும் துன்பம்; அதைக் காக்கும்போதும் துன்பம்.
வறியவனுக்கு திருடர் பயம் இல்லை; அரசினால் துன்பம் இல்லை; உறவுகளால் துயரம் இல்லை. பாய் விரிக்காத வெறுந்தரையில் படுத்தாலும் அவனுக்கு நிம்மதியாக உறக்கம் வரும்.'
'பெருஞ்செல்வம் படைத்தவன் வெளித் தோற்றத் தில்தான் சுகவாசி. அவனுக்குள் ஒரு கோடி துக்கம் அலை மோதும். பொருளை விட்டவன்தான் சுகப்படுகிறான். பெரும்பொருள் சேர்த்தவன் துன்பத் தில் தவிக்கிறான். அதனால்தான் வறுமையை ஞானிகள் வரவேற்கின்றனர். அரச சுகங்களையும்
வறுமையையும் துலாக்கோலில் நிறுத்துப்பார்த்தேன். ஏழ்மைதான் கனமாக இருந்தது' என்று பீஷ்மரிடம் சம்யாக முனிவர் உரைத்ததை, அவர் தருமருக்கு உபதேசித்தார்.
மண்ணை ஆளும் போட்டியில் குரு«க்ஷத்திரமே ரத்த நதியில் குளித்தது. இரு தரப்பிலும் எண்ணற்ற உயிர்கள் பலியிடப்பட்டன. எங்கு நோக்கினும் அழிவும் நாசமும் ஊழிக்கூத்தாடின. கௌரவர்கள் பூண்டற்றுப் போயினர். உப பாண்டவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். மிகப் பெரிய விலை கொடுத்துப் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர். ஆனால் அந்தப் போரின் முடிவில் கிடைத்த அரியாசனம், தருமருக்கு மகிழ்ச்சி தரவில்லை. 'பிள்ளைகளையும் உறவினர்களையும் இழந்து பெற்ற வெற்றி என்னளவில் பெரும் தோல்வி
யாகப் படுகிறது. நம் வலிமையின் மீது நாம் கொண்ட கர்வத்தாலும் அரசின் மேல் வைத்த ஆசையாலும் இன்று பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறோம். நமது நிலையைப் பார்த்த பின் எவருக்கும் அரசாட் சியின் மீது ஆசை எழாது! என் மனதில் துக்கமே மிஞ்சியிருக்கிறது' என்று உள்ளம் வருந்தினார் யுதிஷ்டிரர்.
இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மன வலிமையுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை.
இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம்தான் மனிதனின் சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலை இழக்கிறான். துன்பம்
வரும்போது அவனுள் விழிப்பு உணர்வு பிறக்கிறது. இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன. துன்பமும் இன்பமும் வாழ்க்கை நாணயத்தின் பிரிக்க முடியாத இரண்டு பக்கங்கள். இரண்டு உணர்வுகளையும் சமமாகப் பாவிக்கும் மனச் சமநிலைதான் மனிதனுக்கு முக்கியம். கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்.
புழு... தன் உடலில் இருந்து சுரக்கும் பொருளால் தன்னைச் சுற்றி தானே வலையைப் பின்னி, அதில் சிறைப்படுவது போல், நாமும் நம் ஆசை வலையை விரும்பி உருவாக்கி, அதில் விழுந்து அல்லல்படுகிறோம். புழு, சிறைப்பட்ட வலையில் அழுது புலம்பாமல் துயரங்களைச் சகித்துத் தனது முயற்சியால் அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளிப்படுகிறது. நாமும் எதிர்வரும் துன்பங்களை எண்ணி அழுது புலம்பாமல், அவற்றை மனத் திண்மையுடன் வரவேற்போம். துன்பங்கள் துளையிடும்போதுதான் மனித மூங்கில், பூபாளம் இசைக்கும் புல்லாங்குழலாகும்.

Comments