திருக்கருகாவூர்

கருகாவூர் அத்தர், கருகாவூர் அமுதர், கருகாவூர் அழகர், கருகாவூர் அடிகள், கருகாவூர் ஐயர், கருகாவூர் ஈசர், கருகாவூர் எந்தை, கருகாவூர் அண்ணல், கருகாவூர் ஆத்தர் என்றெல்லாம் திருக்கருகாவூர் இறைவனை போற்றுகிறார் திருஞானசம்பந்தர்.
மொத்தம் 11 பாடல்கள் கொண்ட பதிகத்தில், 8- வது பாடல் கிட்டவில்லை. இந்தப் பதிகத்தின் 3-வது பாடலில், ஒரு செய்தி சொல்லப் படுகிறது.
பழக வல்லசிறுத்தொண்டர் பாவின் இசைக்(கு)
குழகர் என்று குழையா அழை யாவரும்கழல்கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

'அனைவரும் திருவடிகளை வாழ்த்திப் பாட, எல்லோர்க்கும் அருள் தரும் அழல் வண்ணத்தர்' என்பது பாடலின் 2 மற்றும் 4-ஆம் வரிகளில் காணப்படும் தகவல்.
ஆனால், முதல் வரி? சிறுத்தொண்டர் பாடிய பாடலுக்குக் குழைந்து, இறைவன் காட்சி கொடுத்ததாக ஒரு செய்தி! யார் இந்த சிறுத்தொண்டர்? என்ன பாடினார்? எப்போது வாழ்ந்தார் என்பதற்கான குறிப்புகள் கிடைக்கவில்லை. 'இந்தப் பகுதியில் வாழ்ந்த அடியார் ஒருவரது இசைக்கு மயங்கி, அவர் கூப்பிட்ட குரலுக்காக முல்லைக் கொடிகளின் அடியில் சுயம்புவாகச் சிவனார் தோன்றினார்!' எனும் செவிவழி செய்தி நிலவுகிறது.
முல்லை அல்லது மல்லிகை மாலை சார்த்தி வழிபட்டால், முல்லைவனநாதருக்கு மிகவும் மகிழ்ச்சியாம். பிருத்வி லிங்கமா கவும் கருதப்படுகிற ஸ்வாமிக்கு நேரடியாக அபிஷேகம் கிடை யாது. புற்று மணல்தான் லிங்க பாணமாக உருப்பெற்றது என்றும் சொல்கிறார்கள். புனுகுச் சட்டம் இட்டு வழிபடுவது வெகு சிறப்பு. அபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படின், குவளை (லிங்க பாணத்துக்கு வெள்ளிக் கவசமாகச் சார்த்துவார் களே... அந்தக் குவளை) இட்டு அபிஷேகம் செய்வார்கள்.
மூலவரை வணங்கி, முன் மண்டபத்தை அடைகிறோம். நடராஜ சபைக்குப் பக்கத்தில், நவக்கிரக சந்நிதி; அடுத்ததாக பைரவர் சந்நிதி. சுவர்ணாகரன் என்றொரு வணிகன்; இவன் அதர்மங்களில் ஈடுபட்டு, அழகு குன்றி அருவருப் பான உருவம் பெற்றான். கார்க்கியர் எனும் முனிவரிடம் தஞ்சம் அடைந்தான். அவனை முல்லைவனத்துக்கு அழைத்து வந்த கார்க்கியர், பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கச் செய்து, முல்லைவனநாதரை வழிபடவும் செய்தார். அவனது அகோரத் தோற்றம் மாறி நல்லுரு பெற்றான். முனிவர், முல்லைக் கொடிகளால் சூழப்பட்டிருந்த சிவலிங்க நாதருக்கு ஆலயம் அமைத்து, இங்கேயே தங்கி தவம் இயற்றினார்.
மாதவி வனேஸ்வரரை மீண்டும் வணங்கி, மகா மண்டபத்தின் பக்க வாட்டு வழியாக சோமாஸ்கந்தர் சந்நிதியை அடைகிறோம்.
அருவமான எம்பெருமான், உருவமாக இரங்கி வந்த போது, முதலில் கண்களுக்குப் புலப்படும்படியாக ஜோதிவடிவம் கொண்டார். பின்னர், அருவமும் உருவமும் கலந்த அருவுருவ லிங்கமாகக் காட்சி தந்தார். பின்னர், மனித சமுதாயத்தின் நன்மைக்காக, போக மூர்த்தங்களை மேற்கொண்டார். அத்தகைய போக மூர்த்தங்களில் முதன்மையானதும் மிகுந்த சிறப்புக்கு உரியதும் சோமாஸ்கந்த மூர்த்தமேயாகும் ச + உமா + ஸ்கந்தர்= சோமாஸ்கந்தர்; உமாதேவி- கந்தன் உடனாய வடிவம்!
விழாக் காலங்களில் வீதியுலா வருபவர் சோமாஸ்கந்தரே ஆவார். அன்னையும் அப்பனும் அருள் பிள்ளையுமான வடிவை வணங்கி, அப்படியே வெளியே வந்து மீண்டும் மூலவர் கருவறையை வலம் வருகிறோம்.
தெற்கு கோஷ்டங்களில் விநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி... சனகாதி முனி வர்கள் மனமொன்றிக் கேட்டிருக்க, கல்லால மரத்தடியில் உபதேசித்து அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி அழகோ அழகு. மேற்கு கோஷ்டத்தில் வழக்கமான லிங்கோத்பவர் இல்லை; அர்த்தநாரீஸ்வரர்! மிகவும் பழைமை யான கோயில் என்பதற்கான சான்றுகளில் இதுவும் ஒன்று. வடக்கு கோஷ்டங்களில் பிரம்மா, துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
குருகாம் வைரமாம் கூறு நாளாம்
கொள்ளூம் கிழமையாம்
கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டில்
பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே
தோன்றும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
-என்றார் நாவுக்கரசர். கருகாவூர்
எந்தை, உலகுக்கே கருப்பொருளான வர். அந்த கருகாவூர் கற்பகத்தை சென்னி தாழ்த்திப் பணிந்து, மெதுவாக உள்வாயில் பகுதிக்கு மீள்கிறோம். அங்கிருந்து அம்மன் சந்நிதிக்குச் செல்கிறோம்.
அருள்மிகு கர்ப்பரட்சாம் பிகை என்றும் கரு காத்த அம்மன் என்றும் கருகாவூரில் வழிபடப் பெறுகிற அம்பாளின் சந்நிதி, சுவாமி சந்நிதிக்கு இணையாக, அதன் இடப் புறம் அமைந்துள்ளது. உள் வாயிலின் மூன்று நிலை கோபுரத்துக்கு அருகில், அம்மன் சந்நிதி செல்லும் வழி. அம்மன் சந்நிதிக்கு எதிரில் அன்ன தானக் கூடம். இதற்கு அருகில் ஸ்ரீகௌதமேஸ்வரர் சந்நிதி.
கௌதமர் மிகப் பெரிய தவசீலர். பிறரின் சூழ்ச்சிக்கு ஆளானதால், இவரை பசுஹத்தி (பசுக் கொலை) தோஷம் பீடித்தது (கௌதமரின் தவ வலிமையையும் நேர்மையையும் கண்டு பொறாமை பட்ட முனிவர்கள் சிலர், பசு ஒன்றை வேண்டும் என்றே வயல் வெளியில் அலைய விட்டனர். பசுவை அடிக்கக் கூடாது; ஆனால், விளைச்சலைக் காப்பாற்ற வேண்டும் எனும் சூழலில்... தர்ப்பைப் புல்லை பசுவின் மீது போட்டு விரட்டினார் கௌதமர். தர்ப்பை, வன்மையாக இருக்காது என்று நம்பினார்;
ஆனால், சதியின் விளைவாக தர்ப்பை பட்டு பசு இறந்தது; கௌதமரை தோஷம் பற்றிக்கொண்டது. இந்தக் கதை நமக்கு ஏற்கெனவே தெரியும்). தனது பாவம் நீங்குவதற்காகப் பற்பல தலங்களுக்கும் சென்ற கௌதமர், போதாயானர் எனும் முனிவரின் அறிவுரைப்படி, முல்லை வனம் அடைந்தார். பிரம்ம தீர்த்தத்தில் நீராடி மாதவிவனேஸ்வரரை வழிபட்டார். தோஷம் நீங்கப் பெற்றார். அவர் பூஜித்த லிங்கமே கௌதமேஸ்வரர்.
அம்மன் சந்நிதி, நவீன காலத் திருப்பணிகளால் ஜொலிக்கிறது. மிக நீண்டதொரு முன் மண்டபம். ஆற அமர அம்மனை தரிசிக்க இந்த அமைப்பு. மண்டபத்தில் பலிபீடம், நந்தி. அடுத்து, தொட்டில் மற்றும் துலாபாரம். பிறகு மகா மண்டபம். அடுத் துள்ள அர்த்த மண்டப வாயிலில், ஒருபுறம் விநா யகர்; மறுபுறம் மகாலட்சுமி.
அர்த்த மண்டபம் தாண்டி, கருவறையில் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை. நின்ற கோல நாச்சியாரான அம்பாளுக்கு நான்கு திருக்கரங்கள். மேல் கைகளில்- பத்மமும் (தாமரை) அக்ஷமாலையும்; கீழ்க் கைகளில்- வலப்புறம் அபயம்; இடப்புறம் ஊரு ஹஸ்தமாகத் தொடையில் ஊன்றப்பட்ட திருக்கரம். அம்பாளின் அழகு வதனத்தில், மென்மையான புன்னகை. இந்தப் புன்னகையே
பக்தர்களது கவலைகளைப் போக்கி விடுகிறது. கரும்பனையாளம்மை (கரும்பு அனையாள்- கரும்பைப் போன்று இனிப்பானவள்) என்றும் அம்மனுக்குத் திருநாமம் உண்டு. அம்பாளை வணங்கி,
மண்டபத்தின் பக்க வாயிலின் வழியாக வெளியேறி, அம்பாள் கருவறையை வலம் வரலாம். தென் பக்கத்துகோஷ்டத்தில் சிவலிங்கத்தைத் தழுவிய அம்பாள் வடிவம். வேறு கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. வடக்குச் சுற்றில் சண்டிகேஸ்வரி மண்டபம்.
அம்பாளுக்கு நெய்யிடுவது இங்கு வெகு சிறப்பு. திருமணம் ஆகாத பெண்களும் நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் அம்பிகையின் சந்நிதியில், நெய்யால் மெழுகிக் கோலமிட்டு வழிபட்டால், திருமணப்பேறும் மகப்பேறும் கிட்டும்.
அம்மன் சந்நிதியில் நெய் வைத்து பூஜித்தும் கொடுக்கின்றனர். இதை, வீட்டுக்கு எடுத்துச் சென்று முறைப்படி 48 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியருக்குக் குழந்தைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. கர்ப்பிணிகள் சுகப் பிரசவத்துக்காகவும் இங்கு பிரார்த் திப்பார்கள். அம்பாளின் திருப்பாதங்களில் வைத்து மந்திரிக்கப்பட்ட விளக்கெண்ணெய் இங்கே கிடைக்கும்.
பேறு வலியின்போதும் குழந்தைக்கும் அதைப் பயன்படுத்தினால், கோளாறுகளோ நோய்களோ ஏற்படாது.
ஹிமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷிணி தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யாகர்ப்பிணீபவேத் என்கிற ஸ்லோகத்தையும், ஸ்ரீ மாதவி கானனஸ்தே - கர்ப்ப ரக்ஷ£ம்பிகே பாஹிபக்தம் ஸ்துவந்தம் -என்று தொடங்கும் ஸ்லோகத்தையும் தொடர்ந்து ஓதி வந்தால், சுகப் பிரசவம் நடைபெறும்.
நித்ருவரும் வேதிகையும் முல்லை வனத்தில் தவம் செய்த கௌதமருக்கும் கார்க்கியருக்கும் நெடுங்காலம் பணிவிடை செய்தனர். முனிவர்களின் அருளால் பிள் ளைப் பேறு பெற்றார்கள். அந்தப் பிள்ளைக்குத்தான் ஊர்த்துவபாதரால் சாபம் கிடைத்தது.
இந்தக் கோயிலின் அமைப்பில் ஓர் அழகு உண்டு.ஸ்வாமி சந்நிதி... அதற்கு இணையாக அம்பாள் சந்நிதி... ஸ்வாமி சந்நிதி பிராகாரத்தில் பார்த்தோமே... ஸ்ரீஆறுமுகர் சந்நிதி, அது ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் இடைப்பட்டதுபோல அதே நேர்க்கோட்டில் அமைந்து உள்ளது. இதனால், சுவாமி- அம்பாளுக்கு இடையே பிள்ளையான ஸ்ரீசுப்ரமணியர் இருக்கிறார். இத்தகைய சோமாஸ்கந்தர் அமைப்பு, கோயிலிலேயே இருப்பதால், இங்கு பிரார்த்தித்தால் பிள்ளைப்பேறு நிச்சயம்.
தல விநாயகரும் கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பகப் பிள்ளையார். விநாயகர், முருகர், சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளில் நெய் தீபங்களை ஏற்றி வைத்து, திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்தால், பிள்ளைப் பேறு வாய்க்கும்.
குசத்வஜர் என்பவர், முனிவர்களது சாபத்தால் புலி உருவம் பெற்றார்; இங்கு வழிபட்டதால் சாபம் நீங்கியது. தட்சனின் சாபத்தைப் பெற்ற சந்திரன், பங்குனி மாதப் பௌர்ணமி அன்று இங்கு வந்து வழிபட்டான்; சாப நிவர்த்தி கண்டான். இப்போதும், பங்குனிப் பௌர்ணமி நாட்களில் சந்திர ஒளி, மூலவர் திருமேனியில் விழுவதைக் காணலாம்.
அம்பாள் சந்நிதியை விட்டு வெளியே வருகிறோம். பிரம்ம தீர்த்தம் என்று பார்த் தோமே, அது எங்கே என்கிறீர்களா? ஊரின் தென்மேற்குப் பகுதியில் இது இருக்கிறது. படைப்புக் கடவுளான பிரம்மா, தனது ஆற்றலில் குன்றிப்போனார். மீண்டும் ஆற்றலைப் பெறுவதற்காக, முல்லை வனம் வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, அதில் நீராடி, இறைவனை வணங்கினார். உலகுக்கெல்லாம் கருவான முல்லைவனநாதர், சிருஷ்டி ஆற்றலை வழங்கினார். பிரம்ம தீர்த்தத்தில், மார்கழி மாதஆருத்ரா தரிசனத்தின்போது, ஐயனும் அம்மையும் எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவர்.
காவிரியின் கிளைநதியான வெட்டாற்றங்கரையில் தான், கருகாவூர் உள்ளது. இலக்கியங்களில் 'முள்ளி வாய்' என்று வழங்கப்படும் வெட்டாற்றுக்கு விருத்த காவிரி (பழைய காவிரி) என்றும் பெயருண்டு. இதுவும் இந்தத் தலத்துக்குத் தீர்த்தமாகும்.
இந்தப் பகுதிக்கே 'பஞ்சாரண்யம்' என்றொரு பெயர் இருக்கிறது; ஐந்து வகையான தாவரங்கள் பல்கிப் பெருகியிருந்த பகுதி. ஐந்து ஆரண்யங்களிலும் (ஆரண்யம்- காடு) ஐந்து தலங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒரே நாளில் வேளைக்கொன்றாக தரிசிக்கும் மரபு, இப்போதும் வழக்கத்தில் உள்ளது. அந்தத் தலங்கள்: முல்லைவனமான கருகாவூர்- உஷத்காலம் (விடிவதற்கு முன்னான அதிகாலைப் பொழுது- வைகறை); பாதிரி வனமான அவளிவநல்லூர்- காலை சந்தி (காலை);
வன்னி வனமாகிய அரித்துவாரமங்கலம் (அரப்பெரும் பாழி)- உச்சிகாலம் (நண்பகல்); பூளை வனமாகிய இரும்பூளை ஆலங்குடி- சாயுங்காலம் (மாலை); வில்வ வனமாகிய திருக்கொள்ளம்பூதூர்- அர்த்தஜாமம் (இரவு).
திருக்கருகாவூர் கோயிலின் சிற்பங்களைக் கண்டு இன்புறலாம். உள் பிராகாரத்தில், வடகிழக்குப் பகுதியில் சபா மண்டபம் இருக்கிறது. இங்குள்ள தேர் வடிவ அமைப்பு மற்றும் தேர்ச் சக்கரங்கள் மிக அழகு! நித்ருவர் வழிபட்ட லிங்கமும் இங்கேதான்
உள்ளது. கருவறை சுவர்களின் மேல்பகுதியில் காணப்படும் பூதகண வடிவங்கள், யானைகள், நந்திகள் ஆகிய யாவுமே கொள்ளை எழில்! சோமாஸ்கந்தர், நடராஜர் மற்றும் ஆறுமுகர் உற்சவ மூர்த்தங்களின் அழகும் சொற்களில் அடங்காது.
பற்பல மன்னர்களும் பெரியோர்களும் திருப்பணி செய்துள்ள திருக்கருகாவூர்... முதலாம் ராஜராஜன் கல்வெட்டில், நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் என்று குறிக்கப்பெறுகிறது. 'கருகாவூர் இன்பக் கதியே' என்ற ராமலிங்க வள்ளல் பெருமான் அழைத்தார். அந்த வழியில் முல்லைவன நாதரையும் அருள்மிகு கரு காத்த நாயகியையும் அழைத்து வணங்கி வெளியில் வருகிறோம்.

Comments