ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு ஸ்ரீவிஐயீந்திரர்

மகான்கள்... இறைவனின் தூதர்கள்! சாதாரண மனிதர்களாக அவதரித்தாலும் இவர்களது அற்புதங்கள் சாதாரணமானவை அல்ல. இறைவனின் மகிமையை சக மனிதர்களுக்கும் உணர்த்தி, அவர்களுக்குள் தெளிவை ஏற்படுத்தியதில் மகான்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
தீராத நோய் குணமாக வேண்டும் என்று தன்னிடம் வேண்டியவர்களிடம், 'இவர்களைதரிசியுங்கள் எல்லாம் நலமாகும்!' என்று ஸ்ரீநடராஜபெருமனே வழிகாட்டிய பெருமைக் குரிய மகான்களை (ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள் மற்றும் பசுவந்தனை ஸ்ரீசங்கு சுவாமிகள்) பற்றி இந்த பகுதியில் ஏற்கெனவே படித்திருக்கிறோம்.மகான்களின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்த, இதுபோன்ற திருவிளையாடல்களை இறைவன் நிகழ்த்திக்காட்டிய கதைகள் ஏராளம்!
சாமான்யர்களுக்கு மட்டுமின்றி, சர்வ அதிகாரம் பொருந்திய மன்னர்களுக்கும் அறநெறிகளை போதித்து நல்வழி காட்டியவர்கள் மகான்கள். இவர்களில் ஒருவர்... ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர்!
ஸ்ரீராகவேந்திரரின் பரமகுருவாக விளங்கியவர் இவர். அதாவது, குருவின் குரு. ஸ்ரீராகவேந்திரரின் குருநாதர் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர். இவரின் குருநாதரே ஸ்ரீவிஜயீந்திரர் (ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தரை இனி ஸ்ரீவிஜயீந்திரர் என்றே பார்ப்போம்). விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவ ராயரின் மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர் இவர்.
'ரத்தினத்தைப் போல் ஜொலிக்கக் கூடிய 104 நூல்களை எழுதியவர்; அபாரமான ஞானம் மற்றும் அசாத்தியமான

திறமையைத் தன்னகத்தே கொண்டவர்; ஆய கலைகள் அறுபத்துநான்கிலும் சர்வ வல்லமையும் புலமையும் பெற்றிருப்பவர்; ஸ்ரீசுரேந்திர தீர்த்தரின் சிஷ்யர்; ஸித்தாந்தங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து பிறரது தயவு இல்லாமல் நற்புலமை பெற்றவர்; இந்த மூன்று உலகங்களிலும் தனக்கென ஓர் இடத்தைக் கொண்டு அழியாப் புகழ் பெற்றவர்' என்று ஸ்ரீவாதீந்திர தீர்த்தர் தனது 'குரு குண ஸ்தவனம்' என்கிற கிரந்த நூலில் ஸ்ரீவிஜயீந்திரரைப் பற்றிப் புகழ்கிறார். ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளுக்கு அடுத்து 5-வது பீடாதிபதியாக மந்த்ராலய
மடத்தை அலங்கரித்தவர் ஸ்ரீவாதீந்திர தீர்த்தர்.
'ஸ்ரீராகவேந்திர மடம்' என்று தற்போது அறியபடும் இந்த மத்வ மடத்தை அந்த காலத்தில் (ஸ்ரீராகவேந்திரருக்கு முன்னால்) வித்யா மடம் என்றே அழைப்பர். மத்வாச்சார்ய மூல மஹா சமஸ்தானத்தின் பரம்பரையில் 15-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீவிஜயீந்திரர். கி.பி. 1530-ஆம் ஆண்டு முதல் 1614 வரை இந்த பீடத்தை அலங்கரித்தவர்.
இவரும், அடையபலம் மகான் அப்பய்ய தீட்சிதரும் சமகாலத்தவரே. சிற்சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் வாத- பிரதிவாதங்கள் புரிந்தாலும் இவர்களி டையே ஒருவித சிநேக மனப்பான்மை இருந்தது. விஜயீந்திரரின் வாதத் திறனை பிறரிடம் மனம் திறந்து பாராட்டுவார் அப்பய்ய தீட்சிதர்!
ஆந்திர தேசத்தில் அவதரித்தாலும் தமிழகத்தின் கோயில் நகரமாம் கும்பகோணத்தில் ஸ்ரீமடம் அமைத்தார் விஜயீந்திரர் (பிரளய காலத்தில் காஸ்யப முனிவர் தவம் இருந்து, ஸ்ரீமந் நாராயணரின் தரிசனம் கிடைக்கப் பெற்ற இடமாம்). அங்குள்ள கோயில்களின் நிர்வாகப் பொறுப்பைச் சிறப்புற ஏற்றது மட்டுமின்றி, ஊர் மக்களையும் ஆசீர்வதித்தவர் விஜயீந்திரர்.
அவரது வாழ்வை சுருக்கமாக இங்கே காண்போம்.
வியாச ராஜர்! விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவ ராயருக்கு ராஜ குருவாக திகழ்ந்தவர். 'ஸ்ரீவியாசராஜ மட'த்தின் பீடாதிபதியாகவும் விளங்கிய இவர், 700-க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தார். இறைபக்தியை பரப்பும் நோக்கில் தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டார்.
ஒரு முறை, தங்களது கிராமத்துக்கு வருகை தந்த வியாசராஜரை, தம்பதி சமேதராக வரவேற்று உபசரித்து வணங்கினார் கிராம தலைவர். வயது முதிர்ந்த அவரிடம், ''விரைவிலேயே உங்களுக்கு மகன் பிறக்கட்டும்!" என்று ஆசிர்வதித்தார் வியாசராஜர்.
தலைவருக்கு அதிர்ச்சி. ''ஐயா... உங்களது திருவாக்கை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. பல வருடங்களாகவே மகன் இல்லாத ஏக்கத்தில் தவித்து வருகிறோம். 'சரி... நமக்கு அந்த பாக்கியம் இல்லை போலும்' என்று எங்களை நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம். ஆனால் தாங்களோ... 'மகன் பிறப்பான்' என்று ஆசிர்வதிக்கிறீர்களே குழப்பமாக இருக்கிறதே ஸ்வாமி!"என்றார்.

இதற்கு வியாசராஜர், ''இதை நான் சொல்லவில்லை. எனக்குள் இருக்கும்... தினமும் நான் வணங்கும் மூல கோபாலகிருஷ்ணரின் வாக்கு இது" என்றார். மேலும் 'ஒன்றல்ல; இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கும்' என்றும் அருளினார் வியாசராஜர். அந்த தம்பதி மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அதே நேரம்... ''உங்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தையை ஸ்ரீமடத்துக்கு அளிக்க வேண்டும். செய்வீர்களா?" என்றார் வியாசராஜர். முழு மனதுடன் ஒப்புக் கொண்டனர் தம்பதி!

வியாசராஜர் அருளியபடியே... அடுத்த சில நாட்களில் கிராமத்துத் தலைவரின் மனைவி கருவுற்றாள். பின்னர் அழகான இரண்டு மகன்களை ஈன்றெடுத்தாள். முதல் மகன் விட்டலன் (இவரே ஸ்ரீவிஜயீந்திரர்). இரண்டா வதாகப் பிறந்தவன் குருபிரசாத்.
வியாசராஜருக்கு கொடுத்த வாக்குப்படி விட்டலனது 5-வது வயதில் அவனை வியாசராஜரிடம் ஒப்படைத்தனர். அதன் பின் விட்டலனுக்குக் கல்வி- கேள்விகளைக் கற்றுத் தர ஆரம்பித்தார் வியாசராஜர். விட்டலனுக்கு எட்டு வயதாகும்போது 'விஷ்ணு தீர்த்தர்' எனும் தீட்சா நாமத்தை அளித்து, சந்நியாஸ்ரமமும் தந்தார். குருவருளால் பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தார் விட்டலன். அனுதினமும் வியாசராஜரது பூஜை- புனஸ்காரங்களுக்கு உதவிகள் புரிந்தார்.

காலங்கள் உருண்டோடின. ஒரு முறை... ஸ்ரீமத்வ மடத்தின் பீடாதிபதியான சுரேந்திர தீர்த்தர் விஜய நகரத்தில் உள்ள வியாசராஜ மடத்துக்கு எழுந்தருளினார்.அவரை வரவேற்று உபசரித்த வியாசராஜர் அமுது உண்ண அவரை அழைத்தார்.
''முன்னதாக தாங்கள் எனக்கு ஒரு பிட்சை வழங்க வேண்டும்" என்றார் சுரேந்திரர். இவரது நோக்கம் வியாசராஜருக்கு தெரியாதா என்ன?!
''தாங்கள் கேட்கும் பிட்சை என்னிடம் இருந்தால், கட்டாயம் தருகிறேன்" என்றார் அவர்.
உடனே சுரேந்திரர், ''தங்கள் சீடனான விஷ்ணு தீர்த்தரை (விட்டலன்) ஸ்ரீமடத்துக்கு பிட்சையாகத் தந்தருள வேண்டும்."
''ஓ... 'மூல கோபாலகிருஷ்ணனின் பூஜைகளை இவன் இதுவரை பார்த்தது போதும். இனி, மூல ராமனின் பூஜையைப் பார்க்க வா' என்று நாசூக்காக விட்டலனை அழைக்கிறீரோ?" என்று சுரேந்திரரைப் பார்த்துக் கேட்ட
வியாசராஜர், ''தாங்கள் கேட்ட பிட்சையை இக்கணமே தந்தேன்" என்று விஷ்ணு தீர்த்தரை, வியாச மடத்தில் இருந்து மத்வ மடத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்.
கி.பி. 1530-ஆம் ஆண்டு வாக்கில் விஷ்ணு தீர்த்தருக்கு 'ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர்' என்கிற தீட்சா நாமம் வழங்கி, தான் அமர்ந்த பீடத்தில் கோலாகலமாக அமர்த்தினார் சுரேந்திரர். நாட்டின் பல பகுதிகளுக்கும் யாத்திரை சென்றார் விஜயீந்திரர். காஞ்சிபுரம், கோலார், தும்கூர், திருமலை திருப்பதி, மாஞ்சாலம், (தற்போதைய மந்த்ராலயம்), நஞ்சன்கூடு, ஸ்ரீரங்கம், மதுரை, தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளுக்கும் சென்றார். சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இறுதியாக, கும்பகோணம் வந்தார். இங்கே கி.பி. 1614-ல் காவிரிக் கரை ஓரம் பிருந்தாவனஸ்தரானார். விஜயீந்திரரது பிருந்தாவனத்தை தரிசிக்க இன்றைக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஸ்ரீராகவேந்திரர் தனது காலத்தில் இங்கு அமர்ந்துதான் கல்வி கற்றார்.
ஆய கலைகள் அறுபத்துநான்கு என்பர். அதாவது, சகல சாஸ்திரங்களையும் அறிந்திருத்தல், இதிகாச- -புராணங்களில் தேர்ந்திருத்தல், நீரில் நடப்பது, அந்தரத்தில் மிதப்பது, இரவைப் பகலாக்குவது, வாதத் திறமையால் எதிரிகளைத் திக்குமுக்காட வைப்பது... இது போன்ற பல ஞானங்களையும் அறிந்தவரே ஆய கலைகள் அறுபத்துநான்கிலும் வல்லவர். இவற்றைக் கைக்கொள்வதற்குப் பயிற்சி மட்டும் போதாது. இறைவனின் அனுக்கிரஹம்தான் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு பெரும் பேற்றைப் பெற்றவர் ஸ்ரீவிஜயீந்திரர்.
ஆய கலைகள் அறுபத்துநான்கில் ஒன்று- விக்கிரகங்கள் மற்றும் சிலைகளை வடிக்கக் கற்றுக் கொள்வது. அதாவது உலோகம், தகடு, மரம் மற்றும் கல் போன்ற எதிலும் சித்திரங்கள் வரைவதிலும், சிலைகள் செதுக்குவதிலும் தேர்ந்திருக்க வேண்டும். விஜயீந்திரர் வடித்த ஏராளமான சிற்பங்கள், இங்கே அவரது பிருந்தா
வனத்தில் இருக்கின்றன. உருவில் சிறியவை என்றாலும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், காண்பவர்களைப் பிரமிக்க வைக்கின்றன இந்த சிற்பங்கள்!
விஜயீந்திரரின் வாழ்வில் நடந்த அற்புதங்கள் ஏராளம். அனைத்தையும் ஒரு இதழில் சொல்லி விட முடியாது என்பதால், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.
கும்பகோணம் நகரம், திருக்கோயில்கள் நிறைந்தது என்பதை அறிவோம். உலகத்தின் சிருஷ்டிக்கே காரணமான ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில், திவ்யதேச சிறப்பு பெற்ற ஸ்ரீசாரங்கபாணி கோயில், சுதர்சன ஆழ்வாரின் மகிமையை உணர்த்துவதற்காக உருவான ஸ்ரீசக்ரபாணி கோயில், நாயக்க மன்னர்களின் ஆன்மிகச் சிறப்பை வெளிப்படுத்தும் ஸ்ரீராமஸ்வாமி கோயில் போன்றவை கும்பகோணத்தில் தரிசித்து அருள் பெற வேண்டிய - குறிப்பிடத்தக்க சில திருத்தலங்கள்.
மேலே சொன்ன இந்த முக்கியமான ஆலயங்கள் எல்லாம் ஸ்ரீவிஜயீந்திரர் காலத்தில் இருந்து, அவருக்குப் பிற்காலத்தில் பீடத்தை அலங்கரித்த ஸ்ரீராகவேந்திரர் வரை, ஸ்ரீமடத்தின் கட்டுப்பாட்டிலும், நிர்வாகத்திலும் இருந்து வந்தன.
விஜயீந்திரர் காலத்தில்தான் இந்தத் திருக்கோயில்கள் ஸ்ரீமடத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. கோயில்கள் இந்த மடத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு சுவாரஸ்யமானது.
லிங்க ராஜேந்திரர் என்பவர் கும்பகோணத்தில் வசித்து வந்த பண்டிதர். பல திறமைகளைத் தன்னகத்தே கொண்ட பெரும் ஆன்மிக அறிஞர். ஸ்ரீவிஜயீந்திரர் காலத்தில்... லிங்க ராஜேந்திரரின் நிர்வாகத்தின் கீழ்தான் கும்பகோணத்தில் உள்ள அனைத்து ஆலயங்களும் இருந்தன. நித்திய பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் பிரமாதமாக நடந்து வந்தன. இதனால், பலருடைய நன்மதிப்பையும் ஒருங்கே பெற்றிருந்தார்.
மதிப்பு உயரும்போது மமதை என்கிற செருக்கும் உயரும்தானே! அதற்கு லிங்க ராஜேந்திரரும் விதிவிலக்கல்ல. ஒரு கட்டம் வரை இவரை, 'ஆகோ... ஓகோ' என்று புகழ்ந்து வந்த கும்பகோணம் மக்கள், 'இவரது ஆணவத்தை அழிக்கும் திருமகனார் வரமாட்டாரா?' என ஏங்கினார். இந்த நிலையில்தான்... அப்போது தஞ்சையை ஆண்ட சவ்வப்ப நாயக்கரின் அழைப்பை ஏற்று, குரு நாதர் சுரேந்திர தீர்த்தருடன் தஞ்சைக்கு வருகை புரிந்தார் ஸ்ரீவிஜயீந்திரர்.
மத்வ மடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீசுரேந்திரரின் அருமை பெருமைகளை அறிந்த கும்பகோணம் மக்கள், தஞ்சைக்குப் புறப்பட்டனர். அங்கே ஸ்ரீசுரேந்திரரை தரிசித்தவர்கள், ''குருநாதர் கும்பகோணத்துக்கு வர வேண்டும். தங்களது திருப்பாதம் எங்களது புண்ணிய பூமியில் படவேண்டும். அங்கே லிங்க ராஜேந்திரர் என்கிற பண்டிதர் வசிக்கிறார். 'என்னை வெல்ல எவருமே இல்லை. என்னுடன் எவர் போட்டி இட்டாலும் அவர் தோல்வியையே தழுவார்' என்று அதிகார
மமதையுடன் கூறித் திரிகிறார். அவரை அடக்கி, எங்களைக் காக்கவே தாங்கள் தஞ்சை நகருக்கு எழுந்தருளி உள்ளதாக கருதுகிறோம். வாருங்கள் கும்பகோணத்துக்கு" என்று அழைப்பு விடுத்தனர்.
அவர்களைப் பார்த்து ஸ்ரீசுரேந்திரர் புன்னகைத்தார். பின், விஜயீந்திரர் பக்கம் திரும்பி, ''விஜயீந்திரரே... ஆன்மிகத்தில் எவருக்கும் மமதை இருக்கக் கூடாது. இதை உலகத்தாருக்கு உணர்த்துவதற்காக நீ இப்போதே கும்பகோணம் புறப்படு. உன் வெற்றியைக் காண நான் அங்கே வருவேன்" என்று ஆசிர்வதித்து அனுப்பினார் ஸ்ரீசுரேந்திரர்.
லிங்க ராஜேந்திரருடன் போட்டியிட்டு வெற்றி கொள்வதற்கு மகான் ஒருவர் வந்துள்ளார் என்பதை அறிந்த கும்பகோணம் பொதுமக்கள், விஜயீந்திரருக்குப் பிரமாதமான வரவேற்பு அளித்தனர். தன்னை ஜெயிக்க ஸ்ரீசுரேந்திர தீர்த்தரின் சிஷ்யர் வந்துள்ளார் என்பதை அறிந்த லிங்க ராஜேந்திரர் கலக்கம் கொள்ளவில்லை. இருவருக்குமான போட்டி- ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நுழைந்ததும் ஸ்ரீமங்களாம்பிகா தேவியை தரிசித்து, அன்னை உவகையுடன் அளித்த ஜய மாலையைப் பெற்றுக் கொண்டு, தன் ஆசனத்தில் அமர்ந்தார் விஜயீந்திரர். எதிர் ஆசனத்தில் லிங்க ராஜேந்திரர் அமர்ந்தார். கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பல பகுதிகளில் இருந்தும் ஏராளமா
னோர் ஆர்வத்துடன் இந்தப் போட்டியைக் காண குவிந்திருந்தனர்.
போட்டி துவங்கும் முன் ஸ்ரீவிஜயீந்திரருக்கு லிங்க ராஜேந்திரர் ஒரு நிபந்தனை விதித்தார். 'போட்டியில் லிங்க
ராஜேந்திரர் தோல்வி அடைந்தால், இதுவரை அவர் கவனித்து வந்த கும்பகோணத்தில் உள்ள அனைத்து ஆலயங்களின் நிர்வாகமும் விஜயீந்திரருக்கு வந்து விடும். ஒருவேளை விஜயீந்திரர் தோற்றுவிட்டால், அவர் ஸ்ரீமடத்தில் இருந்து வெளியேறி, லிங்க ராஜேந்திரரிடம் வந்து விடவேண்டும்' என்பதுதான் அந்த நிபந்தனை.
இதை ஏற்றுக் கொண்ட விஜயீந்திரர், மங்களாம்பிகா தேவியையும் தன் குருநாதர் ஸ்ரீசுரேந்திரரையும் மானசீகமாகத் தொழுது போட்டிக்கு ஆயத்தமானார்.
இருவருக்குமான வாதங்கள் தொடங்கின. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல... ஒன்பது தினங்கள் தொடர்ந்து இருவருக்கும் தர்க்கம் நடந்தது. வேதம், புராணம் என்று பல விஷயங்களை குறித்து தர்க்கங்கள் தொடர்ந்தன. ஆனால், ஒரு தினத்தில் கூட லிங்க ராஜேந்திரரால் வெல்ல முடியவில்லை.
போட்டி நடக்கும் ஒரு தினத்திலேயே தன் சீடனின்வாதத் திறமையைக் காண, தஞ்சையில் இருந்து ஸ்ரீசுரேந்திரர் வந்தார். பலரது அழைப்புக்கு இணங்க மன்னர் சவ்வப்ப நாயக்கரும் தன் மந்திரி பிரதானிகளுடன் வந்திருந்தார்.
ஒன்பதாவது தினத்தன்று வாதங்கள் முடிந்ததும், ஸ்ரீவிஜயீந்திரரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கூடி இருந்த பொதுமக்கள் கரகோஷம் எழுப்பினர். சபையோரின் தீர்ப்புக்கு லிங்க ராஜேந்திரர் உடன்பட்டு, தன் வசம் இருந்த ஆலய நிர்வாகம் அனைத்தையும் உவகையோடு ஸ்ரீவிஜயீந்திரரிடம் ஒப்படைத்தார்.
இப்படித்தான் கும்பகோண நகரத்து ஆலயங்களின் ஒட்டுமொத்த நிர்வாகம் ஸ்ரீவிஜயீந்திரரின் கட்டுக்குள் வந்தது. அதன் பிறகு காலங்கள் மாற... ஸ்ரீமடத்தின் நிர்வாகத்தில் இருந்த ஆலய நிர்வாகங்கள் கைமாறி கைமாறி... இன்று அரசின் வசம் உள்ளது. இருந்தாலும், இன்றைக்கும் ஸ்ரீவிஜயீந்திரர் மடத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட ஆலயங்களில் இருந்து மரியாதை வந்து சேருவது, குறிப்பிடத் தக்கது.
தெருவில் வித்தை காட்டும் ஆசாமி ஒருவன் கும்பகோணம் பகுதிக்கு வந்து வித்தைகள் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்துக் கொண்டிருந்தான். விஜயீந்திரரைப் பற்றிக் கேள்விப்பட்டு ஸ்ரீமடத்துக்கு வந்து, ஸ்வாமிகளின் கால்களில் விழுந்தான். அவனை ஆசிர்வதித்தவர், ''ஏம்ப்பா... உன் மனதிலே ஏதோ எண்ணம் ஓடுது போலிருக்கே..." என்றார் புன்னகையுடன்.
வந்தவன் விதிர்விதிர்த்தான். தன் மன ஓட்டத்தை ஸ்வாமிகள் படம் பிடித்து விட்டாரே என்ற எண்ணத்துடன், ''ஆமா சாமீ... தாங்கள் சகல கலைகளிலும் வல்லவர்னு கேள்விப்பட்டேன். அதான்... நான் செய்றது போல உங்களால் செய்ய முடியுமான்னு ஒரு கணம் தோணுச்சி..." என்று இழுத்தான்.
''உன் எண்ணப்படியே நாளை காலையில் நடக்கப் போவதைப் பார்க்கத் தயாராக இரு!" என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.
மறுநாள் காலை. ஆதிகும்பேஸ்வரர் கோயில் வாசலில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். ஸ்வாமிகள் தன் சீடர்களிடம் சொல்லி இருந்தபடி ஏற்பாடுகள் தயாராக இருந்தன. அதாவது, வித்தை காட்டுபவன் செய்து காண்பித்த ஒரு நிகழ்வைப் போன்றே ஸ்வாமிகளும் செய்யத் தயாராக இருந்தார். அப்படி என்ன வித்தை?
வித்தை காட்டுபவன் சாலையின் ஓரத்தில் இரண்டு கம்புகளை நட்டு, அவற்றை ஒரு கயிற்றால் இணைத்து, அதில் நடந்து காட்டி, அனைவரிடம் இருந்து கைதட்டல் பெற்றான். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நிகழ்வை நடத்திக் காட்ட இருந்தார் விஜயீந்திரர்.
சாதாரணமாக இல்லை. மிக பிரம்மாண்டமாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருந்தது அந்த நிகழ்வு. ஆதி கும்பேஸ்வரர் ஆலய ராஜகோபுரத்தின் உச்சியையும், அங்கிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீசாரங்கபாணி ஆலய ராஜகோபுரத்தின் உச்சியையும் பிணைத்தார். கயிறுக்குப் பதிலாக வாழை நாரைப் பயன்படுத்தினார். வாழை நார் எத்தனை மென்மையானது என்று தெரியும். சுமார் சில நூறு அடி உயரத்தில், தன் குருநாதரை தியானித்தபடி விஜயீந்திரர் வாழை நாரில் நடந்து காட்டியபோது, கீழே கூடி இருந்த பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்!
அப்போது வடதேசத்தில் வசித்து வந்தவர் தான்சேன். புகழ் வாய்ந்த இந்துஸ்தானி பாடகர். 'தீபக்' என்கிற ராகத்தை அதற்குண்டான லயத்துடன் பாடுவது இவரது சிறப்பு! இவரின் மாணாக்கர் ஒருவர், விஜயீந்திர ஸ்வாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, கும்பகோணம் ஸ்ரீமடத்துக்கு வருகை புரிந்தார்.
ஸ்வாமிகளைத் தரிசித்ததோடு இல்லாமல், ''தாங்கள் சகலகலைகளிலும் வல்லவர் என்று பேசிக் கொள்கிறார்களே... இசைக் கலையிலும் தாங்கள் வல்லவரா?" என்றார் திமிருடன்.
''அதுதான் சகல கலைகளிலும் வல்லவர் என்று கூறி விட்டாயே... அதில் இசையும் அடங்கும் என்பதை நீ அறியவில்லையா?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.
''அதெல்லாம் தெரியும் ஸ்வாமிகளே... வடதேசத்தின் சிறந்த பாடகர் தான்சேனின் மாணாக்கனான என்னுடன் போட்டியிட்டு, உங்களால் ஜெயிக்க முடியுமா?" என்றான் இறுமாப்புடன்.
''நான் வணங்கும் மூல ராமரின் சித்தம் அதுதான் என்றால், என்னப்பா செய்ய முடியும்? அப்படியே ஆகட்டும். நாளை காலை சாரங்கபாணி ஆலயத்துக்கு வந்து விடு. கச்சேரியை வைத்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஸ்ரீமடத்திலேயே தங்கிவிடு" என்று அவனை அனுப்பினார்.
மறுநாள் காலை... கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில், இசைப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் ஸ்வாமிகளைக் காண திரளான மக்கள் கூடி விட்டனர். இசையில் புலமை பெற்ற பெருமக்களும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஸ்ரீசாரங்க ராஜாவை வணங்கிவிட்டு தனக்குண்டான ஆசனத்தில் அமர்ந்தார் ஸ்வாமிகள்.
போட்டியின் நடுவர்கள், முதலில் தான்சேனின் மாணாக்கரைப் பாடச் சொன்னார்கள். இந்துஸ்தானியில் பிரபலமான ராகங்களை, தனக்கே உரிய ஆலாபனையுடன் சில மணி நேரங்கள் தொடர்ந்து பாடி சபையோரின் கைதட்டலைப் பெற்றான் அந்த மாணாக்கன்.
அடுத்தது- ஸ்வாமிகள் முறை!
மூல ராமரையும், குருநாதரையும் மனமார வணங்கி விட்டு, இந்துஸ்தானியிலேயே சில பாடல்களை மெய்ம்மறந்து ஸ்வாமிகள் பாடி முடித்ததும், இமை கொட்டாமல் அதை ரசித்த பார்வையாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். 'தான் தோல்விஅடைந்து விடுவோமோ' என்று பயத்தில் நெளிய ஆரம்பித்தான் மாணாக்கன். இருந்தாலும் மெள்ள சுதாரித்துக் கொண்டு, ''ஸ்வாமிகளே... இதுவரை நீங்கள் பாடிய பாடல்கள் இருக்கட்டும். என் குருநாதர் தீபக் ராகம் பாடுவதில் பிரபல்யமானவர். அந்த ராகத்தை அவரைவிட சிறப்பாக உங்களால் பாட முடியுமா?" என்று கேட்டான்.
''அவ்வளவுதானேப்பா... அதிசயங்களை இந்த சாரங்கராஜா இன்று கண்டு களிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய். இங்கு கூடி இருக்கும் இசை ரசிகர்களுக்கு
விருந்தளிக்க வேண்டும் என்று ஆர்வப்படுகிறாய். சரி, அதையும் பாடி விடுகிறேன்" என்ற ஸ்வாமிகள் தன் சிஷ்யர் ஒருவரை அருகில் அழைத்து ஏதோ சொன்னார். மறு நிமிடம் அங்கு ஐந்துமுக விளக்கு வந்து சேர்ந்தது. பிரமாண்டமான அந்த விளக்கில் நெய் ஊற்றினார்கள். பஞ்சாலான திரிகளை நெய்யில் தோய்த்து, ஐந்து முகங்களிலும் இட்டுவிட்டு அகன்றார்கள் சிஷ்யர்கள். விளக்கில் தீபம் ஏற்றாமல் நகர்ந்து விட்டார்களே என்று கூட்டம் திகைத்தபோது, ஸ்வாமிகள் அந்த ராகத்தை இசைக்கத் தொடங்கி விட்டார்!
ஸ்வர பிசிறு இல்லாமல் தீபக் ராகத்தை ஆலாபனையுடன் அவர் பாடத் துவங்கியபோது, கூட்டத்தினர் பிரமித்தனர். ஸ்வாமிகளது திருமுகத்தையும், தீபம் ஏற்றப்படாத விளக்கையும் ஆர்வம் பொங்க மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். தான்சேனின் மாணாக்கனும் 'என்னதான் நடக்கப் போகிறது?' என்று வியப்பு மிகுதியில் ஆசனத்தின் நுனியில் இருந்தான்.
ஸ்வாமிகளின் ராக வேகம் உச்சத்தை அடைய... அனைவரும் பிரமிக்கும் வண்ணம் அந்த அதிசயம் மூல ராமரின் அருளால் நடந்தது. ஐந்துமுக விளக்கில் இடப்பட்டிருந்த ஒவ்வொரு திரியும், தானாகவே தீயின் ஜுவாலையை ஏற்றுக் கொண்டு சுடர்விட்டுப் பிரகாசமாக எரியத் தொடங்கியது!
சாரங்கபாணி ஆலயத்தின் பட்டாச்சார் யர்களும், கூடி இருந்த இசைப் பெருமக்களும் பெருங்குரல் எடுத்து, ஸ்ரீவிஜயீந்திரரை வாழ்த்தினர். தான்சேனின் மாணாக்கன், ஸ்வாமிகளின் திருப்பாதம் பணிந்து நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தான். அவனை ஆசிர்வதித்து, ''எழுந்திருப்பா" என்றார் ஸ்வாமிகள்.
''ஸ்வாமிகளே... தீபக் ராகத்தை மிக அற்புதமாகப் பாடி, திருவிளக்கையும் தானாகவே ஒளிர விட்டு என்னுள் இருந்த இருட்டை விரட்டி விட்டீர்கள். எனது பிழை பொறுக்க வேண்டும். உங்களுடன் போட்டியிட வந்த என்னை இறைவன் மன்னிக்க வேண்டும்" என்று புலம்பித் தவித்தான். ஸ்வாமிகள் அவனைத் தேற்றி, பிரசாதங்கள் கொடுத்து வாழ்த்தினார்.
இதோடு முடியவில்லை... அன்றைய இறை விளையாடல்!
விஜயநகர சாம்ராஜ்யத்தில் இருந்து வந்திருந்த பண்டிதர் ஒருவரது வேண்டுகோளுக்கிணங்கி... அதே மேடையில் அம்ருதவர்ஷினி ராகத்தைப் பாடி, வானில் மழை மேகங்களை சூழச் செய்து, இடி-மின்னலுடன் கனமழையையும் கும்பகோணம் நகரத்தில் பொழியச் செய்தார் ஸ்வாமிகள்.
விஜயீந்திரரின் பிருந்தாவனத்தைத் தரிசிப்போமா?
கும்பகோணம் சோலையப்பன் தெருவில், காவிரிக் கரையின் ஓரத்தில், ஸ்ரீவிஜயீந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. விஜயீந்திரர் சமாதி ஆன இடத்தில் பிரமாண்டமான மேடை காணப்படுகிறது. இதன் மூன்று பக்கங்களில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர், ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய திருமேனிகளை தரிசிக்கிறோம்.
விஜயீந்திரரின் உபாசன தெய்வம் - ஸ்ரீலட்சுமி நரசிம்மர். கும்பகோணம் நகரத்தில் உள்ள கோயில் செல்வங்களைக் கொள்ளை அடிப்பதற்காக அந்நியப் படைகள், நகருக்கு அருகே முற்றுகை இட்டிருந்தனவாம். அப்போது காவிரியில், நரசிம்ம ஜபத்தைத் தொடங்கினார் ஸ்ரீவிஜயீந்திரர். அவ்வளவுதான்... இவருடைய ஜபத்தின் பலன், அந்நியப் படைகளை அங்கிருந்து துரத்தி விட்டதாம்.
ஸ்ரீராகவேந்திரருக்கும் இங்கே ஒரு சந்நிதி உண்டு. மந்த்ராலயத்தில் இருந்து மண் எடுத்து வந்து, இந்த சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலட்சுமிநாராயணருக்கும் ஒரு சந்நிதி உண்டு.
இங்கு இருக்கிற சின்ன திருக்குளம் 'காஸ்யப தீர்த்தம்' என வழங்கப்படுகிறது. பிருந்தாவனத்தில் நடக்கும் சில வழிபாடுகளின்போது, இங்கே தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.
வெள்ளியால் ஆன சிறிய பல்லக்கு ஒன்று உள்ளது. உற்ஸவ காலங்களில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகத்தை இதில் அமர்த்தி, உள்வலம் வருவர். உள்வலம் வருவதற்காக ஒரு தேரும் உள்ளது.
ஆனி மாதம் தேய்பிறை துவாதசி அன்று ஸ்ரீவிஜயீந்திரரின் ஆராதனை உற்ஸவம் சோலை யப்பன் தெருவில் உள்ள அவரது திருமடத்தில் நடக்கும். துவாதசி அன்று பூர்வாராதனையும், திரயோதசி அன்று மத்ய ஆராதனையும், சதுர்த்தசி அன்று உத்தர ஆராதனையும் நடைபெறும். இந்த வைபவத்தின் போது மந்த்ராலய மடத்தின் பீடாதிபதிகள் கலந்து கொள்வர். அதோடு, காண்பதற்கு அரிய வைபவமான ஸ்ரீமூல ராமரின் அபிஷேக- ஆராதனைகள் அன்றைய தினங்களில் இங்கே நடைபெறும். இதைக் காண தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிவார்கள். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் குறைவில்லாமல் வழங்கப்படும். கும்பகோணமே அன்று விழாக்கோலம் பூண்டிருக்கும்.
பூதராஜர் என்றொரு மரம், ஸ்ரீமடத்தின் பின்பக்கம் இருக்கிறது. பனை, அத்தி, வேம்பு ஆகிய மூன்று மரங் களும் இணைந்த வடிவம் இது. எதையாவது கண்டு பயத்தினால் அல்லல்படுபவர்கள், இந்த மரத்தை வணங்கினால், தெளிவு பெறுவார்கள். ஸ்ரீமடத்தை இந்த பூதராஜர் காவல் காப்பதாகக் கூறப்படுகிறது.
எல்லாம் வல்ல ஸ்ரீவிஜயீந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனத்தைத் தரிசித்து, அவரின் அருள் பெறுவோம்!

Comments