யோகம்

'யோகம்' என்ற பதத்துக்கு... செயல்திறன், மனச் சம நிலை, வலிந்து நாமே வரவழைத்துக் கொண்ட வருத்தங்களில் இருந்து விடுபடல்... என்று விதம் விதமாக விளக்கம் தருகிறது பகவத் கீதை. தமிழில், 'யோகம்' என்றால் 'பொருந்துதல்' என்று பொருள். மனம் எதை சிந்திக்கிறதோ, அதனுடன் முற்றாகப் பொருந்தி விடுவதே யோகம். இந்த யோகநிலை, கீதை குறிப்பிடும் மனச் சமநிலை உள்ள மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியம். மனச் சமநிலையில்தான் செயல் திறன் சிறக்கும்; துயர மற்ற பேரின்பப் பெருவாழ்வு பிறக்கும். இதுவே கீதை காட்டும் பாதை.
'என்னளவில் கல்வியின் சாரம் மன ஒருமைதான். தகவல்களைச் சேகரிப்பதன்று கல்வியின் நோக்கம். நான் மீண்டும் படிக்க நேர்ந்
தால், ஒருபோதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன்' என்றார் சுவாமி விவேகானந்தர். மன ஒருமைப்பாட்டின் மூலம் மலையைக் கூட அணு அணுவாக உடைத்து எறிய முடியும் என்பது அவர் நம்பிக்கை. மன ஒருமைதான் யோகத்தின் அடிநாதம். யோகம் பயின்று விட்டால் இன்பம் தரும் மயக்கமும் துன்பம் தரும் கலக்கமும் இல்லாமல் போய்விடும் என் கிறது பகவத் கீதை.

ஓசை வரும் திசையில் சிந்தையைச் செலுத்தி மான் ஓடாமல் வேடனிடம் பிடிபடும். பெண் யானையின் ஸ்பரிசத்தில் ஆண் யானை மயங்கி, மறைக்கப்பட்ட பள்ளத்தில் விழும். விளக்கின் ஒளியைக் கண்டு விரைந்து வரும் விட்டில் பூச்சி அதில் விழுந்து கருகும். சுவையில் மயங்கும் மீன், தூண்டிலில் அகப்படும். பூவின் மணத்தில் கவர்ந்து இழுக்கப்படும் வண்டு, அந்தப் பூவின் இதழ்கள் குவியும்போது அதற்குள் சிறைப்பட்டு மாளும்! ஐந்து புலன்களில் ஒவ்வொன்றின் ஆசையாலும் மான், யானை, விட்டில், மீன், வண்டு ஆகியவை அழிகின்றன. மனித இனமோ ஐந்து புலன்களாலும் மரணத்தைத் தேடிக் கொள்கிறது. இதனால்தான் நம் ஐந்து புலன்களையும் மரணதேவனின் இருப்பிடங் களான 'பஞ்சத்வம்' என்கிறது விவேக சூடாமணி. நம் புலன்களை ஆட்டுவிப்பது நமக்குள் இருக்கும் அசுர மனம். அந்த மனத்தை அங்கும் இங்கும் அலைய விடாமல், ஒரு நிலையில் பொருந்தச் செய்வதே யோகம்.



ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள், கங்கை நதிக் கரையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரைத் தேடி யோகி ஒருவர் வந்து சேர்ந்தார். ஆணவம் மிகுந்தவர் அந்த யோகி. பரமஹம்சரிடம், ''என்னைப் போல் கங்கை நீரின் மேல் நடந்து உங்களால் கரையைக் கடக்க முடியுமா?'' என்று கேட்டார். ''நீர் மேல் நடக்கும் யோகத்தை எவ்வளவு காலம் பயின்றீர்கள்?'' என்று வினவினார் பரமஹம்சர். ''இமயத்தில் 18 ஆண்டுகள் நோன்பிருந்து, கடும் யோகாசனம் பயின்று, இந்த ஸித்தி கைவரப் பெற்றேன். உங்களால் நீரில் நடக்க இயலுமா?'' என்று பெருமிதத் துடன் கேட்டார் யோகி.அவரைப் பார்த்து புன்னகைத்தார் பரமஹம்சர். ''அப்பனே, அந்த அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கங்கையின் அக்கரைக்கு செல்ல விரும்பினால் படகுக்காரனிடம் இரண்டு பைசா கொடுத்தால் போதும். அவன், என்னை அக்கரையில் கொண்டு போய் விடுவான். 18 ஆண்டுகளை வீணாக்கி நீ சம்பாதித்த யோக சக்தி, இரண்டு பைசாவுக்குத்தான் சமம். வேண் டாத இந்த விளையாட்டில் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை!'' என்றார்.


நாம் எந்தச் செயலை செய்தா லும் அதில் சிரத்தையுடன் மனதை செலுத்தி, முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். 'எப்போதெல்லாம் மனம் நிலையற்று அலைகிறதோ, அப்போது மனதை ஆத்மாவின் வசத்தில் நிலைநிறுத்த வேண்டும்' என்று கீதையில் வழிகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர். 'யோகி தனியான இடம் தேடி அமர்ந்து, தன் மனதை வெல்ல வேண்டும்' என்று பகவத் கீதை பாடம் சொல்கிறது. 'தனியாக இருந்துதான் சுகத்தை அனுபவிக்க வேண்டும்' என்று போதிக்கும் ஆதிசங்கரர், 'ஏகாந்தே சுகம் ஆஸ்யதாம்' என்றார். குடும்ப வாழ்க்கையின் சந்தடியில் உழலும் சாதாரண மனிதர்கள், தனிமையை எங்கே போய் தேடுவது? எங்கும் போக வேண்டாம். இருக்கும் இடத்திலேயே சிறிது நேரம் சிந்தையை நிலைநிறுத்த, நம் முன் னோர்கள் அனுபவத்தில் கண்டு தெளிந்து நமக்கு வழங்கிச் சென்ற வரம்தான் தியானம்.
'குதிரைகள் கடிவாளம் பூட்டப்படாவிடில், கண்ட திசையிலும் ஓடும். அடங்காத குதிரைகளால் ஆபத்து கூட நேரும். தேரில் உள்ளவரை கீழே விழச் செய்து மரணத்தில் தள்ளும். புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால், காலப்போக்கில் அவை நம் உடலையும் உயிரையும் அழித்து விடும். புலன்களை வசப்படுத்த முதலில் மனத்தை வசப்படுத்த வேண்டும்' என்கிறது விதுரநீதி. மனத்தை வசப்படுத்துபவனே யோகி. ஒரே நாளில், நாம் யோகியாக மாற முடியாது. மனம் செயலில் பொருந்தும் வரை தியானம் பழக வேண்டும்.

'புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி நிற்கக் கற்பதற்கு முன்பு தடுமாறிப் பல தடவை கீழே விழுகிறது. அதேபோல் ஆத்ம சாதனத்திலும் வெற்றி அடைவதற்கு முன்னால் அடிக்கடி தோல்விகள் நேரிடும்' என்றார் பரம ஹம்சர்.

நம் மனங்களை ஒருநிலைப்படுத்தி ஒவ்வொருவரும் கர்மயோகிகளாக இந்த மண்ணில் நல்ல வண்ணம் வலம் வர முடியும். தனது தொழில் எதுவோ, அதைச் செய்வது கர்மம். அதை மன ஒருமையுடன் சிரத்தை குறையாமல் செய்வதுதான் கர்ம யோகம். செய்யும் கர்மத்தை இறை வனுக்காகவும் குடும்பத்துக்காகவும் இரண்டாகப் பிரித்துச் செய்ய வேண்டியதில்லை. தெய்வீகம், லௌகீகம் என்று பகவத் கீதை கர்மத்தைப் பேதப்படுத்தவில்லை. உயர்ந்தது- தாழ்ந்தது என்று, செய்யும் தொழிலை அது சிறுமைப்படுத்தவும் இல்லை. தான் செய்யும் செயல் அனைத்தும் ஈசனுடையது என்ற இறையனுபவத்தில் பொருந்திவிடுவதே உண்மையான யோகம்.

செய்யும் செயல் எதுவாயினும் அது இறைவனுக் காகச் செய்வது என்ற எண்ணம் கனிந்து விட்டால், பொருள்களின் மீது பற்று தானாகவே கழன்று விடும். சுவாமி சிவானந்தர் ஒரு கதை சொல்வார்.
ஞானி ஒருவரிடம் வந்த செருப்பு ஒன்று, அவரிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்தியது. 'வணக்கத்துக்குரிய ஞானியே! என் பரிதாப நிலை யைக் கேளுங்கள். நான், என் எஜமானரை இரவும் பகலும்... அவரின் கால்களை கல்லும் முள்ளும் காயப்படுத்தாமல் காக்கிறேன். அவரின் உள்ளங் கால்களில் அழுக்குப் படியாமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அந்த நன்றியற்ற மனிதர், என்னை எப்போதும் கதவுக்கு வெளியே விட்டு விடுகிறார். இந்தஅவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' என்று கூறி அழுதது.
இதைக் கேட்ட ஞானி, ''காலணியே! நீ கர்ம யோகத்தில் சிறந்து விளங்குகிறாய். உன் சுயநலத்தைத் தியாகம் செய்து விட்டு, எஜமானருக்கு தொண்டு செய்கிறாய். அவரின் பாதத்தை நீ தாங்குவதன் மூலம் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறாய். நீ தியாகத்தின் திருவுருவம். ஒரு கர்மயோகி தனது பணியையே தெய்வ வழிபாடாகக் கருதிச் செய்ய வேண்டும். கைம்மாறாக எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இறைவனே எல்லா வடிவங்களிலும் இருக்கிறார். எல்லாப் பணிகளையும் இறைவன் பணியாகக் கருகிச் செய்தால், பாராட்டை எதிர்பார்க்கத் தோன்றாது. மதிப்பு- அவமதிப்பு, இன்பம்- துன்பம், லாபம்- நஷ்டம் ஆகியவற்றை சமமாகக் கருதிச் செயல்படுவதே சிறந்த கர்ம யோகம்'' என்றார்.
தேவலர் என்ற பிரம்ம ரிஷியின் மகளான சுவர்ச்சலை மணப் பருவம் அடைந்தாள். வேத நெறியிலும் வாழ்க்கை ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் ஓர் ஆண்மகனை அவளுக்கு நாயகனாக்க விரும்பினார் தேவலர். தந்தையின் மனம் அறிந்த சுவர்ச்சலை, ''குருடும், குருடு இல்லாதவருமான ஒருவரையே நான் மணக்க விரும்புகிறேன்'' என்றாள். தேவலர் திகைத்தார். 'ஒரே நேரத்தில் குருடாகவும் குருடற்றவனாகவும் யார் இருப்பான்? அவனை எங்கே தேடுவது?' என்று யோசித்தார். சுவர்ச்சலை வேண்டியபடி ஒருவனும் வராததால், திருமணம் நடக்காமலே காலம் கடந்தது. ஒரு நாள் உத்தாலகரின் மகன் சுவேதகேது, தேவல ரிடம் முறைப்படி பெண் கேட்டு நின்றான். தேவலர் தன் மகளின் நிபந்தனையைத் தெரிவித்தார்.


சுவர்ச்சலையிடம் சென்ற சுவேதகேது, ''பெண்ணே, உன் நிபந்தனைப்படி நான் குருடும் குருடு அல்லாதவனுமாக இருக்கிறேன். எந்தக் கண்ணால் மனம் நினைக்கிறதோ, புத்தி உண்மையை அறி கிறதோ, உலகம் வசப்படுகிறதோ, அந்த ஞானக் கண் எனக்கு இல்லாததால் நானும் ஒரு வகையில் குருடனே! சாதாரண உலகப் பார்வையில், நாள் தோறும் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்கிறேன். காரியமான பிரபஞ்சத்தை யும், காரணமான பரம்பொருளையும் நெஞ்சில் சிந்தித்த வண்ணம் செயல்படுகிறேன். எல்லாப் பணிகளிலும் நான் கடவுளையே காண்கிறேன். இந்த வகையில் நான் குருடு அல்லாதவனாக இருக் கிறேன்!'' என்றான். சுவர்ச்சலை மகிழ்ச்சியுடன் சுவேதகேதுவுக்கு மாலையிட்டாள். இது அம்புப் படுக்கையில் ஆரோகணித்தபடி தருமனுக்குப் பீஷ்மர் சொன்ன தத்துவக் கதை.


நாம், சுவேதகேதுவைப் போல் எல்லாச் செயல்க ளிலும் இறைவனைக் காணும் உலகப் பார்வை உடையவர்களாக இருந்தால் போதும். நமக்கென்று விதிக்கப்பட்ட பணிகளை இறைப்பணியாய் நினைப்போம். அந்தப் பணிகளில் ஈடுபடும்போது மனத்தை ஒருமுகப்படுத்துவோம். மனம் ஒருமுகப்பட தியானம் பயில்வோம். செயல்களைத் துறப்பது சந்நியாசம். செயல்களின் விளைவுகளைத் துறப்பதே கர்மயோகம். 'ஊருக்கு உழைத்திடல் யோகம். பிறர் நலம் ஓங்கிடுமாறு தன்னை வருத்துதல் யாகம்' என்றான் பாரதி. யோகத்துக்கும் யாகத்துக்கும் பாரதியைப் போல் இலக்கணம் வகுத்தவர் எவரும் இல்லை.

Comments