ஈத்துவக்கும் இன்பம்!

பல வருடங்களுக்கு முன்பு வடநாட்டு யாத்திரையின்போது, ராமகிருஷ்ணமிஷன் மருத்துவமனையில் துறவி ஒருவரைக் கண்டேன். மருத்துவராக விளங்கிய அவர், ஏழை எளிய மக்களின் நோய் தீர்த்து வந்தார். அவருக்கு மிகுந்த வயதாகியிருந்தது.
சக்கர நாற்காலியில் வந்து, இளம் மருத்துவர்களுக்கு அறிவுரையும் வழிகாட்டுதலும் வழங்கிக் கொண்டிருந்தார். அவரிடம், ''தங்களது இந்த உத்தமமான சேவையை பல வருடங்களாகத் செய்து வருகிறீர்கள். தற்போது ஓய்வு எடுத்துக்கொள்ளலாமே?''
என்றேன். அதற்கு அவர், ''நான் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்டே இருக்கிறேன்; அதற்கு திரும்ப வழங்க வேண்டாமா?'' என்றார் முக மலர்ச்சியுடன்!

நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இயற்கை வஞ்சனை இல்லாமல் வாரி வழங்குகிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஆறு, கடல், தாவரங்கள் அனைத்தும் நமக்கு வாழ்வு அளிக்கின்றன. இயற்கை நம்மிடமிருந்து எதையும் கவர்ந்து கொள்ள நினைப்பதில்லை.அபகரிக்கும் எண்ணம் மனிதனுக்கே தோன்றுகிறது.
அடுத்த வேளை உணவை சேமிக்கும் எண்ணம்கூட இல்லாத உயிர்களும் இருக்கின்றன; அடுத்த பத்து தலைமுறைகளுக்கும் சேர்த்து கொள்ளையடிக்கும் மனிதனும் இருக்கிறான். தனது சுயநலத்துக்காக வனங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக்குகிறான் மனிதன். அழகிய பூமியை, நீரை, காற்றை களங்கப்படுத்துவதில் மனித னுக்குத்தான் எத்தனை முனைப்பு? இயற்கை, மனிதனின் ஆசையை நிறைவேற்றி விடுகிறது; பேராசையைக் கண்டே சீறுகிறது.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
- என்கிறார் வள்ளுவர்.
தன்னிடம் உள்ளவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்வது உயர்ந்த குணம். பிறருக்கு நாம் வழங்குவது அதிகமாகவும், பிறரிடமிருந்து நாம் பெறுவது குறைவாகவும் இருக்க வேண்டும். திருவள்ளுவர் ஈகை என்று தனியே அதிகாரமே வகுத்திருக்கிறார். வேதங்களும், 'சிரத்தையுடன் தானம் செய்ய வேண்டும். நிறைய கொடுக்க வேண்டும். அதிகம் கொடுப்பதற்கு இல்லையே என்ற வெட்கத்துடன், அக்கறையுடன் கொடுக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக கொடுக்க வேண்டும்.' என்று அறிவுறுத்துகின்றன.
கொடுப்பது என்பது, தன்முனைப்பை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவோ, அழுது வடிகின்ற குழல் விளக்கில் பெயரை எழுதி வைத்து 'நான் கொடையாளி பார்த்தாயா?' என்று மார்தட்டிக் கொள்வதற்காகவோ அல்ல!
பிறக்கும் போது, உடையின்றி பிறந்தோம். இறந்த பிறகு, எதையும் எடுத்துச் செல்ல முடியாது. இடையில் வாழும் காலத்தில் என்னுடையது என்று இறுக்கிக் கொள்ள எதுவும் இல்லை என்ற அடிப்படை உண்மையை உள்ளத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்.
கொடுப்பதுடன், 'நான் கொடுத்தேன்' என்ற எண்ணத்தை யும் சேர்த்து மறந்துவிடுவதே அழகு. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளிடம் ஒருமுறை, கோயில் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த ஆபரணம் பற்றி குறிப்பிட் டேன். அதற்கு அவர் கூறிய பதில் வியக்க வைத்தது!
''சுவாமிகளே! நாம் யாருக்காவது ஏதாவது கொடுத்தால் அதனை உடனே மறந்துவிட வேண்டும். நமக்கு யாராவது ஏதேனும் கொடுத்தால் அதனைத் தவறாமல் நினைவில் கொள்ள வேண்டும்.'' - எப்பேர்ப்பட்ட அருளுபதேசம்!
பலர், பொருளைக் கொடுத்துவிட்டு, உரிமையை மட்டும் தம்மிடமே வைத்துக் கொள்வர். 'நான் உனக்குக் கொடுத்த பொருளை, நீ வேறு எவருக்கும் கொடுக்கக் கூடாது. அதனை இப்படித்தான் உபயோகிக்க வேண்டும்.' - இந்த சிந்தனை, எதிர்பார்ப்பின் உச்ச கட்டம்! நம் முன்னோர் இதுபோன்று தானம் செய்யச் சொல்லவில்லை. ஹோமம் செய்கையில், இதம் ந மம - 'இது என்னுடையது அல்ல' என்று கூறி, அந்தப் பொருளில் உள்ள உரிமையையும் சேர்த்துக் கொடுத்துவிடவே கற்றுக் கொடுத்திருக்கின்றனர்.
கொடுப்பதில் உள்ள சுகம் கொடுத்துப் பார்த்தவர்களுக்கே விளங்கும். தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறருக்கு கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் தீய அறிவுடையவர்கள், பிறருக்குக் கொடுப்பதில் உள்ள சுகத்தை அறியாரோ? என்று பொருள்படும்படி,
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமைவைத்திழக்கும் வன்க ணவர்? - என்கிறார் திருவள்ளுவர்.
வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியாமல் கொடுக்கும் தானமே சிறந்தது. தன் மனைவிக்கு இறுதிக் கடனைச் செய்ய விறகு கேட்டு வந்த அந்தணருக்கு, தன் அரண்மனையின் சந்தன மரத்தாலான தூணையே பெயர்த்துக் கொடுத்தான் கர்ணன்.
கொடுப்பதில் பணிவு தேவை. ''உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக, சேவைதான் செய்ய முடியும்'' என்றார் சுவாமி விவேகானந்தர்.
எங்கோ நின்றுகொண்டு, சில காசுகளை அள்ளி எறிவதாலேயே ஒருவன் கொடை யாளி ஆகிவிட முடியாது. கொடுப்பதனால் புண்ணியம் பெறுகிறோம்; நம் உள்ளம் தூய்மை பெறுகிறது. கொடுப்பது, நம்மை தெய்வநிலைக்கு உயர்த்தும். எனவே, கொடுப்பதற்கு வாய்ப்பு தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தியபடியே, பணிவுடன் கொடுக்க வேண்டும்.
இருப்பவை அனைத்தும் இறைவனுடைய சொத்தாக இருக்க, நாம் செய்யும் தானங்கள் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளை யாருக்கு உடைக்கும் கதைதான் என்பதை உணர வேண்டும்.
கீதையில் கிருஷ்ணர் தானத்தை சாத்விக தானம், ராஜஸ தானம், தாமஸ தானம் என மூன்றாகப் பிரித்துக் கூறுகிறார். தகுந்த இடத்தில், தகுந்த வேளையில், எதிர்பார்ப்பின்றி, தகுதியுள்ளவருக்கு முறையாக அளித்தல் சாத்விக தானம். பிரதிபலனை எதிர்பார்த்து சிரமத்துடன் கொடுக்கப்படுவது ராஜஸ தானம். தகுதியற்ற இடத்திலும், காலத்திலும், தகுதி அற்றவர்களுக்கு உபசரிப்பு இன்றியும், அவமரியாதையுடனும் கொடுக்கப்படுவது தாமஸ தானம்.
ஈயென இரத்தல் இழிந்தன்றுஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று;கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
- என்கிறது பைந்தமிழ்ப் பாடல் ஒன்று. கொடு என்று ஒருவரிடம் கையேந்துவது இழிவு. இல்லை என்று தர மறுப்பது அதைவிட இழிவானது.
பெற்றுக் கொள்ளுங்கள் என்று கொடுப்பதே உயர்ந்தது; வேண்டாம் என மறுப்பது அதைவிட உயர்ந்தது.
கொடுத்தே பழக்கப்பட்ட கடவுள், மகாபலியிடம் தானம் கேட்கச் செல்லும்போது, பெறுபவரின் நிலையை எண்ணி வாமனராகச் சென்றார் என்பர்.
பெறுபவரது இருப்பிடம் தேடிச் சென்று தானாக வழங்குவது உயர்ந்தது; வீடு தேடி வந்தவர் குறிப்பறிந்து அவர் கேட்கும் முன்னர் வழங்குவது நடுத்தரமானது; கேட்ட பிறகு கொடுப்பது கடைத்தரமானது என்பது நம் பண்பாட்டில் ஊறிய பெரியோர்களது வாக்கு.
தானத்தில் சிறந்தது அன்னதானம். 'வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்கிறார் பாரதியார். அன்னதானத்துக்கு பெயர்போன தேசம் இது. நூறு வருடங்களுக்கு முன், நம் தேசத்தில் ஹோட்டல்களே இல்லை. காரணம், உணவை விற்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. அன்ன சத்திரங்களில் தங்கி, இளைப்பாறி நம் முன்னோர் விருந்தோம்பலில் நனைந்து இமயம் முதல் குமரி வரை நடந்து சென்ற தேசம் இது.
தாகத்துக்கு தண்ணீர் அளித்தல், விசிறி வழங்குதல், ஆடைகள் கொடுத்தல், கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல் என நம் முன்னோரது வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது தானம் எனும் உயர்ந்த பண்பு. நாமும் இயன்றவரை பெரியோர் செய்து வந்த அறங் களை விடாமல் தொடர்வது அவசியம்.
அன்னதானத்தைக் காட்டிலும் மேலானது அறிவுதானம். 'அன்ன யாவினும் புண்ணியம் கோடி- ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்கிறார் பாரதியார். அன்னதானத்தையும் அறிவு தானத்தையும் மிஞ்சியது ஆன்ம தானம். மனிதனுக்கு தன்னைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் மெய்யறிவு அளித்து, அவன் பிறவிப் பெரும்பயனை அடைய உதவும் தானம் இது. இதன் மூலம் மனிதன் நிறைமனிதனாகிறான்!
கடையேழு வள்ளல்களும், தன்னிடம் உள்ள அத்தனை செல்வங்களையும் தகுந்தோருக்கு தானமாக வாரி வழங்கிய அரசர்களும் வாழ்ந்த நாடு இது. 'அரசர்கள் வழங்கலாம், நம்மிடம் எங்கே இருக்கிறது சுவாமி' என்று கேட்பது புரிகிறது. கொடுப்பதற்கு முதல் தேவை மனம்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கொடுப்பது என்று தொடங்கிவிட்டால், அதற்கான வழி தானாகப் பிறக்கும்.
ஆதரவற்றோர் இல்லங்களில் சென்று சேவை செய்வது, அவர்களுடன் நேரத்தை செலவிடுவதுகூட ஓர் உயர்ந்த தானம்தான். நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது. அது ஓர் ஏழைக் குழந்தைக்கு பென்சிலாகவும் இருக்கலாம்; பள்ளிக் கட்டடத்துக்கான நிதியாகவும் இருக்கலாம்.
தானத்தின் சிறப்பை உணருங்கள்; தகுந்தோர்க்கு ஈந்து உவகை அடையுங்கள்! இதுவே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை நெறி!

Comments