மகா சிவராத்திரி

ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் ஜோதி ரூபத்தில் இருந்து, லிங்கமாக வெளிவந்து, சிவபெருமான் அருளிய புண்ணியநாளே மகா சிவராத்திரி எனப்படுகிறது.இந்த நாளில், நடு இரவில் தரிசனம் தருகிறார் பரமேஸ்வரன்.
உலகுக்கு பிரளயம் மிக அவசியம். அப்போது உலகம், சிவபெருமானிடம் ஒடுங்கும். அந்த நாளே சிவராத்திரி. அன்று சிவபெருமானை தவிர வேறு எவரும்- எதுவும் இல்லை. ஆனால், சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மட்டும் உடன் இருப்பதாக ஐதீகம்.
மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் சிவராத்திரி, நாம் நலமுடன் இருப்பதற்காக சிவனையும் சக்தியையும் பூஜிக்க வேண்டிய திருநாள். நமக்காக பார்வதிதேவியும், சிவபெருமானை பூஜித்த இந்த நாளில், நாமும் முறைப்படி விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட... சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

'அன்று இரவு விரதம் இருந்து கண் விழித்து, நான்கு கால பூஜையும் செய்பவருக்கு முக்தி தரவேண்டும்!' என பார்வதி தேவி வேண்டிக் கொள்ள சிவபெருமானும் அவ்வாறே வரம் தந்தாராம். எனவே, சாதாரண தினங்களில் பூஜிப்பதை விட, சிவராத்திரி அன்று செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தரும்.
நந்தி தேவருக்கு, சிவராத்திரியின் மகிமையை சிவபெருமானே உபதேசித்து அருளினார். பின்னர் நந்திதேவர் சிவகணங்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்தார்.
இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, பிரம்மா, விஷ்ணு, பார்வதி, ஆதிசேஷன், சரஸ்வதி ஆகியோர் அனுஷ்டித்துள்ளனர்.
பிரளயத்தின்போது எல்லாம் சிவானாரிடம் ஒடுங்கி விட... எங்கும் இருள் சூழ்ந்தது. அப்போது உலக உயிர்கள் உய்வடையும் பொருட்டு உமாதேவியார், நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை முறைப்படி பூஜித்தாராம். அதன் பலனால் உலகத்தில் மீண்டும் சிருஷ்டி துவங்கியது. இதன் அடிப்படையிலேயே சிவராத்திரி அன்று சிவாலயங்களில் நான்கு ஜாம பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது, சிவலிங்கத்துக்கு ருத்ர ஜபத்துடன் நடைபெறும் அபிஷேகங்களை காண கண்கோடி வேண்டும். சிவ பூஜையை முறைப்படி கற்றவர்கள், தமது இல்லங்களிலும் லிங்கத்துக்கு (நான்கு காலமும்) அபிஷேக ஆராதனைகள் புரியலாம்.
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், முதல் நாளே சிவபூஜைக்கு வேண்டியவற்றை சேகரித்துக் கொண்டு, விடியற்காலையில் எழுந்து நித்தியக் கடன்களை முடித்து, நீராடி, சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். அருட் பாடல்களைப் பாடி, சிவபுராணம் பாராயணம் செய்து உண்ணா நோன்பு இருக்க வேண்டும். இரவில் தூங்காமல் சிவ நாமம் கூறி, சிவ கதைகளைக் கேட்டு நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்தால், சிவனருளால் அனைத்து நலனும், இறந்த பின் முக்தியும் கிடைக்கும்.
சிவராத்திரி தின பூஜையைக் கண்ட அரக்கர்களும் 'சிவ சிவ' என்று கூறி, லிங்கத்தின் மீது வில்வ இலை களைப் போட்டதால், பாவங்கள் அகன்று நற்கதி அடைந்ததாக புராணங்கள் கூறும்.
மாசி மாதத்தில்தான், ஈசனின் விசேஷத் திருநாளான 'மகா சிவராத்திரி' அமையப் பெற்றுள்ளது. தட்சிணாயன காலத்தில் கோகுலாஷ்டமியில், நள்ளிரவில் உலகை ரட்சிக்க அவதரித்தார் மகாவிஷ்ணு. அடுத்து உத்தராயண காலத்தில் மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி அன்று அதே நள்ளிரவில், உலகை உய்விக்க 'லிங்கோத்பவ மூர்த்தி'யாக அவதரித்தார் சிவபெருமான்!
ஹரியும் ஹரனும் ஒன்றுக்குள் ஒன்றான கடவுளர் என்பதற்கு இதைவிட வேறு விளக்கம் வேண்டுமோ?
மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி தவிர, ஓராண்டில் கடைப்பிடிக்க வேண்டிய இன்னும் சில சிவராத்திரிகளையும் அறிந்து கொள்வோம்.
நித்ய சிவராத்திரி: பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறைச் சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறைச் சதுர்த்தசியே மாத சிவராத்திரி.
பட்ச சிவராத்திரி: தை மாதத்தில், தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து சிவபூஜை செய்தல் பட்ச சிவராத்திரி.
யோக சிவராத்திரி: சோம வாரமும் அமாவாசையும் அறுபது நாழிகை இருந்தால், அன்றைய தினம் யோக சிவராத்திரி.
மகா சிவராத்திரி நாளில் நடந்தவை!
1. ஈசன், லிங்கத்தில் பிரசன்னமான நாள்.
2. அடி- முடி தேடிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு சிவனார் காட்சி தந்த நாள்.
3. பார்வதி வழிபட்டு அர்த்தநாரியான நாள்.
4. பாற்கடல் கடையும்போது வெளிப் பட்ட விஷத்தை சிவனார் உண்ண... அதை விழுங்கா வண்ணம் தடுத்தார் பார்வதிதேவி. இதனால், நீலகண்டன் நஞ்சுண்டன் ஆகிய பெயர்களை, சிவனார் பெற்ற நாள். (இப்படி விஷம் உண்ட மயக்கம் தீர சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் பள்ளி கொண்டார். இப்படிப்பட்ட காட்சியை கருவறையிலேயே காணலாம். எங்கு தெரியுமா? ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற ஊரில்).
5. அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் பெற்ற நாள்.
6. பகீரதன் ஒற்றைக் காலில் கடும் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள் (இந்த தவக் கோலத்தை புடைப்புச் சிற்பமாக மாமல்லபுரத்தில் காணலாம்)
7. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த நாள் (திருக்கடையூர்).
8. கண்ணப்பன் தன் கண்களை சிவனுக்குக் கொடுத்த நாள் (காளஹஸ்தி)
9. மகா பிரளயம் உண்டானபோது மீண் டும் உலகைப் படைக்க பார்வதிதேவி சிவ பெருமானை நோக்கி தவம் இருந்த திருநாள்.
- இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது.

சிவராத்திரியில் செய்ய வேண்டிய
அபிஷேக - ஆராதனைகள்!
முதல் காலம்: பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனக் காப்பு, வில்வம், தாமரை மலர்களால் அலங்காரம்- அர்ச்சனை, பச்சைப் பயிறு பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம்.
இரண்டாம் காலம்: சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரச பஞ்சாமிர்த அபிஷேகம். பச்சைக் கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம், வில்வ அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜுர் வேத பாராயணம்.
மூன்றாம் காலம்: தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம்.
நான்காம் காலம்: கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்தம் ஆகிய மலர்களால் அலங்காரம் மற்றும் அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத பாராயணம்.
-

Comments