வங்கத்து சரஸ்வதி

கொல்கத்தாவிலிருந்து சுமார் இரண்டு மணி நேரப் பயணத் தொலைவிலிருக்கும் அரிய கலைக்கோயில், ஹன்ஸேஸ்வரி திருக்கோயில்.பான்ஸ் பெரியா என்ற மூங்கில் காட்டுப் பகுதியில் உள்ளது இந்தக் கோயில்.


17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங்கதேவ் என்பவர் பலமொழிகளில் புலமைபெற்றவர். மருத்துவ விஞ்ஞானத்தில் “உத்திஷ்தந்த்ரா’ என்ற வங்கநூலை இயற்றி மருத்துவ உலகிற்கு ஓர் அரிய பொக்கிஷத்தை அளித்தவர். அம்மன் பக்தரான இவர் 1788-ல் அம்பிக்கைக்கு ஒரு கோயிலை உருவாக்கினார். அதுவே ஹன்ஸேஸ்வரி கோயில் என பிரசித்திபெற்றது. மெய்ஞானத்தை உணர்த்தும் நோக்கில் கட்டப்பட்டதுதான் இந்த ஆலயம் இக்கோயிலிலுள்ள ஹன்ஸேஸ்வரி சிலை குண்டலினி சக்தியை உணர்த்துகிறது.


சயனத்திலிருக்கும் மகாதேவனுடைய நெஞ்சிலிருந்து உருவான ஆயிரம் இதழ் தாமரையின் மீது தேவியானவள் ஒற்றைகாலில் நின்றபடி தவமியற்றும் அற்புத அழகுக் கோலம் 250 வருடங்கள் பழமையான வைரம் பாய்ந்த வேப்பமரக்கட்டையால் உருவான அம்மன் சிலை. தேவியின் வலதுபக்கத்தில் மஹிஷாசுரமர்த்தினி, இடப்பக்கம் ராதாகிருஷ்ணர் சிலைகள் உள்ளன.


துர்க்கா பூஜை (நவராத்திரி), தீபாவளி மற்றும் செவ்வாய், சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. புதிதாகப் பள்ளியில் சேரும் குழந்தைகளை இங்கு அழைத்துவந்து தேவிக்கு பூஜை செய்த பிறகே பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கொல்கத்தா நகரப்பள்ளியிலிருந்து குழுக்களாக மாணவர்கள் வந்து தியானம் பழகுவதைக் காணலாம். ஹன்ஸேஸ்வரி முன் அமர்ந்து மன ஒருமுகப் பயிற்சி பெறும் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் பெருமிதத்திற்குரிய வெற்றிகளைப் பெறுகிறார்கள் என்று அறியும்போது ஹன்ஸேஸ்வரி தேவி வங்கத்து சரஸ்வதியாகவே அருள்கிறாள் என்ற மகிமை புரிகிறது.

Comments