ஐராவதத்தின் சாபம் போக்கிய ஆனையூர்!


துரை- உசிலம்பட்டி சாலையில், பொட்டலுபட்டி விலக்கில் இருந்து கட்டகருப்பன்பட்டி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனையூர். இங்குள்ள ஸ்ரீஐராவதீஸ் வரர் ஆலயம் புராணச் சிறப்பு மிக்கது.
ஆதியில் இந்தத் தலத்துக்கு, 'திருக்குறுமுல்லூர்' என்றும், சுயம்பு மூர்த்தியான
இங்குள்ள மூலவருக்கு, 'ஸ்ரீஅக்னீஸ்வரமுடையார்' என்றும் பெயர். பிறகு எப்படி இவர், ஐராவதீஸ்வரர் ஆனார்? தலத்தின் பெயர் ஆனையூர் ஆனது?
ஒரு முறை, பெரும் கோபக்காரரான துர்வாச முனிவர் சிவபூஜை பிரசாதத்தை, இந்திரனுக்கு அளித்தார். அப்போது, தன் வாகனமான ஐராவதத்தின் (வெள்ளை யானை) மீது அமர்ந்திருந்த இந்திரன், சிவ பிரசாதத்தை அலட்சியத்துடன் வாங்கி, ஐராவதத்தின் தலையில் வைத்தான். அந்தபிரசாதம் தரையில் விழ... ஐராவத யானை, தன் காலால் அதை மிதித்தது. இதனால் சினந்த துர்வாசர், ''சிவ பிரசாதத்தை மதிக்காத உன் பதவி போகட்டும். ஐராவதம், காட்டு யானை ஆகட்டும்!'' என சபித்தார். ஐராவதம், தவறை உணர்ந்தது. சாப விமோசனம் வேண்டியது. மனம் இரங்கிய துர்வாசர், ''பூலோகத்தில் கடம்பவனம் சென்று, அங்கு சுயம்புவாக எழுந் தருளி இருக்கும் அக்னீஸ்வரமுடையாரை வணங்கி வழிபடு. விமோசனம் கிடைக்கும்!'' என்று அருளினார்.
சாபத்தின்படி காட்டு யானையாகப் பிறந்த ஐராவதம், கடம்பவனமாகிய திருக்குறுமுல்லூர் வந்து, ஸ்ரீஅக்னீஸ்வர முடையாரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. இப்படி, வெள்ளை யானையாகிய ஐராவதம் வழிபட்டதால் இங்குள்ள ஈசன், ஸ்ரீஐராவதீஸ்வரர் என்று திருநாமம் கொண் டார். தலமும் 'ஆனையூர்' ஆனது.
பாண்டிய மன்னர்கள், சோழ அரசர் களான ராஜராஜன், ராஜேந்திரன் மற்றும் நாயக்க அரசர்கள் என்று பலரும் இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளதாக கல் வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மேற்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கோயில். இதன் தெற்கே குளமும், வடக்கில் கண்மாய் ஒன்றும் அமைந்துள்ளன. கோயிலுக்குள் நுழைகிறோம். முன்மண்டபம் தாண்டியதும் கருவறை வாசலின் இருபுறமும் துவார பாலகர்கள். தவிர, விநாயகர் மற்றும் முருகன். கருவறைக்குள் சுயம்பு லிங்கத் திருமேனியராக திருவருள் புரிகிறார் ஸ்ரீஐராவதீஸ்வரர். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. உள்ளே, அழகே உருவாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீமீனாட்சியம்மன்.
பரிவார தெய்வங்களாக பைரவர், இரட்டை விநாயகர்கள், சண்டிகேஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, நந்திதேவர், ஜேஷ்டாதேவி மற்றும் அஞ்சனா தேவி- ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். கோயிலின் வடக்கு மூலையில் கிணறு ஒன்று உள்ளது. அருகில் மடப்பள்ளி. பல நூற்றாண்டுகளாக சிறப்புடன் திகழ்ந்தது இந்தக் கோயில். அதன் பின்னர், அந்நியர்களது படையெடுப்பால் பராமரிப்பு குறைந்து போனது. கடந்த 2001-ஆம் ஆண்டு பிரதோஷ கமிட்டி அமைக் கப்பட்டு பராமரிப்புப் பணிகளும் பிரதோஷ வழிபாடு களும் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது இந்தக் கோயில். நலிவடைந்த கோயில்கள் பராமரிப்புத் திட்டத்தின் கீழ், பழநி ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் இருந்து போதிய நிதி வழங்கப்பட்டு இந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு, கடந்த 20.1.08 அன்று கும்பாபிஷே கம் நடைபெற்றது. ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று, ஸ்ரீஐராவதீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் ஸ்ரீமீனாட்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தின் முதல் வாரத்திலும் ஆடி மாதம் கடைசி வாரத்திலும் பிரதோஷ வழிபாட்டின்போது சூரியக் கதிர்கள், ஸ்ரீஐராவதீஸ்வரர் மீது விழுந்து பூஜிப்பது, கண்கொள்ளாக் காட்சி!

Comments