பழைய பாடல் இது. பள்ளிக்கூட நாட்களில், இந்தப் பாடலுக்கு அபிநயம் பிடிக்க முயற்சி செய்த நினைவு களுடன், திருச்சி உறையூரில் நிற்கிறோம்.கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு
இன்று, திருச்சி நகரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் உறையூரின் பெருமைகள் ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல?!
வீராதித்த சோழ மன்னரின் யானையை, கோழி ஒன்று எதிர்த்து தனது மூக்கால் (அலகால்) குத்திக் காயப்படுத்த, அத்தகு வீரம் நோக்கி, 'கோழி' என்றும் 'கோழியூர்' என்றும் 'மூக்கீச்வரம்' (மூக்கால் குத்தியதால்) என்றும் பெயர் பெற்ற ஊர்!
அறம் தங்கி ஆளுமை கொள்வதால், 'ஊரெனப்படுவது உறையூர்' எனும் உயர்வுத் தொடர் உருவான பதி. 'உறந்தை' என்று சங்கப் பாடல்களும், 'மூக்கீச்சரம்' என்று தேவாரமும் குறிக்கும் தலம்; சோழ மன்னர்களின் முதல் தலைநகரம்!
கரிகால் பெருவளத்தான், தனது தலை நகரமாக ஆக்கிக் கொண்டதுடன், உயர் மாடங்களும் மாளிகைகளும் கட்டி இதைப் பெருநகரமாக நிறுவினார் என்பதை, 'பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக் கோயிலொடு குடிநிறீஇ வாயிலொடு புழையமைத்து ஞாயில் தொறும் புதைநிறீஇ' என்று பழந்தமிழ் நூலான பட்டினப்பாலை குறிப்பிடும் நகர்!
'அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத் திறத்தானும் வரம் தரும் இவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே' என்று சிலப்பதிகாரம் காட்டுவதால், பெருங்கிள்ளி மன்னர், பத்தினிக் கோயில் (கண்ணகி கோயில்) எழுப்பிய பெருமைக்குரிய ஊர்!
புலவர் பிசிராந்தையாரின் குன்றா நட்பைப் பெற்ற கோப்பெருஞ் சோழர் ஆட்சி நடத்திய நற்பதி! 'அறங்கெழு நல்லவை உறந்தையன்ன' என்று சங்க இலக்கியம் காட்டு வதால், நீதிமன்றமான 'அறங்கூறு அவயம்' அமைந்திருந்த இடம்; மூவேந்தர் வழிபட்ட திருத் தலம்; கோச்செங்கண் சோழனும் புகழ்ச் சோழனும் முக்தி அடைந்த பேரூர்!
'செவ்வழி' எனும் பண்ணில் சம்பந்தர் பதிகம் பாடிய பகுதி; திருப்பாணாழ்வார் அவதரித்த புண்ணிய பூமி. நந்த சோழ மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி, சாட்சாத் மகாலட்சுமியே அவர் மகள் கமலவல்லியாகத் தாமரை மலரில் அவதரித்து, திருவரங்கத்து நம் பெருமாளை மணந்து கொள்ளும் திருத்தலம்; 108-ல் ஒன்றான திவ்வியதேசம்!
திருப்புகழ் வைப்புத் தலம். சங்ககாலப் புலவர் முதல் சமீபகாலப் புலவர் வரை பலருக்கும் கலைமகளின் கடாட்சத்தைக் கொட்டிக் கொடுத்த திரு ஊர்! திரிசிர புரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தல புராணமும் உறையூர்க் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழும் பாடியருளிய பழம்பதி!
- இப்படி அள்ள அள்ளக் குறையாத பெருமைகளைக் கொண்ட திருத்தலம் உறையூர். காவிரி தென்கரைத் தலமான உறையூர், தற்போது, திருச்சி நகரத்தின் பகுதியாக ஐக்கியப்பட்டு விளங்குகிறது; வணிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அருள்மிகு காந்திமதியம்மன் உடனாய அருள்மிகு ஐவண்ணநாதர் உறை திருக்கோயிலை அடைகிறோம். மக்கள் நெரிசலும் ஆரவாரமுமாகக் கலகலத்துக் கொண்டிருக்கும் கடைவீதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம். கிழக்குப் பிரதான வாயில். உள்ளே சென்றால் மண்டபம் ஒன்றில் வீற்றிருக்கும் பெரிய நந்தி. நமக்கு இடப் பக்கத்தில் சிவ தீர்த்தம். இதில் நீராடுவது வெகு சிறப்பு.
திருப்பராய்த்துறை எனும் ஊரில், அன்பர் ஒருவர் வாழ்ந்தாராம். ஒரு முறை, சிவன் திருநீற்றைக் கையில் பெற்று, அதை இட்டுக் கொள்ளாமல், வாயால் ஊதித் தள்ளினராம். இந்த பாவத்துக்காகக் காட்டுப் பன்றியாகப் பிறந்தாராம். தனது சாபம் நீங்கும் பொருட்டு, பல இடங்களிலும் அலைந்து திரிந்து, இறுதியில், வில்வ வனமாக விளங்கிய இந்தப் பகுதியைச் சேர்ந்தாராம் (காட்டுப் பன்றி சேர்ந்தது). அங்கு, வேடர்கள் துரத்த அவர்களிடமிருந்து தப்பி ஓடிய அந்தப் பன்றி, சிவ தீர்த்தத்தில் வீழ்ந்தது. தீர்த்தத் துளி பட்டதுமே சாபம் நீங்கப் பெற்று முக்தியும் அடைந்தது.
சிவ தீர்த்தத்தின் படிகளில் இறங்கும்போதே, அதன் சிறப்பை விளக்கக்கூடிய சிற்பம் செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
சிவ தீர்த்தத்தை வழிபட்டு, நந்தி தேவரிடம் அனுமதி பெற்று, உள் கோபுரம் வழியாக நுழைய, நேரே அருள்மிகு ஐவண்ணநாதர் தெரிகிறார்.
- திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய பதிகம், மூவேந்தர்களின் செங்கோலுக்கும் மிக்க செங்கோல் கொண்டவராக, ஐவண்ண நாதரைப் பாராட்டுகிறது. அண்டமும் பிண்டமும் அனைத்தும் ஆளும் ஐயனைப் பார்த்துக் கொண்டே, உள் பிராகார வலத்தைத் தொடங்குவோமா?அன்னம் அன்ன நடைச் சாயலாளடு அழகெய்தவேமின்னையன்ன சடைக் கங்கையால் மேவிய காரணம்தென்னன் கோழி எழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்மன்னன் மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றது ஓர்மாயமே
முடியுடைவேந்தர் மூவருமே வழிபட்ட கோயில் அல்லவா! பிராகாரத் திருச்சுற்று, மண்டபங்கள் மற்றும் தூண்கள் என அனைத்துமே பெரிதாக உள்ளன.
தெற்கத்திக் கோயில்களுக்கே உரிய முறையில், நடுவில் உள்ள சந்நிதியும் மண்டபங்களும் சற்றே உயரத்தில் அமைய, பிராகாரம் சற்றே தாழ்வாக அமைந்துள்ளது. கிழக்குத் திருச்சுற்றில் வலத்தைத் தொடங்குகிறோம். தென்கிழக்குப் பகுதியில் மடப்பள்ளி. தெற்குச் சுற்றில், புகழ்ச் சோழர், சைவ நால்வர் மற்றும் உதங்க முனிவர் ஆகியோரது மூர்த்தங்கள்.
புகழ்ச்சோழர் என்பவர், அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்; உறையூரில் ஆட்சி நடத்திய சோழ மன்னருள் ஒருவர். இவரது வரலாற்றை சேக்கிழார் பெருமான், பெரிய புராணத் தில் பாடுகிறார். நல்லாட்சி செய்த புகழ்ச்சோழர் சில காலம், கரூர்
சென்று தங்கியிருந்தார். கரூரில், சிவகாமியாண்டார் எனும் அடியார் வாழ்ந்து வந்தார். மலர்களால் மாலைகள் கட்டி, இறைவன் ஆனிலையப்பருக்குக் காணிக்கையாக்குவது சிவகாமியாண்டா ரது வழக்கம்.
ஒரு நாள், சிவகாமியாண்டார் மாலைகளை எடுத்துச் சென்றபோது, அவரிடமிருந்து மாலை களைப் பறித்துத் தூவியது, அரசரின் பட்டத்து யானை. இதைக் கண்ட எறிபத்தர் எனும் அடியார் (இவரும் அறுபத்துமூவருள் ஒருவரே), பட்டத்து யானை என்றும் பாராமல், அதனைக் கொன்றார். செய்தி, அரசரான புகழ்ச்சோழரை எட்டியது. 'பட்டத்து யானை அரசருக்குச் சமானம்! அதற்கு ஊறு செய்த எறிபத்தர் என்ன ஆவாரோ?' என்று எல்லோரும் தவிக்க, அங்கு வந்த புகழ்ச்சோழர், எறிபத்தரின் அடிபணிந்தார். யானையைக் கட்டுமீறி வளர்த்திருந்த தம்மையும் கொல்லச் சொன்னார்! புகழ்ச்சோழரைப் பற்றி வரலாற்று ரீதியாகச் சரியான குறிப்புகள் கிடைக்கவில்லை.
பெரிய புராணத்திலேயே மற்றுமொரு தகவ லும் உண்டு. போரில், தம் படைவீரர்கள் வீழ்த்தியவற்றுள், சடாமுடியுடன் தலையன்று இருந்ததைக் கண்டார் சோழர். சிவனடியாராம் சடாமுடியார் ஒருவர் போரில் கொல்லப்படும் அளவுக்குத் தாம் இருந்ததை எண்ணி வருந்தினார். நெருப்பு மூட்டினார். மாணிக்கத் தட்டில், சடாமுடித் தலையை வைத்து, அதைத் தன் தலை மீது தாங்கினார். உடலெல்லாம் நீறு பூசி, நெருப்பை வலம் வந்து, ஐந்தெழுத்தை ஓதிக் கொண்டே நெருப்பில் இறங்கினார்!
புகழ்ச்சோழர் வரலாற்றைப் பாடுகிற சேக்கிழார், உறையூரைப் பற்றி எட்டு பாடல்கள் பாடுகிறார். 'உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊர் ஆம் உறையூர்' எனக் குறிப்பிட்டு, அங்கு மாளிகை வரிசைகள் இருந்ததையும் ஆகாயத்தையே வெல்லுகிற ஆவண வீதிகள் (கடை வீதிகள்) செழித்ததையும் பாற்கடலால் தேவலோகம் சூழப் பட்டால் எப்படியிருக்குமோ... அப்படி, அகழியால் சூழப்பட்டு உறையூர் விளங்கியதையும் விரிவாகப் பேசுகிறார்.
கோயில் பிராகாரத்தையும் மண்டபங்களையும் பார்க்கும்போது, சேக்கிழார் சொல்லும் பெருமை, லேசாகப் புரிவதுபோல் இருக்கிறது. பிராகார வலத்தைத் தொடர்கிறோம். தெற்குச் சுற்றில் தொடர்ந்து அறுபத்துமூவர். தென்மேற்கு மூலை யில் விநாயகர் சந்நிதி. அடுத்து முருகர், விநாயகர், கிருஷ்ணர் என்று நிறைய சிற்பங்கள். ஆனால், சந்நிதி அமைப்பைக் காணோம். 'சுற்று வட்டாரக் கோயில்களிலிருந்து கொண்டு வந்து மக்கள் வைத் தவை' என்று விளக்கினார் உள்ளூர் பக்தர்.
மேற்குச் சுற்றின் நடுநாயகமாக வள்ளி- தெய்வானை உடனாய முருகப்பெருமான், நான்கு திருக்கரங்களோடும் மயிலோடும் காட்சி தரும் சந்நிதி. அடுத்து மகாலட்சுமி சந்நிதி. அதையும் அடுத்து, வடமேற்குப் பகுதியில் சரஸ்வதி சந்நிதி.
வடக்குத் திருச்சுற்றில் திரும்பிவர, அலங்கார மண்டபமும், மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்ப, வாகனங்களும் உள்ளன. பிராகார வலம் வரும்போது, அம்பாள் சந்நிதியையும் சேர்த்து வலம் வந்து விடுகிறோம்.
வலத்தை நிறைவு செய்து, இரண்டு படிகள் ஏறி மகா மண்டபப் பகுதியை அடைய, நமக்கு வலப் பக்கத்தில், தெற்கு முகமான அம்பாள் சந்நிதி. அருகிலேயே தெற்கு முகமான பள்ளியறை. மகா மண்டபமும் முகப்பு மண்டபமும் கடந்து உள்ளே சென்றால், அருள்மிகு ஐவண்ணநாதர்; அதாவது, பஞ்சவர்ணேஸ்வரர்.
பிரம்மதேவன் இங்கு வந்து வணங்கிய போது, ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் இறைவன் காட்சி கொடுத்தாராம். உதங்க முனிவருக்கும் அப்படியே ஐந்து வண்ணங்களில் தோற்றம் தந்தாராம். காலை யில்- ரத்தின லிங்கமாகச் செந்நிறத்திலும், உச்சிப்போதில்- ஸ்படிக லிங்கமாக நிறமற்ற தூய்மையிலும், மதியம்- தங்க லிங்கமாகப் பொன்மஞ்சளிலும், இரவில்- வைர லிங்கமாகப் பன்முகம் காட்டும் வெண்மையிலும், நடுநிசியில்- சித்திர லிங்கமாக வட்டமிடும் வண்ணங்களோடும் இறைவன் காட்சி தந்தார். எண்ணமெல்லாம் திண்ணமாய் இறைவன்பால் செலுத்தினால், வண்ணமெல்லாம் அவர் வடிவாகக் காணலாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
கருவறைக்குள் பார்வையைச் செலுத்தினால், அட... என்ன வியப்பு! ஐந்து வண்ணங்களில் தரி சனம் கொடுத்தவர், இப்போது உள்ளங்கை அளவே கொண்டவராக, சின்னஞ் சிறு மூர்த்தமாக அருள் காட்சி தருகிறார். ஆமாம், சுயம்பு மூர்த்தமான ஐவண்ணநாதர் மிக மிகச் சிறியவர்.
'பெருமை தரும் உறையூர்ச் சற்சனர்சேர் மூக்கீச்சரத்து அணியே' என்று ராமலிங்க வள்ளலார் போற்றும் ஐவண்ணநாதரைப் பணிகிறோம்.
ஐவண்ணநாதர் என்பதற்கு இன்னுமொரு கதையும் உண்டு. நாக தீர்த்தத்தின் கரையில், நாகராஜனின் ஐந்து மகள்களும் ஆளுக்கொரு சிவலிங்கத்தைப் பூசிப்பதைக் கண்டான் சோழ மன்னன் ஒருவன். கடைசி மகளை அவன் மணந்தான். தன் மாமனாரான நாகராஜனிடம் தனக்கொரு சிவலிங்கம் கேட்டான். மாமனார், மகள் பூசித்த லிங்கத்தை மாப்பிள்ளையிடம் கொடுக்க... அந்த ஒன்றொடு மீதமுள்ள நான்கும் இணைந்து கொள்ள, ஐவண்ணநாதர் எழுந்தருளினார் என்பது செவிவழிச் செய்தி.
சூராதித்தன் எனும் சோழ மன்னன், நாக கன்னிகையான காந்திமதியை மணந்து வரும்போது, நாகலோகத்திலிருந்து ஐந்து சிவலிங்கங்களைக் கொண்டு வந்ததாகவும் பூவுலகில் அவற்றைப் பிரதிஷ்டை செய்ய எண்ணியபோது, ஐந்தும் ஒன்றாகி காட்சி தந்ததாகவும் கூறப்படுகிறது. எப்படியானால் என்ன, ஐவண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் எவ்வண்ணமும் அவர்தாமே! வணங் கிப் பணிகிறோம்.
ஐவண்ணநாதரை பிரம்மன், கருடன், கார்க் கோடகன் எனும் கொடிய பாம்பு, காஸ்யப முனிவரின் மனைவியும் பாம்புகளின் தாயுமான கத்ரு ஆகியோர் வழிபட்டுள்ளனர். பஞ்ச பூதங் களும் கூட இங்கு வணங்கியுள்ளன. பஞ்ச பூதங்களால் வணங்கப் பெற்ற பஞ்ச பூத வடிவானவர் என்பதாலும், இந்தப் பெருமான் ஐவண்ணநாதர் எனலாம்.
மீண்டும் மூலவர் சந்நிதியை வலம் வருவதற்காக சந்நிதியில் இருந்து வெளியே வர யத்தனிக்கையில், மகா மண்டபத்தில் உள்ள நடராஜ சபை கண் ணில் படுகிறது. சபைக்கு நேர் எதிரே, பிராகாரத்தில் உதங்க முனிவர். அங்கிருந்து சபையை அடைய- பக்கவாட்டு வாயில் ஒன்று.
அருகிலேயே இருக்கும் அம்பாள் சந்நிதியில் வழிபட்டு விட்டே வலம் செல்லலாமா? தெற்கு நோக்கிய அம்பாள், அருள்மிகு காந்திமதியம்மை. நின்ற திருக்கோலத்தில் அருள் புரியும் அழகிய தேவி. இறைவன் கண்ணுக்கு விருந்தாகப் பொலிந்தார் என்றால், இந்த அம்மை, கண்ணுக்கு காந்தியும் மனதுக்கு சாந்தியும் தந்து, அறிவும் வழங்குவார்.
மீண்டும் வலம் வருகையில், கோஷ்ட மூர்த்தங் களை தரிசிக்கிறோம். முதலில் விநாயகர். தாண்டி வர, தட்சிணாமூர்த்தி. சொல்லப்போனால், சிறியதும் பெரியதுமாக இரண்டு தட்சிணாமூர்த்திகள். சிறியது சோழர் காலத்தது; பெரியது, நகரத்தார் திருப்பணி. மூலவருக்கு நேர் பின்புறத்தில் மகாவிஷ்ணு. வடக்குக் கோஷ்டங்களில் பிரம்மாவும் துர்கையும். சண்டேஸ்வரரிடத்தில் வணக்கம் தெரிவித்துவிட்டு, வலம் நிறைவு செய்து நிற்கிறோம்.
ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால், நான்கு பெண்கள். மறு பக்கம் போய் பார்த்தால், அதுவே குதிரை; நான்கல்ல, ஒற்றைக் குதிரை. இந்தச் சிற்பம், உறையூரின் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்று. ஆனால், உறையூர் மூக்கீச்சரத்துக் கோயிலே ஒருவகையில் சிற்பக் களஞ்சியம்தான்!
கோழியும் யானையும் சண்டையிடும் காட்சி, அம்மன் கருவறை சுற்றுச் சுவரின் வெளிப் பகுதி யிலும் இன்னும் பல இடங்களிலும் காணப் படுகிறது. மன்மதன் பாணம் எய்யல், தபஸ் காமாட்சி, கஜ சம்ஹாரமூர்த்தி, நடன மகளிர், கண்ணப்பர் கண் அப்புதல், வில்லேந்திய ராமன், பலவகை தியானங்களில் ஈடுபட்ட முனிவர்கள், லிங்கோத்பவர், பிட்சாடனர், தாருகாவனத்து ரிஷி பத்தினிகள் என்று ஏராளமான சிற்பங்கள், எழில் கொஞ்சுகின்றன. ஸ்வாமி கருவறைச் சுவரின் வெளிப்புறத்தில், மேலே அண்ணாந்து பார்த்தால், அற்புதம், அற்புதம்! ஆண்டவனின் தாண்டவத் திருக்கோலங்கள். சிற்பங்களில் லயித்துப் போன மனதை திசை திருப்ப முடியாமல், வெளியே வருகிறோம். உறையூர் வெக்காளியம்மன் திருக் கோயில் உலகப் பிரசித்தம்.
கரிகால மன்னர், உறையூரை புனர் நிர்மாணம் செய்ததாகப் பார்த்தோமில்லையா? அது என்ன சம்பவம்? ஒன்றுமில்லை. உறையூர் பல காலத்துக்கும் மண்மூடிப் போனது. மண்ணுக்குள் புதைந்து கிடந்த பகுதியின் வீரத்தை உணர்ந்த கரிகாலர், உடனே அதை மறுநிர்மாணம் செய்து, தலைநகராகக் கொண்டார் என்பர்.
ஏன் மண் மூடியது? அதுவொரு சுவாரஸ்ய வரலாறு. சாரமா முனிவர் என்பவர், இங்கு நந்தவனம் அமைத்து, மலரெல்லாம் அருள்மிகு தாயுமானவருக்கே என்று அர்ப்பணித்து வந்தார். மலர்களின் அழகைக் கண்ட பிராந்தகன் என்பவன், அப்போதைய மன்னரிடத்தில் நல்ல பெயர் பெற, முனிவருக்குத் தெரியாமல் மலர்களைத் திருடி மன்னருக்குக் கொடுத்தான்.
நெடுநாட்களுக்குப் பின்னர், பிராந்தகனின் திருட்டைக் கண்டுபிடித்து விட்ட சாரமா முனிவர், அரசரிடம் முறையிட்டு, 'அவை ஆண்டவனுக்கு மட்டுமே உரிய மலர்கள்' என்று வற்புறுத்தினார். அரசர் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. பிராந்தகனின் திருட்டு வேலை தொடர்ந்தது. முனிவர், தாயுமானவரிடம் முறையிட்டார்.
அன்று கொல்லும் அரசரை நின்று கொல்லத் தீர்மானித்த தாயுமானவர், உறையூர் எங்கும் மண் மாரி பொழியச் செய்தார். முறை தவறிய அரசரது ஊரென்ன... பேரும் பெருமையும் அழிந்துபட்டது. மக்கள், வெக்காளியம்மனிடம் வணங்கி நிற்க, வீடின்றி நிற்கும் மனிதர்கள் வீடு-வாசல் பெறும் வரை, தாமும் அவ்வாறே வானமே கூரையாக வசிப்பதாக அம்மன் வாக்குக் கொடுத்தாராம்.
உறையூர் மண்ணில் நிற்கிறோம். கோழியே யானையை எதிர்க்கும் அளவு வீரம் தரும் விந்தை மண்ணை வணங்கியபடியே விடைபெறுகிறோம்.
நல்லதொரு எழுத்துருவம்
ReplyDelete