பூவுலகில் சமதளங்களில் மட்டும் அல்லாமல், ஓங்கி உயர்ந்த மலைப் பிரதேசங்களிலும் கோயில் கொண்டு அருள் பாலிக்கும் தெய்வத் திருவுருவங்கள் ஏராளம். கட்டுமானப் பொருட்களை மலை மேல் எடுத்துச் செல்வதற்கு எந்த வித வசதியும் இல்லாத அந்தக் காலத்திலேயே- அழகான இந்தத் தெய்வத் திருவுருவங்களை எவர் வடித்து, மலைக்கு மேல் குடி அமர்த்தினார்கள்... நித்திய பூஜைகளை எப்படி நிறைவேற்றினார்கள்... அடியவர்களுக்கும் அடியவர்களான பக்தகோடிகள் அடர்ந்த இந்தக் கானகங்களில் எப்படி ஏறி வந்து இந்த மலைவாழ் தெய்வங்களை தரிசித்தார்கள்... தங்களது பிரார்த்தனைகளை செலுத்தினார்கள்... இப்படிச் சிந்தித்துக் கொண்டே போனால், எல்லாம் சிந்தைக்கு எட்டாத விஷயங்களாகவே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் திகைப்பும் பிரமிப்புமே மிஞ்சுகின்றன.
சித்தர் பெருமக்கள், தாங்கள் வணங்குவதற்காக மலைக்கு மேல் இறை வடிவங்களை பிரதிஷ்டை செய்தார்கள் என்று சித்தர் புராணங்கள் கூறுகின்றன. தவம் இருந்த
முனிவர்களும், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட சில அன்பர்களும் இத்தகைய பிரதிஷ்டைகளை வெவ்வேறு காலகட்டங்களில் செய்துள்ளார்கள். இயற்கை அழகும் ஏராளமான அற்புதங்களும் நிறைந்து, மலை மேல் காட்சி தரும் இத்தகைய ஆலயங்களை தரிசிப்பது என்பது கலி யுகத்தில் நாம் செய்த பேறு என்றுதான் சொல்ல வேண்டும். அவற்றுள் குறிப்பிடத் தக்க ஒன்று- பாலமலை அரங்கநாதர் திருக்கோயில். இயற்கை எழிலார்ந்த இந்த மலையின் மேல், நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறார் அரங்கநாதர்.
அருள் பாலிக்கிறார் அரங்கநாதர்.
எங்கே இருக்கிறது பாலமலை?
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்குச் செல்லும் சாலையில் வரும் ஊர்- பெரியநாயக்கன் பாளையம். இது, கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மில்களும் மின் உற்பத்தி நிறுவனங்களும் இங்கு அதிகம். பெரியநாயக்கன் பாளையத்துக்கு நேர்மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாலமலை. அடிவார கிராம மான கோவனூர் வரை நகரப் பேருந்து வசதி உண்டு. நகரங்களில் இருந்து நாம் செல்லும் வாகனங்களில் கோவனூர் வரையே செல்ல முடியும். அங்கிருந்து ஜீப்பிலும், நடைபயணமாகவும் சுமார் 2 கி.மீ. மலை மேல் பயணித்து, திருக்கோயிலை அடையலாம். கரடுமுரடான பாதை.
மிதமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. ஆலயத்துக்கு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கின் றனர். அரங்கன் ஆலயத் திருவிழாக்களில் இவர்கள் காட்டும் பங்கும் பக்தியும் அளப்பரியது!
கல்வி மற்றும் அத்தியாவ சியத் தேவைகளுக்காக இந்த மலைவாசிகள், நகரத்துக்குச் சென்று திரும்ப, அடிவாரத்தில் இருந்து பாலமலை வரை பாதை அமைக்கும் பணி, மத்திய அரசின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் பூர்த்தி ஆகி விட்டால், மலைக்கு மேல் அனைத்து வாகனங்களும் சுலபமாக ஏறிச் செல்ல முடியும்.
வாருங்கள், மலை மேல் குடி கொண்ட பால மலை அரங்கனின் அற்புதங்களைக் கண்டு சேவிப்போம்.
யுகம் யுகமாக, எண்ணற்ற மகான்களுக்கும் மன்னர்களுக்கும், பக்தர்களுக்கும் அருள்பாலித்தவர் இந்த அரங்கன். கிருத யுகத்தில் காலவ மகரிஷிக்கும் துர்தமன் என்கிற கந்தர்வனுக்கும் நேரடியாகக் காட்சி கொடுத்தவர் இந்தப் பெருமாள்; திரேதா யுகத்தில் தேவலோக அழகியான ரம்பைக்கும், கிருதாசி என்கிற தேவகன்னிகைக்கும் காட்சி தந்து அருளியவர் இந்தப் பெருமாள்; துவாபர யுகத்தின் முடிவில் நந்தபூபாலருக்கும், தர்மகுப்தருக்கும் தன் திருக்காட்சி தந்து ஆட்கொண்டவர் இவர். இதோ, இந்தக் கலியுகத்திலும் தன்னை நாடி வந்து துதிக்கும் அன்பர்களது அருள் உள்ளத்துக்கு இரங்கி, அவர்கள் வேண்டும் வரத்தை வஞ்சனை இல்லாமல் வழங்கி வருகிறார் இந்த வள்ளல் பெருமாள்.
கிருத யுகத்தில் நடந்த அந்த அற்புதத்தைப் பார்ப்போமா? கந்தர்வனான விஸ்வாவஸ§ என்ப வரின் குமாரன் துர்தமன். ஒருமுறை இவன், தன் மனைவியருடன் ஒரு நதியில் ஆனந்தமாக நீரா டிக் கொண்டிருந்தான். அப்போது, கயிலையில் பரமேஸ்வரரை தரிசித்து விட்டு, தனது ஆசிரமத் துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் வசிஷ்டர். மகரிஷியைக் கண்ட துர்தமனின் மனைவியர் அனைவரும், தத்தமது உடைகளை அணிந்து கொண்டு, மங்கலச் சின்னங்களைத் தரித்துக் கொண்டு, அருந்தவசீலரின் ஆசிக்காக அவரது திருப்பாதம் பணிந்தனர். அவர்களை அன்போடு ஆசிர்வதித்தார் மகரிஷி. ஆனால், துர்தமன் மட்டும் கரை ஏறாமல், வசிஷ்டரைக் கண்டும் காணாதது மாதிரி இருந்தான். அதோடு, அவரை அலட்சியமும் செய்தான். கோபமான வசிஷ்டர், 'ஒரு குருவை அவமதித்த நீ, குரூர குணம் கொண்ட அரக்கனாக ஆவாய்' என்று சபித்தார்.
அவ்வளவுதான். அடுத்த கணமே அகோரத் தோற்றத்துடன் அரக் கனாக உருவெடுத்தான் துர்தமன்.
இது கண்டு பதைபதைத்த அவன் மனைவியர், வசிஷ்டரின் திருப்பாதங்களை சரண் அடைந்து, 'தேவரீர்! எங்கள் கணவர் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். பழைய நிலையை அவர் அடைய அருள் புரியுங்கள்!' என்று நமஸ்கரித்தனர். வசிஷ்டர் மனம் இரங்கினார். ''கவலை வேண்டாம் மாதரசிகளே... மந் நாராயணனை நித்தமும் பூஜித்துக் கொண்டிருங்கள். இன்னும் சில காலத்துக்குள் விஷ்ணுவின் அருளால் பழைய நிலையை அவன் அடைவான்'' என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார் வசிஷ்டர்.
காலம் உருண்டோடியது. விஷ்ணு பக்தரான காலவ மகரிஷி என்பவர், வனத்தில் கடுமையான தவத்தில் இருந்தார். பரந்தாமனின் திருநாமத்தை எந்நேரமும் ஜபித்து வந்தார். தவசீலர்களுக்குத் தொந்தரவு தருவதுதானே அரக்கர்களது பணி? துர்தமனும் அதைத்தான் செய்தான். காலவரின் தவத்துக்கு அவ்வப்போது தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் சற்று அனுசரித்துப் போன காலவர், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், பிரச்னையை தியானத்தின் மூலம் திருமாலிடமே கொண்டு சென்றார்.
அவ்வளவுதான். பக்தனின் துயர் துடைக்க வேண்டி சர்வ வல்லமை வாய்ந்த சக்ராயுதத்துடன் கிளம்பினார் மந் நாராயணன். சக்ராயுதத்தைப் பிர யோகித்து அரக்கனை அழிக்க... துர்தமன் சுயரூபம் பெற்றான். மகரிஷியான காலவருக்கும் கந்தர் வனான துர்தமனுக்கும் அங்கே காட்சி தந்தார் பரந்தாமன். அன்று அவர் திருக்காட்சி தந்த அதே இடத்தில் அரங்கநாதன் என்கிற திருநாமத்துடன் இன்றளவும் பக்தர்களுக்குக் காட்சி தந்து வருகிறார் மகாவிஷ்ணு. துர்தமனின் மேல் சக்கரத்தின் ஸ்பரிசம் ஏற்பட்ட இடம் சக்கர தீர்த்தம் (பத்ம தீர்த்தம்) என்ற பெயரில் ஆலயத்தின் அருகே இன்றும் விளங்குகிறது.
வாருங்கள், தேவலோக அழகியான ரம்பைக்கும் தேவலோக கன்னியான கிருதாசி என்ப வளுக்கும் இந்த அரங்கநாதன், திரேதா யுகத்தில் காட்சி தந்த கதையைப் பார்ப்போம்.
விஸ்வாமித்திர மகரிஷி, மன்னராக இருந்து துறவி ஆனார் என்பது அநேகருக்கும் தெரியும். அவர் மன்னராக இருந்தபோது, குடிமக்களைக் காணும் விதமாக நாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது விஜயம் செய்வதுண்டு. அப்படி ஒரு முறை புறப்பட்டார். வழியில், வனத்தில் வனப்புடன் ஓர் ஆசிரமம் அமைத்து பலருக்கும் உதவி வந்த வசிஷ்ட மகரிஷியைச் சந்தித்தார் மன்னர் விஸ்வாமித்திரர். மன்னருக்கும் அவருடன் வந்த வீரர்களுக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
''காட்டிலே அமைந்துள்ள இந்த ஆசிரமத்தின் செழிப்பான நிலைமைக்கும், சுவையான போஜனத்துக்கும் காரணம் என்ன? என் குடிமக்களின் நலம் வேண்டி இதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்!'' என்றார் விஸ்வாமித்திரர், பணிவுடன்.
வசிஷ்டர் திருவாய் மலர்ந்தார். ''என்னிடம் இருக்கும் காமதேனு என்ற தேவ பசுவே எல்லாவற்றுக்கும் காரணம். அதன் மகிமையால்தான் இந்த ஆசிரமத்தில் எல்லாமே சிறந்து விளங்குகின்றன. காம தேனு குடிகொண்ட இந்த ஆசிரமத்தை அண்டினோர் எவருக்கும் என்றென்றும் அல்லல் வந்ததில்லை. அனுதினமும் அறுசுவை உணவுக்கு பஞ்சம் வந்ததில்லை!'' என்று புகழ் பாடினார் வசிஷ்டர்.
விஸ்வாமித்திரர் வியந்தார். மன்னன் என்ற முறையில் பெருமைப்பட்டார். மனிதன் என்ற வகையில் பொறாமைப்பட்டார். பேராசை அவரைப் பேச வைத்தது. ''மகரிஷியே... காமதேனு தங்களிடம் இருப்பதை விட, ஒரு மன்னரான என்னிடம் இருந்தால் நாட்டு மக்களின் நல்லதுக் குப் பயன்படும். காமதேனுவை எனக்குத் தாருங் களேன்!'' என்றார் விஸ்வாமித்திரர்.
வசிஷ்ட மகரிஷி புன்னகைத்தார். ''மன்னா... காமதேனுவின் இருப்பிடம் இதுதான். அவள் வேறெங்கும் வர விரும்ப மாட்டாள். அவள் விரும்பினால், தாராளமாக அழைத்துச் செல்லலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை!'' என்றார். தன்னுடன் வருமாறு காமதேனுவை அழைத்தார் விஸ்வாமித்திரர். ஆனால், காமதேனு மறுத்து விட்டது. கோபப்பட்ட விஸ்வாமித்திரர், பலாத்காரப்படுத்தியும் பார்த்தார். பணியவில்லை காமதேனு. அஸ்திரங்களை எடுத்தார். வசிஷ்டர் தன்னை அவமதித்ததாகக் கருதி, அவரை வீழ்த்தும் நோக்கத்தில் அஸ்திரங்களை பிரயோகம் செய்தார். ஆனால், இவை அனைத்தும், வசிஷ்டரின் பாதம் பணிந்து வீழ்ந்தன. விஸ்வாமித்திரரின் செல்வாக்கு, சொல்வாக்கில் வல்லவரான வசிஷ்டரிடம் எடுபட வில்லை.
தெளிந்தார் விஸ்வாமித்திரர். 'அனைத்து அதிகாரங்களும் பெற்ற ஒரு மன்னரால் முடியாத விஷயங்களும் மண்ணுலகில் இருக்கின்றன' என்பதை உணர்ந்தார். ராஜ்யத்தை மறந்தார். மணிமுடி துறந்தார். நாட்டை விடுத்துக் காட்டை அடைந்தார். தவம் அவரை ஆட்கொண்டது. ஆயிரம் வருட காலம் அருந்தவம் புரிந்தார். இவரது தவத்தால், தங்களின் செயல்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் வந்து விடுமோ என்று அஞ்சிய தேவர்கள், ஒரு திட்டம் தீட்டினர். தேவலோக அழகியான ரம்பையை அனுப்பினர். தேவர்களது திட்டம் செல்லுபடி ஆகவில்லை. தன்னை சபலப்பட வைப்பதற்காக வந்த ரம்பையைக் கல் ஆகும்படி சபித்தார் விஸ்வாமித்திரர், கோபத்துடன்.
காலம் உருண்டோடியது. கல்லாக மாறிய ரம்பை, அகத்திய முனிவரின் சிஷ்யரும், மகா தபஸ்வியும் ஆன ஸ்வேத மகரிஷியின் ஆசிரமத்தின் வாயிலில் பல வருடங்களாக தவம் இருந்தாள். அப்போது, ஸ்வேத மகரிஷியின் தவத்துக்கு தொல்லை தந்து வந்தாள் ஓர் அரக்கி. ஒரு தவசீலரின் சாபத்தால் கிருதாசி எனும் தேவகன்னிகை, அரக்கியாக மாறி அட்டகாசம் செய்து வந்தாள். ஒரு நாள், ஸ்வேத மகரிஷியின் ஆசிரமம் வந்து தொடர் அட்டகாசம் செய்த அரக்கியை நோக்கி (கிருதாசி), அருகில் இருந்த கல்லை (ரம்பை) எடுத்து மந்திரங்களை உச்சரித்து வீசினார் ஸ்வேத மகரிஷி.
அந்த கல், அரக்கியை இழுத்துக் கொண்டு போய் பத்ம தீர்த்தத்தில் தள்ளியது. தீர்த்தத்தின் ஸ்பரிசத்தால் கல், ரம்பையானது. அரக்கி, கிருதாசி ஆனாள். சுயரூபம் பெற்ற இருவரும் பகவானை ஆராதித்து, புஷ்பக விமானத்தில் ஏறி தேவலோகம் சென்றனர். ரம்பைக்கும் கிருதாசிக்கும் சாப விமோசனம் தந்த இந்த பத்ம தீர்த்தத்தில் கங்கை நித்திய வாசம் செய்கிறாள். இங்கு நீராடியவர்கள் பிரயாகை போன்ற சர்வ தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனை அடைவதாக தல புராணம் சொல்கிறது.
துவாபர யுகத்தின் முடிவில் வசித்து வந்த மன்னர் நந்தபூபாலர். ஒரு கட்டத்தில் துறவின் மேல் பற்று கொண்டு, ஆட்சிப் பொறுப்பைத் தன் குமாரர் தர்மகுப்தரிடம் ஒப்படைத்து விட்டு கானகம் சென்றார். தர்ம நெறிகளை கடைப்பிடித்துச் சிறப்பாகத்தான் ஆட்சி செலுத்தி வந்தார் தர்மகுப்தர். ஒரு நம்பிக் கைத் துரோகத்தின் காரணமாக, மனநோய்க்கு ஆளான தர்மகுப்தர், நலம் பெற வழி இல்லா மல் திரிந்தார். திகைத்தனர் அமைச்சர் பெருமக்கள். கானகத்தில் தவம் புரியும் தந்தை நந்தபூபாலரிடமே மகன் தர்மகுப்தரை அழைத்துச் செல்வது என்று தீர்மானித்துப் புறப்பட்டனர்.
விஷயம் அறிந்து கலங்கிய தந்தை, தன் மகனைக் கூட்டிக் கொண்டு ஜைமினி முனிவரிடம் சென்றார். ''சக்ரவர்த்தியே... கலங்க வேண்டாம். பிரம்மஹத்தி தோஷத்தை விட மோசமானது நம்பிக்கைத் துரோகம். ஆனால், இவை எல்லாவற்றையும் போக்கக் கூடிய «க்ஷத்திரம் ஒன்று இருக்கிறது. அதுதான் பாலமலை. அங்கே சென்று பத்ம தீர்த்தத்தில் நீராடி, அரங்கநாதனை வழிபடு. எல்லாம் நலமாகும்!'' என்றார் ஜைமினி முனிவர்.
தர்மகுப்தரை அழைத்துக் கொண்டு பாலமலை வந்த நந்தபூபாலர், திருக்குளத்தில் நீராடி, அரங்கனை வழிபட... அனைத்து துயர்களும் பறந்தோடின. அதன் பின் ராஜ்யம் வளமானது தனிக் கதை.
புராணங்களும் மகரிஷிகளும் போற்றும் பால மலையில்- பரந்தாமனின் சந்நிதியில் தற்போது நாம் இருக்கிறோம். தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று அனைத்துமே விளங்கும் திருக்கோயில். 'மலையின் மேல் இவ்வளவு பெரிய கோயிலா?' என்று வியக்க வைக்கும் தோற்றம். ராஜகோபுரம், மதில்கள், பிராகாரங்கள், விமானங்கள் என்று விஸ்தாரமாகக் காட்சி தருகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டில் லகு சம்ரோட்சணமும் (மூலவருக்கு மட்டும்), 2002-ஆம் ஆண்டில் மகா சம்ரோட்சணமும் (அனைத்து சந்நிதிகளுக்கும்) நடந்துள்ளது. அதற்கு முன் 1920-ஆம் வருடம் சம்ரோட்சணம் நடைபெற்றதாம். பாஞ்சராத்திர ஆகமம். தென்கலை சம்பிரதாயம். கவுடர் எனப்படும் பிரிவைச் சேர்ந்த மக்களால் சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவர்களே இந்த ஆலயத்தைச் சீரமைத்த பெருமக்கள்.
பரந்தாமனின் அருளால் ஒவ்வொரு முறையும் அவனது திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்கள். கோயிலை சீரமைக்கும் பொருட்டு சில மண்டபங்களையும் மதிலையும் கட்டுவதற்குக் கருங்கற்கள் இல்லாதது குறித்து வருந்திய அடியார்கள், அரங்கனிடமும் பக்திபூர்வமாக வேண்டினர். பிறகு நடந்ததே ஆச்சரியம்! அன்றைய தினம் இரவு ஏதோ பெரிய வெடிச் சத்தம். மறு நாள் காலை அடியார்கள் அங்கே சென்று பார்த்தபோது, புதிதாக அமைக்க இருந்த கட்டடத்துக்கு வேண்டிய கற்கள் அங்கே கிடைத்ததாகவும், பரந்தாமனின் கருணையால் இது நிகழ்ந்ததாகவும் சொல்கிறார்கள்.
அரங்கநாதனை தரிசனம் செய்வோமா?
பரந்த முன்வெளியில் சிறிய தேர். தேர்ந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட இது, சித்ரா பௌர்ணமி திருவிழா காலத்தில் அசைந்தாடி வரும் அழகே அழகு! இதே திருவிழா காலத்தில், பத்ம தீர்த்தக் குளத்தில் தெப்போற்சவமும் கோலாகலமாக நடைபெறும்.
வெளியே சிறு சிறு கடைகள்; அர்ச்சனைக் குத் தேவையான பொருட்கள் கிடைக்கின்றன. ஆலயத்தின் எதிரே பிரமாண்ட அரச மரம். நிழலில், விநாயகர். வேல் மற்றும் நாக பிரதிஷ்டைகள். நடக்கிறோம். தீப ஸ்தம்பம். அதன் நான்கு புறமும்
ஆஞ்சநேயர், கருடாழ்வார், சங்கு மற்றும் சக்கரம். நிலைக் கதவுகளைக் கடந்து உள்ளே நுழைந்தால், ஷீட் வேயப்பட்ட பிரமாண்ட மண்டபம். கொடி மரம், கருடாழ்வார்.
நமக்கு நேராக அரங்கநாதனின் அற்புத தரிசனம். வெளியே துவாரபாலகர்கள். கரு வறையில்_ கீழே சிலா வடிவத்தில் சுயம்பு வடிவமாக அரங்கநாதர்; யுகம் யுகமாக இருந்து அருள் பாலிப்பவர். கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த சம்ரோட்சணத்தின்போது சுயம்பு வடிவத்துக்குப் பின்னால் பஞ்சலோகத்தால் ஆன அரங்கநாதரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்த அரங்கர், நின்ற நிலையில் அருள் பாலிக்கி றார். சுமார் 265 கிலோ எடை கொண்ட இந்த விக்கிரகம் நாலேகால் அடி உயரம் கொண்டது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் விக்கிரகங்கள். தேர்த் திருவிழா மற்றும் புறப்பாடு காலங்களில் உற்சவரை அலங்கரித்து விழா நடத்துகிறார்கள். அரங்க நாதரின் கருவறைக்கு வெளியே இரு பக்கமும் செங்கோதையம்மன் மற்றும் பூங்கோதையம்மன் சந்நிதிகள். அதாவது, தாயார் சந்நிதிகள்.
விஸ்தாரமான வெளிப் பிராகாரம். மற்றபடி தும்பிக்கை ஆழ்வார், பன்னிரு ஆழ்வார்கள், தன் வந்திரி, காளிதாஸ் ஸ்வாமிகள் (துவக்கத்தில் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தவர்), ராமானுஜர், சுதர்சனர்/நரசிம்மர் ஆகியோருக்கு சந்நிதிகள் அழகாக அமைந்துள்ளன. பிராகாரத்தில் ஆதிசேஷன், கருடன், யானை, குதிரை, ஆஞ்சநேயர் போன்ற வாகனங்கள் காணப்படுகின்றன.
சித்திரை மாதம் 10 நாள் திருவிழா, புரட்டாசி மாதம் ஐந்து சனிக் கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜயந்தி மற்றும் அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்கள் இங்கு சிறப்பு. தவிர, ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் வருகிறார்கள்.
தென் திருப்பதி என்று சொல்லப்படும் இந்த «க்ஷத்திரத்தில், மலை மேல் குடி கொண்ட அந்த மாதவனை தரிசித்து, மகான்கள் பெற்ற திருவருளை நாமும் பெற விழைவோம்!
Comments
Post a Comment