வாழ்க்கையில் முடிவு எடுப்பது .......

ருமுறை, உஜ்ஜயினி நாட்டு மன்னன் விக்கிரமாதித்தனைப் பார்க்க வந்திருந்தான் ஒரு மந்திரவாதி. வெளவால் மாதிரி தலைகீழாகத் தொங்கும் வேதாளத்தை மயானத்தில் இருந்து கொண்டுவந்து தருமாறு கேட்டான். தன்னைத் தேடி வந்து உதவி கேட்ட மந்திரவாதியை ஏமாற்ற விரும்பாத விக்கிரமாதித்தன், உடனே மயானத்துக்குப் புறப்பட்டான். அப்போது, 'வேதாளத்திடம் எக்காரணம் கொண்டும் பேச்சு கொடுக்காதே! பேசினால், நீ அதனிடம் மாட்டிக்கொள்வாய்!’ என்று எச்சரித்தான் மந்திரவாதி.

விக்கிரமாதித்தன் மயானத்துக்குச் சென்றான். மரத்தில் தலைகீழாகத் தொங்கும் வேதாளத்தைப் பார்த்தான். அதைக் கெட்டியாகப் பிடித்து நகரத்துக்கு தூக்கிச் சென்றபோது, வேதாளம் அவனிடம் பேச ஆரம்பித்தது. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, அவனை வெறுப்பேற்றியது. அவன் காதில் ஓலமிட்டது. அவனைச் சபித்தது. புகழவும் செய்தது. அவனை எப்படியாவது பேச்சுக்கு அழைத்துவிட முயன்றது. ஆனால், விக்கிரமாதித்தன் அதன் தூண்டுதல்களுக்கு மசியவில்லை.
கடைசியில், வேதாளம் ஒரு புதிர்க் கதை சொன்னது. கதையைச் சொல்லி முடித்துவிட்டு, அவனிடம் ஒரு புதிர்க் கேள்வி கேட்டது. விக்கிரமாதித்தன் அப்போதும் பேசாமல் இருக்கவே, 'விக்கிரமாதித்தா... பலரும் உன்னைப் புகழ்வது போல உண்மையிலேயே நீ புத்திசாலியாக இருந்தால், இந்தப் புதிருக்கு உனக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். வாயே திறக்காத நீதான் அந்த விக்கிரமாதித்தனா என்று எனக்கு எப்படித் தெரியும்? நீ இப்படி மௌனமாக இருந்தால் உன்னை ஒரு சாதாரண மனிதன், வேஷம் போடுபவன் என்றுதான் நான் நினைக்க வேண்டிவரும், சரிதானா?' என்றது.
அவ்வளவு நேரமும் பொறுமை காத்த விக்கிரமாதித்தன், 'சாதாரண மனிதன்’ என்று வேதாளம் தன்னைக் குறிப்பிட்டதும் கோபம் கொண்டான். அது கேட்ட சிக்கலான கேள்விக்குரிய சரியான பதில் அவனுக்குத் தெரியும். அற்புதமான பதில் அது. அவன் சொன்ன அந்த பதிலைக் கேட்டு வேதாளமே வியந்தது. சட்டென்று விக்கிரமாதித்தனிடம் இருந்து விடுபட்டுப் பறந்து சென்று, மயானத்தின் நடுவே இருந்த மரத்தில் தலைகீழாகத் தொங்கியது.

விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்துக்கு வந்து, வேதாளத்தை இழுத்துத் தோளில் போட்டுக்கொண்டான். மீண்டும் வேறு ஒரு கதையைச் சொல்லி, விடை கேட்டது வேதாளம். பழையபடியே, ''நீ சாதாரண பிரஜைதான். போன முறை என் கேள்வி சுலபமாக இருந்ததால், சட்டென்று விடை சொல்லிவிட்டாய். ஆனால், இந்த முறை விடை தெரியாமல் விழிக்கிறாய்!'' என்றெல்லாம் அவனை உசுப்பேற்றி, கோபத்தைக் கிளறி, அவனிடம் இருந்து பதிலையும் பெற்றது. அந்தச் சாதுர்யமான பதிலைக் கேட்டு அசந்து போய், மீண்டும் மரத்தில் தலைகீழாகத் தொங்கியது.
இது போன்று 24 முறைகள் நடந்தன. 25-ஆம் தடவை வேதாளம் வழக்கம்போல் மரத்தில் ஏறிக்கொள்ளவில்லை. இந்த முறை அதை ஒருவழியாகப் பிடித்துக்கொண்டுவிட்டான் விக்கிரமாதித்தன். சற்றும் மனம் தளராத தனது இந்த முயற்சியில் ரொம்பவே சோர்ந்து போயிருந்தான் அவன். வேதாளம் சிக்கியதில், 'அப்பாடா... பிழைத்தேன்’ என்றான். தான் வென்றுவிட்டதாக நினைத்தான் அவன். அப்போது, 'உண்மையில் நீ வென்றுவிட்டாயா?’ என்று கேட்டது வேதாளம்.

அதோடு, 'நீ முன்பு சொன்ன பதில்கள் எல்லாம் சரிதான் என்று உனக்கு எப்படித் தெரியும்? ஒவ்வொரு முடிவும் அந்தந்த சந்தர்ப்பத்தைப் பொறுத்து எடுக்கப்படுபவை (சப்ஜெக்டிவ்). கருத்தையோ குறிக்கோளையோ மனத்தில் வைத்து எடுக்கப்பட்டவை அல்ல (ஆப்ஜெக்டிவ்). நீ சொல்வதுதான் சரி என்று நீ நினைத்தாய். அப்படியே பேசினாய். இப்போது அவை சரிதானா, இல்லையா என்று உனக்குத் தெரியாததால், மௌனம் காக்கிறாய். இந்த மௌனம் உனக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும். அந்த மந்திரவாதியிடம் என்னைக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். அப்புறம், அவன் என்னை அவனுடைய கைப்பாவை ஆக்கிக்கொண்டு, மந்திர- தந்திரத்தைப் பயன்படுத்தி, தான் வேண்டுவதைச் சாதித்துக்கொள்வான். அவனுடைய முதல் ஆணை உன்னைக் கொல்லச் சொல்வதாகத்தான் இருக்கும். அதனால் விக்கிரமாதித்தா... நீ என் கேள்விக்கு பதில் சொல்லும் வரை, அது உனக்கு சாதகமாக இருந்தது. என்னைப் பின்தொடர்ந்து நீ வரவேண்டி இருந்தது. ஆனால், நீ அரசனாகவே இருந்தாய். எப்போது உனக்கே சந்தேகம் வந்துவிட்டதோ, அப்போது மௌனம் சாதிக்கிறாய். நீ நிச்சயம் மரணம்தான் அடையப் போகிறாய்!' என்றது வேதாளம்.


நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கதையின் மையக் கருத்து இங்கேதான் இருக்கிறது. முடிவு எடுக்கிற தருணத்தில், முடிவுகள் சரியா, தவறா என்பது தெரியாது. ஊகத்தில்தான் முடிவு சரியானதா, தவறானதா என்று கூறப்படுகிறது.


எவன் துணிச்சலாக முடிவுகள் எடுக்கிறானோ... எவன் வேதாளம் நழுவிச் சென்றுவிடுமே என்று அஞ்சாமல் முடிவு எடுக்கிறானோ... எவன் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாக எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கிறானோ... அவன்தான் விக்கிரமாதித்தன்!

முடிவு எடுப்பதைத் திருத்தமாகச் செய்ய, விக்கிரமாதித்தன் காலத்தில் தலைகீழாகத் தொங்கும் மயானத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. வேதாளத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இங்கேதான் பாடங்கள் ஆரம்பமாகின்றன. இங்கேதான் அவன் தன் திறனைக் கூர்மைப்படுத்திக்கொள்கிறான். வேதாளம்தான் பயிற்சியாளன், வழிகாட்டி, ஆசான், குரு எல்லாம்!

சரி, விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேள்வி கேட்டது அல்லவா? உண்மையிலேயே அந்த வேதாளத்துக்கு விடை தெரியுமா என்று நமக்கு சந்தேகம் வரலாம். வேதாளத்துக்கு அதற்கான விடை தெரிந்தும் இருக்கலாம்; தெரியாமலும் இருக்கலாம். அது ஒரு விஷயமல்ல. விக்கிரமாதித்தன் பதில்கள் சொல்லி, புதிர்களை விடுவிக்கிறானே... அதுதான் முக்கியம்!

விக்கிரமாதித்தனின் ஒவ்வொரு பதிலும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. கருத்தையோ, குறிக்கோள் ஒன்றையோ பொறுத்தது அல்ல. காலம்தான் அவை சரியா, தவறா என்பதைக் கணிக்கும். விக்கிரமாதித்தன் பதில் சொல்ல மறுத்திருந்தால்... அவனும் அழிந்து, அவன் ராஜ்யமும் அழிந்துபோய் இருக்கும். ஆனால், விக்கிரமாதித்தன் ஒவ்வொரு கதைக்கும் தீர்வாக ஒரு பதிலைச் சொன்னான்.

அதுசரி, இந்தக் கதை நமக்கு என்னதான் சொல்ல வருகிறது என்று கேட்கிறீர்களா?
தீர்வு சொல்கிறவரைதான், ஒரு தலைவன் மதிக்கப்படுகிறான்!

Comments