காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள்


நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று... ஸ்ரீஹயக்ரீவர், அகத்தியருக்கு 'ஸ்ரீவித்தை'யை உபதேசித்த தலம்... சக்தி பீடங்களுள் ஸ்ரீசக்ர பீடமாக திகழ் வது... 'நகரேஷ§ காஞ்சி' என காளிதாசனால் போற்றப்பட்டது... இப்படி பல சிறப்புகள் கொண்ட காஞ்சி திருத்தலம், சென்னையில் இருந்து தென் மேற்கில் சாலை மார்க்கமாக சுமார் 62 கி.மீ. தொலைவில் உள்ளது. அரக்கோணம்- செங்கல் பட்டு மார்க்கத்தில், அரக்கோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
முக்தி தரும் ஏழு தலங்களில் காஞ்சி, ஸ்ரீநாராயணரின் இடுப்பு பகுதியாக திகழ்கிறது என்பது ஐதீகம். மற்றவை: அவந்தி (காலடி), துவாரகை (தொப்புள்), ஹரித்வார் (மார்பு), மதுரா (கழுத்து), காசி (மூக்கு) அயோத்தி(தலை).
பஞ்ச மூர்த்தி தலங்கள் அல்லது பஞ்சாமிர்த சேத்திரங்கள் என போற்றப்படும் தலங்களுள் ஒன்றாகவும் காஞ்சி திகழ்கிறது. மற்றவை: திருவரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி, திருநாராயணபுரம்.
வைணவத் தலங்களில், திருநாராயணபுரத்தை ஞானமண்டபம் என்பர். திருவேங்கடத்தை பூ மண்டபம் என்பர். திருவரங்கத்தை போக மண்டபம் என்பர். காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள், தனக்கு திருமஞ்சன கைங்கர்யம் செய்த ஸ்ரீராமானுஜரை வைணவத் தலைமை ஏற்கச் செய்யும் பொருட்டு ஸ்ரீரங்கத்துக்கு தியாக உணர்வுடன் அனுப்பியதால், இந்தத் தலத்தை தியாக மண்டபம் என்பர்.
பிரம்மா, யாகம் செய்து வழிபட்டதால், (க- பிரம்மா; அஞ்சிதம் -பூஜிக்கப்பட்டது) காஞ்சி எனப் பெயர் கொண்ட இந்தத் தலத்தை ஸ்ரீவிஷ்ணு சேத்திரம், விஷ்ணு சாலை, ஹரி சேத்திரம், புண்ணியகோடி சேத்திரம், வைகுண்ட சேத்திரம், ஹஸ்திசைல சேத்திரம், திரிஸ்ரோத சேத்திரம், திருக்கச்சி மற்றும் ஹஸ்திகிரி ஆகிய பெயர்களாலும் போற்றுவர்.
பிரளய காலத்திலும் அழியாத தலம் ஆதலால்- பிரளயசித்து; கம்பை ஆற்றின் வெள்ளம் கண்டு அஞ்சிய அம்பிகை, இறைவனைத் தழுவியதால்- சிவபுரம்; பிரம்மன் தவம் செய்ததால்- தபோவனம்; பிரம்மனது வேள்விக்கு மகிழ்ந்து திருமால் காட்சி தந்த தலம் ஆதலால் விண்டுமாபுரம்; பிரம்மன், திருமால், சிவபெருமான் ஆகிய மூவரும் வசிப்பதால் திருமூர்த்திவாசம்; துண்டீர மகாராஜாவால் ஆளப்பட்டதால் துண்டீரபுரம்; சத்திய சத்தியர், சத்திய சோதகர், சத்திய கற்பர், சத்திய காமர்கள் போன்ற ஞானியர் வாழ்ந்த தலமாதலால் சத்திய விருத சேத்திரம் ஆகிய பெயர்களுடன் திகழ்கிறது காஞ்சி.
இங்கு அருள் பாலிக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளை கிருத யுகத்தில் பிரம்மனும், திரேதா யுகத்தில் கஜேந்திரனும் (யானை), துவாபார யுகத்தில் பிரகஸ்பதியும், கலி யுகத்தில் அனந்தசேஷனும் வழிபட்டு அருள் பெற்றனராம். தவிர, சரஸ்வதிதேவி, நாரதர், ஆதிசேஷன், இந்திரன், பிருகு முனிவர் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இன்றும், ஆண்டுக்கு இரு முறை- வைகாசி விசாகம் மற்றும் ஆடி மாதம் வளர்பிறை தசமி ஆகிய நாட்களில் ஆதிசேஷன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.
வில்லிபாரதத்தின் 'தீர்த்த யாத்திரை' சருக்கத்தில் அர்ஜுனன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீவரதராஜர், அஷ்டதச புஜ பெருமாள் ஆகியோரை தரிசித்ததுடன், ஏழு நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்கை ஆழ்வார் மற்றும் ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஆகியோர் அவதரித்த தலம். பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார்,
கூரத்தாழ்வார், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன், கன்னிகாதானம் தாதாச்சார்யார் சுவாமிகள், அப்பய்ய தீட்சிதர், புரந்தரதாசர், அப்புள்ளார் நடாத்தூர் அம்மான் ஆகியோர் பெருமாளை போற்றிப் பரவி அருள் பெற்ற திருத்தலம். ஸ்ரீவரதராஜ பெருமாள் மீது திருக்கச்சி நம்பிகள்- தேவராஜ அஷ்டகமும், வேதாந்த தேசிகர்- வரதராஜ பஞ்சாசத்தும், மணவாள மாமுனிகள்- தேவராஜ மங்களமும் பாடி மகிழ்ந்துள்ளனர்.
அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் நிறுவிய நாளந்தா பல்கலைக்கழகத் தின் முதல் தலைவரான தர்மபாலர் முதலான அறி ஞர்கள், கல்வியும் ஞானமும் பெற்ற தலம் இது.
கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் பண்டைய சோழர்களது தலைநகரமாக இருந்த காஞ்சி கி.பி. 3 முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களது தலைநகரமாகவும், 10 முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை பிற்கால சோழர்களின் தலைநகராகவும் திகழ்ந்ததாம். பிறகு, 17-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் சிறப்புப் பெற்றது காஞ்சி.
காஞ்சியை விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி, பெரிய காஞ்சி என்று மூன்று பிரிவாகக் கொள்வர். இவற்றில் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தல வரலாறை, பிரும்மாண்ட புராணம் ஹஸ்திகிரி மகாத்மியம் (18 அத்தியாயங்கள்) மூலம் அறியலாம். இது, பிருகு மகரிஷிக்கு நாரத முனிவர் விவரித்தது என்பர்.
ஒரு முறை திருமகள், கலைமகள் இருவருக்கும் இடையே, 'தங்களில் பெரியவர் யார்?' என்ற தர்க்கம் எழுந்தது. இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களது சந்தேகத்தைத் தீர்க்குமாறு வேண்டினர்.
'லட்சுமியே சிறந்தவள்!' என்றார் பிரம்மா. இதனால் கோபம் கொண்ட கலைமகள் பிரம்மனின் சிருஷ்டி தண்டத்தை பறித்ததுடன் அவரை விட்டும் பிரிந்து சென்றாள். சிருஷ்டி தண்டம் இல்லாததால், படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது. இதனால் கலங்கிய பிரம்மன், மகாவிஷ்ணுவை குறித்து தவம் இருந்தார் (படைப்பின் மூலமான பரம்பொருளைக் காணும் பொருட்டு பிரம்மன் தவம் இருந்ததாகவும் கூறுவதுண்டு). அவர் முன் தோன்றிய மகாவிஷ்ணு, ''உமது குறை தீர வேண்டுமானால் நூறு அஸ்வ மேத யாகம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒன்றுக்கு நூறாக பலன் தரும் திவ்ய சேத்திரமான காஞ்சிக்குச் சென்று அங்கு, ஒரு முறை அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும்!'' என்று அருளி மறைந்தார்.அதன்படி பூலோகம் வந்த பிரம்மன், காஞ்சியில் அஸ்வமேத யாகத்தைத் துவங்கினார். பத்தினி இல்லாமல் செய்யும் யாகம் பூர்த்தியடையாது என்பதால், வியாசரை அழைத்து, 'கலைவாணியை அழைத்து வருக!' என்று கட்டளையிட்டார். ஆனால், கலைவாணி மறுத்து விட்டாள். எனவே, சாவித்திரிதேவியுடன் யாகத்தைத் துவக்கினார் பிரம்மன். இதனால் அதிக கோபம் கொண்ட கலைவாணி, யாகத்தைத் தடுக்குமாறு அக்னி, அசுரர்கள் ஆகியோரை ஏவினாள்.
இதையறிந்த பிரம்மன், திருமாலை சரணடைந்தார். யாகத்தைக் காக்க திருவுளம் கொண்ட பகவான், கலை வாணியால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தார்.இறுதியில் சரஸ்வதி, நதியாக பிரவாகித்தாள். அப்படி வேகவதியாய் பாய்ந்து வந்த நதியை வழிமறித்து தம் கை- கால்களைப் பரப்பி குறுக்காகப் படுத்துக் கொண்டார் மகாவிஷ்ணு. நதி, அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டது; வெட்கம் அடைந்த ஸ்ரீசரஸ்வதி, அந்தர்வாகினியாக பூமிக்குள் மறைந்தாள்! யாகம் இனிதே நிறைவுற்றது. யாகத்தில் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய பெருமாள் சிருஷ்டி தண்டத்தை பிரம்மனுக்குத் தந்தருளினார். பிறகு, பிரம்மனின் வேண்டுகோள்படி, அங்கேயே புண்ணியகோடி விமானரூடராக- ஸ்ரீவரதராஜர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டார்.
பெருமாள் சிருஷ்டி தண்டத்தை பிரம்ம தேவனுக்கு அருளியது, கிருத யுகம்- ஐந்தாவது மன்வந்த்ரம்- யுவ வருடம், விருஷப மாதம் (ரிஷபத்தில் சூரியன் இருக்கும் காலம்)- சுக்ல பட்ச சதுர்த்தசி, அஸ்வ நட்சத்திர நன்னாள் என்பர்.
திருமகள்- கலைமகள் இருவரும் பிரம்மனிடம் கேட்ட அதே கேள்வியை இந்திரனிடமும் கேட்டனர். அவனும் 'திருமகளே சிறந்தவர்!' என்றான். இதனால் சினந்த கலைவாணி, மதங்கொண்ட யானை ஆகும்படி இந்திரனை சபித்தாள். இதனால் வருந்திய இந்திரனை ஆறுதல்படுத்திய மகாலட்சுமி, ''நீ பூலோகம் சென்று அங்கு, தண்டகாரண்யத்தில் பிரகலாதனை சந்தித்து ஸ்ரீநரசிம்ம மந்திரத்தை உபதேசம் பெறு. பிறகு, ஸ்ரீவரதராஜ சேத்திரத்தை அடைந்து தவம் செய்தால் சாபம் நீங்கப் பெறுவாய்!'' என்று அருளினார். சாபத்தின்படி யானையாக மாறிய இந்திரன், இந்த சேத்திரத்தை அடைந்து, தன் இதயத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை வைத்து தியானித்தான். ஸ்ரீநரசிம்ம மூர்த்தி பிரத்யட்சமாகி கஜரூபத்தை இரண்டாகப் பிளந்தார். இந்திரன் சுயரூபம் பெற்றான். பிறகு ஸ்ரீநரசிம்மமூர்த்தி, கஜ ரூபத்தை மலையாகக் கொண்டு குகை நரசிம்மராக அவனுக்கு அருள் பாலித்தார். எனவே இந்த பகுதி ஹஸ்தி கிரி எனப் படுகிறது (ஹஸ்தி - யானை).
தேவ குரு பிரஹஸ்பதியும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். ஒரு முறை 'சிறந்தது எது... இல்லறமா? துறவறமா?' என்ற தர்க்கம் எழுந்தபோது, 'துறவறமே சிறந்தது!' என்று தீர்ப்பளித்தார் பிரகஸ்பதி. மாற்றுக் கருத்து கொண்ட இந்திரன் கோபம் கொண்டான். 'பூலோகத்தில் ஓர் ஏழையாகப் பிறக்கக் கடவது!' என்று சாபம் கொடுத்தான். அதன்படி பூமியில் ஏழையாகப் பிறந்து ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் துன்புற் றார் பிரகஸ்பதி. இந்த நிலையில் ஒரு நாள் அவர் உணவருந்தும்போது நாய் ஒன்று தொல்லை தந்தது. அவர் அதை விரட்டினார். கோபம் கொண்ட நாய், 'நீ நாயாக பிறப்பாய்!' என்று அவரை சபித்தது. இதனால் மிகவும் வருந்திய பிரகஸ்பதி இறுதியில், பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றாராம். எனவே, இங்கு வழிபட்டால் குரு தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.
இந்தத் தலம் கட்டப்பட்ட காலம் கி.பி.1053 என்பர். பிற்காலத்தில் (14-ஆம் நூற்றாண்டு) சோழர்கள் (முதலாம் குலோத்துங்கன், விக்கிரமன் முதலானோர்) இந்தக் கோயிலை விரிவுபடுத்தியதுடன், மேற்கு நோக்கி நரசிம்ம விக்கிரகத்தை அமைத்தனர். மேலும் கரு மாணிக்கப் பெருமாள், பெருந்தேவித் தாயார், அனந்தாழ்வார் சந்நிதிகளையும், அபிஷேக மண்டபத்தையும் அமைத்தனராம்.
விஜய நகர மன்னர்கள்- கோபுரம், ஊஞ்சல் மண்டபம், ஆண்டாள் சந்நிதி, நவராத்திரி மண்ட பம் மற்றும் கல்யாண மண்டபம் ஆகியவற்றை அமைத்தனர். விஜய நகர மன்னர்கள் வரதர் கோயிலுக்கு 17 கிராமங்களை மான்யமாக வழங்கி யதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அச்சுத தேவராயர், திருமலை மன்னர் ஆகியோரும் நில தானம், திருப்பணிகள் செய்ததுண்டு.
மேற்கு நோக்கிய ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரம் (சுமார் 160 அடி உயரம்) 9 நிலைகளுடனும் மேற்கு கோபுரம் (சுமார் 130 அடி உயரம்) 7 நிலைகளுடனும் திகழ்கின்றன. கிழக்கு கோபுரத்தை கிருஷ்ணதேவ ராயரும், மேற்கு கோபுரத்தை பல்லவர்களும் கட்டியுள்ளனர். இவை தவிர, தொண்டரடிப்பொடி வாயில் கோபுரம், ஸ்ரீகருடன் சந்நிதி வாயில் கோபுரம் உட்பட இன்னும் 4 கோபுரங்களும் இங்கு உண்டு. 1937-ல் கொடிமரம் சீர் செய்யப்பட்டு, அதன் பிறகு புண்ணியகோடி விமானமும், புனரமைக்கப்பட்டு 27.1.1991-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஐந்து பிராகாரங்களுடன் காணப்படும் இந்தக் கோயில் வாரணகிரி மற்றும் அத்திகிரி எனும் இரு தளங்கள் கொண்ட கட்டுமலை அமைப்புடன் காணப்படுகிறது. வாரணகிரியில் அழகிய சிங்கரையும், அத்திகிரியில் வரதராஜ பெருமாளையும் தரிசிக்கலாம். இந்தக் கட்டுமலையை பாண்குன்று கல், அஞ்சனவெற்பு, மணிக் குன்று, அஸ்தகிரி, கரி கிரி, வாரண வெற்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடுவர்.
மாட வீதி எனப்படும் வெளிப்பிராகரத்தில் மேற்கு கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் இடப்புறம் நூற்றுக்கால் மண்டபம். முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒப்பனை செய்யும் பெண், விஸ்வாமித்ரர் யாகம், சீதா கல்யாணம், வாலி வதம், ராமபிரானின் கணையாழியை சீதாவிடம் தரும் அனுமன், கிளி வாகனத்தின் மீது ரதிதேவி, அன்ன வாகனத்தின் மீது மன்மதன், சஞ்சீவி பர்வதத்தை தூக்கி வரும் அனுமன் மற்றும் தசாவதார காட்சிகள் என்று சிற்ப களஞ்சியமாகத் திகழ்கிறது நூற்றுக் கால் மண்டபம். இதன் ஒவ்வொரு மூலையிலும் விதானத்தில் தொங்கும் கருங்கல்லினால் ஆன சங்கிலிகள் சிற்ப அற்புதம்!
உண்மையில் இதில் 96 தூண்களே உள்ளன. இதன் மையத்தில் பிரமாண்டமான மேடை ஒன்று விமானம் மற்றும் நான்கு மரத் தூண்களுடன் அமைந்துள்ளது. இவற்றையும் சேர்த்தே நூறுகால்! விசேஷ நாட்களில் உற்சவ மூர்த்தியர் இந்த மேடையில் எழுந்தருள்கின்றனர்.
இந்த மண்டபத்தின் அருகே அனந்த சரஸ் எனும் தீர்த்தம். சனிக்கிழமைகளில் இதில் நீராடுவோருக்கு காவிரியில் நீராடிய பலன் கிடைக்குமாம். ஆதிசேஷன் இதில் நீராடி பூமியைத் தாங்கும் வல்லமை பெற்றாராம். இதை சேஷ தீர்த்தம் என்றும் கூறுவர். இதன் நடுவில் நீராழி மண்டபம் ஒன்றைக் காணலாம். இதன் அடியில் நீருக்குள் வெள்ளிப் பேழை ஒன்றில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீஅத்தி வரதர்.
ஒரு முறை அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய வரதர், ''யாகத் தீயில் தோன்றியதால் என் உடல் எப்போதும் வெப்பத்தால் தகிக்கிறது. எனவே, தின மும் மூன்று வேளை நூற்றுக்கணக்கான குடங் களில் நீர் கொணர்ந்து எனக்கு திருமஞ்சனம் செய். இது இயலாவிடில், எம்மை நிரந்தரமாக அனந்த சரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்!'' என்று பணித்தார். அர்ச்சகரும், தினமும் நூற்றுக்கணக்கான குடங்களில் நீர் கொணர்ந்து அபிஷேகிப்பது சிரமம் என்பதால், அத்திவரதரைத் திருக்குளத்திலேயே பிரதிஷ்டை செய்ய தீர்மானித்தார். அதன்படி ஒரு வெள்ளிப் பேழையில் வைக்கப்பட்ட அத்திவரதர் நீருக்குள் உறைந்தார். 'இனி, மூலவருக்கு எங்கே போவது?' என்று கவலை கொண்டார் அர்ச்சகர். அவரது கனவில் மீண்டும் தோன்றிய அத்திவரதர், பழைய சீவரம் என்ற இடத்தில் தன்னைப் போன்றே மற்றொரு வரதர் இருப்பதாகக் கூறி, அவரை இங்கு கொண்டு வந்து எழுந்தருளச் செய்யும்படி பணித்தார். அத்துடன் நீருக்குள் இருக்கும் தன்னை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே கொண்டு வந்து ஒரு மண்டலம் ஆராதித்த பிறகு, மீண்டும் நீருக்குள் வைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார் (எந்தத் தலைமுறையினருக்கும் தன்னை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காகவே 40 ஆண்டுகள் என்ற கணக்கைச் சொன்னாராம் வரதர்!). அதன்படியே எல்லாம் நடந்தன. ஒருவர் 80 வயது வரை வாழ்ந்தால் இரு முறை இந்த வரதரை தரிசிக்கலாம்.
கடந்த 1979-ஆம் ஆண்டில் வெளியே எழுந்தருளிய அத்திவரதர் வசந்த மண்டபத்தில் ஒரு மண்டல காலம் பக்தர்களுக்கு தரிசனம் அருளினார். அப்போது, திருப்பதி கோயிலில் இருந்து பட்டாடை முதலியன அத்திவரதருக்கு அனுப்பப்பட்டு சிறப்பு செய்யப்பட்டதாம். இனி 15.7.2019-ல் அத்தி வரதரை தரிசிக்கலாம்.
அனந்த சரஸ் குளத்தின் கரையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது. உள்ளே 16 ஆயுதங்கள் தரித்து சேவை சாதிக்கிறார் ஸ்ரீசக்கரத்தாழ்வார். இந்த விக்கிரகத்தின் மறுபுறம் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி. அதாவது ஒரே விக்கிரகத்தில் முன்னும் பின்னுமாக இரு மூர்த்திகள். அருகே, உற்சவர் விக்கிரகம்.
அனந்த சரஸ் தீர்த்தக்குளம் தவிர ப்ரஹ்ம தீர்த்தம், ஸ்வர்ண பத்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், குஸ தீர்த்தம், வேகவதி ஆறு ஆகிய தீர்த்தங்களும் இங்கு உண்டு.
அனந்த சரஸ் திருக்குளத்தின் மேற்கில் வேணு கோபாலன் மற்றும் பூவராகன் ஆகியோரது சந்நிதி கள். குளத்தின் வடகரையில் ஸ்ரீரங்கநாதர் சந்நிதி. இந்த சந்நிதிகளை தரிசித்து, திருக்குளத்தைக் கடந்து சென்றால் ஆழ்வார் வீதி எனப்படும் முதல் பிராகாரம். பொதுவாக 'ஆழ்வார்' என்றால் நம்மாழ்வாரையே குறிக்கும். இவர், 'அவர் வீதி' என்று வேண்டி பாடியதால், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும்போதெல்லாம் இந்த வீதியிலேயே முதலில் எழுந்தருள்கிறார். எனவே இது, நம்மாழ்வாரை சிறப்பிக்கும் வகையில் ஆழ்வார் வீதி எனப்படுகிறது. இங்கு ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களது சந்நிதிகளை தரிசிக்கலாம். நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், உடையவர், வேதாந்த தேசிகர் ஆகியோருக்கு மட்டும் தனிச் சந்நிதிகள். முற்காலத்தில் இந்த பிராகாரத்தின் வடக்கில் இருந்த துரை தோட்டம் என்ற இடத்தில் இருந்த ஆழ்வார்கள் சந்நிதிகள் இப்போது சிதிலமடைந்து விட்டனவாம்.
நம்மாழ்வாருடன் மதுரகவி, நாதமுனிகளும் எழுந்தருளி உள்ளனர். உடையவர் சந்நிதியில் முதலாழ் வார்கள் மூவர், திருமழிசை பிரான், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரையும் ஆளவந்தார், கூரத்தாழ்வான் ஆகிய ஆசார்யர்களையும் தரிசிக்கலாம். தொடர்ந்து மேற் கில் திருக்கச்சி நம்பிகள் சந்நிதி. கொடிமரத்துக்கு முன்னுள்ள வேதாந்த தேசிகன் சந்நிதியில் கோடிகா தானம் ஸ்ரீலக்ஷ்மி குமாரதேசிகனும் அவர் மனைவி அம்மங்காரும் உள்ளனர் (கி.பி.14 முதல் 16-ம் நூற்றாண்டு வரை விஜய நகர சமஸ்தானம் ஆட்சியில் காஞ்சி இருந்தது. அப்போது இருந்த தாததேசிகன் என்பவர் இந்தக் கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தார். இவர் பரம்பரையில் வந்தவரே கோடிகாதானம் லக்ஷ்மி குமார தேசிகன். இவரும் பல திருப்பணி செய்துள்ளாராம்).
இங்குள்ள அம்மாள் காலட்சேபக் கூடம் குறிப்பிடத் தக்கது. வேதாந்த தேசிகரின் குரு நடாதூர் வரதாச்சார்யார் தினமும் பெருமாளுக்கு பாலை ஆற்றி அமுது செய்து வந்தவர். இவ்வளவு வாஞ்சையுடன் தாயைப் போல் செயல்பட்டதால், பெருமாள் இவரை 'அம்மாள்' என்று அழைத்தாராம். இவர்தம் சீடர்களுக்கு உபதேசிக்கும் இடமே காலட்சேபக் கூடம்.
ஆழ்வார் பிராகாரத்தில் இருந்து 4-ஆம் பிராகாரத்துக்குள் (ஆளவந்தார் பிராகாரம், மடைப்பள்ளி பிராகாரம்) ஒரு கோபுர வாயில் வழியே நுழைகிறோம். இந்த வாயிலை தோடர்மால் வாயில் என்பர். இதில் உற்சவ காலங்களில் பெருமாள் எழுந்தருளும் கண்ணாடி அறை, அபிஷேக மண்டபம், வாகனக் கிடங்கு, ஸ்ரீராமன் சந்நிதி, திருவனந்தாழ்வான் சந்நிதி, கருமாணிக்கப் பெருமாள் சந்நிதி, மடைப்பள்ளி, ராப்பத்து விழா மண்டபம் மற்றும் பெருந்தேவி தாயார் சந்நிதி ஆகியன உள்ளன.
தனிச் சந்நிதியில் பெருந்தேவி தாயார், கல்யாண கோடி விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி இரு தாமரை மலர்களை ஏந்தி, அபய- வரத கரங்களுடன், பட்டாடை- அணிமணிகளுடன் பொன் மகுடம் தரித்து, அமர்ந்த கோலத்தில் கருணை நாயகியாகக் காட்சி தருகிறார். 'மஹா தேவ்யை' என்ற வாக்கியத்தையே திருநாமமாகக் கொண்டு பெருந்தேவி தாயார் எனப்படுகிறார். இவருக்கு அரித்ரா தேவி, மகாதேவி ஆகிய பெயர்களும் உண்டு. அருகில் தாயாரின் உற்சவர்.
திருமகள், பிருகு மகரிஷியின் புத்திர காமேஷ்டி யாகத்தில் ஸ்ரீபெருந்தேவி தாயாராக அவதரித்து, பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரை பூஜித்து வந்தாராம். அவருக்கு அருள் புரிய திருவுளம் கொண்டார் பெருமாள். அதன்படி- பரமசிவன், பிரம்மர், பிருகு மகரிஷி, காசிபர், கண்வர், காத்தியாயனர், ஹரிதர் முதலிய முனிவர்கள் மற்றும் தேவர்கள் முன்னிலையில் ஸ்ரீபெருந்தேவியின் கரம் பற்றினாராம் வரதராஜர்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் மட்டுமே திருவீதி உலா வருவார். பெருந்தேவி தாயாருக்கு திருவீதி புறப்பாடு கிடையாது. எனவே தாயாரை, 'படிதாண்டாப் பத்தினி' என்பர்.
ஸ்ரீவேதாந்த தேசிகர் மீது பொறாமை கொண்ட சிலர், அவரை அவமானப்படுத்த எண்ணினர். ஒரு முறை காஞ்சிக்கு வந்த பிரம்மச்சாரியான வறியவன் ஒருவனை ஸ்ரீவேதாந்த தேசிகரிடம் சென்று பொருள் வேண்டும்படி ஏவினர். அவனும் சென்றான். கயவர்களது எண்ணத்தைப் புரிந்து கொண்ட தேசிகர், ஸ்ரீபெருந்தேவி தாயாரை வேண்டி ஸ்ரீதுதி பாடினார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீதாயார், பொன் மழை பெய்வித்து தேசிகரது பெரு மையை உலகறியச் செய்தாராம்!
வட நாட்டுத் தொழில் அதிபர் ஒருவர் வரதர் சந்நிதிக்கு வெள்ளித் தகடுகள் வேய்ந்த கதவுகளை தயார் செய்தார். அதை மூலவர் சந்நிதிக்குப் பொருத்த முயன்றபோது, சரியாகப் பொருந்தவில்லை. அப்போது அங்கு வந்த அர்ச்சகர் ஒருவர் கதவுகளை தாயார் சந்நிதியில் மாட்டச் சொன்னார். அப்படியே செய்தனர்; கதவுகளும் சரியாக பொருந்தின. அதன் பிறகு, வெள்ளி வேயப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட வேறு கதவுகள் தயார் செய்யப்பட்டு மூலவர் சந்நிதியில் பொருத்தப்பட்டதாம். பின்னர், கதவுகளை தாயார் சந்நிதியில் பொருத்துமாறு சொன்ன அர்ச்சகரை தேடியபோது அவரைக் காணவில்லை. எனில், அர்ச்சகராக வந்தது பெருமாளே என்று கருதினராம்! இப்படி பெருமாளே, தாயாருக்கு முக்கியத்துவம் தந்து ஆணையிட்டதால், இன்றும் தாயாரை தரிசித்த பிறகே பெருமாளை தரிசிக்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.
தாயார் சந்நிதி உள்ள பிராகாரத்தில் இருந்து உள் பிராகாரத்துக்கு மற்றுமொரு கோபுர வாயில் வழியே நுழைகிறோம். இதன் நேர் மேற்கில் கருடன் சந்நிதி. கிழக்கில் எதிர்ப் புறம் ஸ்ரீஅழகிய சிங்கர் எனப்படும் நரசிம்மர் சந்நிதி. மேலும் இந்த பிராகாரத்தில் ஆண்டாள் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதிகளை தரிசிக்கலாம். இவரை முன்னிட்டு இந்த பிராகாரம் சேனையர்கோன் திருமுற்றம் எனப்படுகிறது. இதன் வடகிழக்கு மூலையில் தீர்த்தக் கிணறான பிரம்ம தீர்த்தம். தென் கிழக்கு மூலையில் தன்வந்திரி சந்நிதி. தென் மேற்கு மூலையில் வலம்புரி விநாயகர் சந்நிதி. இவர், தும்பிக்கை ஆழ்வார் என்றில்லாமல் வலம்புரி விநாயகர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுவது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பு. இந்த பிராகாரத்திலேயே மலையாள நாச்சியார் சந்நிதியும் உள்ளது. இந்தப் பிராகாரத்தில் இருந்து அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகின்றனவாம். கருவறையில் புண்ணியகோடி விமானத்தின் கீழ், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீதேவராஜர். இவருக்கு தேவ பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், பேரருளாளன், தேவாதிராஜன், யக்ஞோத் பவர், கஜேந்திர வரதர், தேவராஜ ஸ்வாமி, மாணிக்க வரதன், பிரணதார்த்திஹரன் ஆகிய வேறு நாமங்களும் உண்டு.
திருவேங்கடத்தான்- ஸ்ரீகிருஷ்ணாம்சம் கொண்டவர். ஸ்ரீரங்கநாதர்- ஸ்ரீராமர் அம்சம் கொண்டவர். காஞ்சி வரதரோ இரண்டும் சேர்ந்து 'ராம கிருஷ்ண' அம்சத்துடன் விளங்குகிறார்.
சித்ரா பௌர்ணமி அன்று பிரம்மதேவன் இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். இதையடுத்த 14 நாட்கள் மாலைக் கதிரவனின் கிரணங்கள் மூலவரின் திருப்பாதங்களைத் தழுவுமாறு கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
உண்மை வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் ஸ்ரீவேதாந்த தேசிகரது, 'அடைக் கலப் பத்து' என்ற பாசுரங்களை வெள்ளிப் பதக்கங் களில் பொறித்து ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர். தவிர, திருவத்தியூரன் மீது அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச் சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் வரதராஜ ந்யாஸ தசகம் உட்பட இன்னும் பல நூல்களையும் இயற்றியுள்ளார் வேதாந்த தேசிகர்.
ஸ்ரீவரதனை போற்றி ஸ்ரீதியாகராஜர் 'வரதா நவ நீ தாசா... வரத ராஜ நிந்நு கோரி...' என்றொரு கீர்த்தனை பாடியுள்ளார்.
எம்பெருமானை சேவிக்க உகந்த வேளை, உஷத் காலம் என்பர். அப்போது, 'திருப்பள்ளியெழும் பெருமாளின் கழுத்தில்... பெருந்தேவி தாயார், வரதரை இறுக அணைத்து சயனித்திருந்ததால் பதிந்திருக்கும் பொன் வளையல்களின் தழும்புகள் காணப்படுமாம். இதனால் மலர்ச்சியுடன் திகழும் பெருமாளை இந்த வேளையில் தரிசிப்பது, மகத்தானது!' என்கிறார் வேதாந்த தேசிகர்.
இந்த பெருமாளுக்கு சூட்டப்படும் தங்கக் கொண்டை பிரசித்திப் பெற்றது. 19-ஆம் நூற்றாண் டில் வெங்கடாத்ரி என்கிற தெலுங்கு வைணவர் ஸ்ரீரங்கத்திலுள்ள பெருமாளுக்கு சில தங்க ஆபரணங் கள் வழங்கினார். அவர் காஞ்சிக்கு வந்தபோது ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு தங்கக் கொண்டை அளிக்க விரும்பினார். அதற்கான போதிய பணம் இல்லாததால் யாசகம் செய்து பொருள் சேர்த்தார். திருப்பணி முடியும் தறுவாயில் ஒரு சோதனை! ஆபரணத்தின் நடுவில் பதிக்க வேண்டிய எமரால்ட் கற்களை, நகைத் தொழிலாளி தன் ஆசை நாயகியான நடன மாது ஒருத்தியிடம் கொடுத்து விட்டான். அவள் தஞ்சையில் இருந்தாள். இதை அறிந்த வெங்கடாத்ரி தஞ்சை சென்று, நடன மாதுவிடம் கற்களை தருமாறு வேண்டினார். அவள் மறுத்து விட்டாள். இறுதியில் அவள் வீட்டு வாயிலில் உண்ணாவிரதம் இருந்து, எமரால்டு கற்களைப் பெற்று வந்து ஆபரணம் செய்து முடித்து பெருமாளுக்கு அணிவித்தார் வெங்கடாத்ரி. 'அதைப் போன்ற ஆபரணங்களை பூதேவி- ஸ்ரீதேவி நாச்சியார்களுக்கும் அளிக்க வேண்டும்!' என கனவில் தோன்றி, பெருமாள் வேண்டிக் கொள்ள அவர்களுக்கும் விலை உயர்ந்த கொண்டைகளை அணிவித்தார் வெங்கடாத்ரி. இவர் கவி பாடுவதிலும் வல்லவராம்.
ஆற்காடு யுத்தத்தின்போது நோய்வாய்ப்பட்ட ராபர்ட் கிளைவ், ஸ்ரீவரதரின் துளசி தீர்த்தம் பருகி, நோய் நீங்கப் பெற்றாராம். இதற்கு நன்றிக்கடனாக போரில் வெற்றி பெற்றுத் திரும்பும்போது, விலை உயர்ந்த மகர கண்டி (கழுத்தில் அணியும் ஆபரணம்) ஒன்றை வரதராஜருக்கு சமர்ப்பித் தாராம்.
ஒரு பிரம்மோற்சவத்தின்போது பெருமாளை தரிசித்த கிளைவ், ஸ்வாமியின் தெய்வீக தோற்றத்தில் மனமகிழ்ந்து, தன் மனைவியின் தங்கச் சங்கிலியை ஸ்ரீவரதனுக்கு அணிவித்து மகிழ்ந்தாராம். இன்றும், இந்த ஆபரணத்தை கருட சேவையின்போது வரதருக்கு அணிவிப்பார்கள் என்றும் கூறுவர்.
19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆங்கிலேய அதிகாரியான பிளேஸ் துரை என்பவர், ஸ்ரீவரதருக்கு தலையில் அணியும் தங்க ஆபரணத்தை அன்பளிப் பாகத் தந்து மகிழ்ந்தாராம்.
ஸ்ரீவரதராஜர் என்ற பெயர் இங்குள்ள உற்சவரையே குறிக்கும். எல்லா வைணவத் திருக் கோயில்களிலும் உற்சவருக்கு இரு புறமும், முறையே ஸ்ரீதேவி- பூதேவி நாச்சியார்கள் இருப்பர். ஆனால், இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவரின் இருபுறமும் ஸ்ரீபூமாதேவியே அருள் பாலிக்கிறார். மாலிக்காபூரின் படையெடுப்பின்போது, பாதுகாப்பு கருதி இங்கிருந்த உற்சவ விக்கிரகங்கள் உடையார்பாளையம் ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. போர் அபாயம் நீங்கி, மீண்டும் உற்சவர்களை எடுத்து வந்தபோது இரண்டு உபய நாச்சியார்களும் பூமி பிராட்டியாகவே அமைந்து விட்டனராம்!
பிரம்மனின் யாகத்தில் இருந்து தோன்றியவர் என்பதால், வெப்பத்தின் காரணமாக பெருமாளின் திருமுகத்தில் வடுக்கள் ஏற்பட்டனவாம். அவற்றை உற்சவரின் திருமுகத்தில் காணலாம்.
ஸ்ரீவரதராஜர் கோயிலில் உள்ள 'வையமாளிகை பல்லி' தரிசனம் சிறப்பானது. ஸ்ரீஸ்ருங்கி பேரர் எனும் முனிவரின் குமாரர்கள் ஹேமன் மற்றும் சுக்லன். இவர்கள் கௌதம முனிவரிடம் வேதம் பயின்று வந்தனர். தினமும் குருவின் பூஜைக்குத் தேவையான தீர்த்தம் மற்றும் ஹோம சமித்துகளை சேகரித்துத் தருவது இவர்களின் வழக்கம். ஒரு நாள் குரு முன் வைத்த தீர்த்தக் குடத்தில் இருந்து இரண்டு பல்லிகள் துள்ளிக் குதித்து வெளியேறின. சீடர்களது கவனக்குறைவே இதற்குக் காரணம் என்று எண்ணிய கௌதமர், இருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார். பிறகு, தவறுணர்ந்து சாப விமோசனம் வேண்டிய சீடர்களிடம், ''ஒன்றுக்கு நூறாக பலன் தரும் சத்தியவிரத சேத்திரம் (காஞ்சி) சென்று ஸ்ரீவரதராஜரை தியானித்து தவம் செய்தால் நலம் பெறலாம்!'' என்றார் குரு. அதன்படியே, சீடர்கள் இருவரும் பல்லி ரூபத்தில் இங்கு வந்து தவம் செய்தனர். பிற்காலத்தில், யானை ரூபத்தில் இருந்த இந்திரன், ஸ்ரீநரசிம்மர் அருளால் சுயரூபம் அடைந்த போது இவர்களும் சாப விமோசனம் பெற்றனர்.
இவர்களின் கதையைக் கேட்டறிந்த இந்திரன் தங்கம்- வெள்ளியாலான இரு பல்லி ரூபங்களை இங்கு பிரதிஷ்டை செய்தான். இதைத் தொட்டு வணங்கு பவர்களுக்கு சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
அயோத்தி மன்னன் சகரனின் மகன் அசமஞ்சனும், அவன் மனைவியும் சாபத்தால் பல்லிகள் ஆயினர். பின்னர் உபமன்யு முனிவரது அறிவுரைப்படி இங்கு வந்து ஸ்ரீவரதராஜரை தரிசித்து அருள்பெற்றனர். இவர்கள் நினைவாக அமைந்ததே பல்லி ரூபங்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் இட்லி பிரசாதம் பிரசித்திப் பெற்றது. இதற்காகத் தனியே இரு மூங்கில் கூடை பயன்படுத்தப்படுகிறது. இரண்டரை படி பச்சரிசி, ஒன்றரை படி உளுந்து ஆகியவற்றை முதல் நாள் மாலையில் அரைத்து அந்த மாவுடன், உப்பு- மிளகு- சீரகம்- சுக்கு ஆகியவற்றை இடித்துக் கலந்து, மூடி வைப்பர். மறு நாள் மாவுடன் அரைப் படி புளித்த தயிர், ஒரு கரண்டி நெய் ஆகியன சேர்த்து பெரிய மண் பானையில் இட்டு வேக வைப்பர். பிறகு, இந்த இட்லியை சுவாமிக்கு நிவேதித்து, முக்கால் பாகத்தை மட்டும் உதிர்த்து வெண் பொங்கலுடன் சேர்த்து பக்தர்களுக்கு விநியோகிப்பர்.
பெருமாளுக்கு துளசி மாலை, தாயாருக்குப் புடவை சாத்துதல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைத்தல் ஆகியன இங்கு நேர்த்திக் கடன்களாக இருக்கின்றன
பசித்ரா பௌர்ணமியன்று இரவு 12 மணிக்கு மேல் இங்கு பிரம்மா வந்து வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்று, பெருமாளுக்கு பிரசாதம் படைத்து விட்டு பட்டர்கள் வெளியே வந்து விடுவர். ஒரு நாழிகை கழித்து உள்ளே சென்றால், பிரசாதம் நறுமணத்துடன் திகழுமாம்!
இங்கு 'பாஞ்சராத்திர' முறைப்படி வழிபாடுகள் நிகழ்கின்றன. மந்த்ராஸநம்- திருப்பள்ளி எழச் செய்வது, ஸ்நாநாஸநம்- திருமஞ்சனம், அலங்காரஸநம்- பட்டாடை- மாலைகள்- ஆபரணம் அணிவித்தல், போஜ்யாஸநம்- அமுது படைத்தல்/தளிகை சமர்பித்தல், புநர் மந்த்ராஸநம்- துளசியால் அர்ச்சிக்கப்பெறுவது, பர்யங்காஸநம்- பள்ளி அறை பூஜை... இந்த முறைப்படி பூஜைகள் நிகழ்கின்றன. இந்த நிலைகளில் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களும், சாற்று முறைகளும் நிகழும்.
வெள்ளிக்கிழமை தோறும் பிராகாரங்களுக்குள் பிராட்டியார் திருவீதி உலா வருவார். ஏகாதசி தோறும் பெருமாள் உலா நடைபெறும். வெள்ளியும் ஏகாதசியும் சேர்ந்து வரும் நாளில் பெருமாளும் பிராட்டியும் சேர்ந்து உலா வருவர்.
இந்த ஆலயத்தில், 12 மாதங்களும் திருவிழா நடைபெறுகிறது. அவை: சித்திரை- தமிழ் வருட பிறப்பு; திரு அவதார உற்சவம்; சித்ரா பௌர்ணமி, தோட்டோற்சவம்; ஸ்ரீராமநவமி; ஸ்ரீபாஷ்யகார சாற்று முறை; ஸ்ரீமதுரகவிகள் சாற்றுமுறை, வைகாசி- பிரம்மோற்சவம்; வசந்தோற்சவம்; ஸ்ரீநம்மாழ்வார் சாற்று முறை; ஸ்ரீநரசிம்ம ஜயந்தி,ஆனி- கோடை உற்சவம்; கருட சேவை; ஸ்ரீபெரியாழ்வார் சாற்று முறை; ஸ்ரீவைனதேய ஜயந்தி; ஸ்ரீசுதர்சன ஜயந்தி; ஸ்ரீமந் நாதமுனிகள் சாற்று முறை; ஸ்ரீபேரருளாளன் ஜ்யேஷ்டாபிஷேகம்; ஸ்ரீபெருந்தேவியார் ஜ்யேஷ்டாபிஷேகம், ஆடி- திருவாடிப்பூர உற்சவம்; கஜேந்திர மோட்ச கருட சேவை; ஸ்ரீஆளவந்தார் சாற்று முறை, ஆவணி- ஸ்ரீஜயந்தி, புரட்டாசி- ஸ்ரீதூப்புல் தேசிகன் மங்களாசாஸனம்; திருக்கோயில் தேசிகன் சாற்று முறை; நவராத்திரி; விஜயதசமி பார்வேட்டை, ஐப்பசி- தீபாவளி; ஸ்ரீசேனைநாதன் சாற்றுமுறை; ஸ்ரீபொய்கை ஆழ்வார் சாற்று முறை; ஸ்ரீபூதத்தாழ்வார் சாற்று முறை; ஸ்ரீபேயாழ்வார் சாற்று முறை; ஸ்ரீமணவாள முனிகள் சாற்றுமுறை, கார்த்திகை- கைசிக புராண படனம்; பரணி தீபம்; திருக்கார்த்திகை; ஸ்ரீதிருப்பாணாழ்வார் சாற்று முறை; ஸ்ரீலக்ஷ்மிகுமார தாததேசிகன் சாற்றுமுறை, மார்கழி -ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் சாற்று முறை; திருவத்யயன உற்சவம்; பகல் பத்து-ராப்பத்து வைபவம்; அனுஷ்டான குள உற்சவம்; ஆண்டாள் நீராட்டு உற்சவம்; போகி திருக்கல்யாணம், தை-சங்கராந்தி; சீவரம் பார் வேட்டை; தெப்போற்சவம்; தைப்பூசம்; ஸ்ரீதிருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை; வனபோஜன உற்சவம்; ரதசப்தமி உற்சவம்; மாசி- தவனோற்சவம், பங்குனி-திருக்கல்யாணம், பல்லவோற்சவம்.
பழைய சீவரம், மங்களகிரி, ஐயங்குளம், ராஜகுளம் முதலான வெளியூர்களிலும் காஞ்சி வரதருக்கு வருடாந்தர திருவிழாக்கள் உண்டு.
கள்ளழகர் வைகையில் இறங்குவது போல, ஸ்ரீவரதராஜ பெருமாள், காஞ்சி புரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலாற்றில் இறங்கும் 'நடபாவி உற்சவம்' சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.
மொகலாயர் படையெடுப்பின்போது காஞ்சி வரதராஜர் (உற்சவமூர்த்தி), காஞ்சிக்கு அருகில் வந்தவாசி செல்லும் பாதையில் 4 கி.மீ. தொலைவில் பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு லட்சுமி நரசிம்மர் கோயிலில் அடைக்கலம் புரிந்தார். ஒரு வருட காலம் அவருக்கு திருமஞ்சனம் மற்றும் உற்சவங்களும், செவிலிமேட்டில் நடைபெற்று வந்தது. இதன் அடையாளமாக ஒவ்வொரு வருடம் சித்ரா பௌர்ணமி விழாவில் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி திரும்பும்போது செவிலிமேடு லட்சுமி நரசிம்மரை வலம் வந்து செல்கிறார்.
பொங்கல் அன்று இரவு பத்து மணிக்கு பார்வேட்டைக்குக் கிளம்பும் காஞ்சி வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள சீவரம் நரசிம்மர் கோயிலுக்கு செல்வார். பாசுரம் பாடியபடி அடியார்களும் உடன் வருவர். அங்கு 'வனபோஜனம்' விழா சிறப்பாக நடந்து முடிந்ததும், மறு நாள் பகல் 12 மணியளவில் வரதர், 140 படிகள் ஏறிச் சென்று குன்றின் மீது இருக்கும் நரசிம்மபெருமாள் சந்நிதியை அடைகிறார். பிறகு, அங்கிருந்து ஸ்ரீவரதராஜ பெருமாளும், ஸ்ரீபுரம் நரசிம்மரும் 'திருமுக்கூடல்' எனும் இடத்தில் உள்ள ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலுக்குப் புறப்படுவர். மூன்று பெருமாள்களும் அன்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
இங்கு, கருடசேவை வருடத்துக்கு மூன்று முறை அதாவது வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி மாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய வைபவங்களின்போது நடைபெறுகிறது.
முகம்மதியர் ஆதிக்கத்தின்போது காஞ்சி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களில் இருந்த உற்சவ மூர்த்திகள் பாதுகாப்பு கருதி, உடையார்பாளையம், ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பிற்காலத்தில் உடையார்பாளையத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு உற்சவர் விக்கிரகங்களை எடுத்து வர, ஆத்தான் ஜீயர் என்ற பெரியவர், தோடர்மால் என்பவர் மற்றும் சலவை தொழிலாளி ஒருவர் ஆகியோர் உதவினர். அவற்றில், எது காஞ்சி வரதர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, மூர்த்திகளின் திரு ஆடையை முகர்ந்து பார்த்த சலவைத் தொழிலாளி குங்குமப்பூ வாசனையை வைத்து காஞ்சி வரதரைக் கண்டுபிடித்தாராம்! நவராத்திரி விழாவின்போது சலவைத் தொழிலாளி வம்சத்தவர்களுக்கு மாலை- மரியாதைகள் அளிக்கப்படுகின்றன. தோடர்மால் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு விக்கிரகங்கள் ஏற்படுத்தப்பட்டு, இன்றும் அவை காஞ்சி வரதராஜர் கோயிலில் பாதுகாக்கப்படுகின்றன. இப்படி வரதர் மீண்டும் காஞ்சிக்கு வந்தது, பங்குனி உத்திரட்டாதி திருநாள் (1710-ஆம் ஆண்டு). இந்த நாளை உடையார் பாளையம் விழாவாகக் கொண்டாடுவர். இந்த உற்சவத்தின்போது ஸ்ரீவரதர் நாலு மாட வீதிகளில் புறப்பாடு செய்து சேவை சாதிப்பார்.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள்- சூரிய உதயத்தில் கோபுர வாயிலில் கருட வாகனத்தில், குடையின் கீழ் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீகாஞ்சி வரதர். அப்போது சில நிமிட நேரம்... குடைகளால் ஸ்ரீவரதரை மறைத்து விடுவர். இதுவே தொட்டாச்சார்யர் சேவை எனப்படும்.
சோளிங்கபுரத்தில் வாழ்ந்தவர் தோட்டாச்சார்யர். இவர், ஆண்டுதோறும் வைகாசி உற்சவத்தின்போது கருட சேவையைக் காண காஞ்சிக்கு வருவது வழக்கம். ஒருமுறை அவரால் காஞ்சிக்கு வர இயலவில்லை. சோளிங்கபுரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் நின்றவாறே வரதனின் கருட சேவையை நினைத்து நெக்குருகினார். அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர். இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதாவது பெருமாள் இங்கு மறைந்து அங்கு தோன்றுவதாக ஐதீகம்.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் அன்று காஞ்சி ஸ்ரீவரதராஜர், ஸ்ரீவேணுகோபாலன் அலங்காரத்தில் வீதி புறப்பாடு கண்டு திரும்பியதும் மாலைகள் எல்லாம் களைந்த பிறகு, திருவாபரணங்கள் (நகைகள்), வெள்ளி விதானம் (பந்தல்) ஆகியவற்றுடன் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டு அழைத்து வரப் படுவார். அப்போது நாகஸ்வரம் முழங்க அசைந்து வரும் அவரது (பெருமாளை சுமந்து வரும் அழகு) நடையழகே அழகு!
ஒரு முறை யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீராமானு ஜரிடம் வாதிட வந்தார். 18 நாட்கள் விவாதம் நடந்தது. 17-ஆம் நாளன்று ராமானுஜரால் யக்ஞ மூர்த்தியிடம் வாதிட்டு அவரை எதிர்கொள்ள முடியவில்லை. தம்மால் வைணவத்துக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று கலங்கினார். இரவு இதே கவலையால்
காஞ்சிப் பேரருளாளனான வரதராஜ பெருமாளை நினைத்தபடி படுத்த அவருக்குத் தூக்கம் வரவில்லை. எனினும் இடையில் தம்மை அறியாமல் தூங்கி விட்டார். அப்போது வரதராஜர் அவர் கனவில் தோன்றி, 'யாம் இருக்கிறோம். கவலைப்பட வேண்டாம். ஆளவந்தாரின் மாயாவாத கண்டனத்தைக் கொண்டு வாதிட்டு யக்ஞமூர்த்தியை வெல்வீராக!' என்று கூறினார்.
தூக்கம் விழித்து எழுந்த ராமானுஜர் காலையில் எழுந்து நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து விட்டு யக்ஞமூர்த்தியிடம் வாதாடச் சென்றார். தேஜஸ§டன் ராமானுஜர் நடந்து வருவதைக் கண்டு பதறிய யக்ஞமூர்த்தி, ராமானுஜரின் கால்களில் விழுந்து சரணடைந்தார். பிறகு ''தாங்கள் பெருமை தெரியாமல் தங்களை வாதாட அழைத்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டும். என்னையும் தங்களின் சீடனாக ஏற்று அருள் புரிய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ராமானுஜரும் காஞ்சி வரதராஜரின் அனுக்கிரகத்தை எண்ணி மனதார வணங்கி, யக்ஞமூர்த்தியை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.
திருக்கச்சி நம்பிகள் என்ற (அந்தணரல்லாத) பக்தர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு விசிறி கைங்கரியம் செய்து வந்தார். அவருடன் நேரடியாகப் பேசி வந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் தம்முடைய கட்டளைகளை அவர் மூலமாகவே ஸ்ரீராமானுஜருக்கு தெரிவித்து வந்தாராம்.
ராமானுஜருக்காக சோழ மன்னனிடம் கண்களை இழந்த கூரத்தாழ்வார், 'ஸ்ரீவரதராஜ ஸ்தவம்' என்ற பாடலைப் பாடி கண்களைப் பெற்ற திருத்தலமும் இதுவே.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலேடைப் புலவர் கவி காளமேகம் காஞ்சியில் கருட சேவையின் போது ஒளிமிக்க கருடன் மீது சுடர்விட்டுப் பிரகாசிக்கும் பொன்வண்ணத் திருமேனியில் வரதர் திருவீதிஉலாவைக் கண்டு பெருமாளை வணங்கி நிந்தாஸ்துதியாக ஒரு பாடலைப் பாடினார்.

Comments