பாற்கடல் அமுதை பருகியது இங்கேதான்!
இந்தக் கலியுகத்தில் ஒவ்வொருவரும் விரும்புவது 'தீர்க்க ஆயுள்' கொண்ட நிம்மதியான வாழ்க்கை. இதை வேண்டியே இறைவனிடம் கோரிக்கை வைத்து, நித்தமும் அவனை வழிபடுகிறார்கள். நோய்நொடி இல்லாத இனிய வாழ்வையே எந்நாளும் எதிர்பார்த்து, இந்த வேண்டுகோளை இறைவனிடம் ஆத்மார்த்தமாக வைக்கிறார்கள். இந்த 'தீர்க்க ஆயுள்' விருப்பம் என்பது, கலிகால மனிதர்களுக்கு மட்டுமல்ல... யுகங்க ளைக் கடந்த தேவாதி தேவர்களுக்கும் இருந்து வந்தது. தங்களது ஆயுளும் நீடித்து, பதவியும் புகழும் பறி போகாமல் வாழ்வாங்கு வாழ, 'தீர்க்க ஆயுள்' கோரிக்கையை ஒரு முறை திருமாலிடம் வைத்தனர்.
கலியுகத்தில் இறைவனிடம் கோரிக்கை வைத்து 'தீர்க்க ஆயுள் தா இறைவா' என்று கற்பூரம் ஏற்றிக் கன்னத்தில் போட்டுக் கொண்டு வேண்டுகிறோம். ஆனால், பதவியும் புகழும் தங்களுக்கு என்றென் றும் நிலைத்திருக்க வைத்து, தீர்க்க ஆயுள் பெறும் ஒரு கோரிக்கையை தேவர்கள் இறைவனிடம் எந்த சந்தர்ப்பத்தில், எப்படி வேண்டினார்கள்? இதற்கான பதிலைச் சொல்வதே, தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற சம்ப வம். அந்தக் கதையைப் பார்ப்போமா?
தேவர்களின் தலைவனான இந்திரன், அதிகார மமதையின் காரணமாக ஒரு முறை துர்வாச முனிவரை ஏகத்துக்கும் அவமதித்து விட்டான். கோபக்காரரான துர்வாசர், துச்சமாக இதை விட்டு விடுவாரா? 'தேவர்களின் தலைவன் என்கிற அகங்காரத்தில்தானே இப்படி நீ நடந்து கொள் கிறாய்..? உனது திமிருக்குக் காரணமான இந்தப் பதவியும் புகழும் இப்போதே உன்னை விட்டு நீங்கக் கடவது' என்று 'பிடி சாபம்' கொடுக்க.... அடுத்த கணமே அனைத்தையும் இழந்து 'அம்போ'வெனத் தவித்தான் இந்திரன். தங்களின் தலைவனான இந்திரனின் கதி இப்படி ஆகி விட்டதே என்கிற கவலை தேவர்களைத் தொற்றிக் கொண்டது. இந்தக் காலகட்டத்தில் அசுரர்களது தொந்தரவுகளுக்கு ஏகத்துக் கும் ஆளானார்கள் தேவர்கள். இழந்த பதவியை இந்திரன் மீண்டும் பெற்று விட் டால், தங்களது அன்றாட நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் இருக்காது என்று எண்ணினர் தேவர்கள். இந்திரனும் அதை ஆமோதித்தான்.
இது குறித்து திருமாலிடம் முறையிட இந்திரனையும் அழைத்துக் கொண்டு வைகுந்தம் சென்றனர் தேவர் கள். முறையிட்ட புகாரை முழுவதும் கேட்ட முகுந் தன், ''திருப்பாற்கடலைக் கடையுங்கள். உங்களது வளர்ச்சிக்குத் தேவையான அத்தனையும் அங்கே கிடைக்கும். அதில், முக்கியமானது அமிர்தம். இதை எவர் ஒருவர் சாப்பிடுகிறாரோ, அவருக்கு மரணம் என்பதே இந்த லோகத்தில் இல்லை!'' என்றார்.
திருப்பாற்கடலைக் கடைய தேவர்கள் திரளாக விரைந்தனர். விஷயத்தை மெள்ள அறிந்து கொண்ட அசுரர்களும் அமிர்தம் உண்ணும் ஆசையில் ஓடோடி வந்தனர். திருப்பாற்கடல் கடையப்பட்டது. தேவர்கள் ஒரு புறம்... அசுரர்கள் மறு புறம். மேரு மலையை மத்தாக்கினார்கள். வாசுகி நாகத்தைக் கயிறு ஆக்கினார்கள். மரணம் இல்லாத மகத்தான வாழ்வு பெறும் ஆவலில் இரு தரப்பாரும் கடையக் கடைய... அமிர்தம் அளவில்லாமல் திரண்டு வந்தது. அதை ஒரு மிகப் பெரிய கடத்தில் (குடம் அல்லது கலசம்) சேகரித்தார்கள்.
அமிர்தத்தை எடுத்து எப்போது உண்ணலாம் என்று தேவர்களும் அசுரர்களும் தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னே! இறவாப் புகழ் தரும் அருமருந்தாயிற்றே அந்த அமிர்தம்! கால நேரம் பார்த்து உண்ண வேண்டாமா? திருமால் பார்த்தார்... 'என்னடா இது புதுக் குழப்பம்?! தேவர்களுக்கு சமமாக அசுரர்களும், அமுதத்தை ஒரு துளி உண்டால்கூட ஆபத்தாகி விடுமே. இறப்பு என்பதே அவர்களுக்கு இல்லாமல் போய் விடுமே... இதனால் எதிர்காலத்தில் தேவர்களுக்குத் தொந்தரவு அதிகரிக்குமே... முணுக்கென்று தேவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் 'அசுரர்களின் கொட்டத்தை அடக்குங் கள்' என்று அடுத்த கணம் நம் முன்னேதானே வந்து நிற்பார்கள்... இறப்பே இல்லாதவர்கள் கொட்டத்தை நாம்தான் எப்படி அடக்குவது?' என்றெல்லாம் பல விதங்களில் யோசித்தவர், இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
தேவர்களும் அசுரர்களும் குளித்து விட்டு வந்த பின் அனைவரும் சேர்ந்தே அமிர்தத்தைப் பருகுவது என்று முடிவாயிற்று. அமிர்தம் நிரம்பிய கடத்தை அங்கேயே ஓரிடத்தில் நிலை நிறுத்தினர். திருமாலின் திட்டப்படி தேவர்கள் மட்டும் முதலில் நீராடி விட்டு சுறுசுறுப்பாக வந்து சேர்ந்தனர். அசுரர்கள் நீராடி விட்டு வருவதற்குள் தேவர்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுத்து விடலாம் என்று திருமால் அவசரம் அவசரமாக அமிர்த கடத்தை எடுக்க முற்பட்டார். என்னே ஆச்சரியம்! எடுக்க வரவில்லை. பூமியோடு பொருந்தி விட்டது. அந்த கடமே ஒரு சிவலிங்கமாக மாறி இருந்தது.
இவர்தான் அமிர்தகடேஸ்வரர். திருக்கடவூரின் நாயகர். மரணம் இல்லாத வாழ்வை மாந்தர்களுக்கு அருளி வரும் மகேஸ்வரர். சிவலிங்கத்தில் இருந்து அமிர்தத்தை எப்படி எடுப்பது என்று யோசித்தார் திருமால். அம்பிகையை, தான் முறையாக வணங்காத தால் அமிர்தம் முழுதும் சிவலிங்கமாகி விட்டது என்று தெளிந்த திருமால், தன் மேனியில் அணிந்திருந்த பொன்னாபரணங்களை ஒரு பீடத்தின் மேல் கழற்றி வைத்து, அதையே அம்பிகையாக எண்ணி வழி பட்டார். அம்பிகை உளம் குளிர்ந்தாள். சகோதரன் ஆயிற்றே! அவனுக்கு ஒரு சங்கடம் என்றால், சகோதரி விடுவாளா? 'அபிராமியம்மை' எனும் திருநாமத்துடன் அங்கே பிரத்யட்சமாகக் காட்சி கொடுத்து... அமிர்தம் கிடைக்க அருள் பாலித்தாள்.
பின்னர், அமிர்தகடேஸ்வரரின் அருளால், லிங்கத் திருமேனியில் இருந்து திரண்ட அமிர்தத்தை திருமால் சேகரித்தார். அமிர்தம் நிரம்பிய அந்த கடத்தை எடுத்துக் கொண்டு அமிர்த புஷ்கரணித் தீர்த்தக் கரை யில் வைத்து, தேவர்களுக்கு ரகசியமாகக் கொடுக்க ஆரம்பித்தார் திருமால். அசுரர்களுக்கு இந்தத் தகவல் எட்டாமலும் பார்த்துக் கொண்டார். என்றாலும், விடாக்கண்டனான ஓர் அசுரன் மட்டும் விஷயத்தை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டான். தேவர்கள் மாதிரியே வடிவம் தாங்கி, அமிர்தம் வாங்கும் வரிசையில் நின்று ஒரு துளி வாங்கி, வாயில் போட்டுக் கொண்டு, 'ஆஹா...' என்று சுவாரஸ்யமாக உள்ளே முழுங்கினான். அதன் பிறகே அனந்தனுக்கு உறைத்தது, அவன் ஓர் அசுரன் என்று.
ஒவ்வொருவருக்கும் அமிர்தம் எடுத்துக் கொடுப் பதற்காகத் தன் கையில் வைத்திருந்த கரண்டி போன்ற கூர்மையான கருவியால், அமிர்தம் உண்ட அந்த அசுரனை வெட்டினார் திருமால். தலை வேறு; உடல் வேறு என இரண்டு துண்டானான் அசுரன். ஆனால், உயிர் பிரியவில்லை. அவன்தான் அமிர் தத்தை உண்டு விட்டானே! இனி, என்ன செய்தாலும் அவனை சாகடிக்க முடியாது. தலைக்கு உயிர் இருந் தது; வெட்டுப்பட்ட உடலுக்கும் உயிர் இருந்தது. பார்த்தார் திருமால். அருகே ஒரு பாம்பின் தலை துண்டிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். பாம்பின் உடலும் அதே மாதிரி தனியாகக் கிடந்தது.
மனிதனின் தலையை பாம்பு உடலில் பொருத்தி னார். பாம்பின் தலையை மனித உடம்பில் பொருத் தினார். இவர்கள்தான் முறையே ராகு, கேது எனப் பட்டனர். நவக்கிரகங்களில் சாயா கிரகங்களாகச் சேர்ந்து கொண்டனர். அமிர்தம் உண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். ஏனைய அசுரர்கள் ஏமாந்தனர். இந்தக் கதை பெரும்பாலோர் கேள்விப் பட்டிருக்கலாம். இந்தக் கதை எதற்கு இங்கு என்று யோசிக்கிறீர்களா?
இந்தக் கதை நடந்த இடமே_ திருக்கடவூர். இன்றைய பெயர் திருக்கடையூர். மயிலாடுதுறை- தரங்கம்பாடி பேருந்துத் தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடத்தில் இருந்த அமிர்தம் சிவலிங்கம் ஆனதால், ஊர் திருக்கடவூர் ஆனது. இறைவன் அமிர்த கடேஸ்வரர் ஆனார். ஊரில் பிரதானமாக இருக்கிறது சிவ ஸ்தலம். இதே சிவ ஸ்தலத்தில் இருந்து சுமார் ஐந்தே நிமிட நடை தூரத்தில் தென்புறமாக இருக்கிறது, அமிர்தநாராயண பெருமாள் ஆலயம். இந்த ஆலயத்துக்கு நேர் எதிரே சுமார் 5 கி.மீ. தொலைவில், அமிர்தம் கடைந்த திருப்பாற்கடல் (வங்கக் கடல்).
அமிர்தகடேஸ்வரர் ஆலயத்துக்கு மிக அருகில் இருந்தும் இந்த அமிர்தநாராயண பெருமாளை வணங்கிச் செல்ல எவரும் இங்கு வருவதில்லை என்பதுதான் சோகம். ''ஸ்தல புராணத்தின்படி அமிர்தகடேஸ்வரரை தரிசித்தவர்கள் இங்கு வந்து அமிர்தநாராயண பெருமாளையும், உடன் உறையும் அமிர்தவல்லித் தாயாரையும் வணங்கினால்தான் பிரார்த்தனை நிறைவடையும். இது பலருக்கும் தெரிய மாட்டேன் என்கிறது'' என்றார் அமிர்தகடேஸ்வரர் ஆலய அர்ச்சகர் ஒருவர், நம்மிடம்.
அமிர்தநாராயண பெருமாள் ஆலயத்தின் இன்றைய நிலைமை மிகவும் பரிதாபம். தேவர்களின் குறை வில்லா நலனுக்காக அமிர்தத்தை பங்கு போட்டுக் கொடுத்த வள்ளலான ஸ்ரீமந் நாராயணன், இன்று அநாதரவாக நிற்கிறார். ஆதரிப்பார் யாருமில்லை.
ஒட்டுக் கட்டடத்தில் இருக்க வேண்டியவர் ஓலைக் குடிசையில் இருக்கிறார்.
பிரபந்த கோஷ்டிகள் முழங்க வேண்டிய இவரது சந்நிதியில், மந்திர ஒலி மருந்துக்கும் கேட்பதில்லை.
மேள- தாளங்கள் ஒலிக்க வேண்டிய இடத்தில், ஒரு சின்ன அதிர்வுக்குக்கூட இடமில்லை.
வேளா வேளைக்கு விதம் விதமான பிரசாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய அமிர்தநாராயண பெருமாள், மதியம் ஒரு வேளை மட்டும் ஏதோ ஓர் அன்னத்தை அன்போடு ஏற்றுக் கொள்கிறார். தினமும் எண்ணற்ற பக்தர்களைக் கண்டு அருள் புரிய வேண்டிய இந்த அநாத ரட்சகன், பட்சிகளுக்கும் பாம்புகளுக்கும் புகலிடம் கொடுத்து வருகிறார்.
அமிர்தம் வழங்கிய அமிர்த நாராயணரை கண் கொண்டு பார்த்தால், ரத்தக் கண்ணீரே வழிகிறது. ஓலைக் கொட்டகையில் ஒண்டுக் குடித்தனம். புல்டோசர் கொண்டு ஆக்கிரமிப்புகளை அறவே அகற்றியது போல் ஆலயத்தில் ஆங்காங்கே செங்கல் குவியல்கள்! விட்டலாச்சார்யரின் திகிலான திரைப்படங்களில் வருவது போல் ஆலய மண்டபங்கள் இடிந்து, வருவோரை பயமுறுத்தும் வண்ணம் அந்தரத்தில் தொங்குகின்றன.
''இந்த அளவுக்கு ஆலயம் சிதிலமாகி சுமார் பதினைந்து வருடம் இருக்கும். ஆலயத்துக்கு அருகே வைஷ்ணவ அக்ரஹாரம் ஒரு காலத்தில் இருந்தது. எல்லா உற்சவங்களும் கோலாகலமா கக் கொண்டாடப்பட்ட கோயில்தான் இது. பெரு மாளின் மண்டபம் மெள்ள மெள்ள இடிந்து கற்கள் ஒவ்வொன்றாக விழ ஆரம்பித்தன. ஒரு கட்டத் தில் முற்றிலுமாகவே சிதிலமடைந்து விழுந்து விட் டன. அதே போல் போன வருடம் ஐப்பசியில் பெய்த அடைமழை காரணமாக தாயார் சந்நிதி (கருவறை) இடிந்து விழுந்து விட்டது. எனவே, தாயார் விக்கிரகத்தை வெளியே கொணர்ந்து வைத்திருக்கிறோம்'' என்றார் கேசவன் என்கிற அன்பர். இவர்தான் ஆலயத் திருப்பணிகளுக்குப் பொறுப்பேற்று, அன்றாட நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.
கருடாழ்வார் மண்டபம், மதில் சுவர்கள், பிற சந்நிதிகள் ஆகிய எதுவுமே இன்று இல்லை. எல்லாமே இடிந்து விட்டன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில், பல நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது. ஆலயத்தின் அருகே வசிப்பவர்கள் மட்டும் அன்றாடம் கோயிலுக்கு வந்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து விட்டுச் செல்கிறார்கள்.
ஆலயத்துக்கென சொத்து பத்துகள் ஏராளமாக உள்ளதாம். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமிர்தநாராயண பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரயில்வே லைனில் அமைந்துள்ள திருக்கடையூர் ரயில்வே ஸ்டேஷனுக்காக சுமார் 16 ஏக்கர் இடம், அமிர்தநாராயண பெருமாள் ஆலயத்தால் வழங்கப்பட்டுள்ளது (தற்போது ரயில் இந்தத் தடத்தில் இயங்கவில்லை என்பது வேறு விஷயம்). ஆனால், அந்த நிலங்களுக்கு உண்டான தொகை, ரயில்வேயிடம் இருந்து அமிர்தநாராயண பெருமாள் ஆலயத்துக்கு அப்போது வந்து சேரவில்லையாம். இப்போதாவது அதைக் கேட்டுப் பெறலாம் என்றால், முறையான ஆவணங்கள் எதுவும் ஆலயப் பொறுப்பாளர்கள் கையில் இல்லையாம். பெருமாளே மனது வைத்து, ரயில்வே உயர் அதிகாரிகளின் சொப்பனத்தில் வந்து தன் சோகத்தைச் சொன்னால்தான் சுளையாக பணம் வந்து சேரும் போலிருக்கிறது. திருமாலை எப்படி யாவது திரும்பவும் நிலை நிறுத்தவும், திருப்பணிகளைத் தொடங்கவும் தொகை வேண்டுமே?!
ஆலயத்தைப் பழையபடி நிர்மாணிக்கும் எண்ணத்தில் திருப்பணித் துவக்க விழாவைக் கடந்த 1.11.07 அன்று ஆரம்பித் திருக்கிறார்கள். ஆலய தரிசனம்... இங்கு வெகு சிம்பிள்! காரணம், தற்போது இருப்பவை பெருமாள் மற்றும் தாயாரின் சந்நிதிகள் மட்டுமே! விஸ்தாரமான பிராகாரங்கள், கோபுரங்கள், மண்டபங்கள், மடப் பள்ளி ஆகியவை ஒரு காலத்தில் இருந்ததாம்.
பிரமாண்டமான நிலப்பரப்புக்கு நடுவே அமிர்தநாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். சுமார் ஆறடி உயரத்தில் அழகு ததும்பும் அற்புத வடிவம். அமர்ந்த நிலையில் இந்த சங்கு சக்கரதாரி, வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கோலத்தில் காணப்படுகிறார். அருகே ஸ்ரீதேவி மற்றும் பூதேவித் தாயார்கள். இந்த மூவரின் முகத்திலும் காணப்படும் புன்முறுவல், கொள்ளை அழகு. அணி களும் ஆபரணங்களும் துலங்கும் வகையில் இந்த விக்கிரகங்களை வடித்த சிற்பி, சிரமேற்கொண்டுதான் இவற்றைச் செய்து முடித்துள்ளார் என்று தோன்றுகிறது.
இடிபாடுகள் காரணமாக பெருமா ளுக்கு அருகிலேயே ஸ்ரீஆஞ்சநேயர், சேனை முதலியார், ராமானுஜர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரின் சிலா விக்கிரகங்கள் தரிசனம் தருகின்றன. பெருமாள் சந்நிதிக்கு எதிரே கருடாழ்வார். ராகு, கேது ஆகியோர் இங்கு அவதரித்ததால் அந்த தோஷம் உள்ள வர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொண்டு, அமிர்த நாராயண பெருமாளை வணங்குவது விசேஷம் என்கிறார்கள்.
பெருமாளுக்கு வலப் பக்கம் அருள்மிகு அமிர்தவல்லித் தாயார் சந்நிதி. இந்த விக்கிரகம், லேசான சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பின்னிரு கரங்களில் தாமரை மலர்கள். முன்னிரு கரங்கள் அபய- வரத முத்திரைகள் தாங்கிய வண்ணம் காணப்படுகிறது. தாயாரின் புன்னகையும், புடவை மடிப்புகளும் பக்தர்களை பரவசம் கொள்ள வைக்கும். ஆலயத்துக்கான பஞ்ச லோக விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி, திருவிடைக்கழி முருகன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம். தல விருட்சம்- மனோரஞ்சிதம். ஆனால், விருட்சம் தற்போது இல்லை. மார்க்கண்டேயனின் ஆயுள் (பதினாறு வயதுடன்) முடிவடைந்த காரணத்தால், அவனது உயிரைப் பறிக்க பாசக் கயிறுடன் எமதர்மன் விரைந்து வந்தான். இதை அறிந்த மார்க்கண்டேயன் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்துக்குள் ஓடிச் சென்று லிங்கத் திருமேனியை ஆரத் தழுவிக் கொண்டான். தன் பணியில் முனைப்பாக இருந்த எமன், மார்க்கண்டேயனை நோக்கி பாசக் கயிறை வீச... அது சிவலிங்கத்தின் மேலும் விழுந்தது. ஆத்திரமடைந்த ஈசன் தன் காலால் எமனை எட்டி உதைத்தார்.
அப்போது 'காலனை என் காலால் உதைத்ததற்கு நீயே சாட்சி' என்று அமிர்தநாராயண பெருமாளை நோக் கித் தன் கையை நீட்டினார் என்று ஸ்தல புராணம் சொல்கிறது. இதற்கு சான்றாக, அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தனிச் சந்நிதி கொண்டுள்ள கால சம்ஹாரமூர்த்தி, அமிர்தநாராயண பெருமாளை நோக்கித் தன் கையை நீட்டிக் கொண்டிருக்கும் கோலத்தை இன்றும் தரிசிக்கலாம்.
60, 70, 80 வயது பூர்த்தி ஆனவர்கள் தங்களது திருக்கல்யாண வைபவங்களைத் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடுவது போல், அமிர்தநாராயண பெருமாள் ஆலயத்திலும் கொண்டாடலாம். ஆனால், சாந்நித்தியத்தைப் பற்றி சந்தோஷப்படாமல், சிதிலமடைந்த திருத்தலத்தில் திருமண விழாவைக் கொண்டாடுவதா என்று பலரும் தயங்குகிறார்களாம். இதையும் மீறி, அமிர்தநாராயண பெருமாளின் அருளுக்குப் பாத்திரமானவர்களும் இருக்கவே செய்கிறார்கள். (வேலூர்) திருப்பத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது 60-ஆம் கல்யாணத் தையும், திருச்சி வரகனேரியைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த பூபதி ஆகியோர் தங்களது 70-ஆம் கல்யாணத்தையும் அமிர்தநாராயண பெருமாள் சந்நிதியில் நடத்தி, ஆசி பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.
திருக்கடையூரில் அமிர்தம் பொழிந்து, தேவர்களை எல்லாம் வாழ்வாங்கு வாழ வைத்த அந்த அமிர்த நாராயணர், கலியுகத்தில் நம்மையும் வாழ வைக்கவே இங்கு குடி கொண்டுள்ளார். அவர் குடி இருக்க ஒரு கோயில் அமைத்துக் கொடுத்தால்தானே, நாமும் குதூகலமாக இருக்க முடியும்?!
அவதார புருஷனான அந்த ஆபத்பாந்தவன், குடிசையிலா இருப்பது? கோபுரம் அமைத்துத் தர வேண்டாமா? சந்நிதிகளை சீர் செய்ய வேண்டாமா? மண்டபங்கள் கட்டித் தர வேண்டாமா? சுற்றுப் பிராகாரங்களை சுந்தரமயமாக்க வேண்டாமா? மணி களும் மத்தளங்களும் ஒலிக்க வேண்டாமா? வேளா வேளைக்கு பிரசாதங்கள் மணக்க வேண்டாமா?
எல்லாமே வேண்டும்... வேண்டும்... வேண்டும்... சாத்தியமாகிட வேண்டும்! மாலவனது அடியார்கள் அண்டமெல்லாம் பரவி இருக்கும்போது அவனுக்கு ஒரு கற்கோயில் எழும்பாமல் இருக்குமா? மகா சம்ரோட்சணம் செய்து வைக்காமல்தான் விடுவார் களா? அந்த புண்ணிய தினத்தை திருக்கடையூர்வாசிகள் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்!
படங்கள்: எ. பிரேம்குமார்
தகவல் பலகை
தலத்தின் பெயர் : திருக்கடையூர் அருள்மிகு அமிர்தவல்லித் தாயார் சமேத ஸ்ரீஅமிர்தநாராயண பெருமாள்.அமைந்துள்ள இடம் :மயிலாடுதுறை- தரங்கம்பாடி செல்லும் பேருந்து தடத்தில் (ஆக்கூர் வழியாக) மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் அமைந்துள்ளது. எப்படிச் செல்வது? : மயிலாடுதுறை, சீர்காழி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் இருந்து திருக்கடையூருக்குப் பேருந்து வசதி உண்டு. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன. ஆலயத் தொடர்புக்கு : வி. கேசவன், அறங்காவலர், 3/181, பெருமாள் கோயில் வீதி, |
Comments
Post a Comment