பாரதியார் வழிபட்ட சிவாலயம்!

சித்தரை பூஜித்தால் சிவனையே பூஜித்ததுபோல் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக, சித்தர் சமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பிரபலமான சிவாலயமாக விளங்கி வருவதும்; பாரதியார் அங்கு அமர்ந்து பல பாடல்களை எழுதியிருப்பதும் உங்களுக்கு தெரியுமா?
ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன் அந்த சித்தரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்!
புதுவையில் புகழ் பெற்ற சித்தராக விளங்கியவர் சித்தாந்த சுவாமிகள் 18ம் நூற்றாண்டின் இறுதியில் கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் தெய்வ பக்தி மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயார் திருப்பாப்புலியூர் ஆலயத்திற்கு பூமாலை தொடுக்கும் பணியை செய்து வந்தார். அந்த மாலைகளை சிறுவனான சித்தானந்தனிடம் கொடுத்து, தினமும் கோயில் குருக்களிடம் சேர்ப்பித்து விடுவது வழக்கம்.
ஒருநாள் பூமாலைகள் தயாராக இருந்தன. அப்போது வானம் கறுத்து மேகங்கள் திரண்டதால், மகனிடம் கோயிலுக்கு பூக்குடலையை கொடுத்தனுப்ப தாய்க்கு மனம் வரவில்லை.
“மகனே மழை வரும் போலிருக்கிறது. இன்று பூக்களை நானே கோயிலுக்குக் கொண்டு செல்கிறேன்’ என்றாள், அன்னை. ஆனால் சிறுவனோ, “இல்லையம்மா... நானே கொடு செல்கிறேன்’ என்று கூறி, மனதைரியத்துடன் கிளம்பினான்.
சிறிது நேரத்தில் “தானே’ புயலைப் போல் சூறாவளிக்காற்றுடன் கனமழை கொட்டத் தொடங்கியது. அடாத மழையிலும் விடாது பயணத்தைத் தொடர்ந்தான், சிறுவன் சித்தானந்தன். கோயிலை நெருங்க நெருங்க எங்கும் வெள்ளக்காடு. கும்மிருட்டையும் குளிரையும் பொருட்படுத்தாமல் மழை நீரிலும் வெள்ள நீரிலும் நனைந்தபடியே கோயிலை அடைந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இரவு மணி ஒன்பதை நெருங்கி விட்டதால், “இனி கோயிலுக்கு பூமாலை வராது’ என்று நினைத்து கோயிலைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார் குருக்கள்.
சித்தானந்தன் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரையும் காணவில்லை. தாம் கொண்டுவந்த பூக்குடலையை கோயில் கதவிலிருந்த மணியில் பிணைத்துவிட்டு, “இறைவா! நான் கொண்டு வந்த பூ உனத்குத் தேவையானால், நீயே வந்து எடுத்துக் கொள்!’ என்று கூறிவிட்டு வீடு திரும்பினான்.
மறுநாள். காலையிலேயே சித்தானந்தனை தேடி அவன் வீட்டிற்கு வந்த குருக்கள், “நேற்று ஏன் கோயிலுக்கு நீ பூ கொண்டு வரவில்லை?’ என்று அவனிடம் கேட்டார்.
கடும்மழையால், தான் கோயிலை அடைய வெகு நேரம் ஆகிவிட்டதால், பூக்குடலையை கோயில் கதவிலேயே மாட்டிவிட்டு வந்துவிட்டதாகவும், இறைவன் அதை எடுத்து அணிந்துகொண்டிருப்பார் என்று கூறினான்.
அதைக்கேட்ட அவன் அன்னைக்கும் குருக்களுக்கும் சிரிப்புத்தான் வந்தது.
“மழையில் குழந்தை வேறென்ன செய்வான்?’ என்று சமாதானம் கூறிய அன்னை, வேறொரு பூக்குடலையில் பூக்களைப் போட்டு குருக்களுடன் சித்தானந்தரை கோயிலுக்கு அனுப்பினாள்.
வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையில் கஷ்டப்பட்டு இருவரும் கோயிலை அடைந்தனர். பூட்டப்பட்டிருந்த வெளிக்கதவில் சித்தானந்தர் மாட்டியிருந்த பூக்குடலையை காணவில்லை. “சிறுவன் ஏதோ கதைவிட்டிருக்கிறான்’ என்று நினைத்தவாறு கதவை திறந்த குருக்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம்!
ஆம்! அங்க இறைவன் மேல் சித்தானந்தன் இரவு கொண்டு வந்திருந்த பூமாலைகள் அலங்காரமாக அணிவிக்கப்பட்டிருந்தது.
“பூட்டிய கோயிலுக்குள் பூமாலைகள் எப்படி?’ குருக்களின் உடம்பு ஒருகணம் நடுங்கியது. “இது, இறைவன் செய்த திருவிளையாடலா? சித்தானந்தன் செய்த அற்புதமா? எது எப்படியோ... அவன் தெய்வ அருள் பெற்ற குழந்தை என்பது மட்டும் நிச்சயம்!’
திடீரென சிறுவனின் காலைத் தொட்டு வணங்கினார் குருக்கள். அந்த அற்புதத்தை அனைவருக்கும் சொல்லி ஆனந்தமடைந்தார்.
அந்த சம்பவத்திற்கு பிறகு சித்தானந்தனின் புகழ் ஊரெல்லாம் பரவியது. பலர் சித்தானந்தனை தரிசிக்க அவன் இல்லம் தேடி வந்தனர். அவனோ வந்தவர்களிடமெல்லாம், தன்னை வணங்குவதை விடுத்து இறைவனை வணங்கச் சொன்னான்.
ஆனால் மக்களோ அவன் சாதாரண சிறுவன் அல்ல; தெய்வீக ஆற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டனர். அவனது சொற்கள் பலித்தன. அவன் கைபட்டதும் தீராத வியாதிகளெல்லாம் தீரலாயின. அவனது பெருமை அருகிலுள்ள புதுச்சேரியிலும் பரவத் தொடங்கியது. சித்தானந்தன் நாளடைவில் சித்தானந்த சுவாமி ஆனார்.
ஒரு சமயம் புதுவையைச் சேர்ந்த சிவனடியார் ஒருவரின் மனைவி கடும் நோய் வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானானர். தன் மனைவியைக் குணப்படுத்த சித்தானந்தரால்தான் முடியும் என நம்பி, அவரை நாடினார்.
சிவனடியாரின் வேண்டுகோளை ஏற்று புதுவைக்கு வரச் சம்மதித்தார் சித்தானந்தர். அவர் புதுவையை நெருங்க நெருங்க சிவனடியார் மனைவியின் நோய் படிப்படியாக விலக ஆரம்பித்தது. வீட்டிற்கு வந்த அவரை தரிசித்த மாத்திரத்தில் அந்தப் பெண்மணி பூரண குணமடைந்தாள்.
சுவாமியின் மகிமையை உணர்ந்து கொண்ட அந்த தம்பதியர் அவரை தங்கள் இல்லத்திலேயே தங்கிக்கொள்ளச் சொன்னார்கள். அவர்களின் விருப்பப்படி அங்கேயே தங்கிக் கொண்டார்.
ஒருநாள் சிவனடியார் கருவடிக்குப்பம் பகுதியிலுள்ள தன் தோட்டத்திற்கு சுவாமிகளை அழைத்துச் சென்றார். அப்போது ஓரிடத்தை சுட்டிக்காட்டி, “இது இங்கேதான் இருக்கப்போகிறது’ என்று சொன்னார் சித்தானந்த சுவாமிகள். அதன் அர்த்தத்தை அப்போது சிவனடியாரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
பக்தர்களின் வேண்டுகோள் படி புதுவையில் பலரது வீடுகளுக்குச் சென்றார் சுவாமிகள். அவரது கால்பட்டதும், தங்கள் இல்லங்களில் நிலவி வந்த கஷ்டங்கள் விலகுவதும், நோய் நொடிகள் நீங்குவதும் கண்டு மெய்சிலிர்த்தனர் மக்கள். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அந்த சிவனடியாரை அழைத்த சித்தானந்தர், “வைகாசி 28ம் தேதி எனக்கு கல்யாணம். இதை எல்லோருக்கும் தெரிவி!’ என்றார்.
சுவாமியின் பேச்சை சிவனடியாரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தச் சம்பவம் நடந்த பத்தாவது நாளில் சுவாமிகள் ஜீவன் முக்தியடைந்தார். சித்தானந்தர் முன்பே பூடகமாகச் சுட்டிக் காட்டிய இடத்தில் அவருக்கு ஜீவசமாதி எழுப்பப்பட்டது. பின்னர் அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது.
நெடுங்சாலையை ஒட்டி தெற்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாகத் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும் முதலில் அரச, வேப்பமரத்தடியில் நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பாரதியார் புதுவையில் வாழ்ந்த காலத்தில் இத்தலத்தில் அமர்ந்து சித்தானந்தரைப் பற்றியும், கோயிலைப் பற்றியும் பல பாடல்கள் இயற்றியுள்ளாராம். பாரதியார் இத்தலத்திற்கு வந்து சென்றதை நினைவூட்டும் வகையில் கோயில் வளாகத்திலேயே அவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலை ஒட்டியிருந்த மாந்தோப்பிலிருந்துதான் அவர் குயில் பாட்டு எழுதினாராம். அது பின்னர் குயில் தோப்பு என்றும் அழைக்கப்பட்டது.
அந்த மகாகவிக்கு ஒரு சல்யூட் வைத்து மரியாதை செலுத்திவிட்டு கருவறை முன் நிற்கிறோம். உள்ளே சித்தானந்த சுவாமி, லிங் வடிவினராக அருள்பாலிக்கிறார். அவரிடம் வேண்டிக் கொண்டால் திருமணம், குழந்தைப் பேறு, எதிர்பார்த்த கல்வி, விரும்பிய பணி உள்பட நாம் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடுகிறதாம்.
இவ்வாலயத்தில் சுந்தர விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பனுக்கு தனித் தனி சன்னதி உள்ளது.
காலை 6.30 முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும் இவ்வாலயத்தில் அமைதியான சூழலில் தியான மண்டபம் அமைந்துள்ளது. இங்குள்ள சித்தானந்தரின் பளிங்குச் சிலை முன்னால் அமர்ந்து தியானம் செய்வது ஓர் ஆனந்த அனுபவம். அந்த அனுபவத்தை நீங்கள் பெற்று வாருங்களேன்!

புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கருவடிக்குப்பத்தில் சித்தானந்தர் ஆலயம் உள்ளது.

Comments