நலம் தரும் நவராத்திரி


அசையாப் பொருள் பரம்பொருள் என்றும், அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்ற விழாக்கள் ஒருநாள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருவதுண்டு. ஆனி மாத அமாவாசைக்குப் பின் வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மகா நவராத்திரி. தைமாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மாக நவராத்திரி. பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வருவது வசந்த நவராத்திரி.
புரட்டாசி மாதமும் பங்குனி மாதமும் காலதேவனுடைய கோரைப் பற்கள் என்று புராணங்கள் கூறும். ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ இவ்விரு மாதங்களில் வருகின்ற நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்வார்கள்.
நவம் என்றால் புதியது என்றும், ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாகும். பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம். புரட்டாசி அமாவாசை நாளுக்குப்பின் ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுவது நவராத்திரி.
நவராத்திரியின்போது ஒன்பது நாளும் ஒன்பது வகை மலர் வழபாடு செய்வார்கள். கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள்.
படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும்.
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்தல் பரம்பரையாகச் செயல்பட்டுவரும் பக்தி நிகழ்ச்சியாகும். நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது.
பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியையும்; சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியையும்; சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வது வழக்கம்.
மகேஸ்வரி, கௌமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி, பூஜை செய்வது நலமாகும். ஒன்பது நாளும் விரதமிருந்து அன்னையை வழிபடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும். இளம் பெண்கள் கல்வி, இசை போன்றவற்றில் சிறப்படைவார்கள். இல்லத்தில் செல்வம் சேரும்.

கொலு வைத்தல்:

கொலுவில் ஒன்பது படிகள் அமைத்து ஒவ்வொரு படியிலும் பொம்மைகள் வைத்து வழிபட வேண்டும். முதல் படியில் ஓரறிவு உயிர்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும். இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட சங்கு, நத்தை போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும். மூன்றாம் படியில் மூவறிவு உயிர்களான எறும்பு, கரையான் போன்றவை இடம் பெற்றிருக்கும். நான்காம் படியில் நான்கறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்டு நாற்கால் விலங்குகள், பறவைகள் போன்ற பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். ஆறாவது படியில் அறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். ஏழாவது படியில் மனிதர்க்கு மேற்பட்ட மகான்கள், முனிவர்கள் பொம்மைகள் இருக்க வேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் நவகிரக அதிபர்கள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்பாலகர்கள் இடம் பெற்றிருக்கும். ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் தேவியருடன், ஆதி பராசக்தியை நடுநாயகமாக வைத்திருப்பது அவசியம்.
நவராத்திரி நாட்களில் துர்க்காதேவியை வழிபடுவதால் புகழ், உயர்வு, மங்களம், சுகம், மோட்சம் முதலிய நன்மைகள் கிட்டும்.
லட்சுமி தேவியை வழிபடுவதால் சகல சம்பத்துகள், பாக்யங்கள் கிட்டும். இவளே மனோகரி, சாந்தி, ஒளி, சாத்வீகம், அழகு முதலியவற்றின் வடிவாக அமைந்துள்ளதால் சர்வ மங்களமும் அருள்வாள்.
சரஸ்வதிதேவியை வழிபடுவதால் வாக்கு, புத்தி, வித்தை, ஞானம் கலை, இசை ஆகியன சிறக்கும். எனவே நவராத்திரி நாட்களில் முச்சக்திகளாக விளங்கும் அன்னையை நோன்புடன் வழிபட்டும், மற்றைய நாட்களில் மனமொன்றி வழிபட்டும் நலம் பெறுவோம்!

Comments