அறுபடை வீடு கொண்ட திருமுருகா!


கத்தியருக்கு தமிழையும், குமர குருபரருக்கு பேசும் திறனையும், முத்துசாமி தீட்சிதருக்குப் பாடும் வல்லமையையும், ஒளவைக்கு ஞானத்தையும் தந்தவர் தமிழ்க் கடவுளான முருகப் பெருமான்.
ஆறுமுகன், அங்காரக சொரூபன். ஜோதிட சாஸ்திரத்தில் அங்காரகன், பூமிநாதன். ஆதலால் தன்னை வணங்குவோருக்கு பூமியையும் பூமி சார்ந்த செல்வத்தையும் தந்து அருளுகிறான் முருகப் பெருமான். 'சரவணபவ' என்பதே முருக பக்தர்களது ஜபமந்திரம்.
ஏழு ஆவர்ணங்களைக் கொண்ட சுப்ரமண்ய யந்திரத்தை அமைத்தும் திருப்புகழ், திருமுருகாற்றுப் படை, கந்தர் அனுபூதி மற்றும் சுப்ரமண்ய புஜங்கம் ஆகியவற்றை பாடியும் முருகனை வழி படலாம்.
காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் ஆகிய ஆறு பகைவர்களை அழித்து, வீடுபேறு எனும் வரத்தைப் பெற முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசிக்க வேண்டும்.
'உல்லாச நிராகுல யோக இத சல்லாப வினோதனும் நீயலையே' என்பது ஆறுபடை வீட்டின் தத்துவம். நம் உடலிலும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்கள் உள்ளன.
தெய்வானையை முருகப் பெருமான் கைத்தலம் பற்றிய தலமான திருப் பரங்குன்றம்- மூலாதாரம்; முருகப் பெருமான், சூரபதுமனை சம்ஹரித்த தலமான திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம்; முருகவேள் தண்டாயுதபாணியாக காட்சி தரும் யோகத் திருத்தலமான பழநி- மணிபூரகம்; பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த தலமான சுவாமிமலை- அநாகதம்; வேலவன் சினம் தணிந்து அமர்ந்த திருத்தணிகை- விசுக்தி; பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை. இப்படி ஆறுபடை வீட்டின் தத்துவத்தை கந்தரனுபூதியில் கூறுகிறார் அருணகிரிநாதர்.
தவிர, குறிஞ்சித் தலைவனான (குறிஞ்சி- மலையும் மலை சார்ந்த நிலப் பகுதியும்) முருகப் பெருமான், விராலி மலை, மருத மலை, கொல்லி மலை, வள்ளி மலை, கழுகு மலை, கபிலர் மலை, மயிலம் மலை, குமரகிரி, சுருளி மலை உட்பட மலைத் தலங்கள் பலவற்றிலும் எழுந்தருளி உள்ளார்.
முருகன் அருளும் சில தலங்கள்:
திருச்செங்கோடு: ஈரோடு அருகே உள்ளது. இங்கு அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதிகேசவபெருமாள் ஆகிய மூவருக்கும் தனித் தனி சந்நிதிகள் உள்ளன. இங்கு நாகாசமலை மீது, கிழக்கு நோக்கியவாறு வலக் கையில்- சக்தி வேல், இடக் கையில்- சேவற் கொடியுடன் காட்சி தருகிறார் முருகன்.
வடபழனி: இங்கு, மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். உற்சவர், ஆறு முகங்கள், 12 கரங்களுடன், வள்ளி- தெய்வானை சமேதராக அருள்பாலிக்கிறார்.
சிக்கல்: நாகப்பட்டினம் அருகே உள்ள தலம் இது. இங்கு வள்ளி, தெய்வானை ஆகியோர் முருகப் பெருமானின் இச்சா, கிரியா சக்திகளாகவும் வேலாயுதம் ஞான சக்தியாகவும் திகழ்வதாக ஐதீகம். 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்று கூறுவர். வேல் வாங்கும் உற்சவத்தின்போது முருகப் பெருமானின் தேகத்தில் இருந்து வியர்வைத் துளிகள் வெளி வருவது, இந்தத் தலத்தின் அற்புதம்!
வல்லக்கோட்டை: பெரும்புதூர் அருகே உள்ள இந்தக் கோயி லில் ஏழடி உயரத்தில் வள்ளி- தெய்வானையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் முருகன்.

Comments