குலாசல மலையில் பிறந்தவர்களும் ஆயிரமாயிரம் யானைகளது பலத்தை ஒருங்கே பெற்றவர் களுமான அந்த வானர வீரர்கள் சோர்வுடன் நடந்து கொண்டிருந் தனர். அவர்களின் முகத்தில் கவலையின் ரேகைகள்! என்ன காரணம்?
அனுமன் எவ்வளவு முயன்றும் அவர்களை ஆறுதல் படுத்த முடியவில்லை. ஒரு வழியாக அவர்கள், மகேந்திர மலை அடிவாரத்தை அடைந்தனர். மலையும் அதன் கிழக்கே விரிந்து பரந்திருந்த நீலத் திரைகடலும் அமைந்த அந்தச் சூழல் மிகவும் ரம்மியமாக இருந்தது. ஆனாலும் அதையெல்லாம் ரசிக்கும் மனோநிலையில் அவர்கள் இல்லை. தர்ப்பையைச் சேகரித்து வரப் புறப் பட்டனர்.
இந்த நிலையில், மகேந்திர மலை உச்சியில் குகை ஒன்றில் வசித்து வந்த பிரமாண்டமான கழுகு ஒன்று இவர்களைக் கவனித்தது. அதன் பெயர் சம்பாதி. றெக்கைகள் இல்லாத தனக்கு (சூரியனின் கதிர்களில் இருந்து தன் சகோதரன் ஜடாயுவைக் காப்பாற்ற சம்பாதியின் றெக்கை கள் எரிந்ததாகக் கதை உண்டு) இந்த வானரங் களே நல்ல உணவு என்ற எண்ணம் கொண்ட சம்பாதி, மலை உச்சியில் இருந்து மெள்ள கீழே இறங்க ஆரம்பித்தது.
சம்பாதி கழுகு, தங்களை நோக்கி வருவதை வானரர்களும் கவனித்தார்கள். அதன் நோக்கத்தையும் ஓரளவு யூகித்தனர்.
அங்கதன் அனைவரையும் பார்த்துச் சொன்னான்: ''நம்மை விட உருவத்தில் பெரிய இந்த மகா கழுகு எல்லோரையும் கொல்லப் போகிறது! சாவதைப் பற்றி கவலை இல்லை. ஆனால், நமது பணியை நிறைவேற்றாமல் சாகப் போகிறோமே என்பதை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது!''
அதற்கு ஜாம்பவான் சொன்னார்: ''
ராம சேவையை பூர்த்தி செய்ய முடிய வில்லையே என்பதுதான் எனது கவலை. சீதாதேவியைக் கடத்திச் செல்லும்போது ராவணனை எதிர்த்துப் போரிட்டதால், ஜடாயு பெற்ற பாக்கியம் நமக்கு எங்கே கிடைக்கப் போகிறது?''
அதற்குள் மிக அருகில் வந்து விட்ட சம்பாதியின் காதிலும் அவர்கள் உரை யாடல் விழுந்தது போலும்!
உடனே வானர இளவரசனான அங்கதன் எழுந்து இதுவரை நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்க ஆரம்பித்தான். ''தசரத குமாரன்
ராமச்சந்திர பிரபு, தன் மனைவி சீதாதேவி மற்றும் தம்பி லட்சுமணனுடன் வனவாசம் கிளம்பினார். அவர்கள் பஞ்சவடி எனும் இடத்தில் தங்கியிருந்தபோது அரக்கன் ராவண னின் வஞ்சகத்தால் சீதாதேவியைப் பிரிய நேரிட்டது. உத்தமி சீதையைக் கவர்ந்து சென்று விட்டான் ராவணன்.
அப்போது அன்னை சீதாதேவி, 'ராமா... ராமா!' என்று அபயக் குரல் எழுப்பினாள். இதைக் கேட்டு அங்கு பறந்தோடி வந்த ஜடாயு, சீதாதேவியை விட்டு விடுமாறு ராவணனை அறிவுறுத்தினார். அவன் கேட்க வில்லை. எனவே, போருக்குத் தயாரானார் ஜடாயு. இருவருக்கும் நடந்த சண்டையின் முடிவில் ராவணன், ஜடாயுவின் றெக்கைகளை வெட்டி தரையில் வீழ்த்தினான்.
சீதையைத் தேடி
ராம- லட்சு மணர்கள் அவ்வழியே வரும்வரை உயிரைக் கையில் பிடித்து வைத் திருந்த அந்த கழுகரசனான ஜடாயு, அவர்கள் வந்ததும் விஷயத்தைக் கூறிய பின் உயிரை விட்டார்.
பிறகு,
ராமச்சந்திர பிரபுவால் இறுதிச் சடங்குகள் செய்யப் பெற்று மோட்ச லோகம் அடைந்தார்.
அதன் பின்னர் எங்கள் மன்னர் சுக்ரீவனுக்கும்
ராமனுக்கும் நட்பு மலர்ந்தது.
ராமனுக்கு சுக்ரீவன் தந்த வாக்குப்படி சீதாதேவியைத் தேட வானரர்கள் அடங்கிய குழுக்கள் கிளம்பின. அவர்களில் தென் திசை நோக்கி வந்தவர்கள் நாங்கள். ஆனால் எங்களது நோக்கம் இதுவரை கைகூடவில்லை. எனவே, இந்த இடத்திலேயே தர்ப்பைப் புல்லில் அமர்ந்து உயிரை விடத் தீர்மானித்து விட்டோம்!'' என்றான் அங்கதன்.
இதைக் கேட்ட சம்பாதியின் கண்களில் நீர். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. பிறகு, ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சம்பாதி பேச ஆரம்பித்தான்:
''கவலைப்படாதீர்கள். இது அற்புதமான ஓர் இடம். பல்லாயிரம் ஆண்டுகள் பிரிந்திருந்த என் சகோதரனைப் பற்றிய தகவலை நான் அறிந்து கொண்டது போல, உங்களுக்கும் இந்த இடத்தில் இருந்து நல்ல காலம் ஆரம்பிக்கப் போகிறது. முதலில், என் சகோதரனுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளைச் செய்வதற்கு எனக்கு உதவுங்கள்!'' என்றது.
வானரர்கள் மற்றும் ஜாம்பவானின் உதவியுடன் கடற்கரைக்குச் சென்று தன் சகோதரனுக்கு செய்ய வேண்டிய கர்ம காரியங்களை செய்து முடித்தான் சம்பாதி. பிறகு, மீண்டும் தாங்கள் தர்ப்பைப் புல் பரப்பி இருந்த சமவெளிக்கு சம்பாதியை அழைத்து வந்தனர்.
சம்பாதி மெள்ள பேச ஆரம்பித்தான்.
''திரிகூடமலை சிகரத்தில் உள்ள நகரம் இலங்கை. இங்கு அசோகவனத்தில் அரக்கிகள் சூழ சிறை வைக்கப்பட்டிருக்கிறார் சீதாதேவி. என்னால், இங்கிருந்தே மிகத் தெளிவாக அவரை தரிசிக்க முடிகிறது. சற்று அதிக தொலைவில் அமைந்துள்ள அந்த நகருக்குச் செல்ல... இந்த சமுத்திரத்தைத் தாண்டும் வல்லமை பெற்ற ஒருவரைத் தேர்ந்தெடுங்கள்!'' என்றான் சம்பாதி.
வானரர்களுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. சம்பாதி குறிப்பிட்டது போல்... அவர்கள் இருந்த அந்த இடம் அற்புதமானதுதான் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த அற்புதங்கள் அதை மெய்ப்படுத்தின.
ஆம்! றெக்கை இழந்த சம்பாதிக்கு, வலிமையுடன் கூடிய ஒளி மிக்க அழகிய றெக்கைகள் வளர... அது, பறக்கும் தகுதியைப் பெற்றது!
சீதாதேவியை கண்டு வரும் பணிக்கு வானரர் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுமன்
ராம நாம மகிமையால் விண்ணில் எழும்பி, சமுத்திரத்தைக் கடந்து சீதாதேவியையும் கண்டு வந்தார். வானரப்படையினருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
மித மிஞ்சிய களைப்புடனும் கவலையுடனும் அவ நம்பிக்கையுடனும் மகேந்திர மலைப் பகுதிக்கு வந்த வானரர்கள் நம்பிக்கையும் தைரியமும் பெற... சம்பாதியின் சந்திப்பு மட்டும்தான் காரணமா? இல்லை அந்த இடத்தின் மகிமையும் அதற்குக் காரணம்.
மேற்கில் உயரமான மகேந்திர மலை. கிழக்கில் பரந்து விரிந்த உப்புக் கடல். வாஸ்துப்படி மேற்கில் உயர்ந்த மலையும் (மேடு) அடுத்து சமவெளியான கடற்கரையும் அதற்குக் கிழக்கே ஆழ்கடலும் (பள்ளம்) இருப்பது, மிக நல்ல அமைப்பு.
மேலும், (கிழக்கு திசை நன்கு அமைந்த) இந்த அமைப்பு, காடு, மலை சஞ்சாரம் செய்ய வைக்கும். வானரர்களின் அனுபவமே இதற்குச் சான்று.
கண்களுக்கு மேன்மை தரும் அமைப்பு இது. எனவேதான் சம்பாதி, தன் கூரிய கண்களால் சீதாதேவியின் இருப்பிடத்தைப் பார்த்துச் சொன் னார்.
வாஸ்துப்படி மேற்குத் திசை சரியாக இருந்தால்... அதாவது மேடான பகுதியைக் கொண்டிருந்தால், அந்த வீடு அல்லது இடத்தில் வசிப்போர் சர்வ சக்தி படைத்தவர்களாகவும் உழைப்பாளிகளாகவும் சுயநலம் இல்லாதவர்களாகவும் இருப்பர். அதன்படியே மகேந்திர மலையை மேற்கில் கொண்ட இந்த பகுதியை, வானரர்கள் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் இல்லை எனலாம்.
மேலும் மேற்குத் திசை நன்கு அமையப் பெற்ற இடத்தில் வசிப்பவர்கள், மாபெரும் தலைவராகும் தகுதி பெறுவர். பலசாலிகளையும் பகிரங்கமாக எதிர்ப்பர். ராஜ தந்திரத்துடன் செயல்படுவர். மகேந்திர மலை அடிவாரத்திலும் அப்படியே நிகழ்ந்தது. சமுத்திரத்தைக் கடக்க அனுமன் தேர்ந் தெடுக்கப்பட்டார். அவர் இலங்கைக்குச் சென்று ராவணனை சந்தித்து எதிர்வாதம் செய்ததுடன் அவர்களிடம் இருந்து தந்திரமாகத் தப்பித்து மீண்டு வந்தார்.
இவை எல்லாவற்றுக்கும் காரணம், கிழக்கிலும் மேற்கிலும் மிக நல்ல அமைப்பைப் பெற்ற மகேந்திர மலை அடிவாரப் பகுதியே ஆகும்.
மனிதப் பிறவிக்கு உணவு- உடை- உறைவிடம் ஆகிய மூன்றும் அத்தியாவசியத் தேவை. உணவு, உடை ஆகியவற்றை மிகச் சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் நாம், இருப்பிடத்தை தேர்வு செய்வதிலும் அதே கவனத்தை செலுத்த வேண்டும். அந்த இடம் வாஸ்து சாஸ்திரப்படி நல்லதாக அமைந்து விட்டால், நாமும் வாழ்வில் வளமும் வெற்றியும் பெறலாம்.
Comments
Post a Comment