அருள்வாய் ஆஞ்சநேயா!


திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு, வீணை இசைப்பதில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற கர்வம். அதைப் போக்க நினைத்த பகவான், நாரதரை அழைத்து, வீணை வாசிக்குமாறு கூறினார். அப்போது அனுமனும் உடன் இருந்தார். நாரதர் கர்வத்துடன் தனது வீணையை எடுத்து மீட்ட ஆரம்பித்தார். சற்று நேரம் கழித்து, ''இப்போது உனது வீணையை அனுமனிடம் கொடு. அவன் எப்படி வாசிக்கிறான் என்று பார்க்கலாம்!'' என்றார் பகவான்.
நாரதருக்குக் குழப்பம். 'வானரம் வீணை வாசிக்குமா... பகவான் ஏன் இப்படிக் கூறுகிறார்?' என்ற எண்ணத்துடன் வீணையை அனுமனிடம் தந்தார்.
அனுமனுக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர் பகவானை நோக்கினார். 'ம்... வாசி!' என்பது போல் கண்ணசைத்தார் பகவான். அவரின் திருவுள்ளம் என்ன என்பதைப் புரிந்து கொண்ட அனுமன், மனதில் பகவானை தியானித்தபடி வீணையை மீட்ட ஆரம்பித்தார். அந்த இசையில் தன்னை மறந்தது பகவான் மட்டுமல்ல... நாரதரும்தான்!
இசைத்து முடித்த அனுமன் வீணையைக் கீழே வைத்து விட்டு பகவானை நமஸ்கரித்து எழுந்தார். இப்போது நாரதரை நோக்கிய பகவான், ''அனுமனின் வீணை இசை எப்படி இருந்தது?'' எனக் கேட்டார்.
'பகவான் எதற்காகவோ நாடகம் ஆடுகிறார்!' என்பது புரிந்த நாரதர், ''ஆஹா... அற்புதம்!'' என்றார்.
''சரி, வீணையை எடுத்துக் கொள்!'' என்றார் பகவான். நாரதர், வீணையைத் தூக்க முயன்றார்; முடியவில்லை. அது, தரையோடு ஒட்டிக் கொண்டிருந்தது!
உடனே, ''நீ எடு, பார்க்கலாம்!'' என்று அனுமனை பணித்தார் பகவான். அவரை வணங்கி எழுந்த அனுமன், வீணையை உடனே தூக்க முயலாமல், சற்று நேரம் அதில் இசை மீட்டினார். பிறகு, அவரால் அதை எளிதில் தூக்க முடிந்தது.
'இது எப்படி சாத்தியம்?' என்று குழம்பினார் நாரதர். அவரைப் பார்த்துப் புன்னகைத்த பகவான், ''நாரதா, குழம் பாதே! அனுமனின் இசையில் பாறையும் உருகியது. இசையை நிறுத்தியதும் பாறை இறுகியது. அப்போது அவன் வீணையைக் கீழே வைத்ததால், அது தரையுடன் ஒட்டிக் கொண்டது. எனவே, பாறை உருகும் விதம் மீண்டும் இசை மீட்டி, வீணையை எளிதில் தூக்கி விட்டான். புரிந்ததா?'' என்றார்.
''புரிந்தது ஸ்வாமி... என்னை மன்னியுங்கள்!'' என்ற நாரதர் இருவரையும் வணங்கி நின்றார். அவரது கர்வம் முற்றிலும் நீங்கியது.


த்தியப் பிரதேச மாநிலம்- சிந்துவாடாவில், சாம்வலி என்ற இடத்தில் பள்ளிகொண்ட அனுமன் கோயில் உள்ளது. நாக்பூரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் பயணித்தால், இந்தக் கோயிலை அடையலாம். இந்தப் பகுதி, உயர்ந்த மலைப் பிரதேசம் ஆதலால், தூரத்தில் வரும்போதே இந்தக் கோயிலை தரிசிக்கலாம்.
இங்கு கருவறையில், கதாயுதம் அருகில் இருக்க... கால் மேல் கால் போட்டுக் கொண்டு படுத்த நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் அனுமன். இதுபோன்ற அனுமன் தரிசனத்தை வேறெங்கும் காண்பது அரிது! அரைக் கண் மூடிய நிலையில் இருக்கும் இவரை தூங்காமல் தூங்கும் நிலையில் உள்ளதாகக் கூறுவர். ஸ்ரீராம - ராவண யுத்தம், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் எல்லாம் முடிந்து வந்து அனுமன் இங்கு ஓய்வெடுத்ததாக ஐதீகம். மன நிம்மதி விரும்பும் பக்தர்கள் இங்கு வந்து பள்ளிகொண்டிருக்கும் அனுமனை வணங்கி அருள் பெற்றுச் செல்கின்றனர்.


காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்தில், சிவலிங்கத்தை வழிபடும் கோலத்தில் காட்சி தருகிறார் அனுமன்.
செஞ்சி மலைக்கோட்டைக்குச் செல்லும் வழியில், சிறிய குன்று ஒன்றின் மீது வாலில் மணி தொங்க, கையை ஓங்கிய நிலையில் காட்சி தரும் அனுமனை தரிசிக்கலாம். இது காண்பதற்கரிய திருக்கோலம்!
துரை மீனாட்சியம்மன் திருக்கோயில்- புது மண்டபத்தில், தாவிச் சென்று சூரியனை பிடிக்க முயற்சிக்கும் ஆஞ்சநேயர் சிற்பம் உள்ளது.
சோளிங்கபுரம் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் (மூலவர் விக்கிரகம்) கையில் சங்கு- சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
செங்கல்பட்டு புகைவண்டி நிலையம் அருகில் உள்ள ஆலயத்தில் குடிகொண்டுள்ள ஆஞ்சநேயரை, கோட்டைச் சுவரில் சுயம்புவாகத் தோன்றியவர் என்கிறார் கள். இவரது சந்நிதியில் பொய் சத்தியம் செய்தால், விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடுமாம்!

ராவணனது தர்பாரில், மிக கம்பீரமாக அவனுடன் வாதிடும் அனுமனின் திருக் கோலத்தை கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயிலில் தரிசிக்கலாம்.
ராமதாசர் கங்கையில் கண்டெடுத்த ஸ்ரீஆஞ்சநேயர் விக்கிரகம், காசி அனுமன் கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ளது. இவர் தன் வலக் கையை தலைக்கு மேல் தூக்கியவாறும் இடக் கையை கீழே தொங்க விட்டும் காட்சி அளிக்கிறார்.
ருளில் தெளிவாகவும், பகலில் மங்கலான தோற்றத்திலும் காட்சி தரும் அதிசய ஆஞ்சநேயரை, மைசூர் சாமுண்டி மலையில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தரிசிக்கலாம். இவர், இங்குள்ள துளசி மாடம் அருகே சுயம்புவாக தோன்றியவர்.
ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில், ராமாயணம் பாராயணம் செய்யும் கோலத்தில் தனிச் சந்நிதி கொண்டுள்ளார் அனுமன்.
டுப்பிக்கு கிழக்கே சுமார் 3 மைல் தூரத்தில் அமைந்துள்ள சிறிய குன்று ஒன்றின் அடிவாரத்தில், குளக்கரையில் விசேஷமான கோலத்தில் இருக்கும் அனுமனை தரிசிக்கலாம். இவர், மேனியெங்கும் ரோமங்களுடன், கோவணம் மட்டும் அணிந்து 'பாலரூப ஆஞ்சநேயராக' தரிசனம் தருகிறார்.


பிரமாண்ட அனுமான்!
ட அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நகரம் லிவர்மோர். இங்குள்ள சிவா-விஷ்ணு திருக்கோயிலில் சுமார் 14 அடி உயரத்துடன், கூப்பிய கரங்களுடன் தாமரை மலர் மீது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் அனுமன்.
ந்திர மாநிலம் குண்டூர் அருகில் உள்ளது பொன்னூர். இங்குள்ள ஆலயத்தில், சுமார் 30 அடி உயரம் உள்ள கருடாழ்வார் மற்றும் சுமார் 25 அடி உயரம் உள்ள அனுமன் ஆகியோர் ஒரே சந்நிதியில் அருள் புரிவதை தரிசிக்கலாம்.



சுசீந்திரம்- ஸ்ரீதாணுமாலயன் சுவாமி திருக்கோயில் பிராகாரத்தில் உள்ள அனுமன், சுமார் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் சுமார் 18 அடி உயரத்துடன் தரிசனம் தருகிறார். இவர் ஆலயத்தில் மேற்கூரை கிடையாது.
சென்னை- நங்கநல்லூரில் கூப்பிய கரங்களுடன் சுமார் 32 அடி உயரத்துடன் காட்சி தருகிறார் ஸ்ரீஆதிவ்யாதிஹர ஆஞ்சநேயர்.
பாண்டிச்சேரி அருகே பஞ்சவடி எனும் இடத்தில் ஆஞ்சநேயர் பஞ்சமுகங்களுடன் காட்சி தருகிறார். இவரது உயரம் சுமார் 36 அடி.
பெங்களூரு- 'மகாலட்சுமி லே அவுட்' என்ற இடத்தில், சிருங்கேரி சங்கராச்சார்யர் சுவாமிகள் வழிபட்ட அனுமனின் உயரம் சுமார் 27 அடி.
காராஷ்டிர மாநிலத்தில் உள்ள 'நான்தோரா' திருத்தலத்தில் சுமார் 110 அடி உயரத்துடன் காட்சி தரும் அனுமனை தரிசிக்கலாம்.

Comments