திருநெடுங்களம்


வீராதி வீர, சோழ குல திலக, செம்பியன் மாதேவ வங்கியராய மன்னர், சற்றே கவலை பூத்த வதனத்துடன் நின்றிருந்தார். மனம் கனத்தது. என்னதான் அறிவு சமாதானம் சொன்னாலும், மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. 'இப்படிச் சொல்லி விட்டார்களே!'
வேறொன்றுமில்லை. நேற்று வங்கியராய மன்னர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றபோது, ஊர்மக்கள் சிலர் பேசிக் கொள்வதைக் கேட்க நேர்ந்தது. அது ஒரு கல்யாணக் கூட்டம். ஆண்களும் பெண்களுமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மன்னர் போன நேரம், பேச்சு சிவப் பரம்பொருளைப் பற்றியதாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் யாரோ ஒருவர், லேசான மதர்ப்பில் இருந்தாரோ என்னவோ, கடுமையான சொற்களைக் கொட்டி விட்டார்.
'சிவபெருமான் வேடதாரியாம்; சுடுகாட்டுக் கோவணாண்டியாம்; பரதேசியாம்; கபால மாலை யும் சுடுகாட்டுச் சாம்பலும் தரித்து ஆட்டம் போடும் அன்னக் காவடியாம்.'
அவர் ஏன் இப்படிச் சொன்னார், எதற்காக அவ்வளவு ஆவேசப்பட்டார் என்றெல்லாம் விசாரிக்கும் பொறுமை வங்கியசோழருக்கு இல்லை. இந்தச் சொற்கள் காதில் விழுந்த மாத்திரத்திலேயே, அந்த இடத்தில் இருந்து ஓடோடி நகர்ந்து விட்ட மன்னருக்கு, அதற்குப் பின்னர் நிம்மதியே இல்லை. 'இப்படிச் சொல்லி விட்டாரே!' மனமும் அறிவும் மாறி மாறி ஓலமிட்டன. 'சிவ பெருமானா அன்னக்காவடி?' மனம் இவ்வாறு துடித்த போதெல்லாம், அறிவு சமாதானப்படுத்தியது. 'பரம்பொருளை யாரும் அன்னக்காவடி ஆக்க முடி யுமா? அவர் பிட்சாடனர் வேடம் போட்டதே நமக்காகத்தானே! புரியாமல் பேசுபவர்கள் பேசிவிட்டுப் போகட்டும்; ஒரு நாள் உணர்வார்கள்.'
ம்... ஹும்! என்னதான் சமாதானம் சொன்னாலும், மனம் மட்டும் அடங்க மறுத்தது. 'முக்கண்ணப்பா, நீ எதற்கு இப்படி ஊர் வாயில் விழுந்து எழுகிறாய்? மனித குலம் எதை அழகு என்று எடை போடுகிறது என்பது உனக்குத் தெரியாதா? பின்னர் ஏன், புலித் தோலை அணிந்து, சாம்பல் பூசி, சுடுகாட்டில் ஆடி... அழகனாகக் காட்சி தந்துவிட்டால், இந்தப் பேச்செல்லாம் வராதுதானே!' - பரிதவித்துப் பரிதவித்து வங்கியசோழன் வைத்த வேண்டுகோள், பரமனார் காதிலும் விழுந்தது.
பாம்புகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பரமனார், வங்கிய சோழனின் வருத்தம் கண்டு திகைத்தார். 'இத்தனை அன்பா? யாரோ, ஏதோ பேசினார்கள் என்று விடாமல், அதற்காக இவ்வளவு வருந்தி... வங்கிய சோழனைப் பற்றி ஊர் உலகத்துக்கே நன்கு தெரியும். தாயாதி சண்டையில் சேதி நாட்டுப் பகுதியையே விட்டுக் கொடுத்தவன்; அதன் விளைவாகக் கோயில் மரியாதைகளையும் விட்டுக் கொடுத்தவன். அவனுடைய மனம், பதவிக்காகவோ அதிகாரத்துக்காகவோ மாலை- மரியாதைக்காகவோ அல்லாட வில்லை. ஐயன் பரமனாரைப் பற்றிப் பேசிவிட்ட அவதூற்றுச் சொல்லை, அவனால் தாங்க முடியவில்லை.'
வங்கியசோழரின் மனதை மகிழச் செய்ய என்ன செய்யலாம் என்று திட்டமிடத் தொடங்கினார் திருவாளர் சிவனார். ஆனால், அவரது திட்டத்துக்கு இடம் கொடாமல், வங்கியசோழரே விண்ணப்பம் வைத்தார்.
'உன்னைக் கோவணாண்டி என்று இவர்கள் பேசியதை, இல்லை என்றாகும்படி அழகனாக, ஆலால சுந்தரனாக நீ காட்சி தரவேண்டும். கண் குளிர அதை இங்கு எல்லோரும் காண வேண்டும்!'
பிட்சாடனராக, கபால மூர்த்தியாக, புலித்தோல் பிரானாக, சபாநாதராக... பக்தர்கள் கேட்டவிதமெல்லாம் கோலம் புனையும் பரமனுக்கு, இந்த ஒரு வேண்டுகோள் போதாதா? அவ்வளவுதான். அழகு சுந்தரனாகப் புறப்பட்டு விட்டார். அண்ட- பகிரண்டத்து அழகெல்லாம் ஒன்று திரண்டு, ஓர் உருக் கொண்டு, தண்டையும் சலங்கையும் 'கிண் கிணி' கொட்ட, இடையில் வெண்பட்டுத் துகில் விரிந்து பளபளக்க, பொன்னார் மேனியில் பொன் ஆபரணங்கள் மிளிர்ந்து துலங்க, அழகு மகனாக, ஆனந்த மூர்த்தியாகக் காட்சி தந்தார்.
வங்கியசோழன் வேண்டுகோளுக்கு இணங்கி அழகு மூர்த்தி அருள்காட்சி தந்த இடம் எது?
அந்த இடமே, அன்னை பார்வதி தவம் செய்து ஐயனின் கைத்தலம் பற்றிய இடமும் ஆகும்.
இதுவே, அகத்தியர் வழிபட்ட தலமும்கூட!
திருஞானசம்பந்த பெருமான் 'இடர் களையும் பதிகம்' பாடிய பெருமைமிகு பதியும் இதுவே.
எங்கே என்கிறீர்களா? வாருங்கள், திருநெடுங்களம் போவோம். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது திருநெடுங்களம். திருச்சி- தஞ்சாவூர் சாலையில், துவாக்குடியை அடைந்து, அங்கிருந்து வடக்காகத் திரும்பி, சுமார் 3 கி.மீ. சென்றால், திருநெடுங்களத்தைச் சேரலாம். திருவெறும்பூர் என்ற திருத்தலத்துக்கு அருகில் உள்ள இந்தக் கோயில், நிர்வாக ரீதியாக, திருவெறும்பூருடன் சேர்த்து வைக்கப்படுகிறது.
திருச்சி- சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உண்டு (மேலமாங்கா வனம், கீழ மாங்காவனம் செல்லும் பஸ்கள் திருநெடுங்களம் வழியாகச் செல்கின்றன). சில தருணங்களில் மக்கள், புழக்கத்தில் நெட்டாங் குளம் என்று அழைத்தாலும் பெயர்ப் பலகைகள் 'திருநெடுங்களம்' எனும் பழைய பெயரைத் தாங்கியே உள்ளன. சிறிய ஊர். திருக்கோயிலை அடைகிறோம்.
'தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது
பெட்டப் பிண மென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழை மடநெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை' என்று ஐயடிகள் காடவர்கோன் இந்தத் தலத்து இறைவனைப் பாடுகிறார். மூர்த்தி- தலம்- தீர்த்தச் சிறப்புகள் கொண்ட நெடுங்களத்தின் ராஜ கோபுரம் முன்னே பணிகிறோம். ஐந்து நிலை கொண்ட கிழக்கு ராஜ கோபுரமே பிரதான வாயில். கோபுரத்துக்கு வெளியிலேயே, ஒரு பக்கம் விநாயகர் சந்நிதி; மற்றொரு பக்கம் சுப்ரமணியர் சந்நிதியும், கருப்பண்ண சுவாமி சந்நிதியும். கருப்பண்ண சுவாமி சந்நிதிக்கு எதிரில், கோயில் தீர்த்தங்களுள் ஒன்றான சுந்தர தீர்த்தம். கருப்பண்ண சுவாமிக்கு பானகம் நைவேத்தியம் செய்து, பலருக்கும் வழங்கி வழிபட்டால், நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பலரும் இதை செய்வதைக் காணலாம்.
ராஜ கோபுரத்தின் வழி உள்ளே நுழைந்தால், எதிரில் கொடிமரம்- பலி பீடம்- நந்தி. வலப் பக்கத்தில் தெற்கு நோக்கியதாக அம்பாள் சந்நிதி. இடப் பக்கத்தில் நந்தவனம். நாம் இப்போது நிற்பதே வெளிப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தில் இருந்து உள் பிராகாரம் செல்வதற்கு, மூன்று நிலைகளுடன் கூடிய உள் கோபுரத்தைத் தாண்ட வேண்டும். உள்ளே சென்றால், உள் பிராகாரம்.
வலம் வரத் தொடங்குவோமா?
கிழக்குச் சுற்றுக்குள்தானே நுழைந்தோம்... அங்கேயே தொடங்குவோம். முதலில் சூரியன்; அடுத்து, மெய்க் காவல் அறை. தென்கிழக்கு மூலையில் கோயில் மடைப்பள்ளி. கிழக்குச் சுற்றில் அடுத்ததாக, சைவ நால்வர் பெருமக்கள். பக்கத்திலேயே சேக்கிழார். சமீப காலத் திருப்பணி களின்போதுதான் சேக்கிழாரைச் சேர்த்தார்களாம். நல்ல சங்கதிதான்.
கிழக்குச் சுற்றுக்குள் திரும்பும்போது, நமக்கு இடப் பக்கத்தில் திருக்கோயில் அலுவலகம்; வலப் பக்கத்தில், கிழக்குப் பார்த்த சோமாஸ்கந்தர் சந்நிதி. சோழர் காலக் கட்டுமானத்தின் சிறப்பை, இந்தக் கோயிலின் உள் பிராகாரத்திலும் காண முடிகிறது. திருச்சுற்று மாளிகை மிக அழகாக அமைந்துள்ளது.
கிழக்குச் சுற்றில் வரிசையாக அப்புலிங்கம், வாயு லிங்கம், கோப்புலிங்கம். தொடர்ந்து ஐயனார் மற்றும் சப்தமாதர்கள். அடுத்து ஒரு விநாயகர்; மீண்டும் சிறிய அளவுகளில், சப்த மாதர்கள். சப்த மாதர்களில் ஒருவரான வாராஹிக்கு இங்கே சிறப்பு வழிபாடு நடக்கிறது. அம்பிகை பராசக்தியின் பணிப்பெண்களில் ஒருவரான வாராஹி, தண்டநாதா என்றும் அழைக்கப்படுகிறார். தவறு செய்தால் தண்டிக்கக் கூடிய அதிகாரத்தை, அம்பிகை வாராஹிக்கே தந்துள்ளார்.
இதனால், அம்பிகையின் நிர்வாகத் தொண்டர்களில் ஒருவராக விளங்கும் வாராஹி, திருமணத் தடைகளை நீக்குவ தாக ஐதீகம். திருநெடுங்களத்தில் இதைக் கண்கூடாகக் காண முடிகிறது. வாராஹி திருமேனி முழுவதும் மஞ்சளாகத் தோற்றம்
தருகிறது. மஞ்சள் நீரால் வாராஹிக்கு அபிஷேகித்து, அந்த நீரைக் கன்னிப் பெண்களின் தலையில் தெளித்தால், விரைவில் திருமணம் கைகூடும்.
தென்மேற்குப் பகுதியில், தெற்குச் சுற்றில் இருந்து மேற்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், கிழக்குப் பார்த்த (திருமாளிகை அமைப்புக்குள் இல்லாமல் பிராகார தளத்தில்) விநாயகர் சந்நிதி. இவர் வலம்புரி விநாயகர். மேற்குப் பிராகாரத்திலேயே, திருமாளிகைக்குள், வள்ளி- தெய்வானையுடன் கூடிய அருள்மிகு சுப்ரமணியர். நான்கு திருக்கரங்களுடன் எழில்
கொஞ்சுகிற சுப்ரமணியர். இவரைத்தான் அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடிப் பரவுகிறார்.
'இந்து நுதலும் புரள கங்குல் மேகம்
அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள
அம்பொன் உரு மங்கை மணம் உண்ட பாலா -
அன்பர் குலவும் திருநெடுங்கள வளம் பதியில்
அண்டர் அயனும் பரவு தம்பிரானே' என்று திருப்புகழ் போற்றும் சுப்ரமணியரை வணங்கி நகர்கிறோம். மேற்குச் சுற்றின் வடபகுதியில், தேவி- பூதேவி சமேத வரதராஜப் பெருமாள். அமர்ந்த கோலநாதர். மருகனான முருகன் அழகென்றால், மாமனான அழகரும் அழகுதானே! இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அழகை நிறைக்கிறார்கள். வட மேற்கு மூலையில் ஜ்யேஷ்டாதேவி சந்நிதி.
திருமகளுக்கு மூத்த சகோதரிக்குத்தான் ஜ்யேஷ்டா என்று பெயர் (ஜ்யேஷ்டம் - மூத்த). கையில் துடைப்பமும் முறமும் தாங்கியவளான ஜ்யேஷ்டா, நமது தீமைகளைக் கூட்டி, அள்ளி, வாரிப் போட்டு விடுகிறாள்.
அழகு என்று நாம் சாதாரணமாகச் சொல்லும் தன்மையை ஜ்யேஷ்டா விடம் காண முடியாதுதான்... ஆனால் ஏதோ ஒரு கரிசனம் அவளிடத்தில் புலப்படுகிறது.
வடக்குப் பிராகாரத்தில் திரும்பி நடக்க, இந்தச் சுற்றின் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் சந்நிதி. அகத்தியர் வழிபட்ட லிங்கம். கிழக்குப் பார்த்த அகத்தீஸ்வரருக்கு முன்னால் நந்தியும் உண்டு.

Comments