குழந்தை பாக்கியம் அருளும் திருவாழ்மார்பன் திருத்தலம்!


திருவெண்பரிசாரம்- 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒன்று. நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பெற்றது. அவர் அவதரித்த புனிதத் தலமும் இதுதான்! குமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்துக்கு திருப்பதிசாரம் (வடமொழியில் பதிசாரம்) என்ற பெயரும் உண்டு.
இரண்யகசிபுவை வதைத்த நரசிம்மரின் உக்கிரம் தணிவதாக இல்லை. தன் நாயகரை நெருங்க இயலாமல் தவித்த மகாலட்சுமி, தவத்தில் ஆழ்ந்தாள். அப்போதும் நரசிம்மரின் உக்கிரம் குறைய வில்லை. தேவர்களும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது சிறுவன் பிரகலாதன் பயமின்றி பக்தி பரவசத்துடன் பெருமாளின் கீர்த்தனைகளைப் பாட... சினம் தணிந்தார் நரசிம்மர். பிறகு, திருமகள் தவம் புரியும் இந்தத் தலம் வந்து, 'திரு'வாகிய அவளை தன் மார்பில் ஏற்று, திருவாழ்மார்பனாக அருள் புரிந்தார். எனவே, இத் தலம் திருப்பதிசாரம் ஆனது. அது சரி... திருவெண்பரிசாரம் எனும் பெயர் எதற்கு?
'பரி' என்றால் குதிரை. ஒரு முறை குலசேகர மன்னனின் பட்டத்துக் குதிரை (வெண் குதிரை) காணாமல் போய் விட... அதை, இந்தத் தலத்தின் சோமலட்சுமி தீர்த்தக் கரையில் கண்டடைந்தாராம். எனவே, இந்தத் தலத்துக்கு திருவெண்பரிசாரம் என்று பெயர் (திருவாழ்மார்பனை தரிசித்த மன்னர் குலசேகரன், திருக்குளப் படித்துறை உட்பட கோயிலுக்கும் பல்வேறு திருப்பணி செய்துள்ளாராம்). வெண் குதிரையுடன் பகவான் எடுக்கப் போகும் கல்கி அவதாரத்தின் சாரமாக திகழும் தலம் ஆதலால், 'திருவெண்பரிசாரம்' எனப் பெயர் வந்ததாகவும் கூறுவர்.
சோமலட்சுமி தீர்த்தக் குளத்தின் மேற்கில் கம்பீரமாக அமைந்துள்ளது திருக்கோயில். கோயிலில் ராஜ கோபுரம் இல்லை. ஒரே பிராகாரம். நுழைவாயிலின் மேலே தேவி- பூதேவி சமேத நாராயணன், ராமன், லட்சுமணன், கருடாழ்வார் மற்றும் நம்மாழ்வார் ஆகியோரது புடைப்புச் சிற்பங்கள். உள்ளே நுழைந்ததும் கொடி மரம். அடுத்து ஆனந்த மண்டபம். இங்கு, ராமன் மற்றும் கருடாழ்வார் சந்நிதிகள் எதிரெதிரே உள்ளன.ராம பட்டாபிஷேகம் முடிந்து இலங்கை திரும்பும் வழியில் இங்கு வந்த விபீஷணன், சோமலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, திருவாழ்மார்பனை வழிபட்டார். அத்துடன் ராம பட்டாபிஷேகத்தை மீண்டும் காணும் பாக்கியத்தைத் தருமாறும் பெருமாளிடம் வேண்டினார். அதை ஏற்று விபீஷணருக்கு, ராமனாக நின்ற கோலத்தில் காட்சி தந்தாராம் திருவாழ்மார்பன்! எனவே, இங்கு ராமரின் எதிரில் அனுமனுக்குப் பதிலாக கருடாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார். தவிர, விஷ்வக்சேனர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.
கருவறையில், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் மூலவர்- திருவாழ்மார்பன் (சப்த ரிஷிகளுக்குக் காட்சி தர, எம்பெருமான் இந்திர கல் யாணி விமானத்தில் வந்து இறங்கினாராம்). யோக நிலையில் தரிசனம் தரும் மூலவரின் திருமேனி, 'கடுகு சர்க்காரை' மூலிகையால் ஆனது. எனவே, இவருக்கு அபிஷேகமோ அரளிப்பூ மாலை சார்த்துவதோ கிடையாது. புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது.
இந்த நரசிம்மரை வழிபட்டு, அருள் பெற்றவர் களில் குறிப்பிடத்தக்க ஓர் அன்பர் திருவாழ்மார்பன்! ஆம், இத்தல மூலவர் நரசிம்மரின் பெயரையே தனதாக்கிக் கொண்டவர்! இவரின் மகள், உடையநங்கைக்கும் திருக்குறு கூரைச் சேர்ந்த காரி என்பவருக்கும் திரு மணம் நடந்தேறியது. இல்லறம் இனிதே நடந்தது. ஆனால், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இருவரும் குழந்தை வரம் வேண்டி இந்தத் தலத்தில் 41 நாட்கள் விரதம் அனுஷ்டித்தனர். இதன் பலனாக அவர்கள் பெற்றெடுத்த குழந்தையே நம்மாழ்வார். வடக்கு ரதவீதியில் இவர்கள் வசித்த வீட்டை, 'நம்மாழ்வார் தாயகம்' என்ற பெயரில் இன்றும் காணலாம். விஷ்ணு பக்தரான திருவாழ்மார்பன், இங்குள்ள மூலவருடன் ஐக்கியமானதாகச் செவி வழிச் செய்தி உண்டு! இவரின் சகோதரியான திருப்பதிநங்கைக்கும் இந்த ஆலயத்தின் அருகே தனிக் கோயில் உண்டு.
இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது. இங்குள்ள மற்றொரு சிறப்பம்சம் திருவள்ளுவர் சந்நிதி. உள்ளே மனைவி வாசுகி மற்றும் சீடர்கள் புடை சூழக் காட்சித் தருகிறார் திருவள்ளுவர். திருக்குறள் இயற்ற, அப்பனாக இருந்து வள்ளுவருக்கு அருளியவர் ஆதலால் திரு வாழ்மார்பனுக்கு, 'திருக்குறளப்பன்' என்ற பெயரும் உண்டு.
சைவ- வைணவ ஒற்றுமைக்குச் சான்றாகவும் இத்தலம் விளங்குகிறது. இதன் மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில், பழையாற்றங்கரையில் உள்ள தலம் ஜடாயுபுரம்; ராவணனால் வெட்டப்பட்ட ஜடாயுவின் றெக்கை விழுந்த பூமி. இங்கு, ஜடாயுக்கு மோட்சம் அளித்த ராமபிரான், ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். இந்த சிவலிங்கத் திருமேனிக்கு 'ராமலிங்க ஸ்வாமி' என்பது திருநாமம். வருடந்தோறும் சித்திரை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று கொடி ஏற்றத்துடன் பெருமாள் கோயிலில் திருவிழா துவங்குகிறது. இதன் 5-ஆம் நான்று நடைபெறும் வெள்ளி கருட சேவை மற்றும் 'அத்தான்- மைத்துனன் (சிவன்- திருமால்) சந்திப்பு வைபவம் சிறப்பானவை!

Comments