இன்றைய இறை வழிபாடுகளுக்கு முன்னோடி என்று போற்றப்படுபவர் ஆதிசங்கரர். கேரள மாநிலத்தில் காலடி என்ற புண்ணிய பூமியில் அவதரித்த கருணை வள்ளல். இந்து மதத்தின் இணையற்ற பிதாமகர். சிவபெருமானே ஆதிசங்கரராக அவதாரம் எடுத்து வந்து, ஆன்மிகக் கருத்துகளை பாரதத்தில் போதித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
தனது அவதார காலத்துக்கு முன் வரை, முறையற்று இருந்த இறை வழிபாடுகளை சௌரம் (சூரியன்), சைவம் (சிவன்), சாக்தம் (சக்தி), வைணவம் (விஷ்ணு), காணாபத்தியம் (விநாயகர்), கௌமாரம் (முருகன்) என்று ஆறு வகையாகப் பிரித்து, பக்தி நெறியை தழைத் தோங்கச் செய்தார் ஆதிசங்கரர். இன்றைக்கு இந்த ஆறு வகையான வழிபாடுகள் பக்தர்களிடையே பெருகி இருந்தாலும், அவற்றுள் சிறப்பாகச் சொல்லப்படுபவை சைவமும் வைணவமுமே! எந்த ஒரு ஊரை எடுத்துக்
கொண்டாலும் அங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் தனித்தனியே ஆலயம் நிச்சயம் இருக்கும் (ஆனால், வழிபாடு நிச்சயம் இருக்குமா என்று சொல்ல முடியாது).
ஆனால், சைவமும் வைணவமும் இணைந்த ஓர் அற்புதக் கலாசாரம் ஒரே திருக்கோயிலில் காணக் கிடைப்பது அபூர்வம். அப்படிப்பட்ட ஒரு திருக் கோயில் காவேரிப்பாக்கத்துக்கு அருகே அமைந்துள்ளது.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு
அடுத்து வருவது காவேரிப்பாக்கம். சென்னையில் இருந்து காவேரிப்பாக்கத் துக்கு சுமார் 100 கி.மீ.! தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்துக்கு வலப் பக்கம் காவல்நிலையத்தை ஒட்டிச் செல்லும் சாலை சோளிங்கர் வரை நீளும். இடப் பக்கம் பிரமாண்ட ஏரியுடன் துவங்கும் இந்தச் சாலையில் வாழைத்தோப்புகள், நெல் வயல்கள் என சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால் வருகிறது ஐயம்பேட்டைசேரி எனும் கிராமம் (தியாமுகச்சேரி என்றும் அழைக்கிறார்கள். திசைமுகன்சேரி என்பது தியாமுகச்சேரி என ஆகி இருக் கிறது. திசைமுகன் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பிரம்மனின் விருப்பப்படி அவருக்கு திருமால், பரம பதநாதராக இந்தத் திருத்தலத்தில் காட்சி கொடுத்தாராம். சிறப்பு வாய்ந்த அந்த பரமபதநாதர் திருக்கோயில் பற்றி 'ஆலயம் தேடுவோம்' பகுதியில் கடந்த 04.12.06 இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது).
காவேரிப்பாக்கம் அல்லது சோளிங்கரில் இருந்து பேருந்தில் வந்தால் ஐயம்பேட்டைசேரியில் இறங்க வேண்டும். இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு நடந்தால், இந்த அற்புதத் திருக்கோயிலை அடையலாம்.
இது ஒரு சிவ ஸ்தலம். ஆனால், இந்த ஈஸ்வரரின் பெயர்- நரசிம்மேஸ்வரர். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்ததைக் குறிக்கும் திருநாமம்தான் ஈஸ்வரரின் பெயர். இந்த நரசிம்மேஸ்வரரின் கருவறை விமானத்தில் கோவர்த்தன மலையைத் தூக்கி நிற்கும் கிருஷ்ணர், காளிங்க நர்த்தன கண்ணன், பக்தர்க ளுக்கு அருளும் பரமபதநாதர், ஆக்ரோஷ நரசிம்மர், சிவலிங்கத்தை வணங்கும் நரசிம்மர் என்று வைணவம் தொடர்பான சுதைச் சிற்பங்கள் பல காணப்படுகின்றன. இதன் ஒரு பகுதியில் ஆஞ்சநேயரும் காட்சி தருகிறார். பழைமைக்கு சாட்சியான இந்தச் சிற்பங்கள் சிதைந்தும், சீர் குலைந்தும் காட்சி தருவது பரிதாபம்.
கயிலைவாசன் குடி கொண்டிருக்கும் இந்த ஆலய விமானத்தில், வைணவ சம்பிரதா யங்களைச் சொல்லும் சுதைச் சிற்பங்கள் வந்தது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள பிரகலாதனின் அவதாரக் கதையைச் சற்றே அசைபோட வேண்டும். 'காஞ்சி புராணம்' இதை விரிவா கச் சொல்கிறது. சுருக்கமாகப் பார்ப்போம்.
தசாவதாரத்தில் நரசிம்ம அவதாரக் கதை பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். கடும் தவம் இருந்து ஈசனிடம் பல வரங்களைப் பெற்ற இரண்யன் எனும் அசுரன், தேவர்களையும் முனிவர்களையும் பெரும் தொல்லைக்கு ஆளாக்கி வந்தான். தானே இந்த உலகுக்கு அரசன் என்கிற இறுமாப்பு இரண்யனிடம் சேர... அவனது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு மகா விஷ்ணுவிடம் சென்று, தாங்கள் படும் துயரம் குறித்து முறையிட்டனர்.
ஈசனிடம் இரண்யன் பெற்றுள்ள வரங்களையும் அவற்றின் தன்மையையும் தேவர்களுக்கு எடுத்துச் சொல்லி, 'இரண்யனை அழிப்பது சாதாரண விஷயம் அல்ல... அரிய வரங்கள் பெற்றவன் அவன். எனினும் கவலை வேண்டாம். விரைவிலேயே உங்களது துயரம் தீரும்.' என்று ஆறுதல்படுத்தி அனுப்பி வைத்தார் மகாவிஷ்ணு.
திருமாலின் திருவுளப்படி இரண் யனுக்கு மகனாக பிரகலாதன் அவதரித்தான். ஆனால், அவனோ, மந் நாராயணனின் பரம பக்த னாக இருந்தான். நாட்டில் உள்ள அனைவரும் 'இரண்யாய நம:' என்று பயத்துடன் சொல்லும்போது, பிரகலாதன் மட்டும் துணிவுடன் 'நாராயணாய நம:' என்று சொல்லி வந்தான். இரண்யன் எவ்வளவு மிரட்டியும் பிரகலாதன், தான் கொண்ட விஷ்ணு பக்தியில் இருந்து மாற வில்லை. மகன் என்றும் பாராமல் பல சந்தர்ப்பங்களில் பிரகலாதனைக் கொல்லத் துணிந்தான் இரண்யன். விடுவாரா விஷ்ணு? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரகலாதனைக் காத்து அருளினார்.
கோபத்தின் உச்சிக்கே போனான் இரண் யன். 'எங்கே இருக்கிறார் உன் விஷ்ணு? காட்டு அவரை; கபளீகரம் செய்கிறேன்' என்ற இரண்யனுக்கு, 'தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என் ஹரி' என பதில் சொன்னான் பிரகலாதன். 'இதோ, இந்தத் தூணில் இருக்கிறானா உன் விஷ்ணு?' என்று ஒரு தூணைக் குறிப்பிட்டுக் காட்டிய இரண்யனுக்கு, 'ஆம்' என்று தலை அசைத்தான் பிரகலாதன். தன் கையில் இருந்த ஆயுதத்தால், அந்தத் தூணை இரண்யன் பிளக்க... உள்ளிருந்து நரசிம்மம் கிளம்பி வந்தது.
அதன் பின், ஈசனிடம் இரண் யன் வாங்கிய வரத்துக்குக் குந்தகம் இல்லாமல், அவனை சம்ஹாரம் செய்தார் நரசிம்ம மூர்த்தி. தன் கை நகங்களாலேயே இரண்யனின் மார்பைப் பிளந்து ஒரு துளி ரத்தம் கூட கீழே சிந்தாமல் அதைக் குடித்தார். மடிந்தான் இரண்யன். அவனுடன் நிகழ்த்திய உக்கிரமான போரின் விளைவாக, நரசிம்மத்தின் வெறி அதிகமானது. இரண்யனின் உயிரற்ற உடலைக் கழுத்தில் மாலையாகப் போட்டபடி சுழன்று ஆடினார்.
தேவர்களால் அவரைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பிரகலாதன் முயன்றான்; பிடி கொடுக்கவில்லை. தேவி யான மகாலட்சுமி தன் நாயகனைச் சாந்தப்படுத்த முயன்றாள்; சமாதானம் ஏற்படவில்லை. இந்நிலையில், பிரம்ம தேவனை துணைக்கு அழைத்துக் கொண்டு கயிலாயம் சென்றனர் தேவர்கள். 'மாலவனை சமாதானப்படுத்த மகாதேவன் வர வேண்டும்!' என கோரிக்கை வைத்தனர். செவி சாய்த்தார் மகேசன்.
நரசிம்மத்தின் முன் சரபராக வடிவெடுத்து வந்த மகேசன், அவரை அமைதிப் படுத்தி, வெறியைத் தணித்தார். பரந்தாமன் சாந்த சொரூபி ஆனார். தன்னை சாந்தப்படுத்திய ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கேயே ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் நரசிம்ம மூர்த்தி. ஈசனும் இன்முகத்துடன் அங்கிருந்து மறைந்தார்.
''இந்த நிகழ்வு நடந்த திருத்தலம் இதுதான். அந்த நரசிம்ம மூர்த்தி, பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கத் திருமேனியே இன்று நரசிம்மேஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதை உறுதிப் படுத்தும் வகையில்தான் நரசிம்மேஸ்வரரின் கருவறை விமானத்தில், லிங்கத்தை வழிபடும் நரசிம்மரின் சுதைச் சிற்பம் காணப்படுகிறது'' என்கிறார் உள்ளூர்ப் பெரியவர் ஒருவர். ('இது நிகழ்ந்தது இங்கல்ல. காஞ்சி புரத்தில்தான் நடந்தது. அங்கே நரசிங்கீஸ்வரர் என்ற பெயரில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது' என்கிறார் ஆராய்ச்சியாளர் ஒருவர். ஆனால், இதற்கான தலம் எங்கே இருக்கிறது என்று அவரால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை).
போகட்டும்... புராணம் சொல்லும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதாரங்களைத் தேடி அலைவது, எந்த விதத்தில் பயனளிக்கும் என்று சொல்ல முடியாது. பல ஆலயங்கள் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள், தலைமுறை தலைமுறையாக செவிவழியாகவே இருந்து வருகின்றன. சுய தேவை களுக்காக பல்வேறு சவால்களைச் சந்திக்கிற இந்தக் கலியுகத்தில், பல திருத்தலங்களைப் பற்றிய தகவல் கள் இன்னமும் அறியப்படாமலும் ஆராயப்படா மலும் இருப்பது சோகமே! இதையும் மீறி, ஆன்மிக ஆர்வலர்கள் சிலர், பழுதுபட்ட ஆலயங்களைத் தேடி அலைந்து, குறிப்புகள் திரட்டுவது என்பது, எதிர்காலத்துக்குப் பயன் தரும் இனிய செய்தி!
''திருமால் வழிபட்ட சிவ ஸ்தலங்கள் காஞ்சிபுரம் பகுதியில் நிறைய இருக்கின்றன. இதில் தசாவதாரங் களைச் சொல்லும் தலங்களும் அடங் கும். காஞ்சியில் கச்சபேஸ்வரர் (கூர்மவதாரம்: கச்சபம் என்றால் ஆமை), தாமலில் வராஹீஸ்வரர் (வராஹ அவதாரம்: வராஹம் என்றால் பன்றி), மாமண்டூர் அருகே வேகாமங்கலத்தில் பரசு ராமேஸ்வரர் (பரசுராம அவதாரம்), வாலாஜாபாத் அருகே திம்மராஜ பேட்டையில் ராமேஸ்வரர் (ராம அவதாரம்)... இப்படி பத்து அவதாரங்களுக்கும் திருத்தலங்கள் அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அவற்றுள் நரசிம்ம அவதாரத்தைக் குறிக்கும் நரசிம்மேஸ்வரர் எங்கள் கிராமத்தில் இருப்பது எங்களுக்கெல்லாம் பெருமைதான். எங்கெங்கிருந்தோ, எப்போதாவது சில பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடி வந்து வணங்கும்போதுதான் இதன் மகிமை எங்களுக்குப் புரிகிறது'' என்றார் இந்தக் கிராமத்து ஆசாமி ஒருவர். பெருமையும் மகிமையும் வாய்ந்த நரசிம்மேஸ்வரர் ஆலயத்தை தரிசனம் செய்வோமா?
சற்றே பிரமாண்டமான ஆலயம். தெற்குப் பக்க நுழைவாயில் வழியாக உள்ளே செல்கிறோம். விஸ்தாரமான மகா மண்டபம். முதலில் தரிசனம் தருவது அம்பாள். சிறிய அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கருவறைக்குள் மரகத வல்லி அம்மன். தமிழில் பச்சை அம்மன். வெளியே சிம்ம வாகனம். நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க, இந்தப் பச்சை அம்மனும் குளிர்ச்சியான தன் கதிர்களை அவர் மேல் செலுத்தினாளாம். பாசம், அங்குசம், அபயம், வரதம் தாங்கிய நான்கு திருக்கரங்கள். சுமார் மூன் றரை அடி உயரத்தில் அருள் வழங்கும் இந்த நாய கியை முதலில் தரிசிக்கிறோம்.
ஆலயத்தில் இந்த விஸ்தாரமான மகா மண்டபம், நரசிம்மேஸ்வரரின் விமானம், அம்பாளின் விமானம்- இவை எல்லாம் செங்கல் கட்டுமானம். மற்றதெல்லாம் கருங்கல் திருப்பணி. மகா மண்டபம், பழுதுபட்டுக் காணப்படுகிறது. கடந்த 14.12.06-ல்தான் பாலாலயம் அமைத்துள்ளனர். என்றாலும், ஈஸ்வரனுக்கும் அம்பாளுக்கும் வழிபாடுகள் நடக்கின்றன. பரிவார மூர்த்தங்களான வீரபத்திரர், கால பைரவர், சூரியன், சண்டிகேஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர், விநாயகர்கள் ஆகிய தெய்வங்கள் நரசிம்மேஸ்வரரின் கருவறை அருகே காட்சி தருகின்றனர். உள்ளூர்வாசியான கௌரிபாலன் என்கிற பட்டு தற்போது பூஜித்து வருகிறார்.
இறைவனின் சந்நிதி கிழக்கு நோக்கியது. இந்த நரசிம்மேஸ்வரரை ஒரு யானையே அழகாக வலம் வர முடியும். அந்த அளவுக்கு விசாலமாக இருக் கிறது கருவறை. நரசிம்மேஸ்வரர் என்பதால் உக்கி ரம் தணிப்பதற்காக - சாந்தப்படுத்துவதற்காக விஸ் தாரமாகக் கட்டி இருக்கிறார்கள் போலும்.
பளபளக்கும் அழகான லிங்கத் திருமேனி. நாகா பரணம் அணிந்து நானிலம் சிறக்க அருள் பாலித்து வருகிறார். திருமாலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமைக்குரிய திருவடிவம். இவரை வணங்கினால், கோபம் தணியும் என்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், டென்ஷன் குறைந்து மனம் லேசாகுமாம். நாமும் நரசிம்மேஸ்வரரை பணிந்து வணங்கி வெளிவருகிறோம்.
மெள்ள நடந்து, உள்ளே நுழைந்த வழியே வெளி வந்து பிராகார வலம் துவங்குகிறோம். பெரிய பிரா காரம். ஆலயத்தைச் சுற்றி இருக்கிற ஏராளமான நிலங்கள், கோயிலைச் சேர்ந்ததாம்.
கோஷ்டப் பகுதியில் பீடங்கள் மட்டுமே இருக்கின்றன (பிரம்மாவுக்கு பீடமே இல்லை). விக்கிர கங்களை சமூக விரோதிகள் களவாடிச் சென்று விட்டனராம். பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி விக்கிரகங்கள் ஆலயத்தில் இல்லை. ஆனால், இந்தக் கோஷ்டங்களுக்கு மேலே விமானத்தில் சுதைச் சிற்பங்களாக இவை காணப்படுகின்றன. பிராகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கும் நவக்கிரகங்களுக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன.
பாதுகாப்பு சற்று குறைவாக இருந்ததால் திருட்டு கள் முன்பு நடந்துள்ளனவாம். ஆலயத்துக்கென்று சுமார் 50 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மணி இருந்ததாம். இந்த மணியை ஒலிக்க விட்டால், அதன் ஓசை காவேரிப்பாக்கம் வரை கேட்குமாம். சுமார் நான்கு வருடத்துக்கு முன் இந்த ஆலயத்துக்குள் புகுந்த கொள்ளையர், பிரமாண்ட மணியைத் திருடிச் சென்றுள்ளனராம். அதோடு விமான கலசம், பூஜா பாத்திரங்கள் போன்றவற்றையும் களவாடிச் சென்று விட்டார்களாம்.
பிராகார முடிவில் நந்திதேவர் மண்டபம். அழகான வடிவம். கருங்கல் ஜன்னல் வழியே நரசிம்மேஸ்வரரைப் பார்த்தபடி இந்த நந்தி தேவர் அமைந்துள்ளார். இவருக்கு எதிரில் ஆலய விதானத்தில் உள்ள சிறு கோபுரத்தில், ரிஷபாரூட ராக தரிசனம் தருகிறார் சிவபெருமான். சுதைச் சிற்பமாக. தலையில்- கங்கை, இடது மடியில் உமையை அமர்த்திக் காட்சி தருகிறார் இந்த பெருமான். ஒரு காலத்தில், இங்கு (கிழக்கு நோக்கி) நந்திதேவருக்கு சற்றுத் தள்ளி பெரிய ராஜ கோபுரம் இருந்தது என்கிறார்கள். அருகிலேயே, திருக்குளம். பாழ்பட்டுக் கிடக்கிறது.
ஆலயத்துக்கென விநாயகர், வள்ளி- தேவசேனா -சுப்ரமணியர், பார்வதி, பரமேஸ்வரர் போன்ற உற்சவர் விக்கிரகங்கள் பாதுகாப்பில் உள்ளன.
''ஒரு காலத்தில் குருக்களின் பூஜையோடு மடப்பள்ளியும் இங்கு பிரமாதமாக இருந்து வந்திருக்கிறது. அக்ரஹாரமும் இருந்தது. கார்த் திகை சோமவாரம், மகா சிவராத்திரி, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம் போன்ற வைபவங்களைக் காண பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள். இப்போதும் இந்தத் திருவிழாக்கள் சுமாரான அளவில் நடை பெறுகின்றன என்றாலும் உள்ளூர்க்காரர்களைத் தவிர கூட்டம் அதிகம் இல்லை'' என்கிறார் 'மாருதி பக்த ஜன சபை'யைச் சேர்ந்த அன்பர் சுந்தர். உள்ளூர்வாசிகளது ஒத்துழைப்புடன் இந்தக் கோயிலின் திருப்பணிகளில் தீவிர அக்கறை காட்டி வருகிறார் இவர்.
தவிர, சென்னையில் வசித்து வரும் ஜெய் சங்கர் என்கிற அன்பர், ஆலயத் திருப்பணி வேலைகளைப் பொறுப்பேற்றுச் செய்து வருகிறார். அவர் நம்மிடம், ''இதுதான் எனக்குச் சொந்த ஊர். ஆனால், இந்த ஊருக்கு முதன் முதலாக நான் வந்தது 19.11.06-ல். இந்த ஊருக்கும் கோயிலுக்கும் அன்றைய தினம் நான் வந்தது சுவையான ஒரு சம்பவம். தனிப்பட்ட முறையில் குடும்பத்துடன் பெங்களூரு சென்று விட்டு, காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, நான் வேலை இல்லாமல் இருந்தேன்.
திடீரென எனது செல்போன் ஒலித்தது. காரை சாலை ஓரமாக நிறுத்திப் பேசினேன். என்னை, வேலையில் சேரச் சொல்லி, பெரிய நிறுவனம் ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. எனக்கோ வியப்பு. மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தேன். அப்போதுதான் கார் எந்த ஊரின் அருகே நிற்கிறது என்பதை கவனித்தேன்... அது- காவேரிப்பாக்கம்! அட, இங்குதான் நமது சொந்த ஊர் இருக்கிறதே... அங்குகூட கோயில்கள் இருக்கிறதே என்கிற நினைப்பு வந்தது. எனக்கு வேலைக்கான உத்தரவு காவேரிப்பாக்கத்தில் வரக் காரணமே என் ஊரைச் சேர்ந்த தெய்வங்கள்தானோ என்று மகிழ்ந்து, சென்னைக்குச் சென்று கொண்டிருந்த காரை, சொந்த ஊரான ஐயம்பேட்டைசேரிக்குத் திருப்பினேன்.
இந்த கோயிலுக்குள் நானும் என் மனைவியும் காலடி எடுத்து வைத்த நேரம் மாலை ஆறரை மணி. இந்தக் கோயில் என்னுள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தான் கோயிலைச் சுற்றிப் பார்த்தேன். அப்போது முடிவு செய்தேன் - இந்த ஆலயத் திருப்பணியை நாமே துவங்கலாம் என்று. என் மனைவியும் என் எண்ணத்தை ஆமோதித்தாள்.
பிறகென்ன... குறுகிய இடைவெளியில் பாலாலயம் துவங்கினேன். என்னை என் சொந்த ஊருக்கு வரவழைப்பதற்காக வேலையும் வாங்கிக் கொடுத்தவர் இந்த ஈஸ்வரர். இந்தத் திருப்பணி வேலை, அவருக்கு நான் செய்யும் நன்றிக் கடன்'' என்று உருக்கமாகச் சொன்னார் ஜெய்சங்கர்.
அபிஷேகம் அலங்காரம் இன்றி எத்தனையோ நாட்கள் சும்மா இருந்தாலும், தனது அருள் வெளிப்படுவதற்கு இறைவன் ஒரு நேரத்தைக் காட்டுகிறான். அதற்குச் சிலரைப் பயன்படுத்திக் கொள்கிறான். பலரது பங்களிப்பையும் ஏற்று பெருமைப் படுத்துகிறான்.
'சிறு தர்மமே, சில தலைமுறைகளைக் காக்க வல் லது' என்கிறது சாஸ்திரம். பழுதுபட்ட ஓர் ஆலயத் திருப்பணிகளில் இயன்றவர்கள் பங்கெடுத்துக் கொண்டால், பல தலைமுறைகளுக்குப் புண்ணி யத்தைச் சேர்க்கலாமே! கலிகாலத்தில், பணத்தைச் சேர்ப்பது பெருமை அல்ல; புண்ணியத்தைச் சேர்ப்பதே புனிதமானது!
தகவல் பலகை
தலம்: தியாமுகச்சேரி என்கிற ஐயம்பேட்டைசேரி.மூலவர்: மரகதவல்லி சமேத நரசிம்மேஸ்வரர். அமைந்துள்ள இடம்: சென்னை& பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அடுத்து வருவது காவேரிப்பாக்கம். சென்னையில் இருந்து காவேரிப்பாக்கத் துக்கு சுமார் 100 கி.மீ.! இங்கிருந்து சோளிங்கருக்கு காவல் நிலையத்தை ஒட்டி ஒரு கிளைச் சாலை வலப் பக்கமாகப் பிரிந்து செல்லும் (காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கருக்கு சுமார் 31 கி.மீ.). இந்தச் சாலையில் சுமார் 7 கி.மீ. பயணித்தால் வரும் கிராமம் ஐயம்பேட்டைசேரி. இங்கிருந்து வலப் பக்கம் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. எப்படிச் செல்வது?: காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கருக்கு நகர மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளன. இதில் பயணித்து ஐயம்பேட்டைசேரியில் இறங்கி, ஒரு கி.மீ. நடந்து செல்ல வேண்டும். காவேரிப் பாக்கத்தில் இருந்தும், சோளிங்கரில் இருந்தும் ஆட்டோ மற்றும் கார் மூலமும் ஆலயத்தை அடையலாம். சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள் சோளிங்கரில் & (பாணாவரம்) நிற்கும். ஆலயத் தொடர்புக்கு: ஷாமளா ஜெய்சங்கர் - (சென்னை) |
Comments
Post a Comment