வேதங்கள் வழிபட்ட வேளச்சேரி தண்டீஸ்வரர்!


விரிசடைக் கடவுளாம் சிவ பெருமானை, வேதங்கள் வழிபட்டு அருள் பெற்ற திருத்தலங்கள் ஏராளம். அவற்றில் குறிப்பிடத் தக்கது வேதச் சிரேணி. சென்னை& பாரிமுனையில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான... இந்தத் தலத்தின் தற்போதைய பெயர் வேளச்சேரி!
இங்கு, பேருந்து நிலையம் (விஜய நகர்) அருகில் உள்ள அருள்மிகு தண்டீஸ்வரர் கோயில் புராணச் சிறப்பு மிக்கது.
ஒரு முறை, சோமுகன் என்ற அசுரன் படைப்புக்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து கவர்ந்து சென்றான். பிறகு, எவரும் கண்டறியா வண்ணம் அவற்றை கடலுக்கு அடியில் சேற்றில் புதைத்து வைத்தான். இதனால் படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது. பெரிதும் வருந்திய பிரம்மன், திருமாலிடம் சென்று முறையிட்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற திருமால் மச்ச அவதாரம் எடுத்து, அசுரனை அழித்ததுடன் வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார். அசுரனிடம் இருந்து விடுதலை பெற்று விட்டாலும் வேதங்களுக்கு ஒரு மனக்குறை!
'‘புனிதமான நாம், அசுரனால் கைப்பற்றப்பட்டு சேற்றில் மறைத்து வைக்கப்பட்டதால் அசுத்தமாகி விட்டோமே!’' என்று வருந்தின. மீண்டும் தமக்கே உரிய புனிதத் தன்மையைப் பெறுவது எப்படி? என்று பிரம்மதேவனிடமே கேட்டன. உடனே பிரம்மதேவன், பூலோகத்தில் புனிதமான ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டி, '‘அங்கு சென்று சிவனாரை தியானித்து வழிபட்டால் மீண்டும் புனிதம் பெறுவீர்கள்!'' என்றார். அதன்படியே பூலோகம் வந்த வேதங்கள், பிரம்ம தேவன் சுட்டிக்காட்டிய இடத்தை அடைந்தன. இயற்கை எழிலார்ந்த அந்தப் பகுதியில் ஓர் ஆசிரமத்தை உருவாக்கிய வேதங்கள், தங்களது நித்ய வழிபாட்டுக்காக சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்தன. தினமும் நீராடி இந்த லிங்கத்தை பூஜித்து வழிபட்ட வேதங்கள், இந்த இடத்துக்கு அருகில் அமைந்திருந்த திருவான்மியூர் தலத்துக்குச் சென்று அங்கிருந்த சிவனாரையும் வழிபட்டு வந்தன. இதனால் மகிழ்ந்த ஈசன், வேதங்களின் முன் தோன்றி, வேண்டும் வரங்களைக் கேட்குமாறு பணித்தார்.
வேதங்கள், '‘நாங்கள் மீண்டும் புனிதம் பெற வேண்டும். நாங்கள் அனுதினமும் தங்களை வழிபட்ட இந்த இடமும் அருகில் உள்ள திருவான்மியூரும் எங்களது பெயரால் வழங்கப்பட வேண்டும்!'' என்று வேண்டின. அதன்படியே அருளினார் எம்பெருமான். வேதங்கள் புனிதம் பெற்றன. அவை, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த பகுதி வேதச் சிரேணி என்றும் திருவான்மியூர் தலம் வேதபுரி என்றும் பெயர் பெற்றனவாம்!
அழகுற அமைந்திருக்கிறது திருக்கோயில். நாம், தெற்கு வாயில் வழியாகவே நுழைய வேண்டும். ஏழு கலசங்களு டன் கூடிய ஐந்து நிலை ராஜ கோபுரம் கம்பீரமாகத் திகழ்கிறது. உள்ளே நுழைந்தால் இடப் புறம் உள்ள பெரிய மண்டபத்தில் கணபதி சந்நிதி. அப்படியே முன் பிராகாரத்தை வலம் வந்து, கிழக்கு கோபுர வாயிலை அடைந்து விடலாம்.
மூலவர் சந்நிதி மண்டபத்துக்கு வெளியே நந்தி& பலி பீடம்& கொடிமரம். வெளி மண்டபத்தின் இரு புறமும் சிறிய வடிவிலான பிள்ளையார் மற்றும் வள்ளி& தெய் வானை சமேத சுப்ரமணியர்.
கருவறையில், லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிறார் அருள்மிகு தண்டீஸ்வரர். பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா?
பக்த மார்க்கண்டேயனின் உயிரைக் கவர முற்பட்டு, சிவனாரால் தண்டிக்கப்பட்ட எமதர்மனின் கதை தெரிந்ததே. பின்னர், எமதர்மனை உயிர்ப்பித்த ஈசன், அவனிடம் இருந்து தாம் பறித்த எம தண்டத்தையும் திருப்பி அருளினார். எனினும், சிவலிங்கத்தின் மீதே பாசக் கயிற்றை வீசியது பெரும் பாவம் எனக் கருதிய எமதர்மன், அந்த பாவம் தீர நாரதரிடம் வழி கேட்டான். அவரது ஆலோசனைப்படி, இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வேதங்கள் வழிபட்ட சிவ லிங்கத்தையும், திருவான்மியூரில் வான்மிக முனிவர் வழிபட்ட சிவலிங்கத்தையும் அனு தினமும் பூஜித்தான். இதனால் மகிழ்ந்த சிவனார் அவனுக்கு மூன்று வரங்கள் அருளினார். அதன்படி, முதலாவதாக அவனின் பாவம் தொலைந்தது. அடுத்ததாக... ‘தங்களை வணங்குவோருக்கு காமாலை, குஷ்டம், வயிற்று உளைச்சல், வாதம் முதலான நோய்களால் துன்பம் நேரக் கூடாது!' என்ற எமனின் வேண்டுதலை ஏற்றார். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பறித்த தனது தண்டத்தை மீண்டும் அருளிய ஈசன், இந்தத் தலத்தில் அதன் காரணமாக தண்டீஸ்வரர் என்ற திருநாமம் பெற வேண்டும்!' என்ற அவனது வேண்டுதலை ஏற்று தண்டீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்றார்!
சிவனார், தனக்கு மீண்டும் அருளிய தண்டத் தையே, லிங்கமாக பாவித்து எமதர்மன் வழிபட்ட தால் இந்தத் தல ஈசனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதா கவும் சொல்வர் (இங்கு, எமதர்மன் உருவாக்கிய தீர்த்தம் எம தீர்த்தம் என்ற பெயரிலேயே விளங்கு கிறது. ஸ்தல விருட்சம் வில்வம்).
வேதங்களுக்கு அருளிய அந்த வேத நாயகனை& எமனுக்கு தண்டம் அருளிய தண்டீஸ்வரரை நெக்குருக வணங்கி விட்டு அம்பாளை தரிசிக்கச் செல்கிறோம். தெற்கு நோக்கிய கருவறையில் கருணையே உருவாகக் காட்சி தருகிறாள் கருணாம்பிகை. நாள் முழுவதும் பார்த் துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு! அம்பாளின் கருவறையில்சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அம்பாள் கருவறை மண்டபத்தில் தரிசிக்க வேண்டிய மற்றொன்று... தம் மைந்தர்கள் மற்றும் சக்தி சமேதராக குடும்பத்துடன் சிவனார் திகழும் அற்புதக் காட்சி! ஒரே இடத்தில் சிவக் குடும்பத்தை தரிசிக்கலாம் ஆதலால் இந்த ஆலயத்தை பூலோக கயிலாயம் என்று போற்றுவர்.
மேலும் திருக்கோயில் பிராகாரத் தில் தனித்திருக்கும் சம்பு சூரியன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர் (உற்சவர்), சந்திர சேகரர், லிங்கோத்பவர், மகாலட்சுமி, சரஸ்வதி, வள்ளி& தெய்வானை சமேத சுப்ரமணியர் (உற்சவர்), விநாயகர் (உற்சவர்) ஆகியோரை யும் தரிசிக்கலாம். தொடர்ந்து திருவனந்தல் பள்ளியறை. பிறகு, சண்டேஸ்வரர் (உற்சவர்), திருஞானசம்பந்தர், சிவகாமி உடனுறை நடராஜர் ஆகியோரை யும் தரிசிக்கலாம்.
தெற்கு கோபுர வாயிலில் இருந்து வெளிப் பிராகாரத்தை துவங்கும் போது, தனி மண்டபத்தில் வலம் புரி விநாயகர், தில்லை வாழ் அந்தணர், அறுபத்து மூவர் மற்றும் அப்பர்& சுந்தரர்& சம்பந்தர்& மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் காட்சி தருகின்றனர்.
மீண்டும் வெளிப்புற பிராகாரம். மூன்றாம் கோபுர வாயில் அருகே கணபதி, கந்தன், நந்தியுடன் வைத்தீஸ்வரர், சொக்கநாதர், மீனாட்சி அம்பாள் ஆகியோர் தனித்தனி சந்நிதியில் தரிசனம் தருகின்றனர். தனி உபன்யாச மண்டபத்தையட்டி நவக்கிரக சந்நிதி. அடுத்துள்ள சிறு மண்டபத்தில், இருபுறமும் நர்த்தன கிருஷ்ணரது விக்கிரகங்கள் இருக்க நடுவில் சிலா விக்கிரகமாக நாகர் எழுந்தருளியுள்ளார். நாக தோஷம் நீங்கவும் மகப்பேறு வேண்டியும் இவரை வழிபடுவது சிறப்பு என்கிறார்கள். தவிர... துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியர் ஒருசேர காட்சி தருவ தும் கோயிலின் மற்றொரு சிறப்பு!
கலியுகத்தில் வாழ்ந்த மகான்களும் இந்தத் திருத் தலத்தைப் போற்றியுள்ளனர். வேளச்சேரிக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து தண்டீஸ்வரரை வணங்கி வந்தார் அப்பைய தீட்சிதர். அப்போது இங்கு அம்பாள் சந்நிதி இல்லை. எனவே, இங்கு அம்பாளையும் பிரதிஷ்டை செய்ய விரும்பி பெரிய வேள்வி ஒன்றைத் தொடங்கிய அப்பைய தீட்சிதர் முதற்கட்டமாக ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தினார். அதுவே பிற்காலத்தில் அப்பைய தீர்த்தம் என்றும் அப்பளாங்குளம் என்றும் வழங்கப்படலாயிற்று. தொடர்ந்து முறைப்படி புனிதச் சடங்குகள் பலவற்றை சிறப்புற முடித்த தீட்சிதர் அம்பாளை பிரதிஷ்டை செய்ததுடன் சக்கரத்தையும் ஸ்தாபித்தாராம். இப்படி வேள்வி நடத்தி, அம்பாளை பிரதிஷ்டை செய்ததால், இந்த ஊர் வேள்விச்சேரி எனப் பட்டு பின்னர் அதுவே மருவி, வேளச்சேரி ஆனது என்றும் கூறுவர்.
ஒரு முறை, காஞ்சி மகா பெரியவருக்கு கனகாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தண் டீஸ்வரர் கோயிலின் அப்போதைய அர்ச்சகர் விஸ்வநாத சிவாச்சார்யரை மடத்துக்கு வரவழைத்தார் மகா பெரியவர். அவரிடம், தனது கனகாபிஷேகத்தின்போது, வேளச்சேரி புண்ணிய தீர்த்தத்தையும் உபயோகிக்க விரும்புவதாகக் கூறினாராம். சிவாச்சார்யரும் பெரியவா விரும்பியபடியே வேளச்சேரியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துச் சென்று கொடுத்தாகக் கூறுகிறார் விஸ்வநாத சிவாச்சார்யாரின் புதல்வரும் தற்போதைய ஆலய அர்ச்சகருமான தண்டபாணி சிவாச்சார்யர்.
அதே போல, ஒரு முறை இந்தக் கோயிலுக்கு மகா பெரியவர் வந்த போது, அவர் அமர்ந்து ஜபம் செய்த கருங்கல்லை பத்திரப்படுத்தி வைத்திருந்தனராம். பிறகு, இந்தக் கோயிலில் திருப்பணி நடைபெற்ற வேளையில் கோபுர வாயிலின் கடைக்கல்லாக அதைப் பயன் படுத்தினார்களாம்!
கி.பி. 18&ஆம் நூற்றாண்டில் வேளச்சேரி பெரிய சுவாமிகள் எனப்பட்ட சிதம்பர சுவாமிகளும் தண்டீஸ்வரரிடம் தீவிர பக்தி கொண்டு, திருப்பணிகள் பல செய்துள்ளாராம். தேர் அமைக்க வகை செய்தவரும் இவரே. ஒரு கட்டத்தில், ‘வேளச்சேரி கோயிலுக்கு செய்த பணிகள் போதும்; வேறு கோயிலுக்குச் செல்லலாம்!' என்று எண்ணினாராம். அப்போது பெரிய நாகம் ஒன்று படமெடுத்தபடி நின்று, ‘செல்ல வேண்டாம்’ என்பது போல் தடுத்ததாம். அதன் பிறகு, ‘தன் வாழ்நாள் முழுவதும் இந்த ஆலயத்துக்கே!' என்று இங்கேயே இருந்து விட்டாராம் சுவாமிகள். இவரது ஜீவ சமாதியும் இங்கு அமைந்துள்ளது.
கல்வெட்டுகளை ஆராயும்போது, இந்தக் கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவை என்பது தெரியவருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது இந்தக் கோயில். இங்கு 1959&ல் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1968&ஆம் ஆண்டு துவஜஸ்தம்பம், தெற்கு வாயிலில் உள்ள ஐந்தடுக்கு ராஜ கோபுரம், கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் உள்ள சிறிய கோபுரங்கள் ஆகிய திருப்பணிகள் நிறைவேறின. பிற்காலத்தில் பக்தர்கள் 71 பேர் அளித்த நன்கொடைகள் மூலம் ஆலய வெளிச்சுற்றில் 86 தூண் கள் அமைக்கப்பட்டன. அடுத்து எம தீர்த்தக் குளத்தில் படித்துறைகளும் கட்டப்பட்டனவாம்.
இந்தத் திருக்கோயிலில் 1958, 1973, 1991 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. மேலும் இங்கு, 16 வகை கணபதி விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளனவாம்.
இந்தக் கோயிலில் சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரத்தில் நடராஜர் மகா அபிஷேகம், ஆடி முழுவதும் அம்பாள் உற்சவம், ஆவணி, புரட் டாசி மாதங்களில் சிவ ஆராதனை. ஐப்பசியில் அன்னா பிஷேகம், கார்த்திகை கடைசி சனிக்கிழமையில் 1008 சங்காபிஷேகம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தை மாத வெள்ளிக் கிழமைகளில் அம்பாளுக்கு விசேஷ பூஜைகள், மாசி சிவராத்திரி, ஏகாதசி ருத்ர வழிபாடு, பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூர்த்திகள் உள் பிராகாரப் புறப்பாடு, நவராத்திரி விழா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
முன்பெல்லாம் மகர சங்கராந்தி அன்று காலை 6:00 முதல் 7:00 மணிக்குள், கதிரவனின் ஒளிக்கதிர்கள் தண்டீஸ்வரர் மீது நேரடியாக விழுவது உண்டாம். ஆனால், தற்போது இன்று ஆலயத்துக்கு முன்பு கட்டடங்கள் பல அமைந்து விட்டதால் சூரியக்கதிர்கள் விழுவதில்லை என்கிறார்கள். தினசரி காலை& 6:00 முதல் 11:00 மணி வரையும், மாலை வேளையில்& 4:00 முதல் இரவு 8:30 மணி வரையும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

Comments