பரிதாப நிலையில் ஸ்ரீரங்கநாதர்!


பாற்கடல் வாசனான பரந்தாமன், எண்ணற்ற திருநாமங்களுடன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலங்கள் இந்தத் திருநாட்டில் ஏராளம். அவற்றுள், பன்னிரு ஆழ்வார்கள் பாடிப் பரவசப்பட்ட வைணவத் திருத்தலங்கள் ‘108 திவ்ய தேசங்கள்’ என போற்றி வணங்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் தரிசிக்க வாய்ப்பு கிடைப்பது நாம் செய்த பெரும் பேறு! இத்தகைய திருத்தலங்களில் ஆகம விதிமுறைப்படி வழிபாடுகளும் திரு விழாக்களும் வருடம் முழுக்க விமரிசையாகவே நடந்து வருகின்றன. பக்தர்களும் பெருமளவில் வந்து அந்தப் பரந்தாமனை தரிசித்து, அவன் அருள் பெற்றுச் செல்கிறார்கள்.
திவ்யதேசத் திருத்தலங்களைத் தவிர, ஆழ்வார்கள் சென்று தரிசித்திராத ஏராளமான வைணவ ஆலயங்கள், ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் சுமந்து நம் தேசத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய ஆலயங்களில் வழிபாடுகள் வளமாக நடந்து வந்தாலும், அவற்றுள் சில திருத்தலங்கள் விதிவிலக்காக அமைந்து காணப்படுகின்றன. அதாவது, குறிப்பிட்ட சில ஆலயங்களில் வழிபாடுகள் முழு அளவில் நடைபெறுவதில்லை. இதற்கு ஒரே காரணம் - பொருளாதார வசதி! தூபங்களின் மணம் கமழாமல், மணியோசை ஒலிக்காமல், மனித நடமாட்டமே இல்லாமல், ஆலயத்துக்கு உண்டான அம்சங்கள் அத்தனையும் இழந்து இத்தகைய ஆலயங்கள் காணப்படுவது பெரும் சோகமே!
வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது& திருவரங்கம் என்று சிறப்பித்துக் கூறப்படும் ரங்கம். ‘கோயில்’ என்றாலே அது ரங்கத்தைத்தான் குறிக்கும் என்பது வைணவர்கள் கருத்து. காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட அகண்ட நிலப் பகுதியில் அறிதுயில் கொண்டு அகிலத்தையே காத்து வருபவர் - அரங்கநாதர் எனப்படும் ரங்கநாதர். ‘ரங்கா... ரங்கா...' என்று ரங்கத்துத் திருவீதிகளில் எந்நேரமும் இறை கோஷங்கள் முழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம்.
பல மைல்களுக்கு அப்பால் இருந்து, பக்தர்களைச் சுமந்து வந்த சுற்றுலாப் பேருந்துகள்... பக்தர்களது தேவை அறிந்து வணிகம் செய்யும் உள்ளூர் வியாபாரிகள்... இறையருள் ஒன்றே இனிய வரமாகக் கருதி ரங்கத்துத் தெருக்களில் திரியும் பரம பக்தர்கள்... ‘வாவ்... வொண்டர்ஃபுல்’ என்று ஜீயர் பெருமானால் கட்டப்பட்ட வானுயர்ந்த ராஜ கோபுரத்தை அண்ணாந்து பார்த்து, வியந்து நிற்கும் அயல்நாட்டு ஆசாமிகள்...
- ஆஹா! ரங்கம், ஒரு சொர்க்கபுரிதான்! ஆம்... புராணங்களும் ரங்கத்தை ‘பூலோக வைகுந்தம்’ என்றுதான் சொல்லிப் பெருமைப்படுகின்றன. அங்கே அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அந்த அனாதரட்சகனைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு, ‘ரங்கா... ரங்கா’ என்று நெக்குருக தரிசித்தால் ஒரு மன நிறைவு! அலங்காரப் பிரியரான இந்த ரங்கனுக்கு எத்தனை எத்தனை திருவிழாக்கள்! திருவுலாக்கள்! நினைக்க நினைக்க பக்திரசம் மேலிடுகிறது அல்லவா?!
வாருங்கள், ரங்கத்தை விட்டு வெளியே! ரங்கத் தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கும் கோபுரப்பட்டி எனும் சிறு கிராமத்துக்கு இப்போது செல்வோம்! இங்கும் ரங்கநாதருக்கென அற்புதமான ஓர் ஆலயம் ஒரு காலத்தில் வளமாக இருந்திருக்கிறது. பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தை நினைவுபடுத்துவது போல், ஆதிசேஷனின் மடிமேல் அனந்த சயனம் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்திருக்கிறார். இதெல்லாம் அன்று! ஆனால், இன்று..?
முன்னதாகச் சொன்ன ரங்கத்தை பார்த்தாலே பரவசம்! பின்னதாகச் சொன்ன கோபுரப் பட்டியைப் பார்த்தாலோ பரிதாபம்! அவரும் ரங்கநாதர்தான்! இவரும் ரங்கநாதர்தான்! ஆனால், எத்தனை வேறுபாடுகள்? கோபுரப் பட்டியின் இந்த அவலத்தை, விதி என்பதா? அல்லது இறை வனுக்கே இன்னும் வேளை வரவில்லை என்பதா? எது எப்படியோ... ‘ரங்கநாதர்’ எனும் திருநாமத்துடன், ஆதிசேஷனின் மேல் ஒய்யாரமாக சயனித்திருந்த இந்தப் பெருமாள், இன்று இப்படிக் கிடப்பது நல்லதல்ல என்று மட்டும் தோன்றுகிறது.
ரங்கம் அமைந்திருக்கும் தெற்குத் திசை நோக்கியே கோபுரப்பட்டி ரங்கநாதரின் சந்நிதியும் ஆலயமும் அமைந்துள்ளது. கோபுரப்பட்டியில் குடிகொண்டுள்ள இந்த ரங்கநாதர், ஆதி சேஷனிடம் ஏனோ கோபம் கொண்டது போல், மெள்ள கீழிறங்கி, அருந்துணைவியாம் பூமாதேவியின் மேல் (தரையில்தான்) தனித்து துயில் கொண்டிருக்கிறார். ஆதிசேஷனுக்கும் ரங்கநாதருக்கும் சில அடிகள் இடைவெளி காணப்படுகிறது. அதாவது, பின்னால் ஆதிசேஷன்; அவருக்குச் சற்று முன்னால் ரங்கநாதர். சில நூறு ஆண்டுகளாக இதே நிலைதான்!
பிரமாண்டமாக உள்ள ஆதிசேஷனின் உடலில் இரண்டு இடங்கள் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு, பெருத்த சேதத்துடன் காட்சி அளிக்கின்றன. அரங்கனின் வலக் கை பின்னப்பட்டிருக்கிறது. வலக் காலும் மூக்கும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், மாலவனின் மலர் முகத்தில் மட்டும் ஒரு குமிழ்ச் சிரிப்பு! ‘எப்போதப்பா எனக்கு வழிபாடு? திருவிழாக்கள்? திமிலோகங்கள்?' என் றொரு ஏக்கப் பார்வையை, தன்னை சந்திக்க வரும் பக்தர்களிடம் காட்டத் தவறுவதில்லை இந்த ரங்கன்! பாவம்... ரங்கனின் துயர் யாரால் துடைக் கப்படுமோ, தெரியவில்லை!
மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பனியில் குளிர்ந்து... எல்லா பருவ காலத்தையும் இன்முகம் தந்து வரவேற்று வந்திருக்கிறார், கோபுரப்பட்டி ரங்கநாதர். ஆம்! ஆலயத்துக்கு தளமாக அமைந்த கருங்கல் மேற்கூரைகளில் சிலது பெயர்ந்து விழுந்துள்ளன. சிலவற்றில், இண்டு இடுக்குகள்!
இந்த ஆலயத்துக்கு மட்டும் சிரமங்களே வரமாக அமைந்திருக்கின்றன போலும்! ‘12 கி.மீ. தொலைவில் ரங்கத்தில் குடி கொண்ட ரங்கநாதனுக்கு வேளாவேளைக்கு சூடான - வித்தியாசமான மணக்கும் நைவேத்தியங்கள்... கோபுரப் பட்டியில் குடிகொண்ட எனக்கு மட்டும் ஏனோதானோ என்று அவசர கதியில் ஒரு நைவேத்தியமா? அறு சுவை நைவேத்தியங்கள் எனக்குக் கிடையாதா?' என்று இந்த கோபுரப்பட்டி ரங்கநாதர் இதுவரை எவரிடமும் கேட்கவில்லைதான். அவருக்கும் நிலைமை புரிந் திருக்கிறது போலும்.
தற்போது, ஆலயத்தில் ஒரே ஒரு வேளை பூஜை செய்து வரும் ரத்னம் ஐயரோ அல்லது அவரது மகன் நாகராஜனோ, இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள தங்களது ஊரான பாச்சூரில் இருந்து, ஒரு எவர்சில்வர் தூக்குப் பாத்திரத்தில் அன்புடன் எடுத்து வரும் நைவேத்திய பதார்த்தத்தையே ஆனந்த அமிர்தமாக ஏற்றுக் கொண்டு ஊர்க்காரர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் ரங்கநாதர்!
ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ள ஆலயப் பகுதிகளை - கருங்கல் கட்டுமானங்களை சோகம் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது உள்ளூர்க்காரர் ஒருவர்& வயதானவர் நம்மை நெருங்கி வந்தார். '‘ஆலயத்தின் இந்த நிலைக்கு என்ன காரணம்?'' என்று மெள்ள விசாரித்தோம்.
தெளிவான குரலில், தீயைக் கக்கும் வரலாறு சொன்னார்: '‘கோபுரமும், கோலாகல வைபவங்களுமாக நல்லா இருந்த கோயில் இது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன் அந்நியர்களது படை யெடுப்பின்போது இந்த ஆலயம் ஏகத்துக்கும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆலயத்தைத் தகர்த்தெறியும் நோக்கத்துடன் உள்ளே புகுந்த ஆதிக்க வெறியர்கள், ஆதிசேஷ னையும் அதில் துயில் கொண்டிருந்த அரங்க நாதரையும் சின்னாபின்னப்படுத்தி இருக்கிறார்கள். தவிர, ஆலயத்தில் இருந்த கருடாழ்வார், ஆஞ்ச நேயர் உள்ளிட்ட அனைத்து விக்கிரகங்களையும் வெடி வைத்துத் தகர்த்தது போல் இரண்டாகப் பிளந்திருக்கிறார்கள். இதன் சில பகுதிகள் ஆலயப் பிராகாரத்தில் இன்றைக்கும் ஆங்காங்கே உள்ளன. அந்நியர்களது தாக்குதலுக்கு பயந்துரங்கம் ரங்கநாதரின் உற்சவர் விக்கிரகத்தை ஊர் ஊராக எடுத்துக் கொண்டு உலா போன கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படி அந்த விக்கிரகத்தை எவர் கண்ணிலும் படாமல், தூக்கிப் போய் பாதுகாத்து வந்தவர்கள், அப்போது ரங்கம் ஆலயத்தில் கைங்கர்யம் செய்து வந்த பட்டாச்சார்யர்கள். பெருமை மிகுந்த அந்த உற்சவர் விக்கிரகத்தை, இந்த கோபுரப்பட்டி ஆலயத்துக்கும் எடுத்து வந்து சில காலம் பத்திரப்படுத்தி வைத்திருந்து விட்டு, சலசலப்புகள் அடங்கிய பிறகு வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள். ஒரு வேளை அத்தகைய காலத்தில் இந்த மூலவர் ரங்கநாதரும் ஆதிசேஷனும் அந்நியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, உருக்குலைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. சரித்திரத்தை மேலும் ஆராய்ந்தால் சங்கடங்கள்தான் மிஞ்சும். நடக்கப் போவதைப் பற்றி இனி யோசிப்பது நல்லது’' என்று சொன்னார்.
தற்போது ஆலயத்தின் அறங்காவலராக இருப்பவர் விஜயகுமார் என்பவர். விவசாயி. நான்காவது தலைமுறை அறங்காவலர் இவர். ஆதிசேஷன் மடியில் இருந்து, ரங்கநாதர் எப்போது கீழே வந்தார் என்று இவரால் சொல்ல முடியவில்லை. அவர் நம்மிடம், '‘எனக்கு வயசு ஐம்பத்தஞ்சு ஆகுது. என் காலத்துக்கு முன்பிருந்தே இந்தக் கருவறை இப்படித்தான் இருக்கு. என் அப்பா காலத்திலேயே ரங்கநாதர், ஆதிசேஷனின் மடியில் இல்லை. இப்போது இருக்கும் இதே நிலையில்தான் பல வருடங்களாக தரிசனம் தந்திருக்கிறார்.
ஆலயத்தைப் பழையபடி சீரமைக்கலாம் என்று ஒவ்வொரு முறை முயற்சி எடுக்கும்போதெல்லாம் பொருளாதாரப் பிரச்னை பூதாகரமாகக் கிளம்பும். இந்த ஆலயத்துக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் மட்டும்தான் தற்போது இருக்கு. குத்தகை மூலம் அதில் இருந்து வரும் கூலியை அர்ச்சகருக்கு சம்பளமாகக் கொடுத்து வருகிறேன். மற்றபடி எந்த விதமான சொத்தும் ஆலயத்துக்கு இல்லை. பஞ்சலோக விக்கிரகங்களோ, ஆபரணங்களோ, விலை உயர்ந்த ஆடைகளோ எதுவும் இல்லை. முன்காலத் தில் இதெல்லாம் இருந்திருக்கிறதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
உற்சவம் என்றால் வைகுண்ட ஏகாதசி, தமிழ் வருடப் பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தைப் பொங்கல் போன்றவை தற்போது சுமாரான அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆலயத்தை சீரமைப்பது அவசியம் என்கிற காலகட்டம் இப்போது வந்திருக்கிறது. உள்ளூர்க்காரர்களுடன் அது குறித்துப் பேசி வருகிறேன். ரங்கத்தில் குடி கொண்டுள்ள அந்த ரங்கநாதர் மனம் வைத்து, இந்த ஆலயத்தையும் தலை நிமிர வைக்க வேண்டும்’' என்றார்.
இனி, ஆலயத்தை தரிசனம் செய்வோமா?
ஆலயத்தின் சுற்றுப்புறச் சுவர் மட்டும் ஓரளவு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்பதால், ஆலயப் பிரதேசத்துக்குள் ஆக்கிரமிப்புகள் இல்லா மல் இருப்பது, மகிழ்ச்சியைத் தருகிறது. சுற்றுச் சுவரின் வெளிப்பக்கம் கல்வெட்டுக்களும், சிற்ப வேலைப்பாடுகளும் கண்களைக் கவர்கின்றன.
பெரிய ஆலயமாகத்தான் இருந்திருக்கிறது. தெற்குப் பகுதி வழியாக உள்ளே நுழைகிறோம். இது ஒன்றே உள்ளே நுழைவதற்கான பிரதான வாயில். இடிபாடுகள் மற்றும் நெருஞ்சி முட்களுக்கு இடையே ஜாக்கிரதையாக நடக்கிறோம். வலப் பக்கம் பெரிய மடப்பள்ளி. முற்றிலும் இடிந்து விழுந்தாலும், சில கருங்கல் தூண்கள் மட்டும் இன்னமும் விடாப்பிடியாக அப்படியே நிற்கின்றன. மடப்பள்ளியின் அளவை வைத்துப் பார்க்கும்போது பிரமாண்ட வைபவங்கள் இந்த ஆலயத்தில் அடிக்கடி நடந்திருக்கலாம் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.
கருங்கல் சுற்றுச் சுவருக்குள் பெரிய பரந்தவெளி. நடுவே சதுரம் போல் ஆலயம். ஆலயமும் கருங்கல் கட்டுமானம்தான். துளசி மாடம். கருடாழ்வார் சந்நிதி. இவை இரண்டும், இறையுள்ளம் கொண்ட ஓர் அமைப்பால் கட்டித் தரப்பட்டுள்ளன. கருடாழ்வார் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார். இதற்கான விக்கிரகமும் ஆலயத்தின் உள்ளே தயாராக இருக்கிறது. இங்கே சுவரில், ரங்கநாதரை கருடாழ்வார் வணங்குவதற்காக நவ துவார சாளர அமைப்பு ஒன்று காணப்படுகிறது. சற்றே வலப் பக்கம் நகர்ந்து கிழக்கு முகப்பு வழியாக ஆலயத்தின் உள்ளே செல்கிறோம்.
ரங்கநாதர் ஆலயத்தின் மகா மண்டபம், நான்கு தூண்களுடன் விளங்குகிறது. விஸ்தாரமான மண்டபம். மேலே விரிசல்கள். ஓட்டைகள். இண்டு இடுக்கு வழியே சூரிய ஒளி பாய்ந்து உள்ளே விழு கிறது. கீழே மண் தரை. இதை அடுத்து அர்த்த மண்டபம். கருவறை.
மகா மண்டபத்தில் தும்பிக்கையாழ்வார் (ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு இவருக்கு நடக்கிறது), சூரியநாராயண பெருமாள், விஷ்ணு சித்தர், ரங்கநாதர், தாயார் ஆகியோரின் விக்கிரகங்கள் வழிபாட்டுக்கென வைக்கப்பட்டுள்ளன. '‘ஆலயத் துவக்கத்தில் இவர்களுக்கெல்லாம் இங்கு சந்நிதிகள் கிடையாது. வழிபட முடியாத நிலையில் ரங்கநாதர் இருக்கிறபோது, பிரார்த்தனைக்கு தெய்வங்கள் வேண்டும் என்பதற்காக எனது தந்தை, சுமார் எழுபது வருடங்களுக்கு முன் இந்த விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார். இப்போது இவற்றுக்குத்தான் பூஜை நடக்கிறது’' என்றார் விஜயகுமார். இந்த விக்கிரகங்களுக்கு அருகே நாகர் விக்கிரகத்துடன் ஒரு புற்று இருக்கிறது. பாம்பு ஒன்று இங்கே வசிக்கிறதாம். சனிக்கிழமை அன்று ஊர்க்காரர்கள் கோயிலுக்கு வந்து புற்றுக்குள் பால் விடுவார்களாம். அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்து கருவறை செல்கிறோம். பெரிய கருவறை.
சின்னச் சின்ன பூக்கிள்ளல்கள், பழைய வஸ் திரத்தை மேனியில் சுற்றிக் கொண்டு ரங்கநாதர் தரிசனம் தருகிறார். கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? சேதம் இருந்தாலும் சாந்நித்யம் குறையுமா? இதயத்தை ஈரமாக்குகிறது ரங்க நாதரின் தரிசனம். மேலே ஆதிசேஷன். தன் உடலில் தாங்க வேண்டியவர், தனக்கும் கீழே தரையில் தனியாக இருக்கிறாரே என்கிற தவிப்பும் உருக்கமும் ஆதிசேஷனுக்கு இருக் குமோ? அருகே, வலக் கோடியில் தாயார்!
ஆவியும் சுவையும் மணக்கும் பிரசாதங்களின் கமகமப்பை இங்கே பார்க்க முடியாது; யாரோ ஒருவர், என்றோ ஒரு நாள் கொண்டு வரும் சர்க்கரைப் பொங்கலோ, புளியோதரையோ... அது எதுவானாலும் - முந்திரி, ஏலக்காய் போன்ற உபரிப் பொருட்கள் ஏராளமாகச் சேராவிட்டாலும் இறை மணத்தை இந்தச் சந்நிதியில் என்றென்றும் உணர முடியும்.
‘ஸ்வாமிக்குத் திரை போட்டிருக்கிறார்கள்... இப்போது தரிசிக்க முடியாது!' என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. விரும்பிய எந்த நேரமும் அளவிடற்கறியா அற்புதங்கள் நிகழ்த்தும் அந்தப் பரம்பொருளை, அவனின் அருகிலேயே சென்று தரிசிக்க முடியும். பகட்டு இல்லாத பக்தர்கள் பரிவோடு கொண்டு வரும் ஒரு கிள்ளல் பூவுக்கும் இங்கே உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். அது, பரந்தாமனின் சிரசை வெகு வாகவே அலங்கரிக்கும் புண்ணியத்தைப் பெற்று விடும்!
தரிசித்து வெளியே வந்தால் பிராகாரம். செடி& கொடிகளும், கற்குவியல்களும் நிறைந்து காணப்படுகிறது. பின்னமான விக்கிரகங்கள், தீர்த்தக் கிணறு. வலம் முடிந்து பிரதான வாயில் அருகே நிற்கிறோம்.
பக்தர்களை எதிர்பார்த்து பரந்தாமன் காத் திருக்கிறான். அவர்கள் கொண்டு வரும் ஒரு சிறு புஷ்பத்தை தன் தலையில் சூடிக் கொள்ள ஆவல் கொண்டிருக்கிறான். ‘ஓம் நமோ நாராயணா’ எனும் கோஷம் தன் சந்நிதியை நிரப்பாதா என்று தவியாய்த் தவிக்கிறான்.
முழு ஆலயத்தையும் சீரமைக்க வேண்டி இருக்கிறது. திருப்பணிகள் நடைபெற்று, இந்த ஆலயம் திரும்பவும் வானுயர்ந்து நிற்க வேண்டும். பின்னமான விக்கிரகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். விழாக்கள் விமரிசையாக மீண்டும் தொடங்கப்பட வேண்டும். அதற்கு ரங்கத்தில் குடிகொண்ட அந்த ரங்கநாதரின் அருளும் வேண்டும். அவரின் அருளோடுதான், அதாவது, அவரை தரிசித்த பிறகுதான் இந்த ‘ஆலயம் தேடுவோம்’ கட்டுரைக்காக, ரங்கத்தில் இருந்து கோபுரப்பட்டிக்குச் செல்ல நேரிட்டது.
அதற்குக் காரணமான ஒரு விஷயத்தையும் இங்கே சொல்லி ஆக வேண்டும். கோபுரப்பட்டி ரங்கநாதரின் கவலைக்கிடமான இந்த நிலைமையை ‘சக்தி விகடன்’ இதழின் கவனத்துக்குக் கொண்டு வந்து, நம்மை அங்கே அழைத்துச் செல்ல உதவியவர்& ரங்கத்து அர்ச்சகர் முரளி பட்டர்! ஆக, கோபுரப்பட்டிக்கான அழைப்பு ரங்கத்தில் இருந்தே வந்துள்ளது!
கோபுரப்பட்டி ரங்கநாதர் பாதம் பணிந்து, அவனது திருப்பணிகளில் பங்கு பெறுவோம்!
தகவல் பலகை
தலத்தின் பெயர் : கோபுரப்பட்டி
மூலவர் பெயர் : ரங்கநாதர் (சயனக் கோலம்)
அமைந்துள்ள இடம்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர், உளுந்தகுடி, அழகிய மணவாளம், கோபுரப்பட்டி வழியாக பாச்சூருக்கு நகரப் பேருந்துகள் உள்ளன. இந்த வழியே பேருந்தில் கோபுரப்பட்டி சென்றால் சுமார் 14 கி.மீ. தொலைவு. திருச்சி& நாமக்கல் மார்க்கத்தில் டோல்கேட், ரெட்டை மண்டபம் வரை சென்று, வலப்பக்கம் செல்லும் சாலையில் பயணித்தால் பாச்சூர், கோவத்தக்குடி தாண்டி கோபுரப்பட்டி வரும். டூ வீலர் மற்றும் கார்களில் வருபவர்களுக்கு இந்தப் பாதை எளிது. சுமார் 11 கி.மீ. தொலைவு. மண்ணச்சநல்லூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பாச்சூர் வரை செல்லும் 27ஏ, 27இ நகரப் பேருந்துகளில் பயணித்தால் கோபுரப்பட்டியில் இறங்கிக் கொள்ளலாம். மண்ணச்சநல்லூரில் இருந்து திருப்பைஞ்ஞீலி செல்லும் மினி பேருந்துகள் கோபுரப்பட்டி வழியாகச் செல்லும். தவிர, டோல்கேட்டில் இருந்தும், மண்ணச்சநல்லூரில் இருந்தும் ஆட்டோ, கார் வசதி உண்டு.
ஆலய தொடர்புக்கு:
வி. விஜயகுமார்,
பரம்பரை அறங்காவலர்,
2/147, வெள்ளாளர் தெரு, பாச்சூர்
மண்ணச்சநல்லூர் (வழி)
திருச்சி மாவட்டம்
பின்கோடு: 621 005.
மொபைல்: 93802 73289

Comments