பற்று

'எந்தப் பொருள் மீது மனிதனுக்கு அளவற்ற ஆர்வம் ஏற்படுகிறதோ, அந்தப் பொருளால் அடையக் கூடிய துன்பங்களை, முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளின் மேல் ஏற்படும் பற்றின் வலிமை குறையும் கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள் ஒரு கணத்தில் ஒன்று சேரும்; மறுகணமே ஒன்றையன்று விட்டு விலகும். சேரும் உறவுகள் ஒரு நாள் பிரியும். இல்லாதிருந்து, ஒரு நாள் உறவாய் மலர்ந்து, மீண்டும் இல்லாமல் போவதுதான் வாழ்க்கை.

இந்த வாழ்க்கையில் அளவுக்கு மீறிய பற்றை வளர்த்துக் கொள்ளலாகாது. குவிந்த செல்வம் குறைந்து போகும். உயர்ந்த வாழ்வு தாழ்ந்து போகும். சேர்ந்த சுற்றம் பிரிந்து போகும். பற்றுகளில் இருந்து விடுபட மனிதன் மனதை பக்குவப்படுத்த வேண்டும்' என்கிறது மகாபாரதம்.

'பொருட்களின் மீதான பற்றை விடுங்கள். செல்வமோ, அதிகாரமோ மனிதனை அடிமைப்படுத்தி விடாது. அவற்றின் மீதிருக்கும் நீங்காத ஒட்டுதல்தான் ஒருவனை நிரந்தர அடிமையாக்கிவிடுகிறது' என்றார் புத்தர். பற்றற்று இருத்தல், பயமற்று இருத்தல், சினமற்று இருத்தல் ஆகிய மூன்று பண்பு நலன்கள்தான் பகவத் கீதையின் அடிநாதம். 'அச்சம், சினம் ஆகிய இரண்டுக்கும் அடித்தளமே பற்று' என்ற உண்மையை நாம் உணர வேண்டும். ஒரு பொருளின் மீது முதலில் பார்வை பதிந்ததும் மனதில் ஆசை அலையடிக்கும். ஆசையின் வேகம் பெருகி, பற்றாய்ப் பரிணமிக்கும். அதன்பின் அந்தப் பொருளை தன்னுரிமையாக்கத் துடிக்கும் வேட்கை அதிகரிக்கும். அது தனக்கு கிடைத்தே ஆக வேண்டும் என்ற தவிப்பில் மனம் உறக்கமின்றிப் பதை பதைக்கும். ஒரு வேளை விரும்பிய பொருள் கிட்டாது போய்விடுமோ என்ற ஏக்கம் உயிரை வாட்டும். கிடைத்தாலும் கூட என்றேனும் அது கை நழுவி விடுமோ என்ற ஓயாத அச்சத்தில் மனம் கவலை கொள்ளும். இந்தக் கவலையே கோபமாக உருமாறும். கோபம் பகையை உருவாக்கும். முடிவில் மனம் நிம்மதியை இழக்கும். பற்றற்றவருக்குப் பயமில்லை. பயமற்றவர்க்குச் சினமில்லை. அதனால்தான் பகவத் கீதை பற்றற்ற பற்றை (detached attachment) வாழ்வில் வலியுறுத்துகிறது.


மயானத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார். அவருடன் சீடன் ஒருவனும் தவத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நள்ளிரவில் சீடனைத் தனியாகத் தவத்தில் இருக்கச் செய்து, முனிவர் தனது குடிலுக்குள் ஓய்வு எடுத்தார். சிறிது நேரத்தில் சீடன் முனிவர் முன் வந்து நின்றான். ''ஏன் இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டாய்?'' என்ற முனிவரிடம், ''மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது'' என்று தயங்கியபடி சொன்னான் சீடன். ''வேதம் படித்த நீ பயப்படலாமா? உன் சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது. அழியக் கூடிய நிலையற்ற பொருட்களின் மீது பற்று வைத்தவன், அழியாத சத்தியத்தை அடைய முடியாது என்று கடோபநிஷதம் கூறுவதை அறியவில்லையா நீ?'' என்றார் முனிவர். சரீர சுகத்தில் நாம் வைக்கும் எல்லையற்ற பற்றுதான் எல்லாவித துன்பங்களுக்கும் மூல காரணம்!



'இளமை கழிந்து வயோதிகம் வளர்ந்ததும் காம விகாரம் மனதில் இருந்து கழன்று விடுகிறது. நீர்முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. செல்வம் அனைத்தையும் இழந்தவனது வீட்டை சுற்றம், முற்றும் மறந்து விடுகிறது. பற்றற்ற வாழ்வை மேற்கொள்ளும்போதுதான் துயரங்க ளில் இருந்து விடுதலை கிடைக்கிறது' என்ற ஆதி சங்கரரின் ஞானமும், கீதையின் சாரமும் ஒரே மையப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.
விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்... ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தை விட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவுக் கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.
பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான். பரமஹம்சர் மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான். ''சரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே?'' என்று கேட்டார் பரமஹம்சர். ''ஒரு தடையும் இல்லை!'' என்றான் செல்வந்தன்.


''இந்த ஆயிரம் பொற்காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!'' என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான். அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொரு பொற்காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், ''என்ன முட்டாள்தனம் இது? ஒரேயடியாக ஒரு கணப் பொழுதில் வீசியெறிந்துவிட்டு, விரைவாகத் திரும்பா மல், ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?'' என்று கேட்டார்.
''ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத் தில் வீசி எறிந்துவிட மனம் வரவில்லை. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன்'' என்றான் செல்வந்தன். அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், ''இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்'' என்றார். நம்மால் அந்தப் பணக்காரனைப் போல் ஒவ்வொன்றாக இழப்பதற் குக்கூட முடிவதில்லை.
பற்றுகள் அற்றுத்தான் நாம் வாழ வேண்டுமா? எந்தச் செயலிலும் நாம் ஈடுபடக்கூடாதா? இந்த வினாக்களுக்கு விவேகானந்தர் கதை ஒன்றின் மூலம் விடை தருகிறார்.

வாழ்வின் பேருண்மையைப் புரிந்து கொள்ள ஒருவனைச் சென்று காணும்படி கற்பரசி ஒருத்தி, அந்த துறவியை ஆற்றுப்படுத்தினாள். துறவியும் அவள் சொன்ன இடத்துக்குச் சென்றார். அந்த இடம் ஓர் இறைச்சிக் கூடம். அங்கே ஒருவன் பெரிய கத்தியால் இறைச்சியை வெட்டி, விலைபேசி விற்றுக் கொண்டிருந்தான். 'இவனிடம் எந்த உயர்ந்த உண்மையை அறிந்து கொள்ள முடியும்?' என்ற ஐயம் துறவிக்கு எழுந்தது. ஆனாலும், அந்த பத்தினிப் பெண் அனுப்பி வைத்த விவரத்தை வெளிப்படுத்தினார். 'வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்குச் சென்று பேசுவோம்' என்றான் கத்தியுடன் இருந்தவன். கடையை மூடியதும் இருவரும் நடந்தனர். வீட்டை அடைந்ததும் துறவியை இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, அவன் பெற்றோரிடம் சென்றான். அவர்களை நீராட்டி, உணவூட்டி, பெற்றவர் மனம் மகிழ சேவை செய்து, அவர்கள் உறங்கியபின் துறவியிடம் வந்து அமர்ந் தான் இறைச்சி விற்பவன்.
அவனுடன் சிறிது நேரம் பேசியதில் அவனுக்குள் சுடர் விடும் ஆன்ம ஒளியைத் தரிசித்த துறவி, 'இவ்வளவு உயர்ந்த ஞானம் உடைய நீ ஏன் இந்த இறைச்சி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறாய்?' என்று கேட்டார். ''ஐயனே, செய்யும் கடமைகளுள் எதுவும் இழிந்ததில்லை. இறைச்சி விற்பது என் குடும்பத் தொழில். இல்லறக் கடமைகளை ஒழுங்காகச் செய்து வருகிறேன். என்னைச் சார்ந்தவர்களது தேவையறிந்து சுயநலப் பற்றின்றி நிறைவேற்றுகிறேன். தங்களைப் போல காட்டில் இருந்து யோகம் பயில என்னால் இயலாது. வீட்டில் இருந்தபடி இயன்றளவு பிறர் நலம் போற்றுகிறேன். செயலைத் துறக்காமல், செயலின் விளைவைத் துறந்து வாழ்வதே பற்றற்ற பெருவாழ்வு என்பதை நான் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறேன்' என்று விளக்கினான் அந்த விவேகி. அறத்துக்குப் புறம்பின்றி, எதன் மீதும் அதிகமான பற்று வைக்காமல், தாமரை இலைத் தண்ணீராய் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை நெறி.
நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது ருக்மிணியை அழைத்த கண்ணன், ''மறுகரையில் இருக்கும் துர்வாச முனிவரிடம் இந்த நிவேதனப் பொருளைக் கொடுத்துவிட்டு வா!'' என்றார். ''வெள் ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் எப்படி நான் மறுகரையை அடைய முடியும்?'' என்று கேட்டாள் ருக்மிணி. ''நதிக்கரையில் நின்று, கண்ணன் நித்ய பிரும்மச்சாரி என்பது உண்மையானால், நதியே வழி விடு என்று சொல். நதி, வழி விடும்!'' என்றார் பகவான். அவர் சொன்னபடியே செய்தாள். நதி விரைவாக வழிவிட்டது.

மறுகரையை அடைந்து, துர்வாசரிடம் நிவேதனப் பிரசாதத்தைத் தந்தாள். அன்புடன் அதை வாங்கி ஆன்ம நிறைவுடன் உண்டார் முனிவர். வரும்போது வழிவிட்ட நதி மீண்டும் பிரவாகமாய்ப் பொங்கிப் புரண்டது. ''நான் கிருஷ்ணர் இருக்கும் கரையை அடைவது எப்படி?' என்று ருக்மிணி கேட்டதும், ''துர்வாசர் நித்ய உபவாசி என்பது உண்மையானால் நதியே வழிவிடு என்று சொல்'' என்றார் முனிவர். தான் கொடுத்ததை உண்டு விட்டுத் தன்னிடமே 'நித்ய உபவாசி' என்று துர்வாசர் கூறியதைக் கேட்டு ருக்மிணி திகைத்தாள். ஆனாலும், அவர் சொன்ன படியே அவள் மொழிந்ததும் சீறிப் பாய்ந்த நதி வழி விட்டது.
''என்னுடன் இல்லறம் நடத்தும் நீங்கள், 'நித்ய பிரும்மச்சாரி' என்றீர்கள். நீங்கள் தந்த நிவேதனத்தை உண்டுவிட்டு, 'நித்ய உபவாசி' என்கிறார் துர்வாசர். உங்கள் இருவரின் வாய்மொழி கேட்டு நதி வழி விடுகிறது. எனக்கு ஒன்றும் புரியவில்லை'' என்று குழம்பிய ருக்மிணியிடம், ''எங்கள் இருவருக்கும் எவற்றின் மீதும் பற்றில்லை. அதனால்தான் இல்லறத்தில் நான் இருந்தாலும் பிரும்மச்சரியனாய் இருக்கிறேன். நீ அளித்ததை உண்டாலும் துர்வாசர் உபவாசியாகவே இருக்கிறார்'' என்று விளக்கி னார் ஸ்ரீகிருஷ்ணர். பொருட்பற்றில் இருந்து விடுபட்டவர்க்கு துயரம் இல்லை. அனைத்தும் ஆண்டவனுடையது என்று எண்ணி வாழ்பவர்க்கே ஆனந்தமும் அமைதியும் வந்து சேரும். 'யாதனின் யாதனின் நீங்கியான், நோதல் அதனின் அதனின் இலன்' என்கிறார் வள்ளுவர். எவற்றில் இருந்து நாம் பற்றறுந்து விலகி நிற்கிறோமோ, அவற்றினால் வரும் துன்பங்களில் இருந்தும் அப்போதே விலகிவிடு கிறோம் என்பதுதான் வாழ்வின் பேருண்மை.

துன்பம் தரும் உலகப் பற்றுகளில் இருந்து விடுபட, இதயத்தில் இறைவனைப் பற்றி நிற்பதே ஒரே வழி. வாழ்க்கை பயணத்தில் வருவது அனைத்தும் நில்லாது ஒருநாள் நீர்க்குமிழாய் மறைந்துவிடும் என்ற ஞானம் கனிந்தவனுக்கு, எதன் மீதும் ஆசை எழாது. 'பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு' என்ற வள்ளுவமே மண்ணில் நல்ல வண்ணம் வாழ உயர்ந்த வழிகாட்டி.

Comments