தரிசனம்


'வழிபாட்டுக்கென பிரதிஷ்டை செய்யப்படும் விக்கிரகங்கள், பிரமாண்டமான அளவில் இருக்க வேண்டும். இறை சந்நிதானத்தில் மூலவரின் அருகே நின்று தெய்வத் திருவுருவை தரிசிக்கும் பாக்கியம், அனைத்து தரப்பு பக்தர்களுக்கும் எளிதில் கிடைத்து விடாது. எனவே, சந்நிதியில் இருந்து சற்றுத் தள்ளி நின்று, பரம்பொருளை தரிசிக்கும் நிலை உள்ள சாதாரண பக்தருக்கும் இறை தரிசனத்தில் ஒரு திருப்தி வர வேண்டும். 'இறைவனைக் கண்ணாரக் கண்டு விட்டோம். அவனிடத்தில் நமது குறையைக் கொட்டி விட்டோம்' என்கிற மனோ நிம்மதி எல்லோருக்கும் வர வேண்டும்...'
- இப்படி அடிக்கடி சொல்வார் சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள். ஸ்வயம்பிரகாச அவதூத ஸ்வாமிகளின் சிஷ்யரான இவர், 27.05.02 அன்று, தனது 82-வது வயதில் புதுக்கோட்டையில் ஜீவன் முக்தி அடைந்தார்.
'ஸ்கந்தாஸ்ரமம்' என்ற பெயரில் வழிபாட்டு நிலையங்களை புதுக்கோட்டை, சேலம் உடையாப்பட்டி மற்றும் சென்னை சேலையூர் ஆகிய இடங்களில் அமைத்தார் சாந்தானந்த ஸ்வாமிகள். தனது கொள்கைப்படி ஒவ்வோர் இடத்திலும் வழிபாட்டுக்கான விக்கிரகங்களை பிரமாண்ட மாக நிறுவினார். தனது கடைசி காலத்தில் அவர் பார்த்துப் பார்த்து அமைத்த ஒன்றுதான்- சென்னை சேலையூர் ஓம்ஸ்கந்தாஸ்ரமம்.
மாதா புவனேஸ்வரி, சரபேஸ்வரர், ப்ரத்யங்கிரா தேவி, ஸ்வாமிநாத ஸ்வாமி உட்பட இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்கிரகங்கள் அனைத்துமே பிரமாண்டம். அந்த வரிசையில் தற்போது இங்கு புதிதாகச் சேர்ந்துள்ளவை- மகா சகஸ்ரலிங்க மூர்த்தி எனப்படும் மகா லிங்கம் (9 அடி உயரம்), நந்தி தேவர் (4 அடி உயரம்), மகா சுதர்சன மூர்த்தி/லட்சுமி நரசிம்மர் (18 அடி உயர ஐம்பொன் விக்கிரகம்) போன்ற திருவுருவங்கள்.
இந்தப் புதிய விக்கிரகங்களும் சாந்தானந்த ஸ்வாமிகள், ஜீவன் முக்தி அடையும் முன்னர் அவரால் 'ஆர்டர்' கொடுக்கப்பட்டவையே! சகஸ்ரலிங்கம் எப்படி இருக்க வேண்டும்?, சுதர்சனமூர்த்தி எப்படி இருக்க வேண்டும்? என்றெல்லாம் அவர் பார்த்துப் பார்த்து வடிவமைக்கச் சொன்ன விக்கிரகங்கள். பிரமாண்டம் காரணமாக வடிவமைப்பதில் தாமதமாகி, சமீபத்தில்தான் ஓம்ஸ்கந்தாஸ்ரமம் வந்து சேர்ந்தன. எனவே, புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்தத் திருவுருவங்களுக்குக் கடந்த 20.01.08 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
புதிய திருமேனிகளுக்கு சாந்நித்யம் கூட்டுவதற்காக, ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு, ஐந்து கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. யாக சாலை யில் புனித நீர் நிரம்பிய குடங்களை இறை அம்சமாக பாவித்து, அவற்றுக்கு ஜபமும் பாராயணமும் ஆரத்தியும் உரிய காலத்தில் விமரிசையாக நடைபெற்றன.
கும்பாபிஷேகம் நடந்த அதே தினத்தில் பிரதோஷமும் கூடி வந்திருந்தது கூடுதல் சிறப்பு! காலையில் மகா கும்பாபிஷேகத்தை தரிசித்த அன்பர்கள், மாலை வேளை யிலும் மறவாமல் பிரதோஷத்துக்கு வந்திருந்து, 'நமசிவாய' மந்திரம் முழங்கி, மனம் நிறைய ஆனந்தத்துடன் மகேசனை வழிபட்டனர்.
தஞ்சையில் பிரமாண்ட நந்திக்கு நடப்பது போல், இனி சென்னையிலும் பிரமாண்ட பிரதோஷ வைபவத்தைப் பக்தர்கள் தரிசித்து இன்புறலாம். எண்ணெயிலும், பாலிலும், சந்தனத்திலும் திளைத்து இன்புறும் நந்திதேவரையும், சகரஸ்ர லிங்கத்தையும் அற்புதமான பிரதோஷ வேளையில் கண்டு, கயிலைநாதனின் அருளைப் பெறலாம்.
பிரதோஷ வேளையில், ஒரு சிவலிங்கத்தைத் தேடிச் சென்று தரிசிப்பதே ஒப்பற்ற புண்ணியத்தைத் தேடித் தரும். எனில், 1008 லிங்க வடிவங்கள் கூடிய இந்த பிரமாண்ட சகஸ்ரலிங்கத் திருமேனியின் பிரதோஷ வைபவத்தை தரிசிக்கும் அன்பர்கள் பெறும் பலனை, வார்த்தைகளில் விவரிக்க முடியுமா?!
புதிய விக்கிரகங்களின் சாந்நித்யத்தைப் பெருக்குவதற் கென்று தற்போது மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. சகஸ்ரலிங்கம், சுதர்சனர் மற்றும் லட்சுமி நரசிம்மர் ஆகியோரது மூல மந்திர ஜபம் (காம்யார்த்த மஹாமந்த்ர ஸம்புடித மண்டல சண்டி ஹோமம்) யாக சாலையில் நடைபெறுகிறது.
ஹரியையும், ஹரனையும் ஒரே இடத்தில் தரிசிக்க நமக்கெல்லாம் பாக்கியத்தை ஏற்படுத்தித் தந்த சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகளை இந்த வேளையில் வணங்குவோம்.
ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாயஓம் நமோ நாராயணாய ஓம் ஓம் நமசிவாய
திருப்பணிக்கு யார் உதவுவார்கள்?
கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாட்களில் பிரபல உபன்யாசகர் வடகுடி ப்ரும்ம ராம தீக்ஷிதரது சொற் பொழிவு நடைபெற்றது. சொற்பொழிவின்போது, 'ஆலயங் களின் சீரமைப்புப் பணிகளுக்கும் கும்பாபிஷேகங் களுக்கும் பொருளுதவி செய்வது, எவ்வளவு பெரிய புண்ணியம்' என்பதை விளக்கும் முகமாக ராம தீக்ஷிதர் ஒரு கருத்தைச் சொன்னார்:
''ஒரு கோயிலில் நடக்கிற புனரமைப்புப் பணிகளுக்கோ, கும்பாபிஷேக நிகழ்வுக்கோ பணம் கொடுத்து உதவுவது, மிகுந்த புண்ணியத்தைத் தேடித் தரும். 'நம்மை விட வசதி படைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நாம் பணம் கொடுத்துதான் இந்த சீரமைப்புப் பணி நடக்குமா? நாம் உதவி செய்துதான் இந்தக் கும்பாபிஷேகம் நடக்குமா?' என்று எவரும் இருந்து விடக் கூடாது.
இத்தகைய நிகழ்வுகளுக்கு உதவ பணம் இருந்தால் மட்டும் போதாது; மனமும் வேண்டும். மனம் இருந்தால் மட்டும் போதாது; உங்கள் பணம் அங்கே சென்றடையும் பாக்கியமும் உங்களுக்கு இருக்க வேண்டும். புண்ணியம் செய்தவர்களே கும்பாபிஷேகத்துக்குப் பொருளுதவி செய்யும் பேறு பெறுகிறார்கள்! 'பணம் படைத்தவர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்... ஏன், எல்லோருடைய பணமும் இந்தக் கும்பாபிஷேகத்துக்கு வந்து சேரவில்லை?' என்று சிலர் நினைக்கலாம். சிலருடைய பணம் மட்டும்தான் இங்கு வந்து சேரும்.
ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்கிறேன். 'விவேக சிந்தாமணி' என்று ஒரு நூல் இருக்கிறது. அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது, நான் சொல்லப் போகும் சம்பவம்!
ஒரு தாசி இருந்தாள். அவளுக்கு வயது சுமார் நாற்பத்தைந்து இருக்கும். அவளுக்கு ஒரு மகள் உண்டு. அவளும் தாசிதான்! ஒரு நாள் பெரும் பணக்காரன் ஒருவன் இவர்களிடம் வந்தான். அவன், அடிக்கடி இங்கு வந்து செல்பவன். அந்த அம்மா, அவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, மகளோடு உல்லாசமாக இருக்க பணக்காரனை அனுப்பி வைத்தார்.
ஒரு மணி நேரம் கழித்துப் பணக்காரன் புறப்பட்டுப் போனான். மகள், அம்மாவிடம் வந்தாள்; 'அம்மா... உன்னிடம் நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?' என்றாள். 'கேளம்மா... என்ன சந்தேகம் உனக்கு?' என்றாள் அம்மா.
'எத்தனையோ பணக்காரர்கள் இங்கே வருகிறார்கள்... பணத்தையும் பொருளையும் இங்கே தாராளமாக இறைத்து விட்டுப் போகிறார்கள்... நாம் அவர்களை சந்தோஷப் படுத்துகிறோம். கடவுள் ஏனம்மா நம்மை இப்படிப் படைத்திருக்கிறார்?' என்று கேட்டாள் மகள், சோகமாக.
அம்மாக்காரி அமைதியாகச் சொன்னாள்: 'அருமை மகளே... நாம் எல்லோருமே கடவுளின் பிறப்புகள். நாம் இப்படிப் பிறக்க வேண்டும் என்பதும், பணக்காரர்கள் பணத்தை இங்கே கொண்டு வந்து கொட்ட வேண்டும் என்பதும் கடவுளின் தீர்மானம். பணமும் வசதியும் படைத்த ஒருவர், நிறைய தானம் செய்ய வேண்டும். கஷ்டமான நிலையில் உள்ள கோயில்களுக்குப் பொருளுதவி புரிய வேண்டும். கும்பாபிஷேகங்களுக்கு முடிந்தவரை பணம் தர வேண்டும். ஆனால், எல்லா பணக்காரர்களும் அப்படி இல்லை. நல்ல மனம் படைத்தவர்கள் மட்டும்தான் ஆலயத் திருப்பணிகளுக்கு உதவுவார்கள்.
பணம் என்பது பூட்டி வைப்பதற்கல்ல. செலவு செய்யப்பட வேண்டியவை. அதிலும்... நல்ல வழியில் வரும் பணமே நல்ல காரியங்களுக்காகச் செலவாகும். தீய வழியில் சம்பாதிப்பவர்களது பணம், தீய வழியில்தான் செலவாகும். இத்தகையோரது பணம் செலவாக வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன், நம்மையும் (தாசிகளையும்) கள்ளையும் (மது) சூதையும் படைத்துள்ளான். இவர்களது பணம் என்றுமே நல்ல வழியில் செலவாகாது மகளே!' என்றாள்.
ஆக, கோயில் திருப்பணிகளுக்குப் பொருளுதவி செய்வதற்கும் பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும்!''
எங்கே இருக்கிறது?
சென்னையின் நுழைவாயிலான தாம்பரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சேலையூர் (கேம்ப் ரோடு). தாம்பரம் கிறிஸ்டியன் காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேளச்சேரி மார்க்கமாகச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் கேம்ப் ரோடு நிறுத்தத்தில் நின்று செல்லும். இங்கிருந்து சுமார் 10 நிமிட நடை தூரத்தில் ஸ்கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது.
திறந்திருக்கும் நேரம்: காலை 7:00 முதல் 12:00 மணி வரை. மாலை 4:00 முதல் 8:00 மணி வரை.
தொடர்புக்கு: (044) 2229 0134, 2229 3388,
94446 29570.

Comments