நாக தோஷம்... இங்கே தரிசித்தால் எல்லாம் நீங்கும்!


குடிமக்களுக்கு எந்தக் குறையும் வைக்காமல், செவ்வனே நாட்டை ஆண்டு வந்த அன்றைய அரசர் பெருமக்கள், இறைப் பணியிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆலயத் திருமேனிகளுக்கு அபிஷேகங்களும் அலங்காரங்களும் அன்றாடம் நடந்து வந்தன. இறைவனின் புகழ் பாடி, அவனைத் துதித்து மகிழ்வதற்கு தினமும் வேத பாராயணங்கள்; நாலாயிர திவ்ய பிரபந்தங்கள். வழிபாட்டு நேரங்களில் வாத்தியங்கள் முழங்கின. மடப்பள்ளிகள் மணம் பரப்பின.
அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி விக்கிரகங்களின் உலாக்கள், திருவிழாக் காலங்களில் திருவீதிகளிலே திமிலோகப்பட்டன. 'குடிகள், குறை இல்லாமல் வாழ்வதற்குக் கோயில்களே காரணம். அங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனின் பாதங்களில் அடைவோம் சரணம்!' என்று மக்களிடம் பக்தியின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள், அரசாங் கத்தின் ஆதரவு பெற்ற பண்டிதர்கள்.
அரசர் பெருமக்கள் இதோடு நிறுத்தவில்லை. வருங் காலத்திலும் ஆலயங்கள் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக பல சொத்துக்களை, சாசனம் எழுதி வைத் தனர். விளைநிலங்களில் கிடைக்கும் தானியங்கள், மூட்டை மூட்டையாகக் கோயில்களுக்கு வந்து சேர வழிவகை செய்தனர். வரி வசூல் தாராளமாகக் கிடைக்கும் கிராமங்களை தானமாகக் கொடுத்தனர். நீர்த் தட்டுப்பாடு என்பது ஆலயங்களுக்கு இருக்கவே கூடாது என்பதற்காகவும், இறைவன் தெப்போற்சவம் காண வேண்டும் என்பதற்காகவும் திருக் குளங்களை வெட்டினர்.
ஆன்மிக மணம் அதிகம் கமழ்ந்தாலும், அன்றைய ஆலயங்களை வெறும் வழிபாட்டு நிலையங்களாக மட்டும் பார்க்கவில்லை அரசர்கள். 'உடலுக்குத் தேவையான சக்தியை சத்தான உணவில் இருந்து பெறுவது போல், உள்ளத்துக்குத் தேவையான ஆன்ம சக்தியை சாந்நித்யம் நிறைந்த கோயில்களில் இருந்து தான் பெற முடியும்' என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள். எனவேதான், குடிமக்களை அடிக்கடி கோயில்களுக்கு வரவழைத்து அங்கு கூடிப் பேசினார்கள். முக்கியமான முடிவுகளை அங்கே எடுத்தார்கள். இங்கு எடுக்கப்படும் முடிவுகள், இறைவனின் உத்தரவோடு தீர்மானிக்கப்பட்டவை என்பதை உணர்ந்தார்கள்.
கோயில்களின் சக்தி இதோடு நிற்கவில்லை. குடி மக்களின் பசியைப் போக்கும் அறச்சாலைகளாகவும், அன்பை வளர்க்கும் பண்பாட்டு நிலையங்களாகவும், ஒற்றுமையை வளர்க்கும் சமத்துவ மையங்களாகவும் ஆலயங்கள் திகழ்ந்தன.
ஆனால், பிற்காலத்தில் என்ன ஆயிற்று? சிவன் சொத்தும், பெருமாள் சொத்தும் சிற்சில ஊர்களில் களவாடப் பட்டன. நில புலன்கள் நிறைய இருந்தும், நைவேத்தியத்துக்கு வேண்டிய அரிசி, ஆலயத்துக்கு வந்து சேரவில்லை. உலகையே காத்து ரட்சிப்பவனின் ஒரு வேளை உணவுக்கு வழி இல்லை. பெருமாளின் பசிக்கு பட்டினியே பதிலானது. ஆலயங்கள் அநாதரவாக விடப் பட்டன.
அரசர்கள் இனி வரமாட் டார்கள். இது மன்னராட்சி காலம் இல்லை. மக்களாட்சி காலம். மக்களேதான் மன்னர்கள். ஆலயங் களைப் பொறுத்தவரையில் அன்றைக்கு மன்னர்கள் என்ன செய்தார்களோ, அதை மக்கள்தான் இன்று செய்ய வேண்டும். இறைவனின் திருவீதி உலாவா? மக்கள்தான் கூடி வந்து தோள் கொடுக்க வேண்டும். இறைவனுக்கு இன்சுவைப் பிரசாதம் படைக்க வேண்டுமா? அரிசியையும் பருப்பையும் அளவில்லாமல் மக்களே சென்று திரட்டி, மடப்பள்ளியில் குவிக்க வேண்டும்.
கிராமத்து மக்களிடம் அன்பு நிலவ வேண் டும்; அறம் தழைக்க வேண்டும்; ஒற்றுமை உயர்ந்து காணப்பட வேண்டும். இந்த நிலை திருப்திகரமாக இருந்தால்தான் கிராமத்துக் கோயில்களில் தெய்வம் கோலாகலமாகக் குடி கொள்ளும்; சாந்நித்யம் கூடும்; திருவிழாக்கள் களைகட்டும்; பக்தர்களது பிரார்த் தனைகள் பலிக்கும்.
இவை எல்லாம் இல்லாது போனதால் நசிந்து போன, பாழ் பட்டுப்போன, ஆள் நடமாட்டமே இல்லாத திருக்கோயில்கள் இந்தத் தமிழ்நாட்டில் ஏராளம். இத்தகைய ஒரு கோயிலை, ஒரு குக்கிராமத்தில் இன்று ஊர் மக்களே ஒன்று கூடி, புனருத்தாரணம் செய்ய பொறுப் பேற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதைக் கண்டு பெருமிதப் பட வேண்டும். அந்த ஆலயத்தின் குடமுழுக்கு வைபவத்தைக் கூடிய சீக்கிரமே கண்டு தரிசிக்க வேண்டும் என்று தவிப்புடன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக, புனருத்தாரண வேலைகளில் சுறுசுறுப்பு இல்லை என்றாலும், சுணக்கம் இல்லை.
இந்தக் கோயில் எங்கே இருக்கிறது என்கிறீர்களா? நகர சந்தடியில் இருந்து முற்றிலும் ஒதுங்கிக் காணப் படும் ஊர்- வளர்புரம். வளைகுளம் என்றும் ஊர் பெயர் புழக்கத்தில் இருக்கிறது. நாயன்மார்கள் காலத்தில் 'வளைகுளம்' என்று இந்த ஊரைக் குறிப்பிட்டுள்ளனர். தொண்டை நாட்டில் இருக்கும் தொன்மையான சிவத் தலம் இது. அரக்கோணம்- திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் வரும் ஊர் தணிகைப் போளூர். இந்த ஊர், அரக்கோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு. திருத்தணியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு. தணிகைப்போளூரில் இறங்கி, வலப் புறம் திரும்பி, ரயில்வே (சென்னை- திருப்பதி ரயில்வே லைன்) கேட் தாண்டி, ரயில்வே லைனை ஒட்டி இடப் புறமாகச் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. பயணித்தால் வளர்புரம் வந்து விடும்.
கிழக்கே திருவாலங்காடு; மேற்கே திருத்தணி; வடக்கே திருக்காளத்தி; தெற்கே திருமால்பூர். வளர்புரம் கிராமத் தின் நான்கு பிரதான எல்லைகளாக இந்தத் திருத்தலங்களைச் சொல்லலாம். வளர்புரம்- ஓரளவு பெரிய ஊர். நெசவும் விவசாயமும் பிரதான தொழில்கள்.
ஊரின் கடைசியில் நாம் தேடிப் போன நாகேஸ்வரர் ஆலயம். கோயிலுக்கு மேற்கே திருக்குளம். சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்தத் திருக் குளத்தில் சங்கு தோன்றியதாம். தவிர, திருக்குளமும் சங்கு வடிவில் இருந்ததாம். குளத்தில் சங்கு தோன்றியதால், ஊரின் பெயர் வளைகுளம் (வளை என்றால் சங்கு) ஆயிற்றாம். கல்வெட்டு ஒன்றில் இந்த ஆலயத்து சிவனார், 'வளைகுளத்து நாகேஸ்வரமுடையார்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். சுந்தர பாண்டிய மன்னன் இந்தக் கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளதாக அறிய முடிகிறது. பண்டைய தமிழ் மன்னர்கள் பலரும் இந்த ஆலயத்துக்கு உதவி வந்துள்ளதாக கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழகாக அமைந்த அற்புதமான கோயில். ஈஸ்வரன் பெயர்- நாகேஸ்வரர். அம்பாள் பெயர்- சொர்ணவல்லி. அடியார்கள் பலராலும் பாடப் பெற்ற சிறப்புடையது இந்தத் திருத்தலம். தேவார வைப்புத் தலம்.
புனிதமான இந்த «க்ஷத்திரம், பல நூற்றாண்டுகளாக மண் மூடி, கள்ளிக் காடுகளாலும், விஷச் செடிகளாலும் மூடப் பட்டிருந்தது கொடுமை. இதற்குள்ளே, நாகேஸ்வரர் என்று அழைக்கப்படும் அந்தப் பெருமானார், மீளாத் துயில் கொண்டு இருந்திருக்கிறார். இறைவன் வெளிப்படும் வேளை வந்தபோது, இதே ஊரில் வசித்த மத்தால சுப்ரமணிய சாஸ்திரியார் என்பவரை ஆண்டவன் பயன்படுத்திக் கொண்டார்.
ஒரு நாள் சாஸ்திரியார் தூக்கத்தில் இருக்கும்போது அவரது கனவில் அந்தணர் வேடத்தில் வந்த இறைவனார், வெள்ளிப் பிரம்பினால் தட்டி எழுப்பி தன் சுயம்பு வடிவைக் காட்டி மறைந்தார். தூக்கத்தில் இருந்து துணுக்குற்று எழுந்த சாஸ்திரியார் மறுநாள் காலை, கனவில் இறைவன் தனக்குக் காட்டி அருளிய இடத்தைத் தேடி அலைந்தார். முட்காடுகள் நிறைந்த இடத்தில், தகுந்த ஆட்களை வைத்துச் செடி- கொடி களை மெள்ள அகற்றிப் பார்த்தபோது பிரமித்துப் போய்விட்டார். ஸ்வாமி மற்றும் அம்பாள் திருமூர்த் தங்கள் முதலில் அவருக்குத் தரிசனம் தந்தன.
பயபக்தியுடன் அவற்றைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தவரின் கண்கள் பனித் தன. ''இறைவா... உனக்கு ஏன் இந்தச் சோதனை... உலகையே ஆட்டுவிக்கும் நீ இப்படி இங்கு அடங்கிப் போய் இருப்பது ஏன்? என் மூலம் நீ வெளிப்பட வேண்டும் என்பது உனது திருவுளமா?'' என்றெல்லாம் அரற்றியவர், ஊர்மக்களைக் கூப்பிட்டு, விஷயத்தை நெக்குருகச் சொன்னார். சிதிலமாகி இருந்த அந்தப் பிரதேசத்தில், அம்மையும் அப்பனும் அநாதரவாகக் கிடப்பதைக் கண்ட ஊராரும் கண் கலங்கினர்.
திருக்கோயிலைச் சீரமைக்கும் திருப் பணியை இறைவனின் திருவுளத்தோடு 1917-ஆம் ஆண்டு துவங்கினார் சுப்ரமணிய சாஸ்திரியார். அக்கம்பக்கத்து ஊர்க் காரர்களும் உள்ளூர்க்காரர்களும் அவருக்குப் பெருமளவில் உதவினர். தேவகோட்டை மற்றும் காரைக் குடி பகுதிகளில் வசித்து வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள், சாஸ்திரியாரது இந்தத் திருப்பணி வேலைகளுக்குப் பொருளுதவி செய்தனர். இந்தப் பணிகளின்போதுதான் கல்வெட்டு களை ஆராய்ந்து இறைவனின் பெயரும், இறைவியின் பெயரும் தெரிய வந்ததாம்.
திருப்பணி வேலைகள் விரைந்து நடந்து வரும் காலத்தில், நிதிப் பற்றாக்குறை காரணமாக சொர்ணவல்லி அம்பாள் சந்நிதியில் மரக் கொம்புகளால் ஆன தளம் போடுவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. இதை அம்பாள் விரும்பவில்லை போலும்! அவள், கருங்கல் தளம் அமைத்துக் கொள்ள விரும்பினாள். ஒரு நாள் சாஸ்திரியாரின் கனவில், அம்பாளே தோன்றி, ''நான் உனக்கு அடையாளம் காட்டும் இடத்தில், என் சந்நிதி அமைக்கத் தேவை யான கருங்கற்கள் கிடைக்கும். மரத்தால் ஆன தளம் வேண்டாம்!'' என்று அருளி மறைந்தாள். அதுபோல் அம்பாள் அடையாளம் காட்டிய இடத்தில், தளம் அமைக்கத் தோதான கற்கள் கிடைத்தன. அதைக் கொண்டு, சந்நிதி சிறப்பாக அமைக்கப்பட்டது.
சுமார் 13 வருடங்கள் திருப்பணி வேலைகள் நடந்து, 1930-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி நாகேஸ்வரர் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. சுமார் 77 வருடங்கள் ஓடி விட்டன. தற்போது, ஆலயத்தின் மேல் தள வரிசை மற்றும் விமானங்கள் அனைத்தும் பழுதாகி, மழை பெய்தால் கோயிலுக்குள் நீர் இறங்குகிறதாம். மதில் சுவர் இடிந்து பாதுகாப்பும் குறைவாக இருக்கிறதாம். எனினும், ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து தற்போதைய திருப்பணி வேலைகளைக் கவனித்து வருகிறார்கள்.
தேவாரத்தில், 'வளைகுளம்' என்று இந்தத் தலத்தின் பெயரைக் குறிப்பிட்டு ஈசனைப் பாடிப் பரவுகிறார் திருநாவுக்கரசர். தவிர, 'குளம்' என்று முடியும் சிவாலயங்களைப் பற்றியும் தேவாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அவர். 'வளைகுளமும் தளிக்குளமும் நல்இடைக் குளமும்' என்று மூன்று திருத்தலங்களைப் பற்றி அடைவுத் திருத்தாண்டகம் பாடல் எண் 10-ல் சொல்லி இருக்கிறார். இதில், வளைகுளம்- தற்போது நாம் தரிசிக்கும் தலம்.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர்- ஐயடிகள் காடவர்கோன். அரசாளும் வேந்தன் இவர். சிவத் தொண்டுக்கு நாடாளும் தன்மை தடையாக இருந்தமையால், அரசாட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு, சிவத் தொண்டைத் திறம்படச் செய்தவர். '«க்ஷத்திர வெண்பா' என்று ஐயடிகள்காடவர்கோன் பாடியது 11-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில்,
இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளை குளத்து நீர் அளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து' 
என்று
ஒரு பாடலில் பாடி இருக்கிறார்.
இதன் பொருள்: நம்மை மணந்த மனைவியும் நமது செல்வமும் உயிர் போனபின் வீடு வரையுமே! புகழ்ச்சொல் பேரும், அயலாரும் உயிர் மூச்சு அடங்கும் வரைதான். நல்ல சுற்றமும் குளத்தில் நீராடிக் கரை ஏறும் வரை தான். எனவே நெஞ்சமே... வளைகுளம் எனும் சிவத்தலத்தில் எழுந்தருளி உள்ள இறைவனைப் போற்று!
இனி, ஆலயத்தை தரிசனம் செய்வோம்.
தெற்குப் பார்த்த நுழைவாயில். உள்ளே செல்வதற்கு முன் வெளியே, ஸித்தி விநாயகர், தனி சந்நிதி கொண்டுள்ளார். அவரைத் தரிசித்து உள் புகுகிறோம். விசாலமான- அழகான அமைப்புடன் விளங்கும் கோயில். முதலில், பிராகார வலம் வருவோம்.
நாகேஸ்வரர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், சிறு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். வலத்தின் போது நவக்கிரகங்கள், சைவ நால்வர், சேக்கிழார், மகா கணபதி, விஸ்வநாதர்- விசாலாட்சி, ஷண்முகர், வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகிய சிலா திருமேனிகளை உளமாரக் கண்டு வணங்குகிறோம். உற்சவங்கள் நடந்த காலத்தில் பயன்பட்ட ரிஷபம், மயில், மூஷிகம் போன்ற வாகனங்கள் காணப்படுகின்றன.
வலம் முடியும்போது, அம்பாள் சந்நிதியும் வலமும் தொடர்கிறது. இந்த வலத்தின்போது கால பைரவரை தரிசிக்கிறோம். தொடர்ந்து சிற்பங்கள் நிறைந்த தூண்கள் துலங்கும் மண்டபம் தாண்டி அன்னை அருள்மிகு சொர்ணவல்லி தரிசனம் தருகி றார். அன்னைக்கு முன் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்தால் உற்சவர் மண்டபம். விழாக் காலங்களில் அலங்கரிக்கப்பட்ட திருமேனிகளை இங்கே வைத்து வணங்கும் வழக்கம் இருந்ததாம். அருகே மடப்பள்ளி.
மூலவர் நாகேஸ்வரரை தரிசிக்க படிகள் ஏறிச் செல்கிறோம். முன்னால், பிரதோஷ நந்திதேவர் (சிறு வடிவம்), கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை தரிசிக் கிறோம். இங்கே அமைந்த தூண் ஒன்றில், 1930-ஆம் ஆண்டில், ஆலயத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்து வைத்த மத்தால சுப்ரமணிய சாஸ்திரியாரது உருவத்தைக் காண்கிறோம். அருகில், அவருக்கு உதவியாக இருந்த சுப்பா ரெட்டியார் என்பவரின் உருவம். கண்ணாடி அறை. மகா மண்டபம், அர்த்த மண்டபம் தாண்டி நாகேஸ்வரர் எனப்படும் லிங்கத் திருமேனியின் கண்கொள்ளா தரிசனம். மகா மண்டபத்தில் விநாயகர் மற்றும் சுப்ரமணியரின் விக்கிரகங்கள். அம்மையிடம் அருள் பெற்ற பின் அப்பனைத் தரிசிக்க வந்துள்ளோம். நாகேஸ்வரர். சுயம்பு வடிவம். பிரம்மனும் ஆதிசேஷனும் பூஜித்த வடிவம். ''ஆதிசேஷன் தவம் இருந்து இந்தத் திருத்தல நாகேஸ்வரரை தரிசித்துள்ளார். எனவே, ராகு- கேது மற்றும் நாக தோஷங்களுக்கு இங்கு பரிகாரம் செய்து கொள்ளலாம். திருமணத் தடைகளும் அகலும். மேலும் இந்த இறைவன் சுயம்பு என்பதால், பிரதோஷ வேளையில் நாகேஸ்வரரையும் நந்தி தேவரையும் தரிசிப்பது சிறப்பு'' என்கிறார் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி ஐயர்.
நாகாபரணத்துடன் காட்சி தரும் இந்த நாகேஸ்வரர், சதுர ஆவுடையாரின் மேல் குட்டையான பாணமா கக் காட்சி தருகிறார். எத்தனையோ சமயப் பெரியவர்களுக்குக் காட்சி தந்து, அருளாசி வழங்கிய நாகேஸ்வரரை தரிசிக்கிறோம். வெளியே வரும் போது, சந்திர பகவான் மற்றும் சூரிய பகவான்களை யும் தரிசிக்கிறோம்.
ஆலயத்துக்குச் சொந்தமாக உற்சவர் விக்கிரகங்க ளும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. விநாயகர், ஸ்வாமி, அம்பாள், வள்ளி- தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பிரதோஷ நாயகர், இந்த ஆலயம் குறித்துப் பாடிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் சேக்கிழார், சுந்தரர் என்று பல உருப்படிகள் உள்ளன. இவர்கள் உலா வருவதற்கு உற்சவங்களைத்தான் காணோம்!
ஒரு காலத்தில் பெரிய உற்சவங்களும் புறப்பாடுகளும் அமர்க்களப்பட்ட இந்த ஆலயத்தில், மகா சிவராத்திரி, கார்த்திகை தீப காலத்தில் லட்ச தீபம், சித்திரைத் திருவிழா, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம் போன்ற வைபவங்கள் இங்கு சிறப்பு. கோயிலின் பழம் பெருமைகளையும் விசேஷங் களையும் மீண்டும் கொண்டு வர ஊர்க்காரர்கள் முனைந்துள்ளனர். குறிப்பாக, ஊரில் உள்ள சில இளைஞர்கள் இந்தப் பணியில் ஆர்வமாக இறங்கி இருப்பது நம்பிக்கையைத் தருகிறது. ''எங்கள் முன் னோர் காலத்தில் செய்யத் தவறிய விழாக்களை நாங் கள், எங்கள் காலத்தில் எடுத்துப் போட்டு, இந்த நாகேஸ்வரர் ஆலயத்தை நாடு அறியச் செய்வோம்'' என்கிறார்கள் இந்த இளைஞர்கள், மனம் நிறைய மலர்ச்சியோடு!
வாழ்த்துவோம்! நலமே விளைய திருவருள் நாடுவோம்!
தகவல் பலகை
தலத்தின் பெயர் : வளர்புரம் என்கிற வளைகுளம்.
மூலவர் பெயர் : நாகேஸ்வரர் மற்றும் அருள்மிகு சொர்ணவல்லி அம்பாள்.
சிறப்பு : பிரம்மன் மற்றும் ஆதிசேஷன் வழிபட்டது.
அமைந்துள்ள இடம் : அரக்கோணம்- திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் வரும் சிறு கிராமம் தணிகைப் போளூர். இந்த கிராமம், அரக்கோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு. திருத்தணியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு. தணிகைப்போளூரில் இறங்கி, வலப் புறம் திரும்பி, ரயில்வே (சென்னை- திருப்பதி ரயில்வே லைன்) கேட் தாண்டி, ரயில்வே லைனை ஒட்டி இடப் புறமாகச் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. பயணித்தால் வளர்புரம் வந்து விடும்.
எப்படிச் செல்வது? : அரக்கோணத்தில் இருந்து வளர்புரத்துக்கு தினமும் 3 முறை டவுன் பஸ் இயங்கி வருகிறது. அதுபோல் மினி பஸ்சும் 3 முறை வருகிறது. திருத்தணியில் இருந்து தினமும் 5 முறை மினி பஸ் இயங்கி வருகிறது. வேலூரில் இருந்து தினமும் இரண்டு முறையும், காஞ்சிபுரத்தில் இருந்து தினமும் இரண்டு முறையும் பேருந்துகள் வந்து செல்கின்றன.
ஆலயத் தொடர்புக்கு :
டி. ஜோதி, த/பெ. தணிகாசலம்,
5/60, முத்துமாரி அம்மன் கோயில் தெரு,
வளர்புரம், அரக்கோணம் வட்டம்-631 003.
வேலூர் மாவட்டம்.
போன் : வீடு: 04177- 244 194
என். சுப்பிரமணி, (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

Comments