வீடு, கார், பங்களா என்று சொத்து- சுகங்கள் எவ்வளவு இருந்தாலும், ஒருவருக்குக் குழந்தை இல்லையெனில் அவரது வாழ்க்கை நரகமாகி விடும். இத்தகையோருக்கு வரப்பிரசாதியாக... குழந்தைச் செல்வம் தரும் கருணை நாயகியாகத் திகழ்கிறாள் பிள்ளைவயல் காளியம்மன்!
அது என்ன... பிள்ளைவயல் காளியம்மன்?!
இந்தியாவில் நவாபுகள் ஆதிக்கம் மிகுந்திருந்த கால கட்டம். சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் அவர்களது சூறையாடல் தொடர்ந்தது. அவர்களிடம் இருந்து கோயில் விக்கிரகங்களைக் காப்பாற்ற எண்ணிய நம் முன்னோர் அவற்றை ஆங்காங்கே குழி தோண்டி புதைத்து வைத்தனர்.
காலங்கள் உருண்டோடின. பிற்காலத்தில் இந்தப் பகுதியில், விவசாய பாசனத்துக்காகக் கிணறு தோண்ட முற்பட்டனர் சிலர். அதற்காக பாறைகளை வெட்டிய போது, பாறைத் துகள் தெறித்து, கிணறு தோண்டியவரின் தலையில் பட்டு ரத்தம் வழிந்தது. அவருக்குப் பதிலாக மற்றொருவர் தோண்ட ஆரம்பித்தார். அவருக்கும் அதே கதிதான்! இந்த நிலை தொடர்ந்ததால், எல்லோரும் சேர்ந்து தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அழகானதொரு காளி விக்கிரகம் தென்பட்டது. மெய்சிலிர்த்த அந்த விவசாயிகள், தற்போதுள்ள இடத்தில் கோயில் கட்டி, அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். நாளைடைவில் அந்தப் பகுதி மக்களுக்குக் கண்கண்ட தெய்வமானாள் இந்த காளி. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இவளை வேண்டிக் கொண்டு, இங்குள்ள வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்திக்க... விரைவில் பலன் பெற்றனர்.
பிள்ளை வரம் தரும் பரோபகாரி என்பதாலும், வயல்வெளியில் கோயில் கொண்டிருப்பதாலும் இவளை பிள்ளைவயல் காளியம்மன் என்று அழைத்தனர். சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது. நுழைவாயில் அருகே செல்வ விநாயகர், முருகப் பெருமான் மற்றும் சாஸ்தா ஆகியோரது சந்நிதிகளை தரிசிக்கலாம். உள்ளே, வெயில்- மழை எல்லாவற்றையும் தாங்கியபடி வெட்டவெளியில் (கூரை இல்லாமல்) காட்சி தருகிறாள் பிள்ளைவயல் காளி.
இங்கு, ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி, அடுத்த வெள்ளிக்கிழமை வரை விமரிசையாக நடை பெறுகிறது பூச்சொரிதல் விழா. தீக்காப்புக்கட்டு அன்று மாலை வேளையில், கோயில் பூசாரியின் தலைமையில் அம்மன் சந்நிதியில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளத்தை அடைகின்றனர் பக்தர்கள். அங்கு பூசாரி 'பூக்கரகம்' கட்டியதும் வேண்டுதல் வைத்தவர்கள், மேள-தாளம் முழங்க தீச்சட்டிகளைச் சுமந்தபடி கோயிலுக்கு வருகிறார்கள். பிறகு அம்மன் சந்நிதி முன் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், அம்மனுக்கு பாலபிஷேகம் முதலான ஆராதனைகளும் நைவேத்தியமும் நடைபெறுகின்றன.
Comments
Post a Comment