காந்தத்தின் முன் எத்தனை உலோகங் களை வைத்தாலும் அது, இரும்பை மட்டுமே இழுக்கும். காந்தத்தை விட இரும்பு சிறியது எனில் அது, காந்தத்தை நோக்கி ஓடும்; பெரியதாக இருந்தால் காந்தம் அதை நோக்கி ஓடி வரும்!
அதுபோல், நமது தேசத்தில் எவ்வளவோ ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்கள் சிலவற்றில் பகவான், தானாக அதாவது சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். சில மூர்த்தி களை தேவர்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர். தவிர, மகரிஷிகள்& மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளும் உண்டு.
மகான்கள் எல்லோரும் தங்கள் ஹ்ருதயத்திலேயே பகவானைப் பார்த்து ரமித்தவர்கள் (மகிழ்ச்சியில் ஆழ்ந்தவர்கள்). இருந்த போதிலும் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தில்& ஓர் ஆலயத்தில் உள்ள தெய்வத்திடம் ஈடுபட்டு, பக்தி செய்துள்ளனர். இன்னும் சிலர், தங்களது தவத்தையெல்லாம் ஏதாவது ஒரு மூர்த்தியில் பிரதிஷ்டை செய்து, பிற்காலத்தில் வருபவர்களுக்கெல்லாம் அதன் அருள் கிடைக்கும்படி செய்வர்.
இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகள், தம்மை தரிசிக்க வழிபட வருபவர்களது விசுவாசத்துக்கும் பக்திக்கும் ஏற்றபடி அருளை வெளிப்படுத்துகின்றன.
சிலர், தங்கள் மனதில் சில கேள்விகளுடன் கோயி லுக்குச் செல்வர். அப்போது, கோயிலில் எவரோ அவர்க ளுக்குள் பேசிக் கொள்வது போல... மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்வது போல அமையும்.
மற்றும் சில நேரங்களில் நாம் ஏதாவது பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது, கோயில் மணி அடித்தோ அல்லது தெய்வத்தின் மீது இருக்கும் பூ கீழே விழுந்தோ... ‘நமது பிரார்த்தனை நிச்சயம் நடக்கும்!’ என்பதை சூசகமாகக் காட்டுகிறது.
அதற்கு மேலும், நமக்கு பக்தி இருக்கும் என்றால், தெய்வம் கனவில் வந்து பேசும். அதற்கு மேலும் பக்தி இருந்தால், நாம் அறிய முடியாதபடி, யாரோ ஒருவர்போல் தெய்வம் வந்து விட்டுப் போய்விடும். அதற்கு மேலும் பக்தி இருந்தால், தியானத்தில் வரும். இப்படி, அவரவரது பக்தி எத்தனை சதவிகிதம் உள்ளதோ அதற்குத் தகுந்தாற் போல் தெய்வத்தின் அருளும், அவரவர்களுக்கு அந்த அளவுக்குப் புரியும்படி ஏற்படுகிறது. உண்மையான பக்தன், ‘இறைவனது அருள் நமக்கு இல்லை!’ என்று குறைபட்டுக் கொள்ள மாட்டான். ஏனென்றால், நமக்குக் கருணையுடன் மனிதப் பிறவி கொடுத்துள்ள தால்தான், நம்மால் குறைபட்டுக் கொள்ள வாவது முடிகிறது அல்லவா?
உண்மையான பக்தனுக்கும், பகவானுக்கும் எப்போதும் போட்டி நடந்து கொண்டே இருக்கும். எப்படி?
பக்தன்& ‘இறைவன் செய்துள்ள அருளுக்கு, நாம் செய்யும் பக்தி போதாதே!’ என்று, பக்தியை அதிகப் படுத்துவான். இறைவனோ, ‘இவன் செய்துள்ள பக்திக்கு, நாம் செய்துள்ள அருள் போதாதே!’ என்று அருளை அதிகப்படுத்துவான். இப்படித் தான் அந்தப் போட்டி நடக்கும்.
நாம் இறைவனிடம், ஏதாவது ஒரு கஷ்டத்துக்குப் பிரார்த்தனை செய்யும்போது, ‘ஏன் எனக்கு இந்தக் கஷ்டம் வந்தது? நான் யாருக்கு என்ன செய்தேன்?’ என்று கேட்பதை விட்டு விட்டு, ‘நான் என்ன பாவம் செய்தேனோ? அதனால்தான் இந்தக் கஷ்டம் வந்துள்ளது என்பதை அறிவேன். அப்படி நான் தெரிந்தோ, தெரியாமலோ செய்துள்ள பாவத்தை மன்னித்து விடு. எனது பாவத்தை மட்டும் மன்னித்தால் போதாது; உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் உன் குழந்தைகள் இல்லையா? அவர்கள் எல்லோரும் செய்யும் பாவங்களையும் மன்னித்து விடு!’ என்பதே, நமது வாழ்க்கையை தினம் தினம் திருநாளாக்கும் பிரார்த்தனை ஆகும்.
ஆலயங்களில் உள்ள மூர்த்திகள், இவையும் தவிர பக்தர்களது வாழ்க்கையில் பல லீலைகளை ரசிக்கும்படியாக அவ்வப்போது செய்வதும் உண்டு. குருவாயூரில், குருவாயூரப்பன் ஆலயத்துக்கு அருகில் வாழைப்பழக் கடை வைத்திருந்தார் ஒருவர். தினமும் அங்கு வரும் சிறுவன் ஒருவன் கடைக்காரருக்குத் தெரியாமல் வாழைப் பழங்களைத் திருடிச் செல்வது வழக்கம். ஒரு நாள் அந்தச் சிறுவன் பழம் திருடும்போது மாட்டிக் கொண்டான். பழம் திருடியவனோ சிறுவன். அதுவும் பசிக்காகத்தான் அவன் திருடியுள்ளான். அவனை தண்டிப்பதில் கடைக்காரருக்கு விருப்பமில்லை. எனினும், ‘அவனைத் தண்டிக்காமல் விடுவது, அவனது வாழ்க்கைக்கு நல்லதல்ல!’ என்று முடிவு செய்தார்.
அதன்படி, ‘குருவாயூரப்பன் கோயிலை நூறு முறை சுற்றி வா!’ என்றார். பையனும் வலம் வர ஆரம்பித்தான். கடைக்காரர் அவன் சுற்றுவதைக் கண்காணித்த போது... ஒரு சுற்றில் அந்த சிறுவன் தெரிந்தான். அடுத்த சுற்றில் பார்க்கும்போது, சிறுவனுக்கு பதிலாக பகவான் கிருஷ்ணர் தெரிகின்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை!
அன்று இரவு, அவரது கனவில் தோன்றிய பகவான் குருவாயூரப்பன், ‘‘அந்தச் சிறுவன் தினமும் உனது கடையில் எவ்வளவு பழங்களைத் திருடுகிறானோ... அதில் பாதியை என் உண்டியலில் போட்டு விடுவான். எனில், அவனது தண்டனையில் பாதிப் பங்கு எனக்கும் உண்டு அல்லவா? அதனால்தான் நானும் ஐம்பது சுற்று சுற்றினேன்!’’ என்றாராம்.
Comments
Post a Comment